வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மதுக்கடைகளை மூடுவோம்

தினமும் கணவர் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால், தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி

Updated On :30 ஜூலை 2018, 8:08 pm


தினமும் கணவர் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால், தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி', குடிகாரக் கணவரால் குடும்பப் பிரச்னை: இரு குழந்தைகளைக் கொன்று பெண் தற்கொலை', கள்ளச் சாராயம் குடித்த ஏழு பேர் சாவு', குடிபோதையில் விபத்து: இருவர் பலி' - இப்படிப்பட்ட செய்திகள் நாள்தோறும் நாளிதழ்களிலும் காட்சி ஊடகங்களிலும் வருகின்றன. 
இது ஒருபுறமிருக்க, சில பண்டிகைகளையொட்டி, மது விற்பனை வருவாய் இரு மடங்கு அதிகரிப்பு' என்ற செய்தியும் அவ்வப்போது வருகிறது. 
மது அருந்துவோரை ஊக்குவிக்க, நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ஏராளமான மதுக்கடைகளும் மது அருந்தும் கூடங்களும் (பார்கள்) திறக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்கள் மதுக்கடைகளை மூடுமாறு ஆணையிட்டாலும், அதற்கு தடை பெற்று, மீண்டும் அதே இடத்தில் கடைகள் திறக்கப்படும் அவலத்தை நாம் கண்டு வருகிறோம். 
அரசின் வருவாய் இனங்களில், மது விற்பனை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதனால்தான், பொதுமக்களின் எதிர்ப்புகளையும் மீறி, மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. 
தமிழகத்தில், 2017-18-ஆம் நிதியாண்டில் டாஸ்மாக்' மதுக் கடைகள் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் சுமார் ரூ. 26,794 கோடி. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.26,995 கோடி. மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதில் சாதனையும் படைத்து வருகின்றனர். 
மது விற்பனையாளர்கள் சாதனை என்று மார்தட்டிக் கொண்டாலும், மக்களைப் பொருத்தவரையில் அது வேதனையே. குடிப்பழக்கத்தினால் உயிர்விட்ட கணவர்களால் விதவையான பெண்கள், தகப்பனை இழந்துத் தவிக்கும் குழந்தைகள், குடியால் சிதைந்துபோன குடும்பங்கள், குடியால் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் தனி மனிதர்கள் என சோக நிகழ்வுகளே நம் கண்முன் நிழலாடுகின்றன. 
குடி குடியைக் கெடுக்கும்' என்று மதுப் புட்டிகளில் அச்சிட்டிருந்தாலும், மதுவின் பயன்பாடு குறையவில்லை. மாறாக, அதிகரித்தே காணப்படுகிறது. 
இருபது ஆண்டுகளுக்கு முன்னர், 300 பேரில் ஒருவர்தான் குடிமக'னாக இருந்தார். தற்போது 20 பேரில் ஒருவர் அப்படி இருக்கிறார் என்கிறது ஓர் ஆய்வறிக்கை.
கவலைகளை மறக்க', சமூக அந்தஸ்துக்காக', கேளிக்கை நிகழ்ச்சிகளில் மட்டும்' - இப்படி மது அருந்துவோர் பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். பெண்கள் கூட தற்போது மதுக்கடைகளில் மது வாங்கிச் செல்வதாகவும், மாணவர்கள் வகுப்பறைக்கே மது அருந்திவிட்டு வருவதாகவும் நாம் கேள்விப்படுகிறோம். 
உலக அளவில், பல நாடுகளில் மது அருந்துவதற்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைப் பொருத்தவரை, வயது வந்தவர்களில் 89 சதவீதத்தினர் மது அருந்துகின்றனராம். இந்தியாவிலிருந்து பீர்' ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்நிய நாட்டு மது வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மொத்தத் தேவையில் 65 சதவீத மதுபான வகைகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. 
நகர்ப்புறங்களில் வசிக்கும் ஆண்கள், தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, மன அழுத்தத்திலிருந்து விடுபட மது அருந்துகின்றனர் என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. மது அருந்துவோரில் 5 சதவீதத்தினர் பெண்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. 
பொழுதுபோக்குக்காக மது அருந்தத் தொடங்கி, அதற்கு அடிமையாகி கிடப்போர் ஏராளமானோர். மது அருந்துவோர் மறுவாழ்வு இல்லங்களில் சிகிச்சை பெற்ற பிறகும், மீண்டும் மதுவை நாடிச் செல்வோரையும் காண முடிகிறது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் 30 சதவீதம் முதல் 50 சதவீத ஆண்கள் மதுப் பிரியர்களாக உள்ளனராம். மது அருந்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் இன்று சமூக-பொருளாதார பிரச்னைகளாகப் பார்க்கப்படுகின்றன. தொழிலாளர்கள் மற்றும் கூலி வேலை செய்வோர் மதுவுக்கு அடிமையாவதால், அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் சமுதாயம் பாதிப்படைகிறது.
மதுவால் உடல் நலப் பாதிப்பும் அதிக அளவில் ஏற்படுகிறது. 
மது மனிதனின் மூளையைப் பாதிப்பதால் நினைவாற்றல் குறைகிறது. இருதய நோய், ரத்த அழுத்தம், பக்கவாதம், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கும் ஆளாகின்றனர். இதனால், மரணங்களும் அதிகம் ஏற்படுகின்றன. அண்மையில் அமெரிக்காவில் மதுவால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.
நம் நாட்டில் நாளுக்கு நாள் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தாலும், அவற்றுக்குப் போதிய பலன் கிட்டவில்லை. 
தோட்டத் தொழிலாளர்கள் மது அருந்துவதைத் தவிர்க்க, மூணாறு, கூர்க் போன்ற இடங்களில் உள்ள தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை, அவர்களின் மனைவிமார்களிடம் அளித்து வருகின்றனராம். இது ஓரளவுக்கு பலனளித்தாலும், மதுவினால் ஏற்படும் கேடுகள் குறித்து ஏழை எளிய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 
இதற்கென தொண்டு நிறுவனங்கள் மூலம் இயக்கங்களை ஏற்படுத்த வேண்டும். மதுவுக்கு அடிமையானோருக்கான மறுவாழ்வு மையங்களை அதிகப்படுத்தி, மதுவால் பாதிக்கப்பட்டோரை மீட்க வழிவகை காண வேண்டும். 
எல்லாவற்றுக்கும் மேலாக, அரசு, வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மதுக் கடைகளின் எண்ணிக்கையை மெல்ல மெல்லக் குறைத்து, பின்னர் அவற்றை முற்றாக மூடிவிட வேண்டும். 
நாளைய உலகம் இளைஞர்கள் கையில் என்பதை மறந்துவிடக் கூடாது!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.