தடம் (தடு) மாறும் நியமனம்

நமது ஜனநாயக அமைப்பில் குடியரசுத்தலைவர், பிரதமர், உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோரின் பதவிகள் ஒருபோதும் காலியாக இருப்பதில்லை.

நமது ஜனநாயக அமைப்பில் குடியரசுத்தலைவர், பிரதமர், உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோரின் பதவிகள் ஒருபோதும் காலியாக இருப்பதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர் தலைமையிலான ஆட்சி இல்லாதபோதுகூட குடியரசுத் தலைவர் ஆட்சியை ஆளுநர் நடைமுறைப்படுத்துகிறார்.
உயர்கல்வி அமைப்பான பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தர் மிகவும் முக்கியமானவர். அவர்தான் பல்கலைக்கழகத்தின் கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தவர். நிதி ஒதுக்கீடு, புதிய கல்விக்கொள்கைகள், ஆராய்ச்சி வளர்ச்சிப்பணிகள், புதிய திட்டங்கள், பட்டமளிப்பு விழாக்கள் ஆகியவை துணைவேந்தர் இல்லாமல் நடைபெறாது.
ஆளுநர் மாநிலத்தின் தலைவராகக் கருதப்படுகிறார். அதுபோன்று பல்கலைக்கழகத்தின் தலைவராக விளங்குபவர் துணைவேந்தர். முழுநேர ஆளுநர் இல்லாதபோது பொறுப்பு ஆளுநர் நியமிக்கப்படுவதுபோலத் துணைவேந்தர் இல்லாதபோது ஒரு நிகழ்நிலைத் துணைவேந்தர் (Acting Vice Chancellor) இருக்க வேண்டாமா. சிந்திக்க வேண்டும்.
ஒரு துணைவேந்தர் தமது பதவிக்காலம் முடிந்து வெளியேறும்போது, புதிய துணைவேந்தர் பொறுப்புகளைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிப்
பணிகள் தடையில்லாமல், பாதிப்பில்லாமல் தொடரும். இதற்கு நேர்மாறான சூழல் அமைவது ஆரோக்கியமான சூழலன்று.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாதபோதும், அவர் அயல்நாடுகள் சென்றபோதும் தொய்வில்லாமல் பொறுப்புகளைக் கவனிக்க ஒரு நிகழ்நிலைத் துணைவேந்தர் செயல்பட்டுள்ளார். அந்த வகையில் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எட்டுமுறை துணைவேந்தர் பொறுப்புகளைக் கவனித்துள்ளார். கருவறை இல்லாத மதில்சூழ் சுவர்கள் கோயிலாகுமா, தலைவன் இல்லாத படை, இலக்கைச் சென்றடையுமா அது போன்று துணைவேந்தர் இல்லாப் பல்கலைக்கழகம் பொலிவுபெறுமா?
துணைவேந்தரை நியமனம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, 1997 ஆகஸ்ட், 2007 ஏப்ரல், 2012 டிசம்பர் ஆகிய காலகட்டங்களில் "தினமணி'யில் மூன்று கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவற்றுள் பல்கலைக்கழகங்களுக்குப் பொதுச்சட்டம் வேண்டும் என்னும் கட்டுரை குறிப்பிடத்தக்கது.
2000-இல் பொதுப் பல்கலைக்கழகச் சட்டம் குறித்துத் துணைவேந்தர்கள் அடங்கிய குழுவால் ஆராயப்பெற்று, அதனடிப்படையில் அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அது நடைமுறைக்கு வந்தால் புதிய வழிகாட்டு நெறிகள் கிடைக்க வாய்ப்புண்டு.
துணைவேந்தரை நியமனம் செய்வதற்கு ஆளுநரால் மூவர் அடங்கிய குழு அறிவிக்கப்படுகிறது. அவர்கள் மிகவும் தகுதி வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் இருப்பர். ஆளுநர்அறிவித்த பிறகு அக்குழுவில் இடம்பெற்றிருப்பவர்களின் மீது விவாதம் நடைபெறுவது நல்லதல்ல. மாறாக நம்பிக்கை வைக்க
வேண்டும்.
