மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நீதி தலைதூக்கி நிற்கிறது!

நீதியரசர் கே.எஸ். புட்டஸ்வாமி ஆதார் திட்டம் தன் பிரைவஸியை குலைக்கிறது என்று 2012-இல் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். பிரைவஸி என்பது ஒரு அடிப்படை உரிமையா

News image
Updated On :31 ஆகஸ்ட் 2017, 8:45 pm


நீதியரசர் கே.எஸ். புட்டஸ்வாமி ஆதார் திட்டம் தன் பிரைவஸியை குலைக்கிறது என்று 2012-இல் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். பிரைவஸி என்பது ஒரு அடிப்படை உரிமையா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விடை காண ஒன்பது நீதியரசர்கள் ஒன்றாக அமர்ந்து ஆகஸ்டு 24, 2017 அன்று மகத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார்கள். 
இந்தத் தீர்ப்பின் அதிர்வுகளை எதிர்காலத்தில் பல வழக்குகளில் நாம் உணருவோம். அந்த ஒன்பது நீதியரசர்கள் யார் யார்? தலைமை நீதியரசர் கேஹர், நீதியரசர்கள், ஆர்.கே அகர்வால், எஸ். அப்துல் நஜீர், டி.ஒய். சந்திரசூட், ஜே. சலமேஷ்வர், எஸ்.ஏ. போப்டே, ஏ.எம். ஸப்ரே, ஆர்.எஃப். நாரிமன், எஸ்.கே. கவுல் ஆகியோர். 
அனைவரும் ஒரே குரலில் நம் பிரைவஸி உரிமை அடிப்படை உரிமை என்று அடித்து சொன்னாலும், முதல் நால்வர் சார்பிலும் தன் சார்பிலும் நீதியரசர் சந்திரசூட் ஒரு தீர்ப்பும், மற்ற ஐவர் தனித்தனியாக ஐந்து தீர்ப்பும், ஆக உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு ஆறு தீர்ப்புகள் மூலமாக நமக்கு முன் வருகிறது.
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது. ஆகையால் சில துளிகளை மட்டும் தருகிறேன். நம் நாட்டில் முன் தீர்ப்புகள் பின்வரும் வழக்குகளின் முடிவைக் கட்டுப்படுத்தும். அப்படி இரு முன் தீர்ப்புகள் பிரைவஸி என்பது அடிப்படை உரிமை இல்லை என சொல்கின்றது என அரசு வாதிட்டது. 
மேலும் அரசியல் அமைப்பு சாசனத்தை வரையும் நேரத்தில் நடந்த சம்வாதங்களில், குறிப்பாக இந்த உரிமை அடிப்படை உரிமை இல்லை என கூறினார்கள். ஆகவே அதை இன்று மாற்ற கூடாது என்றும் அரசு வாதிட்டது. இரண்டு வாதங்களும் நிராகரிக்கப்பட்டன.
அந்த இரு முன் தீர்ப்புகளிலும் போகிற போக்கில் ஓரிரு வாக்கியம் உள்ளதே அன்றி இந்த ஒரு உரிமை பற்றி மட்டுமே விவாதம் செய்யவில்லை என்றும், பின்னர் வந்த சில முக்கியமானத் தீர்ப்புகளின் பாதிப்பினால் அந்த இரு முன் தீர்ப்புகள் வலுவிழந்துவிட்டன என்று உச்சநீதிமன்றம் கூறியது. இங்கு இந்தத் தீர்ப்பின் சில பகுதிகளை தரும் நேரத்தில் சொன்னவரின் பெயரை அடைப்புக் குறிகளில் தருவேன்.
அரசியல் அமைப்பு சாசனத்தை வரையும் நேரத்தில் இந்த உரிமை நம் மற்ற அடிப்படை உரிமைகளின் இன்றிமையாத அம்சம் இல்லை என குறிப்பாக மறுக்கவில்லை (சந்திரசூட்). எதிர்காலத்தில் உருவாகும் ஒவ்வொரு பிரச்னையையும் இன்று அறிய முடியாது. 
அறிவியல் மாற்றங்களினால் வரும் முன்னேற்றங்கள் எவ்வாறு நம்மைப் பாதிக்கும் என்று தெரியாதபோது அந்த சவால்களை எதிர்கொள்ள இடம் வகுக்கும் வகையில் இன்றைய நீதிபதிகளின் முடிவுகள் அமையவேண்டும் (சந்திரசூட்). 
உண்மை தானே! அன்று பாபா சாகேப் அம்பேத்கரோ, அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யரோ இப்படி ஒரு கணினி அசுரன் நம்மை ஆட்டுவான் என நினைத்திருக்கமாட்டார்கள். நான் எங்கே போகிறேன், என்ன வாங்குகிறேன், எதில் எனக்கு ரசனை உள்ளது எல்லாம் இன்று என் ஸ்மார்ட்போனுக்கு தெரியும். 
