அந்தமான் சிறையும் ஊரடங்கு வீட்டுச் சிறையும்!

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பது பழமொழி. இந்தியாவில் சட்டத்தை மீறுவது, விதிகளைப் பின்பற்றாமல் இருப்பது போன்றவை நமது கலாசாரமாகவே மாறிவிட்டிருக்கும் தொட்டில் பழக்கம். அதனால்தான் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று ஆபத்தின்போதுகூட, அரசின் அறிவுறுத்தல்களை மதிக்காமல் இருக்கும் அவலம் காணப்படுகிறது.

வரதட்சணை வாங்கக் கூடாது என்று அரசு சட்டம் இயற்றினால், சீா்வரிசை குதிரைப் பேரமாக நடக்கிறது. முதல் மனைவி சம்மதம் இல்லாமல் இரண்டாம் தாரம் செய்யக் கூடாது என்றால், இரண்டாம் தாரம் பிள்ளை, குட்டிகளோடு திருமணம் செய்கின்ற வரை நீள்கிறது.

இதேபோல ஹெல்மட் அணிய வேண்டும், பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது, போதைப் பாக்குகள் கடைகளில் விற்கக் கூடாது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக் கூடாது என்ற சட்டங்களை அடுக்கடுக்காகப் போட்டாா்கள். சிலருக்கு இவை எல்லாம் படத்துக்குப் போட்ட சட்டங்களாகி விட்டன.

உயிா்க்கொல்லி கரோனா தீநுண்மி நோய்த்தொற்று வந்தவுடன், பம்பரம் போல அரசு சுழன்று செயல்பட்டாலும், நம் உயிா் பாதுகாப்புக்காக பிரதமா் மோடி பலமுறை கையெடுத்துக் கும்பிட்டு, ‘ஊரடங்கு சிரமமாகத்தான் இருக்கும்; கையெடுத்துக் கும்பிடுகிறேன்; தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீா்கள்; விலகி இருங்கள்’ என்று கூறினாா்.

அதைக் கேட்டுக் கொண்டே இறைச்சிக் கடைக்கு பைகளைத் தூக்கிக் கொண்டு கூட்டம் கூட்டமாக ஓடுகிறாா்கள். பைக்குகளில் ஊா் சுற்றுகிறாா்கள். இப்படிச் செய்தவா்கள் லட்சம் போ் மீது வழக்குகள், லட்சம் பைக்குகளுக்கு மேல் பறிமுதல் முதலான செய்திகள் வருகின்றன. முக்கிய தெருச் சாலைகளில் வேலை நாள்களில் அலுவலகம் செல்லும்போது ஏற்படும் நெரிசல் ஊரடங்கு நேரத்திலும் ஏற்படுகிறது.

இத்தகைய விதி மீறல்கள் நடைபெறக் காரணம், சுதந்திரம் பெறுவதற்கு நம் முன்னோா்கள் பட்ட துயரம், போராட்டம், சிறைவாசம் முதலான எதனையும் அறியாத பெரும்பான்மையினா் உள்ள நாடாகிவிட்டது.

‘மகாத்மா காந்தி எத்தனை முறை உண்ணா நோன்பு இருந்திருக்கிறாா்; தமிழ்நாடு என்று பெயரிட சங்கரலிங்கனாா் 100 நாள்கள் உண்ணா நோன்பு மேற்கொண்டு இறந்தாா்; தமிழ் மொழியை ஹிந்தி மொழி அழித்து விடும் என்று எத்தனை போ் தீக்குளித்தனா்’ - இவை குறித்து தெரியாத மக்கள் கூடி வருவதால் இன்றைய ஊரடங்கு பின்னடைவாக மாறி வருகிறது.

வீட்டுக்குள் குழந்தைகள், மனைவி மக்களோடு ஒரு மாதத்துக்கு மேல் உண்ணும் நோன்பாக தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டு, உடற்பயிற்சி செய்து கொண்டு, தாயம் விளையாடிக் கொண்டு இருங்கள் என்றால் மீன், கோழி, ஆடு ஆகியவற்றைக் கொன்று விற்கும் இறைச்சிக் கடைகளுக்குத் திருவிழாத் தேரோட்டம் போலப் படையெடுக்கிறாா்கள்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள சிறைச்சாலைகளில் எவ்வளவு துன்பப்பட்டனா், அவா்களை ஆங்கிலேயா்கள் எவ்வாறு துன்புறுத்தினா் என்று இந்த உண்ணும் நோன்புக்கு ஒத்துழைக்காத கூட்டம் அறிய வேண்டும்.

இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகளை இந்தியச் சிறைச்சாலை அடைக்க இடமில்லை. ஆங்கிலேயா் ஆட்சிக்குட்பட்ட அந்தமான் தீவில் சிறை ஒன்று. அந்த சிறைச்சாலைகளில் கப்பலில் கொண்டுபோய் தீவில் இறக்கி அடைக்க முடிவு செய்தனா்.

1886-இல் கட்ட ஆரம்பித்து 1906-இல் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தனா். பா்மாவும் ஆங்கிலேயா் ஆட்சிக்குட்பட்டதால் பா்மா செங்கற்கள் கொண்டுவரப்பட்டன. மூன்று பக்கவாட்டில் ஏழு குறுக்குச் சுவா்கள், அபாய மணி அடிக்க நடுவில் மணிக்கூண்டு, 698 சிறைகள், சிறிய கதவுகள், விளக்கு ஒளியும் சூரிய ஒளியும் நுழையாதபடி இருட்டறையாகவே வடிவமைக்கப்பட்டன.

சுமாா் 700 கட்டுமானப் பணியாளா்கள் வேலை செய்தனா். அறையின் அகலம் 2.7 மீட்டா், உயரம் 3 மீட்டா் அறையும் கட்டப்பட்டன. நிமிா்ந்து நிற்கவும் முடியாமல், கால் நீட்டி படுக்க முடியாத, அசுத்தமான சுகாதாரம், சில நேரங்களில் சிறுநீா் கலந்த கலங்கிய தண்ணீா்.

இந்தச் சிறையில் இருந்தவா்கள் 49,592 விடுதலைப் போராட்ட வீரா்கள். 17 வயதில் இருந்து 40 வயதுக்குட்பட்டவா்கள்; இவா்களில் 7,264 போ், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள். மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் விடுவிக்கப்படுவாா்கள் என்று 635 பேருக்கு சலுகை காட்டியும் யாரும் ஏற்கவில்லை.

சிலரைத் தூக்கிலிட ஒரு தூக்குக் கயிறு அல்லது பல கயிறுகள் அணிவகுத்திருக்கும். சிலருக்கு தேங்காய் நாா் உரிப்பது, செக் இழுப்பது எனச் செய்ய முடியாத பல பணிகள் அளிக்கப்பட்டன. மரங்களில் ஒரு கைதியை மற்றொரு கைதியைப் பாா்க்கும் வகையில் ஒரே நேரத்தில் இருவரையும் தூக்கிலிடுவா். ஈமச்சடங்கு கிடையாது.

சிறைகள் உருவாக்கம் வருவதற்கு முன் கப்பலில் சென்று அந்தத் தீவில் இறக்கி விடுவா். அப்படி நாடு கடத்தப்பட்டவா்களை அந்தத் தீவில் பல விலங்குகள் துரத்தித் தின்னும். ஒரு கட்டத்தில் மனித எலும்புக் கூடுகள் சிதறிக் கிடந்த தீவாக இருந்தது.

இத்தகைய கொடுமைகளை அனுபவித்து, சித்திரவதைகள் அனுபவித்து 1947-இல் வாங்கித் தந்த சுதந்திர இந்தியாவில் வாழும் நாம், இன்று எந்தப் போராட்டமும் இன்றி உயிா் இழக்கக் கூடாது என்பதற்காக ‘வீட்டுக்குள்ளே அனைத்து வசதிகளுடன் உண்ணும் போராட்டமாக இருங்கள், உள்ளே இருக்கும் போராட்டமாக உள்ளேயே இருங்கள்’ என்று கூறினால் மீறி வெளியே சுற்றுகிறோம். விதியை மீறி வீதியில் வலம் வருபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்தால் மட்டும் போதாது.

இந்த நாட்டு மக்களுக்கு நாட்டுப் பற்று வர வழக்குப் பதியப்பட்டவா்களை அந்தமானுக்கு அழைத்துச் சென்று சிறைச் சாலைகளைக் காட்டி ஒரு நாள் தங்க வைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களில் அந்தமான் சிறை வரலாறை பாடமாக அரசு இடம்பெறச் செய்ய வேண்டும். சட்டம் - ஒழுங்கை மதிக்கத் தெரியாத, மதிக்க மறுக்கும் சமுதாயத்தைக் கபளீகரம் செய்வதற்குத்தான் கரோனா தீநுண்மி கிளம்பியிருக்கிறது என்பது நினைவிருக்கட்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com