ஆங்கிலத்தில் Search Committee என்பதற்குத் தமிழில் தேடுதல் குழு என்றுதான் பொருள். எனவே தகுதியான கல்வியாளரை இனம்காண வேண்டியது குழுவினரின் கடமை. வேண்டுமானால், பரிசீலனை செய்யும்படிச் சில பெயர்களை உயர்கல்விச் செயலர் பரிந்துரை செய்யலாம். அதனை ஏற்பதும் மறுப்பதும் குழுவின் வரம்பிற்குட்பட்டது.
ஒருவர் தன்னைத் தானே துணைவேந்தர் பதவிக்கு முன்மொழியக் கூடாது. அதுபோலக் குறிப்பிட்ட பல்கலைக்கழகம் விளம்பரம் செய்யும் வழக்கமும் இல்லை. இதற்கு நேர்மாறான நடைமுறைகள் எப்படியோ உருவாகிவிட்டன. பல்கலைக்கழக நிதிநல்கையின் வழிகாட்டுதலில் விளம்பரம் செய்யவேண்டும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. துணைவேந்தர் பதவியானது விண்ணப்பித்துப் பெறுவதல்ல. கல்வி, ஆராய்ச்சிப் புலமை, நிர்வாகத்திறன் ஆகிய ஆளுமையின் வெளிப்பாட்டால் ஒருவரைத் தேடி வருவதாகும்.
நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெறுவதாக வைத்துக்கொள்வோம். அவற்றுள் தகுதியான விண்ணப்பங்களைத் தேர்வு செய்வதற்கும் தேவையில்லாதவற்றைத் தகுதியிழக்கச் செய்வதற்கும் ஒரு குழு அமைக்க வேண்டும். பின்னர்தான் தகுதியான மூவரது பெயர் துணைவேந்தருக்குப் பரிந்துரை செய்யப்படவேண்டும். இவை இரண்டையும் ஒரு குழுவே செய்வது பொருந்தாது.
காரணம், பேராசிரியர் பணியிடங்களுக்கு விளம்பரம் செய்யப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அதன்பின் கூராய்வுச் (Scrutinizing) செய்யப்பட்டுத் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுகிறார்கள். அவ்வாறு அழைக்கப்பட்டவர்களை மற்றொரு குழு தேர்வு செய்கிறது. அந்த குழுவிற்குத் தெரிவுக்குழு (Selection Committee) என்று பெயர்.
அப்படியானால் தேர்வுக் குழுவும் தெரிவுக் குழுவும் வெவ்வேறு என்பதும், அவ்விரு பணிகளையும் ஒரே குழு செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கன. எனவேதான் விளம்பரம் செய்து விண்ணப்பம் பெறும் நடைமுறை துணைவேந்தர் நியமனத்தில் இருந்ததில்லை.
அடுத்து, துணைவேந்தர் இல்லாதபோது அவரது பொறுப்புகளைக் கவனிப்பதற்கு மூவர் குழு அமைக்கப்படுகிறது. இதற்கு ஒருங்கிணைப்புக் குழு என்று பெயர். அந்தக் குழுவில் குறிப்பிட்ட பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள அதே பல்கலைக்கழகத்தைச் சார்த பேராசிரியர் ஒருவர் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் பல்கலைக்கழகப் பணிகளில் பயிற்சியும் அனுபவமும் இல்லாத பிற உறுப்பினர்களுக்கு உதவமுடியும்.
குறிப்பிட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர் இல்லாத குழு ஒன்று அமையுமானால் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிப்பணிகள் முற்றிலும் தேக்கமடையும். எதிர்காலத்தில் ஒருங்கிணைப்புக் குழு அமைய வேண்டிய சூழல் இல்லாமல் இருப்பது ஆரோக்கியமானது.
தேவையிருந்தால் அந்தக் குழுவில் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், அரசு தரப்பில் ஒருவர், ஆளுநர் நியமனங்களுள் ஒருவர் என்னும் வகையில் ஒருங்கிணைப்புக் குழு அமைத்தல் வேண்டும். இதற்காகப் பல்கலைக்கழக விதிகளில் திருத்தம் செய்யப்படவேண்டும்.