பிறகு உன் பிரைவஸி உரிமை என்ன ஆனால் என்ன என்று கேட்கலாம். அதற்கும் இந்த தீர்ப்பு பதில் சொல்கிறது. ஒருவர் இன்னொருவரை வீட்டினுள் வர அனுமதிக்கிறார் என்றால், மானாவாரியாக எல்லோரும் வரலாம் என்று எண்ணக் கூடாது. இந்தத் தடை அரசுக்கு மட்டுமல்ல, அறிவியல் சாதனங்களுக்கும் இந்த அத்துமீறல் கூடாது (கவுல்). 
' என் விவகாரத்தில் உன் மூக்கை நுழைக்காதே' என்று சொல்கிறோம் இல்லையா? இது பொதுவாக நமக்குப் புரியும் பிரைவஸியின் மேம்போக்கான அர்த்தமே. இன்றைய உலகில் பிரைவஸி உரிமை என்பது அரசின் அதிகாரத்திற்கு ஒரு எல்லைக்கோடு. தனியார் அமைப்புகளுக்கும் இந்த எல்லைக்கோடு உண்டு (கவுல்).
இந்த பிரைவஸி உரிமையை, பணம் படைத்தவர்கள், பலம் படைத்தவர்கள், பதவியில் இருப்பவர்கள் மட்டுமே கோருகிறார்கள். மற்றவர்களுக்கு இது தேவையில்லை என்றும் அரசு வாதிட்டது. அதையும் நீதிமன்றம் நிராகரித்தது. இது அனைவருக்கும் உள்ள உரிமை. 
குழந்தைப் பேறு, வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது இதுபோல எத்தனையோ விஷயம் பிரைவஸி சார்ந்தது. இந்த உரிமை நம்முடன் பிறப்பிலேயே வந்த உரிமை. நாம் இறக்கும்வரை அதை பறிக்க முடியாது. சுருங்கசொல்லின் இது ஜனனம் தொடங்கி மரணம் வரை நம்மிலிருந்து பிரிபடாமல் இருக்கும் (ஸப்ரே).
இந்தியாவில் எங்கும் செல்லும் உரிமை, எந்த வேலை தேர்ந்தெடுப்பது, யாரை மணப்பது எங்கு வசிப்பது, அரசு நம் தொலைபேசி இணைப்பில் ஒட்டுகேட்காதிருப்பது, இன்டெர்நெட் ஹாக்கிங் முதலியன பிரைவஸியின் உதாரணங்கள் (சலமேஷ்வர்). இன்று இதை ஏன் சொல்ல வேண்டியுள்ளது என்றால் இப்பொழுது அரசு ஆதார் திட்டத்திற்காக நம் பயோமெட்ரிக் தகவலை சேகரிக்கிறது. அதை எதிர்த்ததில் தான் இந்த வழக்கு உதித்தது. 
நம் வீட்டினுள் எப்படி அத்துமீறி யாரும் புகமுடியாதோ அதுபோல நம் அந்தரங்கத்தையும் கணினி மூலம் யாரும் பெற முடியாது. என் உணவு என்னவாக இருக்கவேண்டும், நான் என்ன உடுத்தவேண்டும் என்பதும் இந்த சுதந்திரம்தான். அரசு எதேச்சதிகாரமாக நம் சுதந்திரங்களை பறிப்பதை தடுக்கும் சுவர் அரசியல் சாசன உரிமைகளே. அவற்றில் இந்த பிரைவஸி உரிமை முக்கியமானதாகும் (சலமேஷ்வர்).
பிரைவஸி என்ற புலம் இருப்பதை நம் உள்ளுணர்வு நம் எல்லோருக்கும் தெரிவிக்கிறது. இதை நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் காட்டுகிறோம். நம் அறைக்கதவை சாற்றி, உடை உடுத்தி, கணிகளுக்கு பாஸ்வேர்டு வைத்து - இதுபோன்ற செயல்பாடுகளினால் நம் பிரைவஸி உரிமையை நிலைநாட்டிக் கொண்டே இருக்கிறோம் (போப்டே).
பிரைவஸி உரிமை நம் அடிப்படை உரிமை. அது நம் வாழ்வுரிமை சார்ந்தது, நம் கண்ணியம் சார்ந்தது என்று எடுத்துரைக்க என்ன அவசியம்? என்ன நிர்ப்பந்தம்? சாதாரணச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் எளிதாக இயற்றலாம்; அகற்றலாம். ஆனால் எந்த அரசு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அடிப்படை உரிமைகளை நாம் அனுபவிக்க முடியும். 
