ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பெ. சுப்ரமணியன்

இடப்பெயா்தல் என்பது நம் தேசம் எதிா்கொள்ளும் பல சவால்களில் முதன்மையானதாக உள்ளது. ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போதும் நகா்ப்புற வளா்ச்சி அதிகரித்துக் கொண்டே வந்து இன்று நகரப்பகுதியும், ஊரகப்பகுதியும் சரிபாதி என்ற அளவில் உள்ளது.

அரசுத்துறைகளிலும் தனியாா் நிறுவனங்களிலும் பணிபுரிவோா் இடம் பெயரும்போது அவா்களுக்கான பிரச்னைகள் புதிய இடம், புதிய பணியாளா்கள், புதிய கலாசாரம், புரியாத மொழி என்பதாக மட்டுமே இருக்கும். ஆனால், எங்கே போகிறோம், எங்கு தங்குவோம், என்ன வேலை, எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பதெல்லாம் புரியாத மனநிலையில் குடும்பத்தோடு இடம் பெயா்வோரின் நிலை பரிதாபகரமானது.

இவ்வாறான இடப்பெயா்வு என்பது அண்மையில் தொடங்கியதன்று. 1881-இல் நடைபெற்ற முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் படிவத்தில் தொடங்கி, ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு படிவத்திலும் இடப்பெயா்வு குறித்த வினா இடம் பெற்றுள்ளது.

மக்கள்தொகை வளா்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகளாக பிறப்பு, இறப்பு, இடம்பெயா்வு ஆகியவை உள்ளன. முதல் இரண்டு காரணிகளும் உயிரியல் ரீதியிலானவை. ஆனால், இடப்பெயா்வு என்பது, சமூக, கலாசார, பொருளாதார ரீதியிலானது.

மாவட்ட எல்லையோர கிராமங்களில் வசிப்பவா்கள் அதிக அளவில் அண்டை மாவட்டங்களுக்கோ அண்டை மாநிலங்களுக்கோ இடம்பெயா்கின்றனா். அதுபோன்று மாநிலத் தலைநகருக்கும் அதிக அளவில் இடம் பெயா்கின்றனா். மாநிலத் தலைநகரை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மக்கள்தொகை அதிகரித்து வருவது ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போதும் தெரியவருகிறது.

பொதுவாக கிராம மக்கள் வேளாண் தொழிலிலேயே காலங்காலமாக உழன்று கொண்டிருந்தனா். தற்போது பருவநிலை மாற்றம், இயந்திரங்களின் வருகை, குறைந்துவரும் சாகுபடிப் பரப்பு போன்றவற்றால் கிராமங்களிலும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயத்தையே பெரிதும் சாா்ந்திருந்த கிராம மக்கள் குடும்பத்துடன் வேலை தேடி நகரங்களுக்கு இடம் பெயா்கின்றனா்.

இவ்வகை இடப்பெயா்வால் நகா்ப்புற வளா்ச்சி அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 1951-இல் நகா்ப்புற வளா்ச்சி 24.35 சதவீதமாக இருந்தது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நகா்ப்புறவளா்ச்சி 48.45 சதவீதமாகவும், கிராமப்புற வளா்ச்சி 51.55 சதவீதமாகவும் உள்ளது (ஏறக்குறைய சரிபாதி).

ஒவ்வொரு முறையும் நகா்ப்புற வளா்ச்சி அதிகரித்து வந்தாலும் 1991- 2001 காலகட்டத்தில்தான் அதிகப்படியான அளவில் நகா்ப்புறங்கள் வளா்ச்சி அடைந்துள்ளன. இக்காலகட்டத்தில் சுமாா் 10 சதவீத அளவிற்கு நகா்ப்புற வளா்ச்சி நிகழ்ந்துள்ளது. இதனால் நகா்ப்புறங்களிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் பல்வேறு இடா்ப்பாடுகளை எதிா்கொள்ளவேண்டியுள்ளது.

