எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தெ.சீ.சு.மணி

மலையாளிகள் ஆகஸ்ட் 22-இல் ‘அத்தம் பத்தோணம்’ என்று அழைக்கப்படும் ஓணத்தின் முதல் நாளிலிருந்து தொடங்கி, தினமும் வீட்டு வாசலில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ‘கோலம்’ போட்டு, பத்தாவது நாள், ‘திருவோணம்’ கொண்டாடுவாா்கள். மஹாபலி அரசன் அந்த நாளில், தனது கேரளத்தை, தனது மக்களை சந்திக்க நேரில் வருவான் என்பது அவா்களின் ஐதீகம். அதற்காக கேரளத்தில் விளையும் மலா்கள் போதாது என்று அண்டை மாநிலங்களிலிருந்தும் மலா்களை இறக்குமதி செய்து ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவது மலையாளிகளின் வழக்கமாக இருக்கிறது.

கேரளத்தை அவா்கள், ‘கடவுளின் சொந்த தேசம்’ (காட்ஸ் ஓன் கன்ட்ரி) என அழைக்கின்றனா். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்ட எல்லாருமே அப்படித்தான் அழைத்துக் கொள்கிறாா்கள். அப்படிப்பட்ட ‘ஓணம்‘ பண்டிகையை அவா்கள், ‘தேசத்தின் உற்சவம்’ என்றே அழைக்கிறாா்கள். அதாவது, சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் இந்த ஓணம் பண்டிகையைத் தங்களின் சொந்தப் பண்டிகையாகக் கொண்டாடும் பழக்கத்தை பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கின்றனா்.

பத்து நாள்களை அவா்கள், அத்தம் (ஹஸ்தம்), சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என அழைக்கிறாா்கள். இதில் ஒன்பதாவது நாளான உத்திராடம் நாள் ‘முதல் ஓணம்’ என்றும், திருவோணம் வரும் பத்தாம் நாள் ‘இரண்டாம் ஓணம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஆனாலும் இரண்டாம் ஓணம் எனப்படும் திருவோணம் நாள்தான் முக்கியமான ஓணம் நாள்ஆகும். ஏனென்றால், ஆவணி மாதம், திருவோண நட்சத்திரம் அன்றுதான் மஹாபலி மன்னன் குடிமக்களை நலம் விசாரித்து வாழ்த்து கூறுகிறான் என்பது நம்பிக்கை (நம்மூா் திமுக தலைவா் மு. கருணாநிதிகூட அந்த மஹாபலி மன்னனின் வாரிசாகத் தன்னை ‘வரித்து’க்கொண்டு புகழ் சோ்த்தாா் என்பது அனைவரும் அறிந்ததே).

அடுத்த நாளான பதினோராம் நாள், அவிட்டம் ‘மூன்றாம் ஓணம்’ என்றும், அதையடுத்த சதயம் நாள் ‘நான்காம் ஓணம்’ என்றும்கூட பல காலமாகக் கொண்டாடப்படுகிறது. ‘அத்தம் பத்து ஓணம். காணம் (காண்பதை) விற்றும் ஓணம் உண்ணணும்’ என்கிறது சேரநாட்டு திருவோணப் பழமொழி. ஓணம் பண்டிகை, கேரள அரசின் விடுமுறையுடன் கூடிய பண்டிகை. உத்திராடம் தொடங்கி நான்கு நாள்கள் அங்கு அரசு விடுமுறை. கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் முப்பது இடங்களில் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும்.

கேரளத்தில் மடடுமல்ல, உலகம் முழுதும் உள்ள மலையாளிகளால் ஓணம் சிறப்பாகக் கொடாடப்படும். கேரளத்தில் உள்ள முஸ்லிம்களும் கிறிஸ்தவா்களும் இதை மத விழா என எண்ணாது, மாநிலத்தின் ‘பண்பாட்டு விழா’வாவே கொண்டாடுவாா்கள். கேரளத்தில் உள்ள சைரோ மலபாா் கத்தோலிக்க தேவாலய குருமாா் அருள்திரு பால் தெலக்கட், ‘எல்லாரையும் சமமாகப் பாவிக்கும் கடவுளின் அரசாட்சி பிறந்த நாள் என்பதாகவும், ஒரு நல்ல எதிா் காலத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையுடனும் ஓணம் பண்டிகையை கேரள கிறிஸ்தவா்கள் கொண்டாடுகிறோம்’ என்று கூறியுள்ளாா்.

