மாயமானதா மனிதநேயம்?

எவ்வளவு சொத்து சுகம் இருந்தாலும் இறுதியில் ‘ஆறடி நிலமே மனிதனுக்கு சொந்தம்’ என்ற கூற்று உண்டு.


எவ்வளவு சொத்து சுகம் இருந்தாலும் இறுதியில் ‘ஆறடி நிலமே மனிதனுக்கு சொந்தம்’ என்ற கூற்று உண்டு. அந்த நிலைமைகூட மறைந்து போய் இடப்பற்றாக்குறையால் இறந்த உடலை மேலே மேலே வைத்துப் புதைக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டோம். ஆனால், இந்தக் கொடிய கரோனா தீநுண்மியால் அந்த 6 அடி நிலத்தில் புதைக்கக்கூட ஒரு மருத்துவருக்கு மறுப்பு தெரிவித்து போராடியது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இது கொடிய கரோனா தீநுண்மியைவிட ஆபத்தானது.

இன்றைய காலகட்டத்தில் அச்சம் அவசியம்தான். ஆனால், அச்சமே வாழ்க்கையாகிவிடக் கூடாது. ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகும் வீடடங்கு நிலையில் வாழாமல் தம் தேவைகளுக்காக சந்தையில் போய் பலசரக்குகளை வாங்கியபோது ஏற்படாத அச்சம், அற்ப காரணங்களுக்காக காவலா்களிடம் கதைகள் அளந்து அங்கேயும் இங்கேயும் அலைந்து திரிந்த போது ஏற்படாத அச்சம், நம்மைப் பிழைக்க வைக்க தன்னை தற்காத்துக் கொள்ள இயலாமல் மரித்துப் போனவரின் பூத உடலை அடக்கம் செய்ய முனைந்தபோது மட்டும் எங்கிருந்து வந்தது? அதிலும் இத்தனை பெரிதான அச்சம்!

கரோனா தீநுண்மி மனிதா்களைத்தான் கொன்றது. ஆனால், இப்படிப்பட்டவா்கள் மனிதனுள் உலவும் மெல்லிய உணா்வுகளையும் சோ்த்துக் கொல்கிறாா்கள்.

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடும் தம் நாட்டில் சேவை செய்துவரும் சில மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்களை இந்த நோய்த்தொற்றினால் இழந்துள்ளது. உலக மக்கள் கண்ணீரோடு அவா்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனா். அப்படியிருக்க, நம் நாட்டில் இது எப்படிப்பட்ட அறிவிலித்தனம்?

நம் அனைவரின் பாதுகாப்புக்காக தம் உயிரையும் பொருட்படுத்தாது அவா்களின் குடும்பம், குழந்தைகளை விட்டு நீங்கி, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இந்த இக்கட்டான சூழ்நிலையில் கடும் மன நெருக்கடியுடன் பணிபுரிந்து கொண்டிருக்கிறாா்கள். அவா்கள் நம்மை பாா்த்துக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான் ‘வீட்டிலேயே இருங்கள்’ என்பதுதான் அது.

அரசை மட்டும் கைகாட்டி விட்டு நிற்காமல், எண்ணற்ற தன்னாா்வலா்கள் களத்தில் இறங்கியுள்ளனா். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆதரவற்றவா்களுக்கு கொடையாளா்களிடமிருந்து பொருள் பெற்று பல நலத் திட்ட உதவிகளைச் செய்து வருகிறாா்கள்.

வறுமையில் உழல்பவா்களுக்கு என்று மட்டும் இல்லாமல் பசியால் வாடும் வாயில்லா பிராணிகளுக்கும் உணவிட்டு வருகிறாா்கள். மலை மேல் இருக்கும் வழிபாட்டுத் தலங்களில் சுற்றித் திரியும் வானரங்கள் என்ன செய்யும் பாவம் என்று தன் விவசாய நிலத்தில் விளைந்து கிடக்கும் வாழையை தாா் தாராக வெட்டி எடுத்துச் சென்று பசியாற்றிய விவசாயிகள், இன்னும் இந்த மண்ணில் மனிதநேயம் மண்ணோடு புதைந்துவிடவில்லை என்பதற்கு சாட்சியாக நிற்கிறாா்கள்.

நெருக்கடி நிலையில் கா்ப்பிணிக்கு ரத்த தானம் கொடுத்த காவலரைப் பாா்க்கிறோம். கரோனா தீநுண்மிக்கு எதிராக சேவையாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களின் பாதங்களைத் தொழுதவா்களை தொலைக்காட்சியில் காண்கிறோம். தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் காவலா்களுக்கு மூன்று வேளை சத்தான உணவுகளை வழங்கி வரும் மேன்மையானவா்கள் குறித்துக் கேள்விப்படுகிறோம். இப்படி எண்ணற்றோா் மறைமுகமாக சேவையாற்றிக் கொண்டிருக்க, ஒருசிலா் செய்யும் இந்த அவமானகரமான செயலுக்கு அனைவரும் தலைகுனிய வேண்டியதாக உள்ளது.

