தொடரட்டும் சீர்திருத்தம்

ஆண்டுதோறும் ஜூன் மாதம் வந்தால் பெற்றோர்களுக்கு வீட்டுச் செலவுகளுடன் கல்விக்கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகள் கூடுதல் சுமையாக சேர்ந்து கொள்ளும்

ஆண்டுதோறும் ஜூன் மாதம் வந்தால் பெற்றோர்களுக்கு வீட்டுச் செலவுகளுடன் கல்விக்கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகள் கூடுதல் சுமையாக சேர்ந்து கொள்ளும். நகரங்களுக்கேற்ப, பள்ளிகளுக்கேற்ப கல்விக்கட்டணம் சில ஆயிரங்களில் ஆரம்பித்து லட்சக்கணக்கில் முடியும்.
அன்றைக்கு என் தந்தை பட்ட கஷ்டத்தையும், வலியையும் வேதனையையும் இன்றைக்கு நான் நன்றாகவே உணர்கிறேன். திருச்சியில் உள்ள பிரபல பள்ளி,கல்லூரியில் படித்தேன். மேல்நிலைப் பள்ளி வரையிலும் கல்விக்கட்டணம் ஆயிரத்தைத் தொடவில்லை.
ஒழுக்கமும், கல்வியும் முதன்மையானதாக போதிக்கப்பட்டது. எனது தந்தை மொத்தம் 5 பேருக்கு நல்ல கல்வியை அந்தக் காலத்தில் அவரால் அளிக்க முடிந்தது.
ஆனால் இன்றோ, ஒரு குழந்தைக்கு நல்ல,சிறப்பான கல்வியைக் கொடுக்க நினைக்கும் சராசரி பெற்றோரின் பாடு திண்டாட்டம்தான். இன்றைக்கு கணவன் மனைவி இருவருமாக சம்பாதித்தும் குழந்தைக்கு சிறந்த கல்வியை அளிக்க முடியுமா என்ற ஐயம் அவ்வப்போது எழுகின்றது.
ஏனென்றால் பள்ளிக் கல்விக்கட்டணம். பள்ளிச் சீருடை, பள்ளி வாகனக் கட்டணம், நோட்டுப் புத்தகங்கள் என விரிந்து கொண்டே போகும் செலவுகள்.
திருச்சியில் உள்ள பிரபல பள்ளியிலேயே முதல் வகுப்புக்கு சேர்க்க (கல்விக் கட்டணம் உள்பட அனைத்து செலவுகளும் சேர்த்து) ரூ.1.20 லட்சம் வரை செலவாகிறது எனும் போது ஒற்றை வருமானம் உள்ள குடும்பங்கள் படும்பாடு சொல்லிமாளாது.
மாத வருமானம் 20 ஆயிரம் உள்ள குடும்பம் சராசரியாக 25 - 50 சதவீதம் வரை தனது குழந்தையின் கல்விக்காக எடுத்து வைக்க வேண்டியுள்ளது. அப்போது தான் குழந்தையின் கல்வி தடைபடாதிருக்கும்.
சரி கல்விக்கட்டணத்தைத் தான் கடன்பட்டோ, சேமித்தோ கட்டியாகி விட்டது. குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கும் என்றால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சி நிற்கிறது.
கல்வி நிறுவனங்கள் தங்கள் பள்ளி மாநில அளவில் பெயர் (?) கிடைக்கச் செய்ய வேண்டும் என அரசு பொதுத்தேர்வு எழுதப்போகும் குழந்தைகளைப் பாடாய்ப்படுத்துகிறார்கள்.
பள்ளியில் வேலைநேரம் ஆரம்பிக்கும் முன்னும்,பின்னும் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் கட்டாயப் படுத்தி பாடங்கள் திணிக்கப்படுகின்றன. ஹாஸ்டலுடன் கூடிய கல்வி நிறுவனங்கள் லட்சக்கணக்கில் கல்விக்கட்டணத்தை வசூலிப்பது வேறு கதை. இவர்கள்
பள்ளிக் குழந்தைகளை மதிப்பெண் குவிக்கும் இயந்திரங்களாக மாற்றி மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற பள்ளி என்ற வெற்றுப்புகழ் சேர்த்துக்கொள்கிறார்கள்.
