கனவு நனவாகும் காலம்!
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதன் விளைவாக பொதுமக்கள் எதிர்கொண்ட சிரமங்கள் ஏராளம்.


உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதன் விளைவாக பொதுமக்கள் எதிர்கொண்ட சிரமங்கள் ஏராளம். அதே நேரம், இந்த நடவடிக்கையால் படிப்படியாக நல்ல பலன்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை மக்களிடையே இன்னமும் இருக்கிறது.
இந்த விஷயம் குறித்து சிந்திக்க, குறுகிய கால விளைவுகள் மற்றும் நீண்டகால விளைவுகள் என இரண்டு வித பார்வைகள் தேவைப்படுகின்றன.
குறுகிய கால விளைவுகள் என்று எடுத்துக் கொண்டால், முதல் 50 நாட்கள் பொதுமக்கள் அனுபவித்த கஷ்டங்களுக்குப் பிறகும், புழக்கத்துக்கு தேவையான பணம் இதுவரை உரிய அளவில் கிடைக்கவில்லை என்பது நிதர்சனம். இதனால் பொதுமக்களுக்கு சிரமங்கள் தொடர்கின்றன. பொருளாதார மந்தநிலையும் உருவாகியுள்ளது. ஆங்காங்கே வேலை இழப்புகளும் நேர்ந்துள்ளன.
நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கம் நிச்சயமாக குறையும். ஊழல் புரிபவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, ஊழல்கள் குறைய வாய்ப்பு உள்ளது. பணத் தட்டுப்பாட்டால், அவசியம் கருதி, இப்போது கொஞ்சமாக தொடங்கியுள்ள ரொக்கம் இல்லா பணப் பரிமாற்றம், விரைவில் நூறு சதவீதம் சாத்தியம் இல்லை என்றாலும், கடந்த காலங்களைவிட எதிர்காலத்தில், படிப்படியாக அதிகரிக்கும்.
உலகில் எந்த நாடும் இதை முழுமையாக சாதிக்கவில்லை. அது அவசியமும் அல்ல. "கேஷ் லெஸ்' சொசைட்டி என்பது, "லெஸ் கேஷ்' சொசைட்டிதான். அதாவது, "ரொக்கம் இல்லா சமுதாயம்' என்பது "குறைந்த ரொக்கம் உள்ள சமுதாயம்' என்பதை குறிக்கிறது என்பதுதான் உண்மை.
மேற்கூறிய மாற்றங்கள் மூலம் சுமார் ஒரு வருட காலத்தில் இந்தியப் பொருளாதாரம், படிப்படியாக வலுவடையும். அடுத்து வரக் கூடிய இரண்டு கால் ஆண்டுகளில், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.) குறைந்தது அரை சதவீதமாவது குறையும்.
ஆனால் அதன் பிறகு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். ஒரு வருடம் கழித்து ஜி.டி.பி. ஒரு சதவிகிதம் உயரக் கூடும். "மூடீஸ்' (Moody's) உள்ளிட்ட, சர்வதேச தர நிர்ணய அமைப்புகள் இதைத்தான் சொல்லுகிறன்றன.
இது ஒருபுறம் இருக்க, கடந்த 50 நாட்களில், பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்குப் பரிகாரம் செய்வது போல், உடனடி நன்மை கிடைக்கக் கூடிய இரண்டு விஷயங்கள் அண்மையில் நிகழ்ந்துள்ளன.
முதலாவது, சமுதாயத்தில் விளிம்பு நிலையில் வாழும் எளிய மக்களுக்கும் விவசாயப் பெருமக்களுக்கும் உதவும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு சலுகைகளை புத்தாண்டு தொடக்கத்தில் அறிவித்துள்ளார். இரண்டாவது, தேசிய வங்கிகளும், தனியார் வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை கணிசமான அளவில் குறைந்துள்ளன.
பிரதமர் மோடியின் அறிவிப்பின்படி, எளிய மக்கள் குறைந்த தொகையில் வீடு வாங்குவதற்கு அல்லது வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் பெற்றால் அதற்கான வட்டி விகிதம் குறைக்கப்படுகிறது. அதாவது, ரூ.9 லட்சம் வீட்டுக் கடனுக்கு 4 சதவீதம் வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதேபோல், ரூ.12 லட்சம் வீட்டுக் கடனுக்கு 3 சதவீதம் வட்டி தள்ளுபடி செய்யப்படும். இதன் பலனாக ஏழை, எளிய மக்களில் பலர் முதல்முறையாக தங்களுக்கான சொந்த வீடுகளை வாங்குவதற்கோ அல்லது கட்டிக் கொள்வதற்கோ முன்வருவார்கள்.
அரசு நல உதவி திட்டத்தின் ஒரு அம்சமாக, கர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படும். தமிழ்நாடு இதுபோன்ற பல திட்டங்களை நீண்ட காலமாக செயல்படுத்தி வருகிறது என்றாலும், நாடு தழுவிய வகையில் இந்த திட்டம் இப்போது செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் மத்திய அரசு ஒரு முடிவெடுத்துள்ளது. மாதச் சம்பளம் பெறுபவர்கள் தங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தாங்கள் சிரமப்பட்டு சேமித்தப் பணம், பிராவிடெண்டு ஃபண்டு, கிராஜுவிட்டி (பணிக் கொடை) மற்றும் காப்பீட்டுப் பாலிசி பணம் ஆகியவற்றை ஒன்று திரட்டி, அந்த தொகையை வங்கியில் டெபாசிட் செய்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு கிடைக்கக் கூடிய வட்டித் தொகை அவ்வப்போது குறைந்து போகக்கூடிய நிலை உள்ளது. ரிசர்வ் வங்கி "ரெப்போ ரேட்டை' (வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் குறுகியகால கடனுக்கான வட்டி) குறைக்கும்போது வணிக வங்கிகள் தங்களுடைய கடனுக்கான வட்டியை மட்டும் குறைப்பதில்லை.