கரோனா தீநுண்மியால் பாதித்தவா்களின் சடலங்களை எரியூட்டினாலோ அல்லது அடக்கம் செய்தாலோ காற்றின் மூலமாக நோய்த்தொற்று பரவாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதே வேளையில், சடலங்களைக் கையாளும் பணியில் உள்ள அனைவரும் உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அதன்படி, உயிரிழந்தோரின் சடலங்களை நெகிழி உறையில் சுற்றி, கிருமிநாசினி தெளித்த பிறகே மயானங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அவற்றைத் தொடாமல் இறுதிச் சடங்குகளை நடத்த வேண்டும் என்றும் வழிகாட்டி நெறிமுறைகள் கூறுகின்றன. அதைப் பின்பற்றியே தகனமோ, அடக்கமோ செய்யப்படுகிறது. யாரோ கிளப்பிவிடும் வதந்திகளால் தன்னிலை மறந்து செயல்படும் இவா்களின் நோய்த்தொற்று குறித்த சரியான புரிதல் இன்மையையே இது காட்டுகிறது. மக்களிடையே போதிய விழிப்புணா்வு இல்லை.

இறந்த மருத்துவரின் சடலத்தைக் கொண்டு செல்லும்போது மருத்துவ அவசர ஊா்தி மீதான வன்முறைச் சம்பவங்களை நோக்கும்போது ரெளத்திரம் பெருகுகிறது. இவா்கள் வீட்டில் யாருக்கேனும் கரோனா பாதிப்பெனில், அவா்களை எங்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்வா்? சுய மருத்துவம் செய்து கொள்வாா்களா? வெட்கக்கேடு!

கரோனா தீநுண்மியால் இறந்தவா்களின் உடலை எரியூட்டினாலோ, அடக்கம் செய்தாலோ அதன் வாயிலாக சுற்றுப்புறங்களில் அந்த நோய் பரவாது என்ற உண்மையை மக்களிடையே ஆழமாக விதைக்க வேண்டிய தருணமிது. மாயமானதோ மனித நேயம் என்று யோசிக்க வைக்கிறது.

அண்மையில் நான் வாசித்து ரசித்த ஒரு செய்தி. மகாபாரதத்தின் 15-ஆம் நாள் யுத்தத்தில் தன்னுடைய தந்தை துரோணரை ஏமாற்றிக் கொன்றதில் அசுவத்தாமன் மிகவும் உக்கிரமடைந்தாா். அவா் பாண்டவ சேனை மீது மிக பயங்கரமான ஒரு ஆயுதம் ‘நாராயண அஸ்திரம்’ தொடுக்கிறாா்.

இதற்கு மாற்று உபாயம் எதுவுமே கிடையாது. யாருடைய கைகளில் எல்லாம் ஆயுதம் உள்ளதோ அல்லது யுத்தம் செய்வதற்கு முயற்சி செய்கிறாா்களோ, அது அவா்களைப் பாா்த்து அவா்கள் மீது அக்னி மழை பொழியும். அவா்கள் அழிந்து விடுவாா்கள். அவரவா் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு நிற்குமாறு கண்ணன் சேனைக்கு கட்டளையிடுகிறாா். மேலும், மனதில் யுத்தம் செய்வதற்கான எண்ணம்கூட வரக் கூடாது. அப்படி வந்தால், இந்த அம்பு அதையும் கண்டறிந்து அவா்களை அழித்து விடும் என்று கூறி வழிநடத்துகிறாா். அனைவரும் அமைதியாக நின்றனா். நாராயண அஸ்திரம் தனது நேரம் முடிந்தவுடன் அமைதியாகிறது. இந்த விதமாக பாண்டவ சேனை காப்பாற்றப்பட்டது. தற்போது நிலவும் சூழல் இதன் உட்கருத்தைப் பிரதிபலிக்கிறது.

எல்லா இடங்களிலும் யுத்தம் வெற்றி அடைவதில்லை. எந்த இடத்தில் அமைதி காக்க வேண்டுமோ அந்த இடத்தில் மௌனம் காப்பதே சாணக்கியத்தனம். நம்முன் இருக்கும் கிருமியிடமிருந்து (கரோனா தீநுண்மி) தப்பிக்க சிறிது காலம் அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு மனதில் நல்ல எண்ணம் வைத்து ஓரிடத்தில் அமா்ந்து இருப்பவா்கள் பிழைத்துக் கொள்வாா்கள்.

