ஜேட்லியும் சிதம்பர ரகசியமும்
இந்தியாவின் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமையும் என்பதுதான் ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பும்.
இந்தியாவின் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமையும் என்பதுதான் ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பும். இது நிதிசார்ந்த ஒரு அறிக்கையாக இருந்தாலும் இதற்கு அரசியல் வர்ணம் பூசப்படுகிறது. இதனால் இதனை ஆதரிப்பவர்கள், மறுப்பவர்கள் என்று இருவகையினர் இருப்பர்.
இந்த நிதிநிலை அறிக்கைகான பின்னணிதான் முன்னணி வகி க்கிறது என்று தோன்றுகிறது. உலகக் காரணிகள், அமெரிக்காவின் வட்டிவிகித உயர்வு, அதிபர் ட்ரம்பின் பாதுகாப்பியல், தேர்தல்கள், ஜி.எஸ்.டி. (GST) ஒழுங்குச் சட்டம் - இவை எல்லாவற்றையும் விட பணமதிப்புக் குறைவு போன்றவை தான் நம்மனக்கண் முன்பாக நிழலாடுகின்றன. இந்த விஷயங்களை மனதில் கொண்டு இந்த அறிக்கையின் அம்சங்கள் ஆராயப்பட வேண்டும்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியாவின் எல்லா சிக்கல்களுக்கும் தீர்வாக முடியாது என்பது திண்ணம். சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவுகள், வேளாண்மை மற்றும் கிராமப்புற மக்கள் நலனை இது உள்ளடக்கியிருப்பதால் இது அவர்களுக்கு உகந்ததாகக் காட்சியளிக்கிறது. இருந்தபோதிலும் ஒரு சிலரிடம் ஒரு சில விஷயங்களில் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
இந்த ஆண்டிற்குரிய அறிக்கை, பாரதநாட்டின் ஆழ்நிலைப் பிரிவுகளான வேளாண்மையையும் ஊரகப் பொருளாதாரத்தையும் தொட்டுள்ளது. ஐந்தாண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. வேளாண்மைத் துறைக்கான நேரடி மற்றும் மறைமுக ஒதுக்கீடுகள், அவற்றின் பயன்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை.
1.8 லட்சம் கோடி ரூபாயை அரசு வேளாண்மைக்கும் ஊரக வளர்ச்சிக்கும் வழங்கியிருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் (MNREGA) என்பது 48,000 கோடி ரூபாயை உள்ளடக்கியதாக உள்ளது. வேளாண்மை கடனாக 10 லட்சம் கோடி ரூபாய் என்பது விவசாயிகளுக்கு நிதிசார் பிராணவாயுவாக (மூச்சுக்காற்றாக) அமைகிறது.
இதுநாள்வரை குறுகிய பட்ஜெட்டாகவும் அதிக என்ஜின் சத்தத்துடன் குறைந்த செய்திகளை கொண்டிருந்த ரயில்வே பட்ஜெட்டை ஜேட்லி ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் தாக்கல் செய்தார். ரயில்வேயை உள்ளடக்கிய பல்வேறு ஒதுக்கீடுகள் பரந்துபட்ட கண்ணால் பார்க்க வேண்டியவை.
3.96 லட்சம் கோடி உள்கட்டமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் போற்றத்தக்க ஒன்றாகும். இந்த சொட்டு சொட்டாக கீழ்நோக்கி வடியும் போக்கினால், மிகப்பெரிய உள்கட்டமைப்பின் அடிப்படைத்துறைகளான சிமெண்ட், எஃகு, தானியங்கி ஆகியனவற்றில் நல்ல வளர்ச்சியைக் காணமுடியும்; வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.
உற்பத்தித் துறையில் உள்ளவர்கள், தங்களுக்கு மிகக் குறைந்த ஊக்கம் அளிக்கப்பட்டதாக புகார் கூறுகிறார்கள். உற்பத்தித்துறையில் உள்ள கம்பெனிகளின் சராசரி திறன்பயன்பாடு (Capacity Utilisation) படிப்படியாக குறைந்து வருகிறது.
