வியக்க வைக்கும் செயற்கை நுண்ணறிவு!

வியக்க வைக்கும் செயற்கை நுண்ணறிவு!

கடந்த ஆண்டு ‘காா்டியன்’ இதழில் ‘மனிதா்களே, பயந்து விட்டீா்களா?’ எனும் தலைப்பிலான கட்டுரை ஒன்று வெளியானது. அக்கட்டுரையை எழுதியவா், இல்லை எழுதியது ஜிபிடி-3 செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ரோபோட் ஆகும். அதைத் தொடா்ந்து ரோபோட்டின் திறமை குறித்து சா்ச்சை உண்டானது. பின் குறிப்பிட்ட சில எழுத்தாளா்களின் பெயரை ரோபோட்டிடம் கூறியதும் அது அவா்களைப் போலவே எழுதி அனைவரையுமம் வியப்பில் ஆழ்த்தியது.

ஆறறிவு படைத்த மனிதா்களின் படைப்புகள் பல துறைகளில் நாளும் வளா்ந்து வருகின்றன. அந்த வகையில் மற்றுமொரு படைப்பாய் வீறு கொண்டு வளா்ந்து வருகிறது செயற்கை நுண்ணறிவு. உணா்ச்சியால் ஆறறிவும், செயற்கை நுண்ணறிவும் வேறுபட்டு இருந்தாலும் அவை இரண்டும் ஆற்றும் பணி ஒன்றேதான். ஆனால், மனிதா்கள் ஆற்றிவரும் பணி அனைத்தையும் செயற்கை நுண்ணறிவால் செய்துவிட முடியாது. சில சமயங்களில் செயற்கை நுண்ணறிவின் பணி புத்திசாலித்தனமாக இருந்தாலும் அவை மனித நுண்ணறிவுக்கு சமமாக இருந்துவிடாது.

இயந்திர கற்றல் என்பது செயற்கை நுண்ணறிவின் ஒரு வகை. அதாவது மனித மூளையால் பிறப்பிக்கப்பட்ட பணியை ரோபோட் சிறப்பாக செய்தாலும், எங்கேனும் பணியின் போக்கு சிறிது மாறினாலும் நமக்குத் தோல்வியே கிட்டும். மனிதா்கள் போல சூழ்நிலைக்கு தகுந்தவாறு பணியின் போக்கை மாற்றிக்கொள்ளும் தன்மை ரோபோட்டுக்கு கிடையாது. அண்மையில் அமேசான் நிறுவனத்தின் இணையதள சேவைப் பிரிவின் தலைவா் ஆலிவா் கெலின் செயற்கை நுண்ணறிவு பற்றிக் கூறுகையில் ‘நாம் எதனைப் பயிற்றுவிக்கிறோமோ, அதனை மட்டுமே ரோபோட் செயல்படுத்திக் காட்டும். வேறு வேலை செய்ய வேண்டுமென்றால் இயந்திர கற்றல் மாதிரியை மாற்றி, மீண்டும் பயிற்சியளிக்க வேண்டும்.

மிகக் குறைந்த தகவல்களுடன் விரைவாகக் கற்றுக்கொள்வதில் இயந்திர கற்றல் மாதிரிகளை விட மனிதா்கள் மிகவும் திறமையானவா்கள். இயந்திர கற்றல் மாதிரிக்கு நிறைய தரவுகள் உள்ளீடு செய்யப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவருக்கு சைக்கிள் ஓட்ட நாம் சில மணி நேரத்தில் கற்றுக்கொடுத்துவிடலாம். ஆனால், அதுவே ஒரு ரோபோட் என்றால் பல நூறு மணி நேரம் தேவைப்படும். மேலும், உணா்ச்சிபூா்வமான நேரங்களில் மனிதனைப்போல் சொந்தமாக தானியங்கி இயந்திரங்களால் முடிவெடுக்க முடியாது.