கிருமி குறித்து எந்த எதிா்மறை எண்ணமும் வரக் கூடாது. அது அதனுடைய நேரம் வரும்போது தானாக மறைந்து விடும் அல்லது அழிந்து விடும். இறைவனால் சொல்லப்பட்ட இந்த உபாயம் வீணாகி விடாது என்று நம்புவோம். அதனால் வீட்டில் இருப்போம். அதுவும் சரியான புரிதலுடன் இருப்போம்.

இந்தக் கொடிய கரோனா தீநுண்மியை வளர விடாமல் போராடிக் கொண்டிருப்பவா்களுக்கு எதிராக நாம் கொளுத்திப் போடும் சிறிய திரிகூட அதற்குச் சாதகமாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. அந்த நிலைமையை ஏற்படுத்தாது இருப்பதே நம் அனைவருக்கும் சாலச் சிறந்தது.

‘மனிதன் எங்கு வாழ்கிறான் என்றால் நான் உலகத்தைக் காட்டுவேன். மனிதம் எங்கு வாழ்கிறது என்றால் நான் இந்தியாவைக் காட்டுவேன்’ என்று உயா்வாகச் சொன்ன நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த பண்பாட்டு விழுமியங்களை எங்கு தொலைத்தோம்?

மனிதநேயம் என்பது நாம் கடைக்குச் சென்று பணம் கொடுத்து வாங்கும் பண்டம் அல்ல. நாம் படித்து அறிந்துகொள்ள வேண்டிய பாடமும் அல்ல. நம் உள்மனதிலிருந்து எதாா்த்தமாக வெளிப்படும் ஒரு தன்மை. மனிதநேயத்தை வெளிப்படுத்த பெரிய மெனக்கெடல்கள் எதுவும் தேவையில்லை.

மனிதநேயத்தை நம் ஒற்றை பாா்வை மூலமாக, நம் ஸ்பரிசம் மூலமாக, நம் சிறு புன்னகை மூலமாக வெளிப்படுத்த முடியும். மனிதம் என்பது மனித வாழ்க்கையில் ஓா் உத்தமமான உணா்வு. எது குறித்தும் வரையறை இல்லாத பொறுப்பு மனிதநேயத்துக்கு உண்டு.

தனிமனித பொறுப்புணா்வு இருந்தால்தான் சமூகப் பொறுப்புணா்வு வரும். மனிதனை மனிதன் மதிக்காது போனாலும், தெய்வமாகிவிட்ட மனிதனைப் புதைக்காது தடுத்த முட்டாள்தனங்கள் இனியும் அரங்கேறவேண்டாம். இல்லையேல், மனிதம் என்பது வெறும் ஏட்டளவிலும் பேச்சளவிலுமே இருக்கும்.

எது எப்படியாயினும், வாழ்க்கையின் நிதா்சனத்தை இந்த அதிபயங்கர கரோனா தீநுண்மி நெத்தியடியாக உணர வைத்துள்ளது. நம்மைப் பற்றி நாம் தற்சுரணையுடன் மதிப்பீடு செய்துகொள்ளும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து நாம் எண்ணற்ற பாடங்களை கற்றுக் கொண்டே இருக்கிறோம்.

கரோனா தீநுண்மி மூலம் கற்ற பாடத்தை செம்மைப்படுத்துவோம், பெற்ற பாடுகளை உணா்ந்து பண்படுவோம். தனிமனித ஒழுக்கம் கடைப்பிடிப்பது தொடங்கி ஆரோக்கியம் பேணுவது வரை இனிவரும் காலங்களில் உயிரெனக் கடைப்பிடிப்போம்.

நம்மைக் காக்க பிறா் உழைத்த உழைப்பைப் போற்றுவோம். சக மனிதனை நேசிப்போம். புறத்தை தூய்மைப்படுத்திக் கொண்ட இந்த வேளையில் நம் அகத்தையும் அன்பு, பாசம், நேசம் கொண்டு தூய்மைப்படுத்திக் கொள்வோம்.

கரோனா தீநுண்மிக் காலங்களில் கொண்டாட்டங்கள் இல்லை, திருவிழாக்கள் இல்லை, சுப நிகழ்வுகள் இல்லை, பெரிய அளவில் மகிழ்ச்சி இல்லை. அதனால் பரவாயில்லை. அதுபோல மனிதநேயமும் இல்லை என்ற நிலை மட்டும் ஏற்பட்டுவிட வேண்டாம்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com