வனங்களை வாழவைப்போம்!
தமிழகத்தில் அரசுக்காகட்டும், மக்களுக்காகட்டும், வனங்கள் பற்றிய புரிதல் இல்லை.


தமிழகத்தில் அரசுக்காகட்டும், மக்களுக்காகட்டும், வனங்கள் பற்றிய புரிதல் இல்லை. வனங்களும் அவற்றின் உயிரினங்களும் மக்களின் வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாதவை என்பதை இவர்கள் உணரவேயில்லை. காடுகள் செழிப்பாக இருந்தால்தான் மழையைப் பூமிக்குக் கொண்டுவர முடியும்; மழை பெய்தால்தான் அருவிகளும், ஆறுகளும், குளம் குட்டைகளும் நிரம்பும்; நிலத்தடி நீர்மட்டம் உயரும்; நகரங்களின் தண்ணீர்த் தேவையை நிறைவேற்ற முடியும். காடுகள் வளமாக இருக்க வேண்டுமானால், மக்கள் காடுகளை விட்டு ஒதுங்கி இருப்பது நல்லது. ஆனால், அரசின் நிலைப்பாடோ நேர் எதிராக இருக்கிறது. 'சூழல் சுற்றுலா' என்ற பெயரில் காடுகளைச் சுற்றுலாத் தலங்களாக மாற்றி வருகிறது.
'சுற்றுலா' என்ற பெயரில் நம் பாரம்பரியச் சின்னங்களைச் சிதைத்து விட்டோம்; கோயில்களை வியாபாரத் தலங்களாக்கி விட்டோம்; வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை ஒழித்துவிட்டோம். இப்போது வனங்களையும் பாழ்படுத்தப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
காடுகளுக்குள் தார்ச் சாலைகள், ரயில் தண்டவாளங்கள், விடுதிகள், வாகன நிறுத்தங்கள், கல்வி நிலையங்கள், ஆன்மிக மையங்கள் முதலியவை அரசின் அனுமதியோடு அல்லது அனுமதியின்றி உருவாகியுள்ளன. காடுகளுக்குள் தார்ச் சாலைகள் எதற்கு? விலங்குகள் தாங்கள் நடந்து செல்வதற்கு சாலை வசதி கேட்பதில்லை. வனத்துறையினர் வனப்பணிகளுக்காகக் காடுகளுக்குள் செல்வதற்கு மிக நவீன வாகனங்கள் உள்ளன. பின் யாருக்குச் சாலைகள்? நாடு, நகரங்களைச் சுற்றிப் பார்க்கிறோம் என்று விலங்குகள் ஊருக்குள் செல்கின்றனவா? இல்லையே. பின் மனிதர்கள் ஏன் அவற்றின் வாழ்விடங்களுக்குச் சுற்றுலா செல்ல வேண்டும்?
வனத்துறையின் பெரும்பாலான உயரதிகாரிகள் 'சூழல் சுற்றுலாவை' முன்னெடுத்துச் செய்வதில் உடன்பாடு கொண்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் இரண்டு. ஒன்று, 'மக்கள் வனங்களுக்குள் சென்று இயற்கையை ரசித்தால்தான் அதன் அருமை அவர்களுக்குப் புரியும். அப்போதுதான் வனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்' என்பது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களையும், பொதுமக்களையும் பல குழுக்களாக வனத்துறை சில நிபந்தனைகளோடு வனங்களுக்குள் சுற்றுலா செல்ல அனுமதிக்கிறது. ஆனால், இந்த நிபந்தனைகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்று வனத்துறை கண்காணிப்பதில்லை, அதற்குண்டான ஆள் வசதியோ, நவீன வசதிகளோ வனத்துறையிடம் இல்லை.
கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மிருகக்காட்சி சாலைகள், பாம்புப் பண்ணைகள், முதலைப் பண்ணைகள், சூழல் சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக், உணவுப் பொருள்களைக் கொண்டு செல்லத் தடை உள்ளது. வெளியிலேயே பயணிகள் சோதனையிடப்பட்டுத் தடை செய்யப்பட்ட பொருள்கள் இருந்தால் கைப்பற்றப்படுகின்றன. தமிழ்நாட்டில் அப்படி ஏதும் கிடையாது. சோதனைச் சாவடியில் ஒரே ஒரு காவலர் மட்டும் இருப்பார். அவரது வேலை வண்டிகளின் எண்களைக் குறித்துக் கொள்வது மட்டுமே. சூழல் சுற்றுலாத் தலங்களில் வனத்துறை சார்பாக ஒன்றோ இரண்டோ ஊழியர்கள் இருப்பார்கள். அவர்கள் சொல்வதை நம் பயணிகள் காதில் கூட வாங்க மாட்டார்கள். நம் மக்களில் பெரும்பாலானோர் வனங்களுக்கு வருவது சத்தம் போட்டுப் பேச, ஆடிப் பாட, வாகனங்களில் பயணித்தபடிசத்தமாகப் பாடல்கள் கேட்க, நன்றாகச் சாப்பிட, புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள!
இரண்டாவது காரணம், மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதால் வேட்டையாடுவது குறைந்திருக்கிறது. அதாவது காட்டைப் பூட்டி வைத்திருக்கும்போது வேட்டையாடுவது அதிகமாக இருப்பதாகவும், திறந்துவிட்டால் வேட்டையாடுவது குறைந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், 'வீட்டின் கதவைப் பூட்டி வைத்திருந்தீர்களானால் கதவை உடைத்துத் திருடர்கள் திருடிக்கொண்டு போய்விடுவார்கள், அதனால் கதவுகளைத் திறந்தே வைத்திருங்கள்' என்று சொல்வது போல் இருக்கிறது! வேட்டையாடுவது குற்றம், அதைத்தடுக்க காவலை அதிகப்படுத்துவதை விட்டுவிட்டு, காட்டைத் திறந்து விடுவது எந்த விதத்தில் நியாயம்?
உயரதிகாரிகள் நிலைப்பாடு இதுவென்றால், கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் நிலைப்பாடு நேர் எதிராக உள்ளது. ஆள்பற்றாக்குறையால், இருப்பவர்களுக்கு அதிக பணிச்சுமை, வனப் பராமரிப்புப் பணிகளோடு கூடுதலாக 'சூழல் சுற்றுலாவுக்கான' பணிகள், பயணியர் காட்டில் விட்டுச் செல்லும் குப்பைகளை அகற்றும் பணி, வனங்களுக்கும் வன உயிரினங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து, சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய கட்டாயம் ஆகியவற்றால் இவர்கள் சூழல் சுற்றுலாவுக்கு எதிராகவே இருக்கிறார்கள். ஆனால் அரசிடமோ, தங்கள் உயரதிகாரிகளிடமோ தங்கள் நிலைப்பாட்டை இவர்கள் வெளிப்படையாகச் சொல்ல முடியாது.
எடுத்துக்காட்டுக்கு இரண்டு நிகழ்வுகளைக் கூறலாம். ஒரு வேட்டைத் தடுப்பு முகாமைத் தத்தெடுத்து அதில் பணியில் இருந்த வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்குச் சில வசதிகள் செய்துதரும் பணி தொடர்பாக நாங்கள் ஒரு மிக அடர்ந்த வனப்பகுதிக்குச் சென்றிருந்தோம். எல்லாக் காடுகளுக்கு உள்ளேயும் இருப்பது போல் இங்கும் ஓரிரு கோயில்கள் இருந்தன. வாரத்திற்கு மூன்று நாள்கள் மட்டும் பக்தர்கள் உள்ளே செல்ல வனத்துறை அனுமதிக்கிறது.
