சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

உழவனின் வாழ்வு மேம்படுமா?

பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கு இடையே ஜூலை 1979-ஆம் ஆண்டு இந்தியாவின் 5-ஆவது பிரதமராகப் பதவியேற்றார் செளத்ரி சரண் சிங். இவர், ஏழு மாதங்களே ஆட்சியில் இருந்தார்

News image
Updated On :22 டிசம்பர் 2017, 7:40 pm

ந. செந்தில்குமார்

பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கு இடையே ஜூலை 1979-ஆம் ஆண்டு இந்தியாவின் 5-ஆவது பிரதமராகப் பதவியேற்றார் செளத்ரி சரண் சிங். இவர், ஏழு மாதங்களே ஆட்சியில் இருந்தார். அவருடைய ஆட்சியின்போது, ஜமீன்தாரி ஒழிப்பு முறை சட்டத்தை கொண்டு வந்ததுடன், நிலச்சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், விவசாய விளைபொருள் விற்பனைக்காக சந்தை மசோதாவை அறிமுகப்படுத்தினார். அவர் பிறந்த தினமான டிசம்பர் 23-ஆம் தேதி 'விவசாயிகள் தினமாக' கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. இந்தியாவில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வேளாண்மை வளர்ச்சிக்கான அடித்தளம் சங்க காலத்திலேயே அமைக்கப்பட்டு, அது இன்றளவும் வளர்ந்து அறிவியல் துணைகொண்டு சிறந்து விளங்குகிறது.
நானிலத்தில் வேளாண்மைத் தொழிலைச் செய்தோர் உழவர் என்ற போதிலும், குறிஞ்சி மக்கள் ஏனல் உழவர், முல்லை மக்கள் செஞ்சால் உழவர், மருதநில மக்கள் கழனி உழவர், நெய்தல் நில மக்கள் தண்டலை உழவர் என அழைக்கப்பட்டனர்.
தமிழகத்தைப் பொருத்தமட்டில், தென் மேற்குப் பருவகாலம், வடகிழக்குப் பருவகாலம், கோடைகாலம் ஆகிய பருவகாலங்களில் பெய்யும் மழையைப் பொருத்தே பயிர்த் தொழில் சிறக்கும்.
பன்னெடுங்காலமாக சாகுபடியில் இருந்துவரும் பழம்பெரும் பயிர் நெற்பயிர்தான். நெல் பயிரிடப்பட்டு ஏறக்குறைய 7,000 ஆண்டுகள் ஆவதாக கணக்கிடப்படுகிறது. உணவுக்காகப் பயிரிடப்படும் பயிர்களில் உலக அளவில் நெல் முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் மிகவும் முக்கியமான பயிர் நெல்.
தமிழ்நாட்டில் 1950-இல் ஹெக்டேருக்கு 552 கிலோ நெல் விளைந்தது. 2003-இல் ஹெக்டேருக்கு 3,500 கிலோவாக நெல் விளைந்தது. ஆனால், விளைவித்த விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மட்டும் உயரவில்லை. காரணம், உற்பத்தி செய்கின்ற விளைபொருள்களுக்கு விவசாயி விலை நிர்ணயிக்க முடியவில்லை.
1950-ஆம் ஆண்டில் ரூ. 10 கோடி முதலீட்டில் ஒருவர் தொழிற்சாலையைத் தொடங்கியிருந்தால் முதலீடு பன்மடங்கு உயர்ந்து தற்போது ரூ. 500 கோடிக்கு மேல் உயர்ந்திருக்கும். அதேபோல், 1950-ஆம் ஆண்டில் ஒரு விவசாயி கடனாளியாக இருந்தால் 2017-ஆம் ஆண்டிலும் கடனாளியாகவே இருப்பான்.
நதி நீர் பங்கீடு விஷயத்தில் நமது நாட்டில் மாநிலங்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்படுவது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தானது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
1987-ஆம் ஆண்டு மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் முதல் முறையாக நாட்டின் நீர்வளக் கொள்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தண்ணீர் பற்றாக்குறையான பகுதிகளுக்கு தண்ணீர் மிகுதியாக உள்ள பகுதியிலிருந்து (நதிகள் இணைப்பு மூலம்) மாற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று இதில் உள்ள சாத்தியக்கூறுகளை ஆராய தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டது.
நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 9 கோடி ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். ஒரு கோடி பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். 35 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். உணவு உற்பத்தி 40 கோடி டன் அதிகரிக்கும். 
வெள்ளம், வறட்சி நிவாரணத்துக்காக மத்திய அரசு செலவிடும் ரூ. 45 ஆயிரம் கோடி மிச்சமாகும். கிராமப்புற பொருளாதாரம் செழிக்கும். வறுமை ஒழிக்கப்பட பெரிதும் உதவும்.
எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி உற்பத்தி செலவைவிட அரை மடங்கு கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். உதாரணமாக, ரூ. 1,000 செலவில் உற்பத்தி செய்யப்பட்ட விவசாய விளைபொருளுக்கு ரூ. 1,500 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்து தர வேண்டும். நவீன தொழில்நுட்பங்கள் இன்னும் சிறு விவசாயிகளை சென்றடையவில்லை. பாசன நீருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
தங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட வேண்டும் என்பது நமக்கு உணவுப் பொருளை விளைவிக்கும் ஏழை விவசாயிகளின் வேண்டுகோள்.
உலகில் கடைசி மனிதன் இருக்கும் வரையும், 'வயிறு' என்ற ஒன்று இருக்கும் வரையும் 'பசி' என்ற பிணியும் இருந்தே தீரும். இப்பசி பிணியைத் தீர்க்க உழவனைத் தவிர, வேறு யாரும் இலர்.
விஞ்ஞான வளர்ச்சியில் உடல் உபாதைகளைத் தீர்க்கப் பல்வேறு மருந்துகள் தோன்றலாம். ஆனால், நிலையான பசியை நிரந்தரமாக நீக்க எந்தவிதச் செயற்கை மருந்துகளாலும் இயலாது.
உழவுத் தொழிலைச் செய்யாதவர்களையும் காப்பாற்றுவது உழவர்கள் என்பதால், உலகம் என்கிற தேருக்கு அச்சாணி போன்றவர்கள் உழவர்கள் என்பது வள்ளுவரின் வாக்கு.
பாரதியும் இது கருதியே ''உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்'' என உழவுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளான். அந்த உழவனின் வாழ்வு மேம்படுமா?

இன்று விவசாயிகள் தினம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.