

இந்தியக் குடியரசுக்கு 68 ஆண்டுகளாகி விட்டது. அதனையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றியுள்ளார். ஆண்டுதோறும் நிகழ்கிற நிகழ்ச்சி யென்றாலும் இந்த ஆண்டு அவரது உரை குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
"பல சவால்கள் நம் முன்னே இன்னமும் நீடித்து வருகின்றன. உணவுப் பாதுகாப்பு, வேலை வாய்ப்பில் தன்னிறைவு, வறுமை ஒழிப்பு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது' என்று கூறியுள்ளார்.
தேசம் விடுதலையடைந்து 70 ஆண்டுகளும், குடியரசாகி 68 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் வறுமை ஒழிப்பு என்பது பேச்சாகவேயிருக்கிறது. நாட்டு மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது கேள்விக் குறியாகவேயிருக்கிறது.
மக்களின் உணவுத் தன்னிறைவுக்காகப் பாடுபடும் விவசாயிகளுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை. அவர்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை வரை சென்று விட்டனர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று பேசப்படும் காவிரிப் படுகை விவசாயிகளின் மரணம் கூடிக் கொண்டே போகிறது.
மிருகவதையைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் மனித வதையைப் பற்றிக் கண்டு கொள்வதே யில்லை. இது எங்கே போய் முடியப் போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.
தேசம் வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதாக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி நன்றாக இருப்பதாகவும், கருப்புப் பணம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். நாடு முன்னேறுவது அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்திதான்.
ஆனால் உண்மை நிலை என்ன? இந்தியாவில் வருமான ஏற்றத் தாழ்வு ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும், இந்தியாவில் உள்ள ஒரு விழுக்காடு பணக்காரர்களிடம் 58 விழுக்காடு மக்களின் சொத்து குவிந்துள்ளது என்றும், பன்னாட்டு அளவுடன் ஒப்பிடுகையில் இது 50 விழுக்காடு அதிகம் என்றும் "ஆக்ஸ்ஃபாம்' ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
தன்னார்வ உரிமைகள் குழுவான "ஆக்ஸ்ஃபாம்' உலகப் பொருளாதார மைய மாநாட்டின் பரிசீலனைக்காக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலகெங்கும் உள்ள பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி இதில் பட்டியல் இடப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவில் உள்ள 7 பெரும் பணக்காரர்களிடம் 21,600 கோடி டாலர் (சுமார் ரூ.14 லட்சத்து 70 ஆயிரம் கோடி) குவிந்துள்ளது என்றும், இது இந்தியாவின் 70 விழுக்காடு மக்களிடம் உள்ள சொத்துக்களின் மதிப்புக்கு இணையானது என்றும் குறிப்பிட்டுள்ளது.
உலக அளவில் எட்டு பெரும் கோடீஸ்வரர்களிடம் குவிந்துள்ள தொகையானது உலக மக்கள்தொகையில் பாதி பேரிடம் குவிந்துள்ள தொகைக்கு இணையாக உள்ளது என்கிற அதிர்ச்சி செய்தியையும் அது குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 84 கோடீஸ்வரர்களிடம் ஒட்டு மொத்தமாக 24,800 கோடி டாலர் (சுமார் ரூ.16 லட்சத்து 86 ஆயிரம் கோடி) மதிப்பிலான சொத்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கைக்கு "99 விழுக்காடு மக்களுக்கான பொருளாதாரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பெயர் இட்டுள்ள "ஆக்ஸ்ஃபாம்' அனைத்து மக்களுக்கும் சென்று சேரக்கூடிய மனித பொருளாதாரத்தை உருவாக்க வேண்டுமே தவிர, ஒரு சிலர் மட்டும் பயனடையும் பொருளாதாரத்தால் பயன் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டிலிருந்து செல்வந்தர்களாக உள்ள ஒரு விழுக்காட்டினர்தாம் தொடர்ந்து செல்வம் ஈட்டியுள்ளனர். மற்றவர்களின் நிலை எப்போதும் போலவே உள்ளது என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அடுத்த 20 ஆண்டுகளில் 500 கோடீஸ்வரர்களிடம் 210 லட்சம் கோடி டாலர் இருக்கும் என்றும், இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜி.டி.பி.) விட அதிகம் என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
130 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் 500 பேரிடம் உள்ள பணம், நாட்டின் ஜி.டி.பி.யைவிட அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளது. இந்த மாபெரும் சரிவைத் தடுத்து நிறுத்த வேண்டாமா?
இங்கே ஏழைகளின் வருமானம் கடந்த 20 ஆண்டுகளில் 15 விழுக்காடு சரிந்துள்ளது. பணியிடங்களில் ஊதியம் வழங்கலில் பாரபட்சம், பெண்களுக்குக் குறைவான ஊதியம் ஆகியவை ஏற்றத் தாழ்வுக்கான முக்கிய காரணங்களாகும்.
