உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் ஆயத்தங்கள் துவங்கிவிட்டன. இத்தேர்தல்களில் வெல்ல பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருபுறமும், அதன் அரசியல் எதிரிகள் மறுபுறமும் கச்சைகட்டி நிற்கிறார்கள். மாநிலக் கட்சிகளும் களத்தில் இருக்கின்றன.
மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வுக்கு இத்தேர்தல்கள் மிக முக்கியமானவை. அதேசமயம் மாநிலங்களில் ஆட்சி மாற்றம் என்பதையும் தாண்டி இத்தேர்தல்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
குறிப்பாக 403 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தல் மிகுந்த கவனம் பெறுகிறது. ஏனெனில் தற்போதைய மத்திய அரசை நடத்தும் பா.ஜ.க. கூட்டணி வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் வெல்ல முடியுமா என்பதைத் தீர்மானிப்பதாக உத்தரப் பிரதேச தேர்தல் இருக்கும்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர்கள் குறித்து நமது அரசியல் சாசனம் தெளிவாக வரையறுத்துள்ளது. அதன் 54-ஆவது ஷரத்தின்படி, நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களும், மாநில சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியும். தில்லி, புதுச்சேரி யூனியன் பிரதேச பேரவை உறுப்பினர்களும் இதில் வாக்களிக்கலாம்.
அரசியல் சாசனத்தின் 55-ஆவது ஷரத்து, "குடியரசுத் தலைவர் தேர்தலில் பல்வேறு மாநிலங்களின் வாக்களிப்புக்கு சீரான மதிப்பு இருக்க வேண்டும்' என்கிறது. அதற்கான கணக்கீட்டுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.), சட்டப்பேரவை உறுப்பினர்களின் (எம்.எல்.ஏ.) வாக்குகளுக்கு அந்தந்த மாநிலத்தின் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநில சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கையின் ஆயிரம் மடங்கால் அந்த மாநிலத்தின் மக்கள்தொகையை வகுக்கும்போது கிடைக்கும் எண்ணே அந்த மாநில பேரவை உறுப்பினரின் வாக்கு மதிப்பாகும்.
அடுத்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பைக் கணக்கிடவும் தனி சூத்திரம் உள்ளது. நாட்டிலுள்ள மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பை நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்களின் எண்ணிக்கையால் (776) வகுத்தால், ஒவ்வொரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு கிடைக்கும்.
இந்தக் கணக்கீடுகள் அனைத்தும் 1971-ஆம் வருடத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகின்றன.
மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் தனியொரு வாக்கைப் பதிவு செய்தாலும், அவர்களது வாக்குக்கு மக்கள் தொகை விகிதாசார பிரதிநித்துவ அடிப்படையில் மதிப்பு கூடவோ, குறையவோ செய்கிறது.
இந்த சூத்திரத்தின்படி, ஒவ்வொரு மாநில பேரவை உறுப்பினரின் வாக்கு மதிப்பும் மாறுபடுகிறது. இந்த மதிப்பு சிக்கிமில் (7) மிகக் குறைவாக உள்ளது. அருணாசல பிரதேசம் (8), மிúஸாரம் (8), நாகாலாந்து (9) ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலையில் உள்ளன.
இந்த மதிப்பின்படி கணக்கிட்டால் இம்மாநில எம்.எல்.ஏ.க்களின் மொத்த வாக்குகள்- அருணாசலப் பிரதேசத்தில் 480, மிúஸாரமில் 320, நாகாலாந்தில் 540 என அமையும்.
இதே சூத்திரத்தின்படி மதிப்பிடும்போது உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் போன்ற பெரிய மாநிலங்களில் வேறுவிதமான காட்சியைக் காண முடிகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 403; அவர்களின் தனிப்பட்ட வாக்கு மதிப்பு 208.
அவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு 83,824. இதையடுத்து மகாராஷ்டிரம் (50,400), மேற்கு வங்கம் (44,394) ஆகியவை வருகின்றன.
கடந்த 2012-இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலின்போது, 4,120 எம்.எல்.ஏ.க்களும், 776 எம்.பி.க்களும் வாக்களிக்கும் தகுதி பெற்றிருந்தனர். அதில் எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு 5,49,474 ஆகவும், எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு 5,49,408 ஆகவும் இருந்தன. ஒட்டுமொத்தமாக 4,896 மக்கள் பிரதிநிதிகளின் வாக்கு மதிப்பு 10,98,882 ஆகும்.
கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் பி.ஏ.சங்மாவுக்கும் இடையே போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான 10.50 லட்சம் வாக்குகளில் பிரணாப் முகர்ஜி 7.13 லட்சம் வாக்குகளுடன், பெரும்பான்மையைவிட அதிகமாகவே பெற்று வெற்றியடைந்தார்.
இப்போது, வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வருவோம். இத்தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்ல வேண்டுமானால், பெரும்பான்மை வலுவான 5.5 லட்சம் வாக்குகளைப் பெறும் திறன் அதற்கு இருக்க வேண்டும்.
தற்போது பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில், குடியரசுத் தலைவர் தேர்தலில் மிக அதிகபட்ச வாக்குகளை அளிக்கும் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதாக உத்தரப் பிரதேசம் உள்ளது. இம்மாநில எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு (83,824), குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவாகும் மொத்த வாக்குகளில் 8 சதவீதமாகும்.
எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நிறுத்தும் வேட்பாளர் வெல்ல வேண்டுமானால், உத்தரப் பிரதேச மாநில பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற வேண்டியது அவசியம்.
தேர்தலைச் சந்திக்கும் பிற மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. கோவா (800), மணிப்பூர் (320), உத்தரகண்ட் (4,480), பஞ்சாப் (13,572) என வாக்கு மதிப்பு உள்ளது. இதில் ஓரளவேனும் நல்ல இடத்தில் இருப்பது பஞ்சாப் மட்டுமே. அங்கு 117 எம்.எல்.ஏ.க்கள் தலா 116 வாக்கு மதிப்புடன் உள்ளனர்.
ஆனால், அம்மாநிலத்தில் பத்தாண்டுகளாக ஆட்சியிலுள்ள அகாலிதளம் - பா.ஜ.க. கூட்டணி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. அதை மீறி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது.
இங்கு அக்கூட்டணி தோல்வியடைந்தால் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் அக்கட்சியின் பஞ்சாப் பங்களிப்பு குறைந்துவிடும். அந்த இழப்பை உத்தரப் பிரதேசத்தில் கிடைக்கும் வெற்றியால் மட்டுமே ஈடுகட்ட முடியும்.
தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 4.5 லட்சம் வாக்குகள் இருப்பதாகத் தெரிகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 2.3 லட்சம் வாக்குகள்
உள்ளன.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அனுகூலமாக இருப்பது, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் போன்ற பெரிய மாநிலங்களில் அது ஆட்சியில் இருப்பதாகும்.
அவையல்லாமல், ஹரியாணா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. ஆனால், உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய பெரிய மாநிலங்கள், பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் போட்டி கடுமையாகவே இருக்கும் என்று தெரிகிறது.
மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் மாறுதலுக்கு உரியது, தேர்தலைச் சந்திக்கும் உத்தரப் பிரதேசம் மட்டுமே. எனவே இங்கு நிகழும் மாற்றம், ஜூலையில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் மிகுந்த முக்கியத்துவம் பெறும்.
தமிழ்நாட்டில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் மதிப்பு 41,184. இவற்றில் பெரும்பகுதியை தேசிய ஜனநாயகக் கூட்டணி பெறுவது அதன் சாமர்த்தியத்தில்தான் உள்ளது. அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலை தில்லி எவ்வாறு அணுகுகிறது என்பதைப் பொறுத்தது அது.
ஆக, மேற்கண்ட விஷயங்கள் அனைத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாகும் பட்சத்தில் அதன் வாக்கு மதிப்பு 5 லட்சம் என்ற எல்லையைத் தாண்டக் கூடும். அதன்பிறகே மாநிலக் கட்சிகள், பிற சிறு கட்சிகளின் உதவியுடன் அக்கூட்டணியால் வெற்றிகரமான வேட்பாளரை குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்த இயலும்.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்குப் பதிலான வேட்பாளரை அப்போதுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் தீர்மானிக்க முடியும். நல்லது நடக்கும் எனக் காத்திருப்போம்.
கட்டுரையாளர்:
தலைவர், பிரஸார் பாரதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








