வட்டிக் குறைப்பு: சில யோசனைகள்
ரிசர்வ் வங்கியின் அக்டோபர் மாத கடன் மற்றும் நிதிக் கொள்கை அறிவிப்பு, வழக்கத்தை விட கூடுதல் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டதற்கு இரு காரணங்கள்.


ரிசர்வ் வங்கியின் அக்டோபர் மாத கடன் மற்றும் நிதிக் கொள்கை அறிவிப்பு, வழக்கத்தை விட கூடுதல் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டதற்கு இரு காரணங்கள்.
முதலாவது, உர்ஜித் படேல், ரிசர்வ் வங்கி ஆளுநரான பிறகு வெளிவரும் முதல் நிதிக் கொள்கை இது என்பது. இரண்டாவது, இது ஒரு புத்தம் புதிய திட்டத்தின்படி வெளிவரும் கொள்கை. கடன்களுக்கான வட்டி விகிதங்களை இதுவரையில் ரிசர்வ் வங்கி நிர்ணயித்து வந்தது. தற்போது, அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் பொறுப்பு, ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையிலான நிதிக் கொள்கை நிர்ணயக் குழுவிடம் (ங.ட.இ.) ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் சார்பில் தலா மூன்று உறுப்பினர்கள் என மொத்தம் ஆறு பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவால் அறிவிக்கப்பட்ட முதல் கொள்கைதான் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
பலரும் எதிர்பார்த்தது போல், வணிக வங்கிகள் குறுகிய கால அடிப்படையில் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 6.50 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆறு மாதங்களில் நிகழ்ந்த முதல் வட்டிக் குறைப்பு.
வட்டி 0.25 சதவீதம் குறைக்கப்படும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தார்கள் என்றாலும், அந்த முடிவு புதிய குழுவில் இடம் பெற்றுள்ள ஆறு அங்கத்தினர்களாலும் ஒருமனதாக ஏற்கப்படுமா அல்லது கருத்து வேறுபாடு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆறுதல் அளிக்கும் விதமாக, அனைத்து உறுப்பினர்களும் வட்டிக் குறைப்பு முடிவை ஆதரித்துள்ளனர்.
ஒரு பக்கம், உலகப் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. சர்வதேச பங்குச் சந்தை, மற்றும் நிதிச் சந்தைகளில் கடும் ஏற்ற இறக்கங்கள் நிகழ்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
அமெரிக்க ரிசர்வ் வங்கியின் (ஃபெடரல் ரிசர்வ்) வட்டி மாற்றம் இப்போதைக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆயினும், அடுத்த சில மாதங்களில் வட்டி உயருவதற்கு வாய்ப்பு உள்ளது.
மேற்கூறிய சூழல்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏதுவானவை அல்ல என்பது தெளிவு. இன்னொரு பக்கம், முக்கியமாக, இந்தியாவில் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் கட்டுக்குள் வந்திருப்பது திருப்தி அளிக்கும் அம்சம்.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் பயனாக அரசு ஊழியர்களின் சம்பளம் உயர உள்ளது. இதனால் பணப்புழக்கம் மற்றும் மக்களின் வாங்கும் சக்தி உயரும். இதனால் பணவீக்கம் உயரக் கூடும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.
அதேசமயம், மேற்கூறிய காரணங்களால் பொருள்களின் விற்பனை அதிகரிக்கும்; தொழில் துறை மற்றும் சேவைத் துறையில் வளர்ச்சி ஏற்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.
பருவ மழையும் எதிர்பார்த்ததைவிட சீராக இருந்திருக்கிறது.
ஆக, பொருளாதாரம் எதிர்கொள்ளும் சாதக, பாதக அம்சங்களைக் கருத்தில் கொண்டு, வளர்ச்சியா பணவீக்கக் கட்டுப்பாடா என்ற கேள்விக்கு, வளர்ச்சிதான் முக்கியம், அதேநேரம் பணவீக்கத்தை விழிப்புடன் கண்காணிக்கவும் வேண்டும் என்ற நிலையில் புதிய நிதிக் கொள்கை குழு (எம்.பி.சி.) செயல்பட்டிருக்கிறது என்பது வெளிப்படை.
அத்துடன், உணவுப் பொருள்களுக்கான பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, குறிப்பாக பருப்பு வகைகளின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அடுத்து வரும் மாதங்களில் பலனளிக்கும். இதனால் பணவீக்க விகிதம் குறைவதற்கான சாத்தியக் கூறுகள் பிரகாசமாகவே
உள்ளன.
பணவீக்க விகிதம் 2017 மார்ச் மாத முடிவில், 5 சதவீதமாகவே கட்டுக்குள் இருக்கும் என்ற ரிசர்வ் வங்கியின் கணிப்பு ஏற்கத்தக்கதே.