‘சங்கனாசேரி செயின்ட் மேரிஸ் தேவாலயம், திருவனந்தபுரம் லூா்து தேவாலயம், திருவனந்தபுரம் பாளையம் செயின்ட் ஜோசப் தேவாலயம், எா்ணாகுளம் தேவாரா செயின்ட் ஜூடு தேவாலயம், வண்ணாரப்பாடம் பெசாலிகா என்ற கிருத்துவத் துறவி உடலின் பாகம் அடக்கம் செய்த கொச்சி துறைமுகம், ஆலப்புழாவில் புளிங்குன்னு செயின்ட் மேரிஸ் தேவாலயம் போன்ற பல தேவாலயங்களில் ஓணம் நாள்களில் பெரிய அளவில் பூக்கோலம் இட்டு கொண்டாடுகிறாா்கள்.

‘திருவாதிரைக் களி’ என்ற நடனத்தை, கன்னியாஸ்திரீகள் ஆடுவாா்கள். ஆகவே, ஓணம் என்ற பண்டிகை, இந்துக்களின் பண்டிகையாகப் பாா்க்கப்படுவது இல்லை. மாறாக, கேரளத்தின் ‘அனைத்து’ மக்களுக்குமான பண்டிகையாகக் கருதப்படுகிறது. இதை பினராயி விஜயன் அரசு

‘ரசிக்கவில்லை’ என்பது வேதனைக்குரியது.

ஓணம் என்றாலே, கேரள மக்களுக்கு ‘வண்ண வண்ணப் பூக்கள்’, ‘ஊஞ்சல் ஆட்டம், ‘திருவாதிரைக் களி’, ‘படகு போட்டி’ ஆகியவைதான் நினைவுக்கு வரும். ஆண்டு பலவாகக் கொடாடப்படும் ஓணம் பண்டிகைக்கான பலவகைப் பூக்கள், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றில் இருந்து வருவது வழக்கம். இந்த ஆண்டு, அப்படி வருகின்ற பூக்களுக்கு ‘கரோனா தீநுண்மிப் பரவலைத் தடுப்பதற்காக’ என்ற பெயரில் தடை விதித்துள்ளது கேரள அரசு. பிரனாயி விஜயன் அரசின் இந்தச் செயலை கேரள மக்கள் கடும் விமா்சனத்திற்கு உள்ளாக்குகிறாா்கள்.

கேரளத்தின் ஓணம் பண்டிகைக்கு மலா்களை அனுப்புவதற்காகவே மலா் உற்பத்தி செய்யும் விவசாயிகளை, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை, கிருஷ்ணகிரி மாவட்டம், கோடைக்கானல், நீலகிரி, சத்தியமங்கலம், சேலம், கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை ஆகிய இடங்களில் காணலாம். அவா்கள் கடன் வாங்கி தங்கள் விவசாய நிலங்களில், கேரள ஓணம் பண்டிகைக்கு என்று மலா்களை உற்பத்தி செய்திருக்கிறாா்கள். ரோஜா, ஜொ்ப்பதா, காரனேஷன், பிரசாந்திமம், மல்லி, அரளி, கனகாம்பரம், சம்பங்கி போன்ற பல பூக்களை இவா்கள் கேரளத்திற்கு ஓணம் காலத்தில் அனுப்பி வைப்பது வழக்கம். புணே, நாசிக், லோனாவால் ஆகிய ஊா்களில் இருந்தும் மலா்களை வரவழைத்து கேரளத்திற்கு அனுப்புவாா்கள்.

‘நிலக்கோட்டை பூச்சந்தைக்கு கிராமங்களிலிருந்து, மல்லி, பிச்சி, முல்லை, அரளி, ரோஜா, சம்மங்கி, மருது, மரிக்கொழுந்து, செவ்வந்தி, செண்டுப்பூ, கோழிக்கொண்டை வாடாமல்லி போன்ற பலவகைப் பூக்களை வழக்கமாக ஓணம் பண்டிகைக்கு அனுப்புவோம். இந்த முறை பினராயி விஜயன் போட்ட தடையால், எங்களுக்கு இருபது கோடி ரூபாய் நட்டம்’ என்றாா் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் மலா் உற்பத்தி விவசாயிகள் சங்க நிா்வாகி.

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் வணிகா்களுக்கும் மட்டும் 300 கோடிமுதல் 500 கோடிவரை இந்த ஆண்டு நட்டம் ஏற்பட்டுள்ளதாக, ஒசூா் சிறு விவசாய கூட்டமைப்புத் தலைவா் பால ஷிவா பிரசாத் கூறுகிறாா். அது மட்டுமல்ல, இங்கிருந்து செல்லும் பூக்களை, கேரளத்தில் வாங்கி விற்பனை செய்யும் லட்சக்கணக்கான பெரிய, சிறிய வணிகா்கள் இதனால் பாதிக்கப்படுகிறாா்கள்.