இந்தக் கால மாணவர்கள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ பேச, எழுத போதிய திறனன்றி இருக்கிறார்கள். தேசிய மொழி ஹிந்தி பற்றி கேட்கவே வேண்டாம். ஆங்கிலமோ பிழையின்றி பேசத் தெரியாது; அதிகம் புழங்கங்கூடிய தாய்மொழியான தமிழ்மொழியிலோ பள்ளிகளில் பேசக்கூடாது; ஹிந்தியா திணிக்கக் கூடாது என்றொரு கருத்து.
அண்டை மாநிலங்களில் பள்ளிகளில் தாய்மொழி வழி பள்ளிக்கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் தமிழை ஒரு மொழிப்பாடமாக கற்காவிட்டாலும் பட்டம் பெற்று விடலாம். அஸ்திவாரம் (தாய்மொழி) இல்லாது கட்டடம் (ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகள்) எவ்வாறு எழுப்ப முடியும்?
தாய்மொழி வழியில் பள்ளிக்கல்வி: பிளஸ் 2 தேர்வில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் கடந்த ஆண்டைப்போலவே (2016) நிகழாண்டிலும் (2017) முழு மதிப்பெண்கள் பெறவில்லை. ஆனால் கடந்த 2015-இல் 229 மாணவர்கள் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே பள்ளிக்கல்வி தாய்மொழி வழியில் இருந்தால் மட்டுமே குழந்தைகள் தங்களது கருத்துகளை சிறந்த முறையில் பரிமாறிக்கொள்ள முடியும். மேலும் படிப்பிலும் சிறந்து விளங்க முடியும்.
தமிழக அரசு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட வாரியான முதல் 3 இடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது; மாவட்ட அளவில் நடைபெற்று வந்த பிளஸ் 1 தேர்வை மாநில அளவில் அரசு பொதுத்தேர்வாக நடத்த முடிவு செய்திருப்பது வரவேற்கக்கூடியது.
அதேபோல் தாய்மொழி வழியில் பள்ளிக்கல்வி குறித்து அரசு ஆவன செய்ய வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் பெற்றோருக்கு கட்டணம் என்ற பெயரில் அழுத்தம் தருகின்றனர். அந்த அழுத்தத்தை பெற்றோர் குழந்தையின் மீது திணிக்கின்றனர். நீ முதல் மதிப்பெண் பெற வேண்டும் என போட்டி மனப்பான்மையை உருவாக்கி விடுகின்றனர்.
தேர்வில் தோல்வி அடையும் குழந்தைகள் மனமுடைந்து அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை (104) தரும் நிலைக்கு சென்று விட்டோம். போராடி வெல்லும் குணத்தை விதைக்காமல் போட்டி மனப்பான்மையை வளர்த்துவிட்டோம்.
கல்வி நிறுவனம் பெற்றோருக்கு மன அழுத்தத்தை தருகிறது. பெற்றோர் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை தருகிறார்கள்.
குழந்தைகள் பள்ளிக்கல்வி அளவிலேயே தற்கொலைக்கு தூண்டப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கல்வி ஒருவனை தலைநிமிரச் செய்ய வேண்டும். தன்னம்பிக்கை ஊட்டக்கூடியதாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் நடப்பாண்டில் மொத்தம் உள்ள 527 பொறியியல் கல்லூரிகளில், 11 கல்லூரிகள் மூடப்பட உள்ளன. மேலும் 44 கல்லூரிகளில் 50 சதவீதம் வரை இடங்கள் குறைக்கப்படுகிறது.
தொடரட்டும் கல்வித்துறையின் சீர்திருத்த நடவடிக்கைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com