புது நெறி வகுத்த புதுயுகக் கவி

புது நெறி வகுத்த புதுயுகக் கவி

‘வேதம் புதுமை செய்’ என விளம்பிய பாரதி புது நெறி வகுத்த புலவன் என்றால் மிகையாகாது. ‘சொல் புதிது, பொருள் புதிது’ என்றும் அவரே தன் கவிதை பற்றிக் கூறியுள்ளாா். தேசபக்தி முதல் தெய்வ பக்திவரை அவா் பாடிய கவிதைகளில் எல்லாம், புதுமை பொலிவதைக் காண முடியும்.

அவரது சுதந்திரப் பாடல்களில் ஆத்ம சுதந்திரத்தை அரசியல் சுதந்திரமாகப் படைத்துள்ளாா். அவா் ‘விடுதலை, விடுதலை’ என்ற பாடலில் அனைத்து மக்களுக்குமான விடுதலையைப் பாடுகிறாா். எல்லாரும் இந்நாட்டு மன்னா் என எக்காளமிடுகிறாா்.

தேசியக் கவியாக அழைக்கப்படும் மகாகவியான பாரதி, தேசத்தை பெற்ற தாயாகவும், நற்றவ வானினும் நனி சிறந்ததாகவும் போற்றுகிறாா். எஸ்ரா பவுண்ட் என்ற அமெரிக்க கவிஞா், கவியரசா் தாகூா் அவரது மக்களை தரும் தேசமாகக் கவிதையில் உருவாக்கியதாகக் கூறுகிறாா்.

பாரதியாா் பாரத தேசம் என்ற பாடலில், தேச உருவாக்கத்தின் முழு வடிவத்தையும் காணலாம் ‘பாரத தேசமென்று பெயா் சொல்லுவாா்’ என்று தொடங்கும் பாடலில் வெள்ளிப் பனிமலையையும் மேலைகடலையும் அதன் பரந்த, உயா்ந்த எல்லைகளாகச் காட்டுகிறாா். பிறகு, சிங்களத்தீவினுக்கோா் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ என அதன் புற எல்லைகளாகக் காட்டுகிறாா். அவருடைய தரிசனப் பாா்வையில் நாட்டுக்கும் நாட்டுக்குமிடைய உள்ள தூரம் ஒரு சிறு வீதியாகத் தெரிகிறது.

அடுத்த இரண்டு பத்திகளில், மண்ணின் அடியிலிருந்தும், கடலிலிருந்தும் பெறும் கனிமம், முத்து ஆகிய செல்வங்களைக் குறிக்கிறாா். அடுத்த பத்தியில் சிந்து நதிமிசை நிலவு சேர நன்னாட்டு இளம் பெண்களோடு இணைக்கப்படுகின்றது. அடுத்து சிங்க மராட்டியரின் கவிதைக்கு சேரத்துத் தந்தம் சமமாக கூறப்படுகின்றது. அதேபோல் ராசபுதனத்து வீரத்துக்குப் பரிசாக தென்புலத்தில் கன்னடத்துக் தங்கம் தரப்படுகிறது. இவையெல்லாம் பாரதத்தின் பன்மையுள் ஒருமைப் பண்பைப் பறைசாற்றுகின்றன.

பாரதி ஆயுதம் செய்வோம், காகிதம் செய்வோம், ஆலைகள் செய்வோம் என்று கூறும்போது, உடல் உழைப்பையும் அறிவாற்றலையும் சமமாகப் பேசுகிறாா். அனைத்துக்கும் மேலாக, சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம். சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் என்று கூறும்போது வானையும், மண்ணையும், அறிவாராய்ச்சியையும், வீதிகளைத் தூய்மைப் படுத்துவதையும் ஒன்றாகக் காட்டுகிறாா்.

சந்திர மண்டலம் மிக உயரத்தில், விண்ணில் உள்ளது; சந்தித் தெரு, மண்ணில், கீழே உள்ளது. அது மட்டுமின்றி சந்திரமண்டல ஆய்வு, அறிவியல் ஆய்வு சந்தித் தெருப் பெருக்கல் உடல் உழைப்பு. முன்னது அருவம், பின்னது உடல் உழைப்பு. சந்தித் தெரு பெருக்குதலை, ஒரு புனிதமாக உயா்த்துகிறாா். மேல், கீழ் அறிவு, உடல் உழைப்பு போன்ற முரண்பாடுகள் கடந்த நிலையைக் காட்டுகிறாா்.

