வாக்காளன் ஒரு வேடிக்கை மனிதன்

ஒரு மாமரத்தினுடைய இலைகள் கொட்டினால், 'ஐயோ, பூச்சி அரித்துவிட்டது' என்று அலறுவான் விவசாயி. பிறகு பூக்கள் எல்லாம் கொட்டத் தொடங்கிவிட்டால், 'ஆகா, அடித்த காற்றில்,
Updated on
3 min read

ஒரு மாமரத்தினுடைய இலைகள் கொட்டினால், 'ஐயோ, பூச்சி அரித்துவிட்டது' என்று அலறுவான் விவசாயி. பிறகு பூக்கள் எல்லாம் கொட்டத் தொடங்கிவிட்டால், 'ஆகா, அடித்த காற்றில், எல்லாப் பூக்களும் உதிர்ந்துவிட்டனவே' என்று ஏங்குவான். பின்னர் பிஞ்சு வைத்த காய்கள், பழுக்காமல் வெம்பி விழ ஆரம்பித்தால், யார் கண்ணோ பட்டுவிட்டதென்று பதறுவான், அனுபவம் இல்லாத அந்த விவசாயி. ஆனால், அனுபவம் மிக்க, பக்குவமுடைய விவசாயி சொல்லுவான்: 'இலைகள் கொட்டுவதற்கும், பூக்கள் உதிர்வதற்கும், காய்கள் வெம்பி விழுவதற்கும் காரணம், மரத்தினுடைய ஆணிவேர் பட்டுப்போய்விட்டதுதான்' என்பான்.
அதுபோல அதிகார வர்க்கம் கறைபடிந்து நிற்பதற்கும், நீதித்துறை உள்ளூற ஊசிப் போனதற்கும், ஆளும் வர்க்கம் கோட்டை கட்டி வாழ்வதற்கும் காரணம், ஆணிவேரான வாக்காளர்கள் சுயநலக்காரனாக, பேராசைக்காரனாக மாறிப்போனதுதான்! வாக்காளனாகிய ஆணிவேர் அழுகிப் போனதால், அனைத்து வர்க்கங்களிலும் துர்நாற்றம் வீசுகின்றது. இப்படிப்பட்ட வாக்காளர்களை பாரதி, 'வேடிக்கை மனிதர்கள்' என்கிறார். இன்னும் சொல்லப்போனால், பாரதி சொல்லாட்சியிலே, 'கலகத்து அரக்கர்கள்' எனலாம்.
விரல் இடுக்கிலே கரன்சியைச் சுருட்டும் அதிகாரிகளையும், இருட்டிலே கடுக்கனைக் கழற்றும் நீதிமான்களையும், முழுப்பூசணிக்காயைச் சோற்றிலே மறைக்கும் ஆளும் வர்க்கத்தையும் உருவாக்குபவர்கள், வாக்காளப் பெருமக்களே! சாதாரண நேரத்தில் லட்டு கிடைத்தால், அதை உடைத்து முந்திரிப்பருப்பைத் தேடும் வாக்காளர்கள், தேர்தல் காலத்தில் லட்டு கிடைத்தால், அவசரமாக அதை உடைத்து மூக்குத்தியைத் தேடுகிறார்கள்! இந்த மனோபாவம் நீடிக்கின்ற வரையில் இங்கு களைகள்தான் வளருமே தவிர, பயிர்கள் வளராது.
ரோஜாப்பூவையும் குங்குமப்பூவையும் பயிரிடுகின்ற நிலத்திலே, வெங்காயத்தையும் பூண்டையும் பயிரிட்டாலும், வெங்காயமும், பூண்டும்தான் விளையும். வெங்காயத்தையும், பூண்டையும் பயிரிடுகின்ற நிலத்திலே, ரோஜாவையும், குங்குமப்பூவையும் பயிரிட்டாலும், ரோஜாவும், குங்குமப்பூவும்தான் விளையும். தவறு பயிர் வைப்பவனிடம் இருக்கிறதே தவிர, மண்ணிடம் கிடையாது.