2007-இல் 91 விழுக்காடாக இருந்த திறன் பயன்பாடு 2013-இல் 74 விழுக்காடாகவும் 2016-இல் 69 விழுக்காடாகவும் குறைந்துவிட்டது. இதை கூடுதலாக்க உற்பத்தி துறையில் இருப்பவர்களின் பெருமுயற்சி தேவை. வங்கிகளில் கூடுதல் பணப்புழக்கம் மற்றும் நேரடி வரிச் சலுகைகளால் ஏற்பட்டுள்ள வருவாய் அதிகரிப்பால், தானியங்கிகள் மற்றும் நுகர் அமைப்பு
உற்பத்தித் துறையில் ஏற்றத்தை எதிர்பார்க்கலாம்.
புதிதாகப் பிறந்த குழந்தைகள் - சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்க்குச் சத்தான நல்ல செய்தியைத் தந்துள்ளார் ஜேட்லி. ஏன் குழந்தை என்று குறிப்பிடுகிறேன் என்றால், பல ஆண்டுகள் புறக்கணிப்பிற்கு பிறகு இவை கண்ணில்படும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதுதான்.
குறைக்கப்பட்ட வரிவிகிதம் 25% என்பது முதல் பாயசம் அளவில் குறைவாக இருந்தாலும் விளைவில் பயன் தருவதாக உள்ளது.
சின்னஞ்சிறு தொழில் செய்வோர்க்கு நாள் முழுவதும் நல்லபடியாக இருக்க ஒரு அருமையான காலைச் சிற்றுண்டிக்கு
உறுதியளித்துள்ளார். முத்ரா (MUDRA) திட்டத்தின் மூலம் கடன் பெறுவதை இரட்டிப்பாக்கியுள்ளார். ரூ.2.44 லட்சம் கோடியாக உயர்த்தியிருப்பது ஒரு நல்ல காலைச் சிற்றுண்டியாகும். இந்தக் குழந்தைகளின் பசியை இது மிக நன்றாகவே போக்கும். ஏனென்றால் சென்ற ஆண்டின் ஒதுக்கீடான 1.22 கோடியை இது மிஞ்சி இருக்கிறது.
இறுதியான முக்கியக் குறிப்பு என்ன வென்றால் அரசியல் கட்சிகள் பேர் ஊர் தெரியாத ரொக்க நன்கொடைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி கொடுத்ததுதான்.
ஜேட்லியின் இந்தத் துணிகரமான முடிவு போற்றற்குரியது. ரொக்கமாகப் பெறும் ஒற்றைவழி நன்கொடை 2,000 ரூபாய் என வரை
யறை செய்தது மெச்சத்தகுந்தது. இனி அரசியல் கட்சிகள் தங்கள் நன்கொடை எல்லையைப்பெற பத்துமடங்கு பாடுபட வேண்டும்.
நேரடி வரிவிதிப்புப் பகுதியை எடுத்துக்கொண்டால், ஜேட்லி தன் உரையில் வரிச்சுமையை நேர்மையாக வரிசெலுத்துவோர் மீது சுமத்திவிட்டு மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்கிறார். இந்தப் போக்கை மாற்றியமைத்திட வரி விதிப்பின் அடிப்படையைமாற்றி, நியாயவான்களை கெளரவிக்கும் வகையில் ஜேட்லி வருமான வரி விகிதத்தை 10%-லிருந்து 5%-ஆகக் குறைத்துவிட்டார்.
2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு இந்த மாற்றத்தை அறிவித்திருக்கிறார். எளிதாக நிரப்பும் வகையில் ஒருபக்க வருமானவரி படிவத்தை வடிவமைத்து ஜேட்லி வருமானவரித் துறைக்குப் புதிய விருந்தினர்களை வரவேற்கிறார். நாமும் அதை வரவேற்போம்.
கல்வியாளர்களுக்கு சில ஏமாற்றங்கள் உண்டு. ஒருங்கிணைப் பட்டியலில் கல்வி உள்ளது. மனிதவள மேம்பாட்டுத்துறைக்கும், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் திறன் வளர்ச்சி துறைக்கும் அளித்த ஒதுக்கீடு வருடாந்திர மற்றும் வழக்கமான சடங்காகத்தான் தெரிகிறது. குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஸ்வயம் (SWAYAM) போன்றவற்றிற்குரிய ஒதுக்கீடு முந்தைய அறிவிப்புக்களின் தொடர்ச்சியாகத்தான் உள்ளதே தவிர புதிதாக ஒன்றுமில்லை.
