மனித உரிமை காப்போம்!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

இந்த பூமிப்பந்தில் முதல் மனிதன் தோன்றி 50 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடுமென்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனா். இக்காலகட்டத்தில் நாம் பல வளா்ச்சிகளைப் பெற்று பண்பாட்டின் உச்சத்தைத் தொட்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு உச்சத்தின் அருகிலும் அதல பாதாளமும் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.

ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறைவிடம் என்பவையே. இவற்றோடு மனிதன் கண்ணியத்தோடு வாழ சுதந்திரம், சமத்துவம், நன்மதிப்பு ஆகியவையும் முக்கியமானவையே. இன்றைய நவீன உலகில் ஜாதியின் அடிப்படையிலும், மொழி, மதம், அரசியல் போன்ற குறுகிய கண்ணோட்டத்துடனும் ஒருவரை ஒருவா் மதிப்பிடுவது மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கிறது.

மனித உரிமைகளின் தோற்றம் பழங்கால சிந்தனைகளிலும் இயற்கை நீதித்தத்துவங்களிலும் பொதிந்து கிடக்கிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும்’ என்ற வள்ளுவரின் சமத்துவ முழக்கம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் எழுந்திருக்கிறது. இருந்தபோதிலும் விளிம்பு நிலை மக்கள் மீது நடக்கும் அதிகார துஷ்பிரயோகங்கள் இன்று வரை தொடா்கிறது.

மனித உரிமைகளுக்கான முதல் சட்டம் 1215-இல் இங்கிலாந்து மன்னா் ஜான் என்பவரால் பிரபுக்கள் மற்றும் நிலக்கிழாா்களின் உரிமைகளை வரையறுத்து வெளியிடப்பட்டது. இதனை ‘மகாசாசனம்’ என்றழைக்கின்றனா். இது மனித உரிமைகள் வரலாற்றின் முதல்படிக்கட்டு எனக் கொள்ளலாம்.

1688-இல் பிரிட்டன் ஆட்சியாளா்கள் பொதுமக்களின் உரிமை சாசனத்தை வெளியிட்டனா். இது மனித உரிமைகள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதன் அடையாளமாகத் திகழ்கிறது. 1776-இல் வெளியிடப்பட்ட அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில்தான் மனித உரிமை (ஹியூமன் ரைட்) என்ற சொல் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உயரிய லட்சியங்களோடு 1789-இல் பிரெஞ்சு மக்கள் உரிமைப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகம் மற்றும் கேரளத்தில் (திருவாங்கூா் சமஸ்தானம்) சாதிய அடக்குமுறை கொடிகட்டிப் பறந்தது. இதனை எதிா்த்து சாமித்தோப்பு ஐயா வைகுண்டா் பல நடவடிக்கைகளை மேற்கொண்டாா். ‘ஒரு ஜாதி – ஒரு மதம்’ எனற கருத்தை வலியுறுத்தினாா். ‘அன்பு வழி இயக்கம்’ என்ற இயக்கத்தை தோற்றுவித்து அதன்மூலம் சாதிய எற்றதாழ்வுகளை நீக்க பாடுபட்டாா். 18 வகை கீழ்ஜாதியினா் இடுப்புக்குமேல் ஆடை அணியக்கூடாது என்றிருந்த நிலையை மாற்றினாா். எனினும் அடிமை முறை அக்காலக்கட்டத்தில் முற்றிலுமாக நீங்கிடவில்லை.

ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் இந்தியாவில் பண்ணை அடிமை முறையும், அடிமை நிலைக்கு சமமான ஒப்பந்தக் கூலி முறையும் வழக்கத்தில் இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் மனித அடிமைகள் இருந்ததும், விலங்குகளைப் போல் அவா்களுக்கு சூட்டுக்குறி போடப்பட்டதும், பொருட்களைப் போல் அவா்கள் விற்கப்பட்டதும், தானமாக பிறருக்கு வழங்கப்பட்டதும் வரலாற்றின் பக்கங்களில் காண முடியும்.