பிளேட்டோ, அரிஸ்டாட்டில் சொன்ன மக்களாட்சித் தத்துவங்களை அலசி ஆராய்ந்த வித்தகன் ஜான் பேலிஸ், 'குடியாட்சித் தேர்தல் முறையிலே, குடிமக்கள் பங்கேற்கின்ற உரிமையைப் பெறுவதும், பங்கேற்றுச் சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்தலுமே அடிப்படைப் பண்புகளாகும்' என பட்டு கத்தரித்தாற்போல் வரையறுத்துள்ளார். ஆனால், நம்முடைய மாண்புமிகு வாக்காளப் பெருமக்களில் பெண்கள், தேர்தல் வந்தால் சமையலறைப் பொருட்களை எதிர்பார்க்கிறார்கள். ஆடவர், கரன்சி கிடைத்தால் மட்டும் போதாது; அந்தக் கரன்சியை எங்கு கொண்டு கொடுத்தால் என்ன கிடைக்கும் என்ற மனநிலையுடையவர்களாய் இருக்கிறார்கள். இச்சூழ்நிலையில் தேசம் செழிப்பது எப்போது? பரிசுத்தமான நிர்வாகம் கிடைப்பது எப்போது?
தசரதனுடைய ஆட்சியிலே, ஆட்சித்தலைவன், தாய் போன்ற தங்கமனம் படைத்தவன். அமைச்சர்கள், அயோத்தி ஆட்சியைக் காக்கும் ஞானத்தின் வரம்பாகிய வேலிகள். என்றாலும், தசரதன் மாண்டதும், இராமன் காட்டிற்குப் போனதும் கூனி என்ற ஒரு குடிமகளால்! உடலும் உள்ளமும் கூனியவளால் ஒரு முடியாட்சி கவிழ்ந்தது. அதுபோன்று, பாண்டியன் நெடுஞ்செழியனின் ஆட்சி, வேதத்தின் ஒலியல்லாது, ஆராய்ச்சிமணியின் ஒலி கேட்காத நாடு. என்றாலும், அந்த மதுரை எரிந்ததேன்! நயவஞ்சகம் நிறைந்த பொற்கொல்லன் என்ற குடிமகனால்! இந்த நூற்றாண்டிலே கிறிஸ்டீன் கீலர் என்ற இங்கிலாந்தின் குடிமகளை யாரும் மறந்திருக்க முடியாது. மூன்று வல்லரசுகளின் இராணுவ ரகசியங்களைத் தம் அழகினால் மயக்கிப் பெற்று, ஒருவருக்குத் தெரியாமல் மற்றவருக்குப் பற்ற வைத்தவள் கீலர். அந்தக் குடிமகளாகிய வஞ்சகி விரித்த வலையால், இங்கிலாந்தை ஆண்ட ஹெரால்டு மாக்மில்லனுடைய அமைச்சரவையே கவிழ்ந்தது. முடியாட்சியாக இருந்தாலும், குடியாட்சியாக இருந்தாலும், அந்த நாட்டு மக்கள் நாணயமானவர்களாக இல்லாவிட்டால், அங்கே நேர்மையான நிர்வாகத்தைக் காண முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒளவையார் நம்மை எச்சரித்துச் சென்றிருக்கிறார்.
'ஒரு மண் எப்படியிருந்தால் என்ன? அது நாடாக இருந்தால் என்ன? காடாக இருந்தால் என்ன? அது மேடாக இருந்தால் என்ன? பள்ளமாக இருந்தால் என்ன? எவ்விடத்தே குடிமக்கள் நல்லவர்களாக விளங்குகிறார்களோ, அவ்விடத்திலே நிலமும் நிலத்து வாழ் உயிர்களும் நன்றாக இருப்பர்' என்றார்.
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ?
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே
நாடு எக்கேடு கெட்டால் என்ன, நாமும் நம் குடும்பமும் வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகின்ற குடிமக்களை வன்மையாகக் கண்டிக்கிறார், பாவேந்தர் பாரதிதாசன். தன்னலமும் குடும்ப நலமும் பேணுகின்ற மக்களுடைய உள்ளம், கடுகைப் போன்ற குறுகிய உள்ளம் என்பதை,
தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்
எனும் பாடல் மூலம் வருணித்துவிட்டு, அவர்களை வீணர்கள் என்றும் ஏசுகின்றோர். அதே பாவேந்தர் தன்னலம் மறந்து விசாலமான உள்ளம் கொண்டோரை, 
தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்கள் எல்லாம் ஒன்றே என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே
சண்டையில்லை, தன்னலம்தான் தீர்ந்த தாலே
என வாயார வாழ்த்துகின்றார்.