தன்னாட்சிக் கல்வி நிலையங்கள், யு.ஜி.சி. மறுமலர்ச்சி, மதிப்பீட்டு வடிவமைப்புப்பற்றி கூறியது வியப்பாக உள்ளது. காரணம், இவை மனிதவள மேம்பாட்டுத்துறை நிர்வாக மற்றும் ஒழுங்குபடுத்தும் கோட்பாட்டின் எல்லைக்குள் அடங்கும்.
நிதிநிலை அறிக்கையில் கூறும் அளவிற்கு பெரிய ஒதுக்கீடு கல்விக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. 1986 தேசிய கல்விக் கொள்கை, தேசிய அளவிலான தேர்வின் தேவையை சுட்டிக்காட்டியது. இன்னும் அது குறித்த முடிவேதும் இல்லை என்பது நினைத்தற்குரியது.
தேசிய நுழைவுத் தேர்வு (NEET) வழி மருத்துவ மாணவர் சேர்க்கையை தேசிய மயமாக்கலாம் என்ற நடப்பு முயற்சிக்குக்கூட கடுமையான எதிர்ப்புத் தோன்றியுள்ளது. இன்னும் தேசிய தேர்வு முகமை (National Testing Agency) எனும் கருத்து எந்த அளவு வெற்றிகாணப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த அட்சய பாத்திர நிதிநிலை அறிக்கை வசந்த பஞ்சமி நாளன்று வழங்கப்பட்டிருப்பது, பலருக்கு நல்ல உணவாகும். இந்த அறிக்கை இன்னும் பல பெரிய அறிவிப்புகளை சிதம்பர ரகசியமாக வைத்திருக்கிறது. ஜேட்லியின் அட்சய பாத்திரம் நாம் எதிர்பார்க்கும் சுவையான உணவை பொறுமையாகத்தான் அளிக்கும் போலிருக்கிறது. காரணம், பண மதிப்புக் குறைவு குறித்த புள்ளி விவரங்கள் இன்னும் கைக்கு வந்தபாடில்லை. 2017 ஜுன் 30-ஆம் தேதி என்று கெடு வரையறுக்கப்பட்டுள்ளது.
வருமானம் குறித்த வெளியீட்டுத் திட்டம் மற்றும் ஏழை கல்யாண யோஜனா சேமிப்பு 2017, மார்ச் 31 வரை உள்ளது. அண்மையில் கிடைத்த தகவல்களின்படி 18 லட்சம் தனிப்பட்ட நபர்களின் ரொக்க வைப்புத் தொகை (பணமதிப்புக் குறைப்பிற்குப் பின்) முறையாக வருமானம் உள்ளவர்களின் பட்டியலோடு ஒத்துச்செல்லவில்லை என்பது தெரிகிறது. ஆகவே வரி செலுத்துவோர் வரிசையில் இன்னும் பலர் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.
பணமதிப்புக் குறைவு குறித்த சில செய்திகள்தான் ஜேட்லியின் நிதிநிலை அறிக்கை பேச்சில் இடம் பெற்றுள்ளதே தவிர, முழுமையான தகவல்கள் காணப்படவில்லை. பணமதிப்புக்குறைவால் எழும்பிய சிதம்பர ரகசியத்திற்காக ஜேட்லி காத்திருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.
குறைந்தது 1.5 லட்சம் கோடி ரூபாய் இந்த முறைமூலம் வெளியிடப்படும் என்று வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளார்கள். இந்த மதிப்பீடு ஜேட்லிக்கு தேவையான நிதியுதவியை அளித்து மற்றும் 3.2% ர்ச் எஈட என்ற எல்லைக்கு உறுதுணை புரிவதோடு, வரும் காலத்தில் பெரிய அறிவிப்புகளைத் தெரிவிக்கவும் கைகொடுக்கும்.
சுருங்கச்சொன்னால் ஜேட்லியின் நிதிநிலை அறிக்கைக்கு பிறகு ஒரு சிதம்பர ரகசியத்தை எதிர்பார்ப்போம்.
கட்டுரையாளர்:
முதன்மையர்,
சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






