உண்மையில் உற்சாகம் இல்லை

தமிழகத்தில் மாயக் காட்சி ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. ஆமாம், தமிழ்நாட்டு இளைஞர்களும், இளைஞிகளும் மத்திய,
Updated on
2 min read


தமிழகத்தில் மாயக் காட்சி ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. ஆமாம், தமிழ்நாட்டு இளைஞர்களும், இளைஞிகளும் மத்திய, மாநில கல்வி-வேலைவாய்ப்புகளில் சாரை சாரையாக இடம்பிடித்து வருவது போன்ற தகவல்கள் திட்டமிட்டு, ஆதாய நோக்கத்துடன் பரப்பப்பட்டு வருகின்றன. ஊடகங்களில் வரும் தனியார் பயிற்சி மையங்களின் விளம்பரங்கள்தான் இதற்கு காரணம். உண்மை நிலையை ஆராய்ந்து பார்த்தால் மனம் பதைக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்திய குடிமைப் பணி-2017 (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 பணிகள்) தேர்வு முடிவுகளும், இந்த மாத முதல் வாரத்தில் நீட்' தேர்வு முடிவுகளும் வெளியாகின. அதனைத் தொடர்ந்து ஊடகங்களில் தனியார் பயிற்சி மையங்கள் அடித்துக் கொண்ட சுயதம்பட்டம் சொல்லி மாளாது. வெற்றி பெற்ற சில மாணவர்களின் புகைப்படங்களுடன் அடித்துக் கொள்ளாத குறையாக கூவி தீர்த்துவிட்டன.
ஆனால், உண்மை நிலை உற்சாகம் அளிப்பதாக இல்லை. கடந்த 2017 -ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணியின் 990 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் சுமார் 12 லட்சம் பேர். முதல்நிலைத் தேர்வு எழுதியோர் சுமார் ஆறு லட்சம் பேர். இவர்களில் இறுதியில் வெற்றி பெற்று முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் இரண்டு பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தர்மபுரியைச் சேர்ந்த வி. கீர்த்திவாசன் அகில இந்திய அளவில் 29-ஆவது இடத்தையும், தமிழ்நாட்டில் முதலிடத்தையும் பெற்றார். 71 -ஆவது இடத்தை, சென்னையைச் சேர்ந்த எல். மதுபாலன் பெற்றார். மொத்தத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் 42 பேர் மட்டுமே. கடந்த 10 ஆண்டுகளின் தேர்ச்சி விகிதத்தை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. கடந்த ஆண்டு 78 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 46 சதவீதம் குறைந்துவிட்டது.
நீட்' தேர்வை எடுத்துக் கொண்டால், இந்த ஆண்டு விண்ணப்பித்தவர்கள் சுமார் 1.20 லட்சம் பேர். தேர்வு எழுதியவர்கள் சுமார் 1.14 லட்சம் பேர். தேர்ச்சி பெற்றவர்கள் 45,366 பேர். இது 39 சதவீத தேர்ச்சி. சிறப்பிடம் பெற்ற முதல் 10 பேரில் ஒருவர்கூட தமிழ்நாட்டு மாணவர் இல்லை. முதல் 50 பேரில் ஒருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மாணவி கே. கீர்த்தனா 12 ஆவது இடத்தைப் பெற்றார். தேர்ச்சி விகிதத்தில் நாட்டில் ஆறாவது இடத்தைதான் தமிழ்நாடு பெற முடிந்தது. கடந்த ஆண்டும் இதே அளவுதான் தேர்ச்சி விகிதம். இப்போது தெரிகிறதல்லவா தனியார் பயிற்சி நிறுவனங்களின் சுய தம்பட்டத்துக்கும் உண்மை நிலவரத்துக்குமான இடைவெளி எவ்வளவு தொலைவென்று?
அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை எழுதி வெற்றி பெறுவது அரிதான ஒன்று. தனிப் பயிற்சி மையங்களை நாடாமல் எல்லாருக்கும் வெற்றி கிட்டுவதில்லை. பள்ளி, கல்லூரிகளில் முதல் வகுப்பில் அல்லது சிறப்பிடங்களைப் பெற்றவர்களால் கூட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத அளவுக்குதான் பாடத்திட்டங்களும், கற்பிக்கும் முறைகளும் உள்ளன. இதுதான் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு சாதகமாகிறது.
மேலும், தற்போது கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் போட்டித் தேர்வுகள் அதிகரித்து விட்டன. இதனால் தனியார் பயிற்சி மையங்களும் பெருகி வருகின்றன. தமிழ்நாடு அரசில் எழுத்தர் பணி முதல் இந்திய குடியுரிமைப் பணி வரை அனைத்துத் தேர்வுகளுக்கும் பயிற்சி மையங்கள் தோன்றிவிட்டன. சிறிய நகரங்களில் கூட தினந்தோறும் வண்ண வண்ண சுவரொட்டிகளில் புதிய புதிய பயிற்சி மையங்களின் பெயர்கள் பளிச்சிடுகின்றன. 
போட்டி அதிகரித்து விட்டதால் ஆள் சேர்ப்புக்காக தவறான வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. சில பயிற்சி மையங்களில் சரியான உள்கட்டமைப்பு வசதியின்றி, கூரைக் கட்டடங்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அனுபவம் பெற்ற ஓரிரு ஆசிரியர்களின் மேற்பார்வையில், பல முறை போட்டித் தேர்வுகளை எழுதியவர்களால் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தரமான பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் சில உள்ளன. 
தனியார் பயிற்சி நிறுவனங்கள், வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க ரூ. 6,000 முதல் 1.50 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். நீட்' தேர்வு பயிற்சி மையங்களில் சில லட்சங்கள் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த கட்டணங்கள் எல்லாம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன? இவற்றை யார் கண்காணிக்கிறார்கள்?
அரசுப் பள்ளிகளை ஓரங்கட்ட வந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை அரசு ஓரளவு கட்டுப்படுத்தியது. இப்போது நீட்' தேர்வை சாக்காக வைத்துக் கொண்டு பல மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. முறைக்கு மாறி வருகின்றன. சி.பி.எஸ்.இ. பள்ளிகள் வசூலிக்கும் கட்டணங்களுக்கு வரைமுறை இல்லை. அகில இந்திய மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வு பயிற்சிகளின் பெயரைக் கூறி அதிகமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
இவ்வாறு கடும் போட்டி, வெற்றி பெற வேண்டிய கட்டாயம், தேர்வுகளில் தோல்வி, கட்டணக் கொள்ளை போன்றவற்றால் மாணவர்களிடம் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை வரை செல்ல நேரிடுகிறது. ஆண்டுக்கு 16 பேர் வரை தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. தேவ்ஜி எம். பட்டேல் தனியார் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் தனி நபர் மசோதா ஒன்றை கடந்த ஆண்டு கொண்டு வந்தார். 
அந்த மசோதா சட்டமாக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தனியார் பயிற்சி மையங்களை முறைப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனாலும், ஒரு சில மாநிலங்களைத் தவிர எஞ்சிய மாநிலங்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. 
மற்ற மாநிலங்கள் எப்படியோ போகட்டும். தமிழ்நாட்டில் வணிக நோக்குடன் அதிகரித்து வரும் தனியார் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்தவும், கட்டணக் கொள்ளையை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com