குடிமகன் அல்லது குடிமகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஏதென்ஸிலே நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சுட்டலாம். ஒரு மூதாட்டிக்கு ஒரே மகன்! அவன் சுயநலத்தால், ஏதென்ஸ் நாட்டுப் பாதுகாப்பு இரகசியங்களை ஸ்பார்ட்டா நாட்டிற்குச் சொல்லிக் கொடுத்துவிட்டான். இது ஏதென்ஸ் மக்களுக்குத் தெரிந்து விடவே, அவனைக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று விரட்டிக்கொண்டு ஓடுகின்றனர். அந்தக் கயவன் சாமத்தியமாக 'அத்தீனா' தெய்வத்தின் கோயிலுக்குள் நுழைந்துவிடுகிறான். அந்நாட்டு மரபுப்படி, அத்தீனா தெய்வத்தின் கோயிலுக்குள் ஒருவன் நுழைந்துவிட்டால், அவனை தண்டிக்கக் கூடாது. என்றாலும், அந்நாட்டு மக்கள் விவேகமான முடிவு எடுத்தனர். அத்தீனா ஆலயத்தின் நுழைவு வாயிலைச் சுவரெடுத்துப் பூசிவிட்டால், உள்ளேயே அவன் மடிந்து போவான் என ஒருமனதாகத் தீர்மானித்தனர். அந்த நுழைவு வாயிலை மூடுகின்ற திருப்பணியில் முதல் செங்கல்லை எடுத்து வைத்தது யாரென்றால், அவனைப் பெற்றவள் ஆவாள். கிரேக்கத்தில் மக்களாட்சி செழித்தது, எப்படி என்று இப்பொழுது தெரிகிறதா?
ஒரு நாட்டில் குடிமக்கள் சரியானவர்களாக இருந்தால்தான், அந்த நாட்டின் அனைத்துத் துறைகளும் சரியாக இருக்கும் என்பதை அன்றே கண்டுணர்ந்தவர் திருவள்ளுவர். அதனால், குடிமக்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதற்குக் 'குடிமை' எனும் அதிகாரத்தை வைத்தார்; குடிமக்கள் எப்படி இருக்கக்கூடாது என்பதற்குக் 'கயமை' எனும் அதிகாரத்தை வைத்தார். 'நல்ல பண்புடன் நடத்தலும், தீமை செய்வதற்கு வெட்கப்படுவதும், நல்ல குடும்பத்திலே பிறந்தவர்களுக்கு இயல்பாகவே அமையும். நல்ல குடிமக்கள் அல்லாதவர்களுக்கு இயல்பாக அமையாது' என்றார், குடிமை அதிகாரத்தில் முதல் குறளாக! அதுபோன்றே 'கயவர்கள் எப்படி இருப்பார்கள் என்றால், மக்களைப் போலவே இருப்பார்கள்' என்றார் திருவள்ளுவர். அதன் உட்பொருள், கயவர்களுக்கு என்று தனியாக முகங்கள் கிடையாது; மக்களைப் போலவே இருப்பார்கள்; மக்களுக்குள்ளாகவே இருப்பார்கள் என்பதாகும். 
பொதுவில் ஒரு தவறு நடக்கின்றபொழுது அதனை வேடிக்கை பார்க்கின்ற மனிதர்களைப் பாரதி, 'ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ? நெட்டை மரங்களென நின்று புலம்பினார். பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ' என இடித்துரைத்துப் பாடினான், பாஞ்சாலி சபதத்தில்.
எட்டடுக்கு மாளிகையில் எந்த அடுக்கில் விரிசல் விழுந்தாலும், அந்தந்த அடுக்கில் விழுந்த விரிசலாகக் கருதக் கூடாது; அடித்தளத்தின் பலவீனம் என்றுதான் கருத வேண்டும். அதுபோல அதிகார வர்க்கம், நீதித்துறை, ஆளும் வர்க்கம் என்ற அடுக்கிலே எந்த அடுக்கில் விரிசல் தென்பட்டாலும், அது அடித்தளமாகிய வாக்காளர்களின் பலவீனம் எனக் கருத வேண்டும்.
தான் வாழ்ந்த காலத்திற்கும், இனிவரப்போகின்ற காலத்திற்கும், மக்களாட்சியின் மாண்பினை, அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தினை இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்தார் மகாகவி பாரதியார். 'வருந் துன்பந் தவிர்க்கும் அமைச்சர்கள் - மிக நன்னலங் கொண்ட குடிபடை' என்பது, பாரதி வடித்துக் கொடுத்த மக்களாட்சிக்குரிய அர்த்தசாஸ்த்திரம். அது என்று வருமோ? எப்போது வருமோ?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com