சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தேவை மனமாற்றம்

தாதிகள் - இந்த வார்த்தை இந்தியாவில் பிரபலம் அடைந்தது அநேகமாக 1800-களில் தான். இந்தியாவைப் பற்றிக் கொண்டிருந்த வறுமையைப் பயன்படுத்தி,

News image
Updated On :8 செப்டம்பர் 2016, 7:57 pm

ந. செந்தில்குமார்

தாதிகள் - இந்த வார்த்தை இந்தியாவில் பிரபலம் அடைந்தது அநேகமாக 1800-களில் தான். இந்தியாவைப் பற்றிக் கொண்டிருந்த வறுமையைப் பயன்படுத்தி, இங்கிலாந்து நாட்டவர் இந்தியாவின் ஏழைப் பெண்களை அடிமைகளாக மாற்றியதும் அப்போதுதான்.
அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் குடியேறிய இங்கிலாந்து தம்பதிகளின் குழந்தைகளில் 1,000-க்கு 189 குழந்தைகள் இறந்ததாக கணக்கெடுப்பில் தெரியவந்தது. இந்திய தட்பவெப்ப நிலை, தாயின் உடல்நலக்கேடு ஆகியனவே இங்கிலாந்து தம்பதியரின் குழந்தைகளின் இறப்பு வீதம் அதிகரிக்கக் காரணம் எனவும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, இங்கிலாந்திலிருந்து வந்தவர்களின் குழந்தைகளை பராமரிக்க இந்திய ஏழைப் பெண்கள் தாதிகளாக நியமிக்கப்பட்டனர்.
தாதி வேலை செய்பவர்கள்தான் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தர வேண்டும். ஆனால், குழந்தையை முத்தமிடக்கூடாது, ஒன்றாகப் படுத்துக்கொள்ளக்
கூடாது என்பது போன்ற கடுமையான விதிமுறைகள் இருந்தன. மீறினால் சவுக்கடி கிடைக்கும்; சம்பளம் கிடைக்காது.
இதனால், பல தாதிப் பெண்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டதோடு, குறைவான சம்பளமே பெற்றனர்.
தாங்கள் பெற்றெடுத்த குழந்தையைத் தாய்ப்பாலுக்கு ஏங்க வைத்து விட்டு, எஜமானரின் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டிய கொடுமையை இந்தியத் தாதிப் பெண்கள் அனுபவிக்க நேரிட்டது.
மிக பிரபலமான தாதியாக அறியப்படும் அந்தோனி பெராவுக்கு இங்கிலாந்தின் பெல்மாண்ட் பகுதியில் கல்லறை இருப்பதற்கும் இதுவே காரணம்.
இவர், லக்னோவில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அந்தோனி பெரா என்ற பெயர் கூட அவருக்குச் சொந்தமில்லை. காரணம், அந்தப் பெயர் அவரது எஜமானரால் சூட்டப்பட்டது தான்.பல ஆங்கிலேயர்களின் குழந்தைகளை வளர்த்தெடுப்பதற்கு, இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு 54 முறை பயணமான தாதி என்ற பெயரைப் பெற்ற இவரது பெயரைச் சொல்லக் கூட அவருக்கு சந்ததி கிடையாது.
1800}ஆம் ஆண்டு முதல் 1900 வரையிலான காலகட்டத்தில், தாதி வேலை செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்று இங்கிலாந்து சென்ற ஆயிரக்கணக்கான இந்தியப் பெண்கள் அடிமைகளைப்போல் நடத்தப்பட்டதோடு, கப்பல் பயணத்தில் நோயுற்று இறந்துபோய் கடலில் தூக்கி வீசப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
புகழ்பெற்ற எழுத்தாளரான வில்லியம் தாக்ரே, சிறுவயதில் இந்திய தாதிப் பெண் ஒருவரால் தான் வளர்க்கப்பட்டதாகவும், தனது பள்ளிப் படிப்பு முடியும் வரை அப்பெண் தன்னுடன் இருந்ததாகவும் நினைவுக்கூர்ந்துள்ளார்.