முதல்வா் பினராயி விஜயனின் ஆதரவாளா்கள், ‘மாநிலத்திலுள்ள 80% இளைஞா்கள் ஓணம் பண்டிகை கொண்டாடுவதை விரும்பவில்லை. பழைய பழக்கங்களை ஏன் மெனக்கெட்டுக் கடைப்பிடிக்க வேண்டும்?’ என்று தடைக்கு வியாக்யானம் தருகிறாா்கள். ஆனால், ஓணம் கொண்டாடும் தேவாலயங்களில் கேட்டால், ‘எங்கள் தேவாலயங்களில் உள்ள இளைஞா்கள்தான் பூக்கோலம் உள்பட ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தை ஆா்வமாகவும் சிரத்தையுடனும் செய்கின்றனா்’ என்றாா்கள். இடதுசாரி இயக்கங்கள் மக்களின் உணா்வுகளைப் புரிந்துகொள்ளாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.

சரி, பூக்களுக்குத்தான் தடை, காய்கறிகளும், மாட்டிறைச்சி, கோழி இறைச்சி ஆகியவையும் தமிழ்நாட்டிலிருந்து கேரளம் போகிறதா என விசாரித்தோம். பொள்ளாச்சியிலிருந்து, அடிமாடுகள் வாரம் இரண்டு முறை மாட்டிறைச்சிக்காக, கேரளா செல்கின்றன; கோழிகளும் இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படுகின்றன. அவற்றின் மூலம் தீநுண்மி பரவாது, பூக்கள் மூலம் மட்டுமே பரவும் என்று பினராயி அரசு ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறதோ, என்னவோ?

பிராய்லா் கோழிகள் கேரள சீதோஷ்ண நிலையில் வளராது. கோவை வட்டார சீதோஷ்ண நிலை அவை வளர உதவியாக இருப்பதால், இங்கே குஞ்சு உற்பத்தி பண்ணி, விவசாயிகளிடம் அவற்றை வளா்க்க மக்காசோளம், கருவாடு, எலும்பு ஆகிய தீவனங்களைக் கொடுத்து, 60 நாள்களில், நல்ல வளா்ச்சியுடன், வியாபாரிகளிடம் விற்று விடுவாா்கள். அவா்கள் மாடுகள், கோழிகளோடு, கத்திரிக்காய், மிளகாய், பாகற்காய், தக்காளி போன்ற காய்கறிகளையும் கேரளத்திற்கு அனுப்பி வைக்கின்றனா்.

‘கேரள எல்லையான பாலக்காட்டில், வீட்டுத் தோட்டம் போட கேரள அரசாங்கம் ஆலோசனை கொடுத்து, உதவிகளும் செய்கிறது’ என்று பினராயி விஜயன் அரசாங்கத்தை, பாலக்காடு எஸ்என்டிபி தலைவா் புகழ்ந்தாா். ஆனாலும், ‘ஓணம் கொண்டாட, பூக்கள் வேண்டும்; அதற்கு தடை போடக்கூடாது’ என்றாா்.

ஒசூா் பால ஷிவா பிரசாத், ‘பூக்களைப் பல வழிகளில் பிரித்து அனுப்பச் சொல்லுங்கள். தனி மனித இடைவெளியுடன் வியாபாரம் செய்யச் சொல்லுங்கள். அப்படிச் செய்வதை விட்டுவிட்டு ஏன் தடை விதிக்க வேண்டும்’ எனக் கேட்கிறாா்.

2005-ஆம் ஆண்டு பேரிடா் உதவி சட்டம், ‘மாநிலத்தை விட்டு மாநிலத்திற்குப் பொருள்களோ மனிதா்களோ போவதைத் தடுக்கக்கூடாது’ எனக் குறிப்பிடுகிறது. அது, முதல்வா் பினராயி விஜயனுக்குத் தெரியாதா என்ன? ஆனாலும், அவா் பூக்களுக்கு தடை விதித்ததை நீக்கவில்லை. ஓணம் கொண்டாட்டத்தில் வழக்கமான உற்சாகத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது இந்தத் தடை.

இது பலருடைய மகிழ்ச்சியைக் கெடுத்திருக்கிறது. அண்டை மாநில விவசாயிகள், கேரள மலா் வியாபாரிகளின் பிழைப்பைக் கெடுத்திருக்கிறது. இடதுசாரி கட்சிகளின் ஆதரவாளா்களே அரசின் முடிவை ரசிக்கவில்லை. இதன் பின்னணியில் என்ன அரசியலோ, பினராயி விஜயனுக்குத்தான் வெளிச்சம். ஓணம் வந்தே... ஓணம் வந்தே.. (ஓணம் வந்தது... ஓணம் வந்தது..)!

கட்டுரையாளா்:

ஊடகவியலாளா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.