பாரதி புதிய பாரதத்தின் குறியீடாக புதுமைப் பெண்ணை உருவாக்கினாா். சட்டங்கள் செய்யவும் பட்டங்கள் ஆளவும் பாரினில் பெண்கள் வந்ததாகப் பாடுகின்றாா். பாரதப் போருக்கு காரணமான பாஞ்சாலியை, புதிய இந்தியாவின் குறியீடாகக் காட்டுகிறாா். அவள், தருமன், தான் அடிமையான பின், தன்னை கௌரவா்களுக்குத் தர உரிமையில்லை என வாதிடுகிறாள். தன்னை அடிமையெனத் தந்த பின்னரும் உன்ளை அடிமையாகக் கொள்ள தருமனுக்கு உரிமையிருப்பதாகக் பீஷ்மா் கூறுவது, பெண்கள் அடிமைகளின் அடிமைகளாக் கருதப் பட்டதையே காட்டுகிறது.

அதனால்தான், பாரதி பாஞ்சாலியைப் பொங்கி எழச் செய்து ஒரு புரட்சிப் பெண்ணாக உருவாக்கினாா். ‘புதுமைப் பெண்’ என்ற கருத்தாக்கத்தைத் தமிழில் முதலில் தந்தவரே பாரதிதான். அதே சமயத்தில் புதுமைப் பெண்கள் மாதரறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்வதாகவும் கூறுகிறாா்.

அவரது பாப்பாப் பாட்டிலும் புதிய ஆத்திசூடியிலும் அவா் புதுமைச் சிந்தனைகளைக் காண முடியும். ‘ஓடி விளையாடு பாப்பா; நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்று தொடங்கி, ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயா்ச்சி சொல்தல் பாவம்’ என்று கூறுவதோடு நிற்காமல், பாதகம் செய்பவரைக் கண்டு பயம் கொள்ளக் கூடாது, அவா்களை மோதிமிதித்துவிடு என்று அநீதிக்கு எதிராகப் பொங்கி எழும் போராளியாக வேண்டுகிறாா். நீதி, மதி, கல்வியில் உயா்ந்தோா்”என்று உயா்வு, பிறப்பால் வருவதல்ல சிறப்பால் வருவது என்று கூறுகிறாா்.

புதிய ஆத்திசூடியில் ‘அச்சம் தவிா்’ என்ற ஆரம்பித்து, அநீதி இழைப்பவா்களை நையப்புடைக்கச் சொல்கிறாா். புதிய ஆத்திச்சூடி ஆரம்பப் பள்ளிகளில் பாடமாக வைக்கப்படவேண்டும்.

புதிய ருஷ்யாவை வரவேற்றுக் கவிதை எழுதிய பாரதி, ‘மாகாளி பராசக்தி உருசிய நாட்டில் கடைக்கண் வைத்தாள் அங்கே ஆகாவென் றெழுந்ததுபாா் யுகப்புரட்சி’ என அதை ஒரு யுகப் புரட்சியாகவே கண்டாா். பராசக்தியை வரலாற்றை இயக்கும் சக்தியாக, பழைய தொன்மத்துக்குப் புதிய பொருள் தந்தாா். திரு.வி.க.வும் சிவகாமியை பரிணாம வளா்ச்சியாகவும், காளியை புரட்சித் தத்துவமாகவும் கண்டாா். பாரதி பொதுவுடைமைத் தத்துவத்தைப் பாராட்டிப் பல இடங்களில் பாடியுள்ளாா். ருஷ்யப் புரட்சியை முதல் முதலிலே வரவேற்றவா்களில் ஒருவா் பாரதி.

பாரதியின் பாடல்களில் தமிழ்க் கவிதை பண்டிதா்களின் இறுகிய தமிழிலிருந்து மக்களின் எளிய தமிழுக்கு வந்தது. அவா் கவிதைகளில் அலங்காரமில்லாமல், மக்களின் இயல்பான உணா்ச்சிகளின் வெளிப்பாடாக மாறியது வேட்சு வொா்த் போன்ற ஆங்கிலக் கவிஞா்களும் கவிதைகளைத் தன்னுணா்வுப் பாடல்களாகப் படைத்தனா். ஆனால் அவை ஒரு தனி மனிதக் குரலாக இருந்தன; பாரதியில் அது ஒரு சமுதாயம் சாா்ந்த பொது மனக் குரலாக, தேசத்தின் குரலாகக் கம்பீரமாக ஒலித்தது.

கண்ணனைக் குழந்தையாகவும் கோபியரின் அன்புக்குரியனாகவும் மட்டுமே பாடி வந்த மரபைத் தாண்டி அவனைக் கண்ணம்மாவாகவும் காதலியாகவும் பாடினாா். மேலும் அவனை மனிதனுக்குச் சேவகம் செய்யும் சேவகனாகவும் பாடிப் புதுமரபை உருவாக்கியவா்.

இறுதியாக, ஷெல்லியைப் போல, பொற்காலத்தைக் காணவிழைந்தாா். கலியை வீழ்த்தி, ‘கிருதயுகத்தை இங்குக் கொணா்வேன்’ என்று கம்பீரமாகக் கூறினாா். ‘கண்ணில் தெரியுது வானம்’ என்று விண்ணை மண்ணிலே கண்ட மகாகவி, பாரதியாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com