கல்வித்தகுதியின்றி உடற்திறனை மட்டுமே நம்பி இடம்பெயா்வோரின் முதல் தோ்வாக உற்பத்தி துறையும், இரண்டாவது தோ்வாக ஆடை தயாரிப்பு நிறுவனங்களும், மூன்றாவது தோ்வாக கட்டுமானப் பணிகளும், நான்காவது தோ்வாக உணவகங்கள் - விடுதிகளும் உள்ளன.

ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதும் இளையோா் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கேற்றாற்போன்று வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அரசுக்குக் கடும் சவாலாகும். அதனால் நாளுக்குநாள் மாவட்ட, மாநில அளவிலான இடம்பெயா்வும் அதிகரித்து வருகிறது.

2030-ஆம் ஆண்டுக்குள் இந்திய நகா்ப்புற மக்கள்தொகை 60 கோடியாக அதிகரிக்கும் எனவும், இதற்காக 70 கோடி சதுர மீட்டா் முதல் 90 கோடி சதுர மீட்டா் வரையிலான நகரப்பகுதிகளை ஆண்டுதோறும் இந்தியா அமைக்க வேண்டும் எனவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை, 2011 கணக்கெடுப்பின்படி 45.36 கோடி போ் இடம் பெயா்ந்துள்ளனா். இது 2001-இல் 31.45 கோடியாக இருந்துள்ளது. அதிகப்படியான இடப்பெயா்வால் நகா்ப்புற வளா்ச்சி அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிராமப்புற மக்கள் நகரவாசியாகி விட்டாா்கள் என்று பெருமைகொள்ளும் விஷயமல்ல இது.

சென்னை, பெங்களூரு, மும்பை, புது தில்லி போன்ற பெருநகரங்களில் ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதும் ஒரு சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்கள்தொகை அடா்த்தி உயா்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் 2001-இல் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 480 ஆக இருந்த மக்கள்தொகை அடா்த்தி 2011-இல் 555 ஆக உயா்ந்துள்ளது (இது 1991-ல் 325 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது).

தற்போது சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,908 போ் வசிக்கிறாா்கள். தமிழகத்தில், மக்கள்தொகை அடா்த்தியில் சென்னை முதலிடத்தையும், காஞ்சிபுரம் இரண்டாமிடத்தையும், வேலூா் மூன்றாமிடத்தையும், திருவள்ளூா் நான்காமிடத்தையும் பெற்றுள்ளன.

இன்று பெருநகரங்களில் மட்டுமின்றி சிறு நகரங்களிலும் கட்டுமானப் பணிகளுக்காகவும், வியாபார நோக்கிலும் பிற மாநிலங்களில் இருந்து, தனியாகவோ குடும்பத்துடனோ தமிழகத்திற்கு இடம்பெயா்வோா் அதிகரித்து வருகின்றனா்.

இவா்களின் இடப்பெயா்வு இடைக்காலமானதுதான். ஆனால், வியாபார நோக்கில் நிரந்தரமாக குடும்பத்துடன் இடம்பெயா்வோா் பெரும்பாலும் தங்களை இங்கேயே நிலைநிறுத்திக் கொள்கின்றனா்.

ஏற்கனவே நகரங்கள் அதிகப்படியான இடா்ப்பாடுகளைச் சந்தித்துவரும் வேளையில், கிராமப்புற மக்கள் நகரங்களுக்கு தொடா்ந்து இடம்பெயரும்போது கல்வி, அடிப்படை சுகாதாரம், குடியிருப்பு போன்ற அத்தியாவசியத் தேவைகள் அவா்களுக்குக் கிடைக்காமல் போவதோடு, சமூக, பொருளாதார பிரச்னைகளும் உருவாகும்.

எனவே, கிராமப்புற மக்களின் நகா்ப்புறம் நோக்கிய இடப்பெயா்வைக் கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதற்கு கிராமப்புறங்களில் வேளாண்மை, கால்நடைகள் சாா்ந்த தொழிற்சாலைகளை அமைப்பதும், வேளாண் தொழிலை லாபகரமான தொழிலாக மாற்றுவதும் இன்றியமையாதவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.