நாட்டின் வளர்ச்சி விகிதம் நடப்பாண்டில் 7.6 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தனது முந்தைய நிதிக் கொள்கை அறிவிப்பில் தெரிவித்திருந்தது. புதிய கொள்கையிலும் அந்தக் கணிப்பை மாற்றிக் கொள்ளவில்லை. ஐ.எம்.எஃப்.
என்கிற சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கூட இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 7.6 சதவீதமாக கணித்திருப்பது கவனிக்கத்தக்கது.
உலக நாடுகளின் சராசரி வளர்ச்சி விகிதம் பற்றிய கணிப்பு, ஐ.எம்.எஃப். மற்றும் உலக வங்கியால் குறைக்கப்பட்டுள்ளது. உலகில், வளர்ந்த நாடுகளின் சராசரி வளர்ச்சி விகிதம் 1.8 சதவீதம் என்றும் வளரும் நாடுகளின் சராசரி வளர்ச்சி விகிதம் 4.6 சதவீதம் என்றும் மேற்கூறிய நிதி அமைப்புகள் அறிவித்துள்ளன.
இன்னும் சொல்லப் போனால், அண்மைக் காலம் வரை சீனாவின் வளர்ச்சி விகிதம் 10 சதவீதத்தை தாண்டி இருந்தது. ஆனால் 2016-17-ஆம் நிதி ஆண்டுக்கான கணிப்பில், சீனாவின் வளர்ச்சி வீதம் 6.6 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசின் நிதி அமைச்சகம் வட்டிக் குறைப்பை வரவேற்றுள்ளதில் வியப்பில்லை. அத்துடன் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்டுவதற்கு இது உதவும் என்றும் நிதி அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில், ரெப்போ ரேட் குறைக்கப்பட்ட போதெல்லாம், அதன் பலன் சில்லறைக் கடன் பெறுவோர்க்கு, குறிப்பாக வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் பெறுவோர்க்குப் போய்ச் சேரவில்லை.
2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதம் 1.75 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், வீட்டுக் கடனுக்கான வட்டிவீதம் 0.85 சதவீதம் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால், வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வைக்கும் டெபாசிட்களுக்கான வட்டிவீதம் 1.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல.
இந்த குறைபாட்டை ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முறை வணிக வங்கிகள் காலதாமதம் இல்லாமல் விரைந்து வட்டிக் குறைப்பு நடவடிக்கையில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஒரு சில வங்கிகள் ஓரளவு வட்டிக் குறைப்பை அறிவிக்கத் தொடங்கியுள்ளன.
பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் அயல்நாட்டு வங்கிகள் என அனைத்து வகை வங்கிகளும், வட்டிக் குறைப்பை செயல்படுத்த வேண்டும். அதேசமயம், சரியான அளவிலும் வட்டி குறைக்கப்பட வேண்டும்.
மேலும், இன்னொரு புதிய சூழலும் ஏற்படுகிறது. ரெப்போ ரேட் குறையும்போது, புதிதாக வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதத்தை குறைப்பதும், ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு வட்டியை குறைக்காமல் இருக்கும் போக்கும் நிலவுகிறது. இதுவும் நியாயமற்ற நடைமுறை.
ரெப்போ ரேட் குறையும் போது, புதிய வீட்டுக் கடன்தாரர்கள், ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கி மாதத் தவணைத் தொகை செலுத்துபவர்கள் என அனைத்து வகை சில்லறைக் கடன் வாடிக்கையாளர்களுக்கும் வட்டிக் குறைப்பின் பலன் சென்றடைய வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ரெப்போ ரேட் குறைந்திருப்பதைத் தொடர்ந்து வணிக வங்கிகளின் வட்டியும் குறையும் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். அதே நேரம், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மற்ற வங்கிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். ஆகையால், இந்த விஷயத்தில் நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் முன் மாதிரியாக இருக்கும் வகையில், பாரத ஸ்டேட் வங்கி விரைந்தும் சரியான அளவிலும் வட்டியைக் குறைக்க வேண்டும். இதில் வழக்கமாக நான்கு வகை குறைபாடுகள் தென்படுகின்றன.
ஒன்று, ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பை ஒட்டி சில வணிக வங்கிகள் வட்டியைக் குறைப்பதே இல்லை. இரண்டாவது, அப்படியே வட்டியைக் குறைத்தாலும் 0.25 சதவீதத்துக்கு பதில் 0.10 சதவீதம் அல்லது 0.15 சதவீதம் குறைத்தல். மூன்றாவது, இவ்விஷயத்தில் அதிக காலதாமதம் செய்தல், நான்காவதாக புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு மட்டும் வட்டியைக் குறைத்தல், ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு வட்டியை சிறிதளவும் குறைக்காதிருத்தல் ஆகியவை.
இந்த நான்கு வகை குறைபாடுகளையும் களைந்து வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்.
ரிசர்வ் வங்கி இதற்குத் தேவையான அழுத்தத்தை வணிக வங்கிகளுக்கு தர வேண்டியது இன்றைய இன்றியமையாத் தேவை!
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு),
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...