துணைவேந்தர் இல்லாத நிலையில் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்துவது ஏற்புடையதா என்பதையும் சிந்திக்க வேண்டும். வேந்தர் தலைமையில் இணைவேந்தர் முன்னிலையில் பட்டமளிப்பு விழா நடத்தப்படுகிறது. ஆனால் துணைவேந்தர்தான் விழாவினை நடத்துபவர். பல்கலைக்கழகத்தின் வேந்தராகிய ஆளுநரால் வழங்கப்படும் பட்டங்களில் துணைவேந்தர் கையொப்பம் என்பது இன்றியமையாதது.
சென்னைப் பல்கலைக்கழக வழிகாட்டுதலில் தெளிவான விதிமுறைகள் உள்ளன. துணைவேந்தர் கையொப்பம் இல்லாமல் வழங்கப்படும் பட்டங்கள் அயல்நாடுகளில் சிக்கலைத் தோற்றுவிக்கும். வேந்தரும் இணைவேந்தராகிய கல்வி அமைச்சரும் வர இயலாதபோது துணைவேந்தர் பட்டமளிப்பு விழாவினை நடத்தலாம். ஆனால் துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழாவினை நடத்துவது மரபல்ல. அவ்வாறு நடத்தவும் முடியாது. நடத்தவும் கூடாது.
1977-களில் மால்கம் ஆதி சேஷய்யா துணைவேந்தராக இருந்தார். அப்போது முன் அனுமதி பெறாமல் வந்த பல உயரதிகாரிகளைச் சந்திக்க மறுத்துவிட்டார். அதுபோன்று ஏ.எல். முதலியாரை ஒரு திருமணத்திற்கு அழைத்துள்ளனர். அப்போது அவர் குறிப்பிட்டதாவது, ஏ.எல்.முதலியார் உங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு வருவார். ஆனால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வரமாட்டார் என்று மறுத்துவிட்டதாகச் சொல்லுவர்.
இவ்வாறெல்லாம் முன்னைத் துணைவேந்தர்கள் அந்த இருக்கையைக் கண்ணியத்துடன் காப்பாற்றி இருக்கிறார்கள். அதற்கு அரசின் முழு ஒத்துழைப்பும் கிடைத்திருக்கிறது என்பதை எண்ணும் போதெல்லாம் மனம் நெகிழ்கிறது.
பொதுப் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தரை நியமிக்கும்போது அப்பல்கலையைச் சார்ந்த பேராசிரியர்களைக் கருத்தில் கொள்வது சிறப்பு. காரணம் ஒரு சட்டப் பல்கலைக்கழகத்திற்கும், மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கும், வேளாண் பல்கலைக்கழகத்திற்கும், பொறியியல் பல்கலைக்கழகத்திற்கும், விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கும் பொதுப் பல்கலைக்கழத்திலுள்ள பேராசிரியர்களைத் துணைவேந்தர்களாக நியமிக்க முடியுமா? அது முடியாது. பொருத்தமும் அன்று.
அதுபோன்று பிற துறைப் பல்கலைக்கழங்களில் பணியாற்றும் பேராசிரியர்களைப் பொதுப் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தர்களாக நியமனம் செய்வதும் பொருத்தமில்லாதது. அந்தந்த பல்கலையிலிருந்து ஒருவரைத் துணைவேந்தராக நியமிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டால் வளர்ச்சிப்பணிகள் தொய்வில்லாமல் தொடரும்.
மூன்றாண்டுகள் என்னும் துணைவேந்தரின் பணிக்காலத்தை ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டியதும் காலத்தின் தேவை. காரணம் மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு துணைவேந்தரால் குறிப்பிட்ட கல்வி வளர்ச்சி மற்றும் மாற்றங்களைச் செய்ய இயலாது.
குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோரின் பதவிகாலத்தைப் போன்று துணைவேந்தர்களின் பதவிக் காலத்தையும் ஐந்தாண்டுகளாக நீட்டிக்க வேண்டும். இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் மீண்டும் நீட்டிப்பு அல்லது இரண்டாம் முறை நியமனம் என்பதற்குத் தேவை எழாமல் போகும்.
எனவே, துணைவேந்தர் நியமனம் சரியான திசையில் பயணிக்க உயர்கல்வி அமைச்சகம் வழிகாட்ட வேண்டும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com