இவரைப்போல, இங்கிலாந்தில் ஒரு தலைமுறையே இந்திய தாதிப் பெண்களால் உருவாக்கப்பட்டது தான்.
இதுபோன்ற கொடுமைகள் மாற்றுருவாக்கம் பெற்று இன்றளவும் இந்தியாவின் ஏழைப் பெண்களை சீரழித்து வருகின்றன என்பதற்கு நிகழ்கால உதாரணம் தான் - வாடகைத் தாய் முறை.குழந்தைப் பேறு இல்லாதவர்கள் குழந்தையைப் பெற மருத்துவ ரீதியாக பல வழிகள் உள்ளன. அதில் ஒன்றாக, மிக அரிதாக நடைமுறையிலிருந்த வாடகைத் தாய் முறை தற்போது, நவநாகரீக நடைமுறையின் காரணமாக விஸ்வரூபம் பெற்றிருப்பது தான் வேதனை.இனி கருத்தரிக்கவே முடியாது அல்லது கருவை வளர்த்து மகப்பேற்றை எட்டவே முடியாது என்ற மருத்துவக் காரணங்களால், குழந்தையில்லாத தம்பதியின் விந்து அல்லது கருமுட்டையைப் பெற்று டெஸ்ட் டியூப் மூலம் உருவாக்கப்படும் கருவை, (வேறொரு பெண்) தனது கருப்பைக்குள் வைத்து குழந்தையை பெற்றெடுப்பவர்தான் வாடகைத் தாய்.
இந்த வகையில், வாடகைத் தாயாகச் செயல்பட்டு, கருவை தன் வயிற்றில் சுமந்து குழந்தையைப் பெற்றெடுத்துத் தரும் பெண்ணுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் சில லட்சங்கள் ஊதியமாகத் தரப்படுகின்றது.
இந்த காலகட்டத்தில் அந்தப் பெண்ணுக்கு விதிக்கப்படும் ஒப்பந்த நடைமுறைகளும், அதனால் அந்தப் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளும் ஏராளம்.
தன் வறுமையைப் போக்கிக் கொள்ள, தன் குடும்பத்தைக் காப்பாற்ற வாடகைத் தாயாகச் செயல்பட முன்வரும் பெண்களை, பணத்தாசை கொண்ட சில மருத்துவர்களும், இடைத்தரகர்களும் பல்வேறு வகைகளில் சுரண்டும் கொடுமை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாடகைத் தாய் முறையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தான் மத்திய அரசு, ஒரு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதா குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், "இந்தப் புதிய மசோதாவின்படி, வாடகைத் தாய் முறை தேவை கருதி மட்டுமே அனுமதிக்கப்படும்.
ஆசைக்காக, நாகரிக நடைமுறைக்காக வாடகைத் தாய் முறை பயன்படுத்தப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வாடகைத் தாய் முறை மூலமாக, சட்ட விதிகளுக்குப் புறம்பாக குழந்தைப் பெற்றுக்கொள்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்தியாவின் ஏழைப் பெண்கள், அந்நிய நாட்டவராலும், பணத்தாசைக் கொண்டவர்களாலும் சுரண்டப்படுவதைத் தடுக்கும் முதல்படியாகவே வாடகைத் தாய் ஒழுங்காற்று மசோதா 2016-ஐ கருதமுடியும்.
இந்த வரைவு மசோதா சட்ட வடிவம் பெற்றால் வெளிநாட்டவர் சுற்றுலா விசாவில் வந்து இந்தியப் பெண்களை வாடகைத் தாயாகப் பயன்படுத்தி குழந்தைப் பெற்றுக்கொள்வது தடுக்கப்படும்.
மேலும், வாடகைத் தாய் மூலமாக நடைபெறும் குழந்தைப் பேறுகள் சட்டப்பூர்வமாக, வெளிப்படைத் தன்மை உடையதாக மாற்றப்படும்.
இருப்பினும், ஆணாதிக்க சமூகத்தின் ஆழ் மனதில் பதிந்துள்ள பெண்ணடிமை நடைமுறைகள், அழித்தொழிக்கப்படாதவரை இந்தச் சட்டத்தின் பலனை பெண்கள் பெற முடியுமா என்பது ஐயத்திற்குரியதே!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.