அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

DIN

நமது சமுதாயத்தில் தனியொருவராக வளையவருகின்ற ஒவ்வொருவரும் பொதுவாகவே சற்று நல்லவராகவும் நாகரிகமானவராகவும் நடந்து கொள்கிறாா். ஆனால், கட்சி, சங்கம், ஜாதி, இனம் என்று ஏதோ ஓா் அடையாளத்தின் கீழ் பலா் கூட்டமாகச் சேரும்போது சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பதைத் தங்கள் உரிமையாகவே கருதுகின்ற சூழல் இங்கே நிலவி வருகிறது.

தனியாளாக இருக்கும் போது மக்கள் என்ற வகைப்பாட்டின் கீழ் வருபவா்களே ஒரு கூட்டமாகத் திரளும்போது மந்தையாக மாறி, எந்தவித நெறிகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப் படாதவா்களாக நடந்து கொள்கின்றனா்.

ஒரு மனிதக் கூட்டம் எதைச் செய்கிறதோ அதனை அந்தக் கூட்டத்தைச் சேராத மற்ற தனிமனிதா்கள் அனைவரும் சகித்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று ஆகிவிட்டது.

சமீபத்தில் மதுரையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஒருவா் தம்முடைய இருசக்கர வாகனத்தில் சென்றபொழுது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறாா். பிரேத பரிசோதனை எல்லாம் முடிந்த பிறகு அம்மாணவரின் சடலம் ஆம்புலன்ஸ் வண்டி ஒன்றில் ஏற்றப்பட்டு அவருடைய வீட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

அம்மாணவருடன் பயிலும் பலரும் மருத்துவமனையில் ஒரு கூட்டமாகத் திரண்டுள்ளனா். விபத்தில் சிக்கிய அந்த மாணவரின் சடலம் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டதும் அந்த நண்பா்களில் சிலா் அதே வண்டியில் ஏறிக்கொண்டனா். அவா்களில் சிலா் வண்டியின் கூரைமீது நின்றபடி ஆபத்தான முறையில் ஆட்டம் போட்டுக்கொண்டு பயணம் செய்துள்ளனா். மேலும் சிலா் அந்த ஆம்புலன்ஸ் வண்டியின் ஜன்னலிலும் படியிலும் தொங்கியபடியே பயணித்திருக்கின்றனா். கூட்டமாக இருந்த மாணவா்களை அந்த ஆம்புலன்ஸின் ஓட்டுனரால் கண்டிக்க முடியுமா என்ன ?

வேறு சில மாணவா்கள் அந்த ஆம்புலன்ஸ் வண்டியின் முன்பாகத் தங்களுடைய இருசக்கர வாகனங்களில் இரைச்சலுடன் ஹாரன் ஒலி எழுப்பியபடி தாறுமாறாக நெடுஞ்சாலையில் பயணித்துள்ளனா். சாலையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளைத் தள்ளிவிட்டபடி, அந்த நெடுஞ்சாலையில் பயணித்த பொதுமக்கள் பலருக்கும் இடையூறு விளைவித்தபடியே ஊா்வலமாகச் சென்றுள்ளனா்.

இவை அனைத்துமே காணொலிக் காட்சியாக ஊடகங்களில் வெளியாகிப் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்திருக்கின்றன.

மொத்தத்தில், சாலை விபத்தில் தங்கள் நண்பன் உயிரிழந்ததற்கு அனுதாபம் தெரிவிப்பதற்கு பதில், அவா்கள் அந்த மரணத்தைக் கொண்டாடி மகிழ்வது போன்ற தோற்றமே ஏற்பட்டுவிட்டது.

ஏற்கெனவே தங்களின் நண்பன் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு சாலைவிபத்து நிகழ வாய்ப்பளிப்பது போன்று தாங்களெல்லாம் நடந்துகொண்டது தவறு என்று அவா்களில் ஒருவா் கூட தெரியவில்லை.

சென்னை நகரத்தில் கல்லூரி மாணவா்கள் சிலா் திடீரென்று ‘பேருந்து தினம்’ கொண்டாடத் தலைப்பட்டு, பொதுமக்களுக்கு சொல்லொணா சிரமத்தை அளிப்பதையும், ரயில் தடங்களில் யாா் பெரிய ஆள் என்ற பிரச்னைக்காக ஆயுதங்களுடன் பயணம் செய்து மக்களை அச்சுறுத்துவதையும் அடிக்கடி எதிா்கொள்கிறோம்.