கூடவே, டெபாசிட்களுக்கான வட்டியையும் குறைத்து விடுவார்கள். இதனால் மூத்த குடிமக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் "மூத்த குடிமக்களுக்கான வட்டி பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுக்கு வேறு எந்த ஒரு சமூகநலன் திட்டமும் இல்லை' என்ற கருத்து வல்லுனர்களால் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த கோரிக்கையை பிரதமர் மோடி இப்போது நிறைவேற்றியுள்ளார். இதன்படி, மூத்த குடிமக்களின் ரூ.7.5 லட்சம் வரையிலான வங்கி டெபாசிட்களுக்கு 8 சதவிகித வட்டி கிடைக்க வழி பிறந்துள்ளது. வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாறினாலும் அதாவது குறைந்தாலும், இது குறையாமல் இருக்கும். இது வரவேற்கத்தக்க நடவடிக்கை.
விவசாயிகளைப் பொருத்தவரை, பயிர் கடன்களுக்கு 60 நாள் வட்டி ரத்து செய்யப்படுகிறது. மகராஷ்டிரம், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில், இது காலத்தால் செய்த உதவியாக அமையும்.
எனினும், விவசாயிகள் துயர் துடைக்க, நீண்டகால அடிப்படையிலும், குறுகிய கால அடிப்படையிலும் மேலும் பல நடவடிக்கைகளும் அவசியம்.
சிறு தொழில் நிறுவனங்களின் மிகப் பெரிய சவால், சரியான நேரத்தில், சரியான அளவில் வங்கிக் கடன் கிடைப்பதில்லை என்பதுதான். இதைக் கருத்தில் கொண்டு, அவர்களது விற்று முதல் அடிப்படையில் வழங்கப்படும் வங்கிக் கடன் அளவு 25 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்திரவாத வரம்பு (Credit Guarantee Limit) ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
விவசாயக் கடன் வழங்குவதற்கு ஏதுவாக "நபார்டு' வங்கி மூலம் கூட்டுறவு அமைப்புகளுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் விரைந்து செயல்படுத்தப்பட்டால், விவசாயிகளின் தற்போதைய துயர நிலையில் துளியாவது நம்பிக்கை பிறக்கும்.
புத்தாண்டில் இரண்டாவது முக்கியமான நிகழ்வு, வங்கிக் கடன்களுக்கான வட்டி குறைகிறது. ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்ற நடவடிக்கையின் நேரடி விளைவாக வங்கிகளை டெபாசிட்களின் தொகை அபரிமிதமாக அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக, 4 சதவீதம் வட்டி கிடைக்கும் சேமிப்புக் கணக்குகளிலும், வட்டியே கிடைக்காத நடப்புக் கணக்குகளிலும் டெபாசிட்டுகள் அதிகரித்துள்ளன. எனவே, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வீட்டுக்கான கடன், வாகனத்திற்கான கடன், சிறுதொழில்களுக்கான கடன் ஆகியவற்றுக்கான வட்டி குறைக்கப்படுகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வட்டிவிகிதமே மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி போன்ற பல வங்கிகளும் வட்டி குறைப்பு அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கிவிட்டன.
மீதமுள்ள வங்கிகளின் அறிவிப்பும் விரைவில் வரும். அப்போதும்கூட, வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி சிறிதளவு வித்தியாசப்படுகிறது என்பதை வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் தங்கள் சொந்த வீட்டு கனவை நனவாக்கிக் கொள்ள முன்வர வேண்டும்.
தனி நபர்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்துக்கும் இந்த வட்டிக் குறைப்பு பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. வீடுகள், வாகனங்கள் அதிக அளவில் விற்பனை ஆகும்போது, அந்த துறைகளுக்குத் தேவையான சிமெண்ட், செங்கல், மணல், மரம், இரும்பு, பெயிண்ட் உள்ளிட்ட பொருள்களின் உற்பத்தியும் பெருகும். இது புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிகோலும்.
சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி, குறைந்த வருவாயில் வாழும் மக்களில் 95 சதவிகிதத்தினரின் சொந்தவீடு என்கிற கனவு, கனவாகவே உள்ளது. அதேநேரம் "எல்லாருக்கும் வீடு' என்ற திட்டம் 2022க்குள் நிறைவு பெற வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்கு. இந்த பிரம்மாண்டமான இலக்கை எட்ட மேற்கூறிய வட்டி குறைப்பு ஓரளவேனும் உதவும் என்பது உறுதி.
கார்மேகங்கள் நிறைந்த வானில் தோன்றும் வெள்ளிய ஒளிக்கீற்று போல், பல்வேறு சிக்கல்களுக்கிடையே உழலும் மக்களின் மனத்தில் மேற்கூறிய சலுகைகளும், வட்டி குறைப்பும் நம்பிக்கையைத் துளிர் விட செய்யும் என்பது உறுதி.
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...