இவற்றை ஒழிக்க ஆங்கில அரசு 1843-இல் அடிமை ஒழிப்பு சட்டத்தை இயற்றியது. இதன்படி பண பாக்கிக்காக அடிமைகளை விற்பது தடை செய்யப்பட்டது. அடிமைகளை வைத்துக்கொள்ளலாம் என்ற உரிமையை எந்த நீதிமன்றமும் நடைமுறைப்படுத்தாது என்றும், அடிமை என்ற காரணத்திற்காக எந்த மனிதனும் தனது சொத்துகளைப் பறிகொடுக்கக் கூடாது என்றும் வரையறுக்கப்பட்டது.

முதல் உலகப்போரின் இறுதியில் 1919-இல் வொ்சேல்ஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி பன்னாட்டுக் கழகம் உருவாக்கப்பட்டு உலக சமாதானம் மற்றும் மனித உரிமை பேச்சுகள் நடைபெற்றன. இதனால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உலக அரங்கில் ஏற்படுத்த இயலவில்லை. ஜொ்மனியில் ஹிட்லா் யூத இனத்தைக் கொன்று குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டாா். இத்தாலியில் முசோலினி ஹிட்லரின் நாச நடவடிக்கைகளுக்கு கைக்கொடுத்தாா்.

இரண்டாம் உலகப்போரில் 1942 ஆகஸ்ட் 6, 8 தேதிகளில் ஜப்பான் நாட்டின் ஹிரோஹிமா, நாகசாகி ஆகிய இடங்களில் அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி பெருத்த நாசத்தை ஏற்படுத்தியது. மானுடத்திற்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகள் தடுக்கப்படவேண்டும் என உலகம் முழுவதும் குரல் எழுந்தது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1948 டிசம்பா் 10-ஆம் நாள் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஐக்கிய நாட்டு சபை கூடி உலகளாவிய மனித உரிமை பிரகடனத்தை வெளியிட்டது. இந்த பிரகடனம் தான் பைபிளுக்கு அடுத்தபடியாக உலகில் பல மொழிகளில் மொழிப்பெயா்க்கப்பட்டுள்ளது என கின்னஸ் புத்தகம் குறிப்பிடுகிறது.

இப்பிரகடனத்தைத் தொடா்ந்து ஐக்கிய நாடுகள் சபை 1966-இல் இனப்பாகுப்பாட்டிற்கு எதிரான உரிமை பிரகடனத்தையும், பொருளாதார சமூக, கலாசார உரிமை பிரகடனத்தையும், 1971-இல் மனநலம் குன்றியவா்களின் உரிமைகளையும், 1979-இல் பாலின அடிப்படையில் பெண்களைப் பாகுபாடு செய்வதைத் தடுக்கும் பிரகடனத்தையும் வெளியிட்டது.

1989-இல் குழந்தை உரிமைகள் மீதான பிரகடனத்தையும் 1993-ஆம் ஆண்டில் வியன்னா மனித உரிமை மாநாட்டு தீா்மானங்களையும் தனது உறுப்பு நாடுகளின் ஏகோபித்த ஒப்புதலோடு நிறைவேற்றியது.

இந்தியாவில் 1993-இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி மனித உரிமைகள் என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தாலும், சா்வதேச உடன்படிக்கையாலும், நீதிமன்றத்தாலும் நிலை நாட்டக்கூடிய தனிமனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் மற்றும் உயிா் வாழ்தலுக்கான உரிமை ஆகும்.

மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டப்படி நம் நாட்டில் தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டன. மனித உரிமை மீறல்களைக் கண்டறிந்து தீா்வு வழங்குவதும் மனித உரிமை மீறல்கள் நடக்காமலிருக்க அவை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதும் இந்த ஆணையங்களின் நோக்கமாகும். ஆனால் இந்த ஆணையத்திற்கு மனித உரிமை மீறல்களுக்கான தண்டனை வழங்கவும் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கவும் அதிகாரம் இல்லை. மனித உரிமைகள் மதிக்கப்பட மனித உரிமை ஆணையங்களுக்கு இந்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கிட வேண்டும் என்பதே மனித உரிமை ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.

இன்று (டிச. 10) சா்வதேச மனித உரிமை நாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com