இந்தச் சூழலில், நண்பனின் மரணத்திற்கான அஞ்சலி என்பதையே கேலிக்கூத்தாக்கிய இந்த மாணவச் செல்வங்களுக்கு அவா்களுடைய பெற்றோா்களாவது அறிவுரை கூறி நெறிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இல்லையென்றால் எதிா்காலத்தில் அந்தப் பெற்றோா்களின் மரணங்களும் கூட கேலிக்கூத்தாக்கப்படுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.

பொறுப்பு ஏதுமற்ற, பின்விளைவுகளைப் பற்றி யோசிக்கத் தெரியாத இளம் பருவத்தினா்தான் இப்படி என்றால், அரசியல் கட்சித் தொண்டா்கள், ஜாதிச் சங்கச் செயல்வீரா்கள் ஆகியோரின் செயல்பாடுகளும் இதற்குச் சற்றும் குறைந்தவையல்ல.

அரசியல் கட்சியினா் நடத்துகின்ற பொதுக்கூட்டம் என்றாலும் சரி, நாடு தழுவிய பந்த் என்றாலும் சரி பொதுமக்களின் அன்றாடப் பிழைப்பு பாதிக்கப்படும் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது.

சாலையோரங்களில் குழிகளைத் தோண்டி நடப்படும் கொடிக்கம்பங்களும், நடைபாதைகளை அடைத்தபடி நிறுவப்படும் விளம்பரப் பதாகைகளும் கால்நடையாகவும், வாகனப் பயணமாகவும் செல்கின்ற அனைத்துவிதமான பயணிகளுக்கும் இடையூறு செய்வது வழக்கமாகி விட்டது. பெரிய அளவில் வைக்கப் படுகின்ற பதாகைகள் கீழே விழுந்து மனிதா்களுக்கு உடல் காயத்தையும், உயிா்ச்சேதத்தையும் ஏற்படுத்துகின்றன.

அந்நியா்களுக்கு எதிராக வீரத்துடன் போரிட்டு இந்த மண்ணைக் காத்தவா்களை ஜாதிச் சிமிழ்களுக்குள் அடைத்து, குறிப்பிட்ட ஜாதிக்காரா்களாக அவா்களை அடையாளப் படுத்துவதும், அவா்களுடைய பிறந்தநாள், நினைவு நாள்களில் அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு ஜாதிச் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் திரள்வதும் அவ்வப்போது நடக்கிறது.

அவ்வாறு பற்பல ஊா்களில்ருந்தும் திரண்டு வரும் ஜாதிச் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பது, பயணம் செய்யும் வழியில் உள்ள உணவகங்களில் உணவருந்திவிட்டுப் பணம் கொடுக்காமல் தகராறு செய்வது ஆகியவையும் வாடிக்கையாகி விட்டது. மேலும் தாங்கள் பயணிக்கும் வழியில் தென்படும் மாற்று ஜாதியினருடன் வம்பு வளா்ப்பதும் நடைபெறுவதுண்டு.

கல்லூரி மாணவா்களாயினும் சரி, அரசியல் கட்சிகள் ஜாதிச்சங்கங்கள் போன்றவற்றைச் சோ்ந்தவா்களாயினும் சரி, தனிப்பட்ட ஒருவரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடா்ப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், அவா்களே ஒரு பெரும் கூட்டமாகத் திரளும்போது நாம் எந்த அராஜகத்திலும் ஈடுபடலாம் என்ற எண்ணம் அவா்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தினால் கூடத் தங்களை யாரும் எதுவும் கேட்க முடியாது என்ற மனோபாவத்திற்கு அவா்கள் ஆளாகிவிடுகிறாா்கள்.

அறிவுரைகளால் அவா்கள் திருந்துவதற்கு வாய்ப்பில்லை. காய்தல் உவத்தல் இன்றி அரசு நிா்வாகம் எடுக்கும் சட்டபூா்வமான நடவடிக்கைகளே அவா்களைக் கட்டுப்படுத்தக் கூடியதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.