எழுவருக்கு எதிரான துலாக்கோலை நிமிர்த்துக

2004-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகருக்கு அருகே இஸ்ரத் ஜகான் என்னும் 19 வயது இளம்பெண் உள்பட நான்கு பேர் காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
Updated on
3 min read

2004-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகருக்கு அருகே இஸ்ரத் ஜகான் என்னும் 19 வயது இளம்பெண் உள்பட நான்கு பேர் காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப் பட்டனர். இவர்கள் நால்வரும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றும் அப்போதைய குஜராத் முதல்வர் மோடியைக் கொலை செய்யும் திட்டத்துடன் வந்துள்ளனர் என்றும் காவல் துறை குற்றஞ்சாட்டியது.
 சுட்டுக்கொல்லப்பட்ட இஸ்ரத் ஜகானின் தாயார், தன் மகளின் கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படவேண்டும் என குஜராத் உயர்நீதிமன்றத்தில் 2004-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மனுத் தாக்கல் செய்தார். நீண்ட நெடிய சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று மூவர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து இந்தக் கொலை குறித்து விசாரணை நடத்துமாறு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
 அதே ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக் குழு 248 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் அளித்தது. அதில் மோதல் சாவு என்பது பொய்யானது. அந்த நான்கு பேரும் ஆமதாபாத் நகரின் குற்றப்பிரிவைச் சேர்ந்த காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர் என்ற உண்மையை விசாரணைக் குழு தனது அறிக்கையில் ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியது.
 ஆனால், குஜராத் மாநில அரசு இந்த அறிக்கையை ஏற்க மறுத்தது. விசாரணை வரம்பினை மீறி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது எனக் குற்றஞ்சாட்டி உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்றது. இதற்கு எதிராக விசாரணைக் குழுவின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதியன்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் "மோதல் சாவு' என்ற குற்றச்சாட்டு பொய்யானது; தொடர்புடைய அதிகாரிகள் அனைவரின் மீதும் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும் , மேலும் இந்த விசாரணையை சி.பி.ஐ. மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தது. இதற்கிணங்க குஜராத் காவல் துறையின் தலைவராக இருந்த வன்சாரா உள்பட உயர் அதிகாரிகள் பலர் மீதும் மத்திய உளவுத் துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் மீதும் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், மத்திய உளவுத் துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர மத்திய அரசு அனுமதிக்கவில்லை. எனவே, மாநில காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மட்டும் கைது செய்யப்பட்டனர்.
 2016-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து பொதுநல மனு ஒன்று அளிக்கப் பெற்றது. கிடைத்துள்ள புதிய ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள உயர் அதிகாரிகள் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டது. ஆனால், இந்த மனுவை உச்சநீதிமன்றம் மார்ச் 13-ஆம் தேதியன்று தள்ளுபடி செய்தது.
 சிறையில் இருந்தபோது உயர் அதிகாரியான வன்சாரா பதவியிலிருந்து விலகுவதாக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் "அரசு தங்களுக்குப் பெருந் துரோகம் இழைத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், அரசின் கொள்கையையே தான் செயல்படுத்தியதாகவும் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் அரசுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டபோதெல்லாம் அதைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், ஆனால் தங்களைப் பாதுகாக்க இந்த அரசு முன்வரவில்லை' என்றும் குற்றஞ்சாட்டினார். வன்சாராவின் பதவி விலகல் கடிதம் அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
 இதைத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளைப் பாதுகாக்க குஜராத் அரசு பதற்றத்துடன் முயற்சி செய்தது. அதிகாரிகள் அனைவரும் பிணையில் விடுதலை பெற்று வெளியே வந்துவிட்டனர். இவர்களைப் பிணையில் விடுதலை செய்யக் கூடாது என அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கடந்த 2-5-19-ஆம் நாளன்று குஜராத் அரசு இந்த வழக்கை நடத்துவதற்கு அனுமதி அளிக்க மறுக்கும் மனு ஒன்றினை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அளித்தது. இதன் விளைவாக வன்சாரா மற்றும் அதிகாரிகள் மீதுள்ள வழக்குகள் கைவிடப்பட்டன.
 உயர்நீதிமன்றம் தலையிட்டு கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் அனைவர் மீதும் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி அந்தக் குழு அளித்த அறிக்கையின்படி, அந்த அதிகாரிகளின் மீது வழக்கு தொடுக்கும்படி சி.பி.ஐ.க்கு ஆணையிட்டு அவ்வாறே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, தொடர்புடைய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டத்தில் குஜராத் அரசு வழக்கு தொடுக்க அனுமதி மறுப்பதற்கு அதிகாரம் உண்டா என்ற அடிப்படைக் கேள்வி எழுந்துள்ளது.
 இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிட்டுப் பிறப்பித்த ஆணையை அப்பட்டமாக மீறும் வகையிலும் குஜராத் அரசு செயல்பட்டுள்ளது. குற்றம் செய்த அதிகாரிகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தப் போக்கு இந்திய அரசியல் சட்டத்தையும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் மாண்பினையும் சீர்குலைக்கும் திட்டமிட்ட போக்காகும். கடுமையான குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு சி.பி.ஐ. உள்பட யாருக்கும் அதிகாரம் கிடையாது. மாநில அரசின் அனுமதியைப்பெற வேண்டும் என்கிற வாதத்தை குஜராத் அரசு முன் வைத்துள்ளது. அதற்கு மத்திய அரசும் துணை நிற்கிறது.
 "சி.பி.ஐ. தொடுத்த வழக்கில் தண்டிக்கப்பட்டவரை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்குக் கிடையாது; மத்திய அரசுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு' எனவும் மத்திய அரசு கூறுகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் முன்மொழிந்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார்.
 இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 6-9-2018 அன்று 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என்ற தீர்ப்பை வழங்கியது. அதன் அடிப்படையில் 9-9-2018-இல் தமிழக அமைச்சரவை கூடி 7 பேரையும் விடுதலை செய்வதற்கு முடிவு எடுத்து அதை தமிழக ஆளுநருக்குப் பரிந்துரைத்து அனுப்பியது.
 இதையடுத்து தமிழக அரசின் முடிவுக்கு எதிராக, அதாவது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்பட ஏழு பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசும் மேலும் சிலரும் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை உச்சநீதிமன்றம் அண்மையில் (9.5.19) தள்ளுபடி செய்தது. இதன் விளைவாக, ஏழு பேரை விடுதலை செய்வதற்கு முட்டுக்கட்டையாக இருந்த தடை நீக்கப்பட்டு விட்டது.
 ஏற்கெனவே 1999-ஆம் ஆண்டு, மேற்கண்ட 7 பேரில் நால்வருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக அளிக்கப்பட்ட கருணை மனுக்களை அப்போதைய தமிழக ஆளுநர் ஏற்க மறுத்து தண்டனையை உறுதி செய்தார். இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நால்வர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 25-11-1999-இல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் "மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் பேரிலும் மற்றும் அதற்கு இணங்கவும் ஆளுநர் செயல்பட வேண்டுமே தவிர, முடிவு எடுப்பது மாநில அரசின் பொறுப்பாகும்.
 ஆளுநர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அரசியல் சட்டம் 161-ஆவது பிரிவின்படி அமைச்சரவை செயல்பட்டு ஆளுநருக்கு வழங்கும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவராவார்' எனத் திட்டவட்டமான தெளிவான தீர்ப்பினை அளித்தது. புரட்சிகரமான இந்தத் தீர்ப்புக்குப் பிறகே, இந்தியா முழுவதிலும் மாநில அமைச்சரவைகளும், மத்திய அமைச்சரவையும் கருணை மனுக்களின் மீது அளிக்கும் பரிந்துரைகளை ஆளுநர்களும், குடியரசுத் தலைவர்களும் ஏற்றுச் செயல்பட வேண்டிய நிலை உருவானது.
 மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க வேண்டுமானால் மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என குஜராத் அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை ஆதரிக்கும் மத்திய அரசு, தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்ய முடிவு செய்த பிறகு அதை ஏற்பதற்குத் தயங்குவது ஏன்?
 குஜராத் அரசின் முடிவு அநீதிக்குத் துணைபோவதாகும். ஆனால், தமிழக அரசின் முடிவு இயற்கை நீதியை மட்டுமல்ல, அரசியல் சட்டத்தையும் நிலைநிறுத்துவதாகும். இந்த வேறுபாட்டினை உணர்ந்து துலாக்கோல் போல் நேர்மையுடன் செயல்படவேண்டிய மத்திய அரசும், அதன் பிரதிநிதியுமான ஆளுநரும் ஒருபுறமாகச் சாய்ந்து நிற்பது ஏன்? ஏழு பேர் விடுதலைக்கு இருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்புக்குப் பிறகாவது, சாய்ந்துள்ள துலாக்கோலை நிமிர்த்த ஆளுநரும் மத்திய அரசும் உடனடியாக முன்வர வேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com