எங்கள் பணிகள் முடிந்து நாங்கள் திரும்பும் நேரம், 'பக்தர்கள்' சிலர் வழிபாடு முடிந்து திரும்பினார்கள். லாரிகளிலும், டெம்போக்களிலும், கூட்டம் கூட்டமாக, கூச்சலிட்டுக் கொண்டும், துணிகளையும், பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்களை வீசிக் கொண்டும் சென்றார்கள். யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை ஆகியவை நடமாடும் பகுதி அது. இவர்கள் போட்ட கூச்சலில் ஒன்று அந்த மிருகங்கள் அரண்டு ஓடி ஒளிந்துகொள்ளும் அல்லது வெகுண்டு தாக்கும். நல்ல வேளையாக இரண்டாவது நிகழவில்லை! எங்களோடு வந்த வேட்டைத் தடுப்புக் காவலர்கள் இதை இயலாமையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
உயரதிகாரிகளுக்கு நடைமுறையில் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. உண்மையை அவர்களுக்கு எடுத்துக் சொல்ல கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்குத் துணிவில்லை. நமது சுற்றுலாப் பயணிகளோ இயற்கையை நேசிக்கும் பொறுப்பான பயணிகள் இல்லை. இந்த முக்கோணத்தில் சிக்கிச் சீரழிவது நமது வனங்களே! இச்சீரழிவிலிருந்து வனங்களைக் காப்பாற்றாவிடில், வருங்காலத்தில், எஞ்சிய வனப்பகுதியையும் நாம் இழக்க நேரிடும்.
அரசு, உடனடியாக பத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
1. வனம், சுற்றுச் சூழல் ஆகிய இரு பெரும் துறைகள் தற்போது ஒரே துறையாக இருக்கின்றன. இவை வனத்துறை, சுற்றுச்சூழல் துறை என்று தனித்தனியாகச் செயல்பட்டால் நிர்வாகம் மேம்படும்.
2. வனத்துறையில் பல்வேறு நிலைகளிலும் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இவற்றிற்கு முற்றிலுமாக வனம் பற்றிய அறிவும், புரிதலும் உள்ளவர்களையே பணியமர்த்த வேண்டும். வனக் கல்லூரிகளில் வனம் சார்ந்த படிப்புகளைப் படித்து வரும் மாணவர்களை, அவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப வெவ்வேறு நிலைகளில் பணியமர்த்தலாம்.
3. வனத்துறையின் செயலராக இந்திய ஆட்சிப்பணி அதிகாரி நியமிக்கப்படுகிறார். இந்திய வனப் பணி அதிகாரி இப்பதவியில் இருந்தால் நிர்வாகம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
4. வனத்துறையின் எல்லா மட்டத்திலும் உள்ள ஊழியர்களில் தொண்ணுற்றி ஐந்து சதவீதம் பேர் வனங்களையும் விலங்குகளையும் தங்கள் உயிரினும் மேலாக நேசிப்பவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்குரிய அங்கீகாரமும், மேலும் பல சலுகைகளும், வசதிகளும் அரசால் அளிக்கப்பட வேண்டும். எந்த மட்டத்திலும் அரசியல் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயல்படும் சூழலையும் அரசாங்கம் அவர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும்.
5. எக்காரணத்தாலும், யார் சிபாரிசினாலும், வனங்களுக்குள் வெளியாள்கள் வனப் பணி சாராத உல்லாசப் பயணம் செல்வது தடுக்கப்பட வேண்டும்.
6. யானை வழித்தடங்களில் முளைத்திருக்கும் எண்ணற்ற கட்டடங்களையும், பிற ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி இடித்துத்தள்ளலாம்.
7. வனங்களுக்குள் மக்கள் வசதிக்காகச் சாலைகள், ரயில் பாதைகள் அமைப்பது கூடாது.
8. வனத்துறை ஊழியர்களுக்கு இக்காலத்துக்கேற்ற நவீன உபகரணங்கள், பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். ஒலிமாசு, காற்றுமாசு ஆகியவற்றை இந்த ஊழியர்களே ஏற்படுத்தாமலிருக்கும் வண்ணம் அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வும், பயிற்சியும் தர வேண்டும்.
9. காவல் துறையில் இருக்கும் 'ஆர்டர்லி' முறைபோன்று இத்துறையில் இல்லாத போதும், சில சமயங்களில் கீழ்நிலை ஊழியர்கள் சிலர் தங்கள் பணியைத் தவிர வேறு சில பணிகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இது தவிர்க்கப் பட வேண்டும்.
10. சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, எல்லாச் சோதனைச் சாவடிகளையும் ஒருங்கிணைத்து வனத்துறைக் கட்டுப்பாட்டு அறைகளை ஆங்காங்கே அமைப்பது, உயரதிகாரிகள் முன்னறிவிப்பின்றி சோதனையிடுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு நாம் வனங்களை வாழவைப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...