பெண்களைவிட ஆண்களுக்கு ஊதியத்தில் 70 விழுக்காடு முதல் 90 விழுக்காடு வரை வித்தியாசம் உள்ளதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இது இயற்கை நியாயத்துக்கு எதிரானது. வயிறும், வாழ்க்கையும் இரு பாலார்க்கும் சமமானது என்பதை யாரும் மறுக்க முடியாது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.) வெளியிட்டுள்ள ஊதிய விகிதம் தொடர்பான அறிக்கையை சுட்டிக் காட்டியுள்ள "ஆக்ஸ்ஃபாம்' நிறுவனம் இந்தியாவில் பாலின ஊதிய வேறுபாடு மிக அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
ஒரு பணியை நிறைவேற்றும் பெண்களுக்கு அதே பணியை நிறைவேற்றும் ஆண்களைவிட 30 விழுக்காடு குறைவாக ஊதியம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 60 விழுக்காடு பெண்கள் குறைவான ஊதியம் பெறுகின்றனர். 15 விழுக்காட்டினர் மட்டுமே அதிக ஊதியம் பெறுகின்றனர். இதனால் இந்தியாவில் ஊதிய விகிதத்தில் பாலின இடைவெளி அதிகமாக உள்ளது.
இந்தியாவில் உள்ள பருத்தி ஆலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதாக பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் நாட்டில் 58 லட்சம் குழந்தைத் தொழிலாளர் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் இப்போது லாப நோக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தங்களது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காகச் செயல்பட்டு வருகின்றன. இது மனித உரிமைக்கும், உழைப்புக்கும், ஐ.நா.வின் கோட்பாடுகளுக்கும் எதிரானது.
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வாழும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதனை மறுதலிப்பதற்கு யாருக்கும் உரிமை யில்லை. ஓடுகிற தண்ணீரை மறிக்கும் போது வெள்ளமாகி அது அழிவுக்கு ஆரம்பம் ஆவது போல சிலர் வாழவும், பலர் வாடவும் நேர்கிற போது கலவரமும், புரட்சியும் வெடிக்கிறது.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் விடுதலைக்குப் போராடிய தலைவர்கள் பொருளாதார சமத்துவத்தையும் முன் வைத்துப் போராடினார்கள். அதனைக் கூறியே தேச விடுதலைக்கு அனைத்து மக்களையும் அணி திரட்டினர்.
ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனும் இல்லை சாதியில்
இழிவு கொண்ட மனிதர் என்பது
இந்தியாவில் இல்லையே
-என்று பாரதி பாடினார்.
நாடு விடுதலை அடையும்முன்பு, புதுதில்லியில் இருக்கும் அரண்மனைகளுக்கும், பரிதாபகரமான தொழிலாளர்களின் குடிசைகளுக்கும் இருக்கும் இந்த வித்தியாசம் சுதந்திர இந்தியாவில் இருக்காது என்று சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் உறுதி கூறினர். விடுதலை பெற்ற நாட்டில் பாலும் தேனும் ஆறாகப் பாயும் என்றார்கள்.
"சுதந்திர இந்தியாவில் நாட்டின் மிகப் பெரிய செல்வந்தருக்கு இருக்கும் அதே அதிகாரமே ஏழைக்கும் இருக்கும். செல்வத்தையும், அதிகாரத்தையும் வலிய துறந்து, எல்லோருக்கும் பொதுவான நன்மைக்காகப் பங்கிட்டுக் கொடுத்து விட்டாலன்றி வன்முறையோடு கூடிய ரத்தம் சிந்தும் புரட்சி ஒரு நாளைக்கு ஏற்பட்டே தீரும் என்பது நிச்சயம்...' என்று காந்தியார் கூறியதையும், எழுதியதையும் எண்ணிப் பார்ப்பார் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
முடியாட்சியின் கொடுங்கோன்மையைத் தாங்க முடியாமல்தான் மக்கள் புரட்சி செய்து குடியாட்சியைக் கொண்டு வந்தனர். குடியாட்சியும் மக்களைப் புறக்கணித்துவிட்டு குடியரசு விழாவை மட்டும் கொண்டாடுவதால் பயன் என்ன?
உறுபசியும் ஓவாப் பிணியும்
செருபகையும்
சேரா தியல்வது நாடு
-என்பதை தேசத்தின் இலக்கணமாகக் கூறுகிறது குறள்.
பசி, பிணி, பகையில்லாத நாட்டை உருவாக்க வேண்டும். ஒரு நாடு வல்லரசாக இருக்க வேண்டும் என்பதைவிட நல்லரசாக இருக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.
மனித உறுப்புகள் எல்லாம் ஒரே சீராக வளர்வதையே வளர்ச்சி என்று கூறலாம். சில உறுப்புகள் மட்டும் பெருத்துக் கொண்டு போவது வளர்ச்சியல்ல, நோயாகும். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பொருந்தும்.
சமுதாய ஏற்றத் தாழ்வுகளும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் நீக்கப்பட்டாக வேண்டும். அவற்றை நீக்காமல் வல்லரசுக் கனவுகளால் மட்டும் வாழ்க்கை உயராது. குடியரசு என்பது கொடி ஏற்றுவதோடு முடிந்து விடுவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.