ஒரு சட்டம் இந்த உரிமையைப் பறிக்கிறது என்று ஒரு வழக்கு இந்த நீதிமன்றத்தின்முன் வந்தால் வேறு எந்த சமூக நலனையோ பொது நலனையோ காக்கும் பொருட்டு அந்தச் சட்டம் இயற்றப்படாதிருக்கும் பட்சத்தில், அந்தச் சட்டத்தை இந்த சுதந்திரத்தை மீறும் குற்றத்தின் பொருட்டு செல்லுபடியாகாது என தீர்ப்பளிக்க இந்த நீதிமன்றம் கடமைப்பட்டுள்ளது (நாரிமன்).
நமக்கு என்ன புரிகிறது? நம் பிரைவஸி உரிமையை எளிதில் அரசோ அல்லது அரசு அல்லாத அமைப்புகளோ தகர்க்க முடியாது. 
ஆனால் சமூக நலன், பொது நலன், நாட்டின் நலன் என்று ஒரு மிக கன பரிமாணமுள்ள காரணத்தை முன்வைத்தால் நீதிமன்றம் அதை ஆராய்ந்து பார்க்கும். அல்லாமல் போகிற போக்கில் என்னுடைய தனிப்பட்ட தகவல்களை, உரிமைகளை அரசு உள்பட யாரும் கடாசிப்போட முடியாது. 
இன்றைய காலகட்டத்தில் இந்தப் பாதுகாப்பு நமக்கு மிக முக்கியம். அதீத பொறுப்புடனும், மக்கள் நலன், தேச நலன் கருதியும், மக்களாட்சி என்ற அமைப்பின் ஆன்மாவுக்கு சேதம் வரக்கூடாது என்ற கவலையுடனும் இந்தத் தீர்ப்பை அளித்த ஒன்பது பேருக்கும் நாம் நமது சார்பிலும், நம் சந்ததியினர் சார்பிலும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். சாமானியக் கடன் இல்லை பெருங்கடன்!
ஆதார் திட்டம், வாட்ஸ்அப், இ.பி.கோ பிரிவு 377, மாட்டிறைச்சி தடை, இப்படி பல வழக்குகளின் மீதும் இந்தத் தீர்ப்பின் தாக்கம் விழும். நம் பிரைவஸி உரிமை குலையாவண்ணம் அந்த வழக்குகள் முடிவு பெறும் என நம்பலாம். 
நீதியரசர் சலமேஷ்வர் அரசியல் சாசனத்தில் இந்த உரிமை சொல்லாமல் சொல்லப்பட்ட மறைபொருள் என்கிறார். இந்தத் தீர்ப்புக்கும் மறைபொருள் உள்ளது, அது வலுவானது.
ஏ.டி.எம். ஜபல்புர் எதிர் சிவகாந்த் சுக்லா (1976) என்ற தீர்ப்பைப் பற்றி இதில் கூறப்பட்டுள்ளது. நெருக்கடிச் சட்டம் நிலுவையில் இருக்குபொழுது ஒருவரின் விடுதலையுரிமை, தனியுரிமை உயிருடன் இருக்குமா இல்லை பறி போகுமா என்பது அந்த வழக்கில் எழுந்த கேள்வி. 
ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அது. அதில் நால்வர் விடுதலையுரிமையை நமக்கு சட்டம்தான் தருகிறது. ஆகவே சட்டத்தின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்படும்பொழுது அந்த உரிமையும் போய்விடும் என்றார்கள். அந்த நால்வரில் ஒருவர் இன்றைய சந்திரசூட் அவர்களின் தந்தை. 
நீதியரசர் எச்.ஆர். கன்னா மட்டும் இந்த உரிமைகள் நம் பிறப்புரிமைகள். அவை அடிப்படை உரிமைகள் என்று அரசியல் சாசனம் அறிகிறதே அன்றி யாரும் நமக்கு இந்த உரிமைகளைக் கொடுக்கவில்லை. அவை பறிக்கப்பட்டால் அதை எதிர்த்து வழக்காடலாம் என்றார். இந்த முடிவினால் அவருக்குத் தலைமை நீதிபதி பதவி பறி போனது ஆனால் மக்களாட்சிக்கு உயிர் கொடுத்த மகான் என்று வையம் புகழ்கிறது. 
அந்த நால்வர் தந்த தீர்ப்பு சரியல்ல என்று பொருள்பட பல தீர்ப்புகள் பின்னர் வந்துவிட்டன. இருந்தும் இந்தத் தீர்ப்பில் ஏ.டி.எம். ஜபல்புர் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்று திரும்ப திரும்ப ஒவ்வொருவரும் சொல்கிறார்கள். ஏன்? இந்த தெளிவான செய்தி எல்லோர் செவிகளிலும் விழவேண்டும் என்றுதான். 
நம் அடிப்படை உரிமைகளை யாரும் எளிதில் பந்தாட முடியாது என்று சொல்ல வேண்டியதை அழகாக சொல்லிவிட்டார்கள். நீதி தலைதூக்கி நிற்கிறது. 

கட்டுரையாளர்:
நீதிபதி (ஓய்வு).
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.