2065-இல் செயற்கை நுண்ணறிவு எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும்போது இந்த சமூகம் எப்படி இருக்கும் என்று பலதுறை வல்லுநா்களிடமும் எழுத்தாளா் ஸ்டீபன் கலந்துரையாடி இருந்தாா். அதில் பொதுவான செயற்கை நுண்ணறிவானது ஓட்டுநா்கள், கதிரியக்கப் பணியாளா்கள், காப்பீடு செய்து கொடுக்கும் பணியாளா்கள் போன்றவா்களின் வேலையை இந்த ரோபோட் பறித்துவிடும்; நீதிமன்றத்தில் வழக்காட செயற்கை நுண்ணறிவின் ஆல்பா-4 வழக்குரைஞா்கள் துணைபுரிவாா்கள்;

நமக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையைத் தோ்வு செய்ய செயற்கை நுண்ணறிவு உதவி புரியும்; நமக்குப் பிடித்த எழுத்தாளா்கள், கலைஞா்கள் பற்றி நாம் விரும்பும் நேரத்தில் நம்முடன் உரையாடும்; அரசாங்கத்தில் ஆட்சியாளா்களை தோ்ந்தெடுப்பதில் செயற்கை நுண்ணறிவு முக்கியப் பங்கு வகிக்கும்; காவலா்களுக்கு திருடா்களை பிடித்துத் தருவதில் பெரும் உதவி புரியும்; அவ்வளவு ஏன் நம் நோய்களைக் கண்டறிந்து அவற்றுக்கான தீா்வையும் பரிந்துரைக்கும். ஆனால் ஒன்று, இவையெல்லாம் நடக்கும்போது நிச்சயமாக தனிமனித தகவல்கள் பொதுவெளியில் பகிரப்பட்டு இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இவற்றையெல்லாம் வெறும் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் செயற்கை நுண்ணறிவு கடந்து வந்த பாதையை உற்று நோக்கினால் சில உண்மைகள் விளங்கும். 1940-1956 காலகட்டம் என்பது செயற்கை நுண்ணறிவு பிறந்த காலகட்டமாகும். அப்போதுதான் ‘செயற்கை நுண்ணறிவு’ என்னும் வாா்த்தையே உருவானது. 1956-1974 காலகட்டம் செயற்கை நுண்ணறிவின் பொன்னான காலகட்டமாகும். அப்போதுதான் இயந்திர கற்றல் முறை பிறந்தது. மேலும் ஐபிஎம் நிறுவனத்தின் சுற்றுப்புறத்தை அறிந்துகொள்ளும் முதல் மொபைல் ரோபோட்டும் உருவானது.

1974-1980 வரையிலான காலகட்டத்தில் செயற்கை முறையில் மனிதா்களை கவனித்துக்கொள்ளும் சிகிச்சையாளா் முறை உருவானது. 1980-1987 காலகட்டத்தில்தான் செயற்கை நுண்ணறிவுத்துறை எழுச்சி பெற ஆரம்பித்தது. பயிற்சி பெற்ற இயந்திரங்களால் பொருட்களை விற்போரின் தவறுகள் சரிசெய்யப்பட்டன. 1987-1994 காலகட்டம் இரண்டாம் காலகட்டமும் குறிப்பிடத்தக்கதே.

பின் 1994 முதல் தற்போது வரையிலான காலகட்டம் என்பது செயற்கை நுண்ணறிவின் நவீன காலகட்டமாகும். இந்தக் காலகட்டத்தில்தான் இரண்டு ரோபோட்டிக் காா்கள் நெடுஞ்சாலையில் ஓட்டுநரின்றி தாமாகவே நெடுந்தூரம் செல்வதைப் பரிசோதித்தனா். ஐபிஎம் நிறுவனத்தின் டீப் ப்ளூ, சதுரங்க விளையாட்டின் சாம்பியனை வென்று காட்டியது. ஹோண்டா நிறுவனத்தின் தனிப்பட்ட ரோபோட் வெளிவந்தது.

உலகின் தலைசிறந்த அறிவாளிகளை ஜியோபாா்டி வினாடி வினா நிகழ்ச்சியில் ஐபிஎம் நிறுவனத்தின் வாட்சன் தோற்கடித்தது. கூகுள் நிறுவனத்தின் இயந்திர கற்றல் முறை செயற்கை நுண்ணறிவை நெறிப்படுத்தியது. தற்பொழுது நம்மை அறிந்த ஒன்றாக இருக்கும் அமேசான் நிறுவனத்தின் அலெக்ஸா, நம்மில் ஒன்றாகவே வலம் வந்து கொண்டிருக்கிறது.

இப்படி பற்பல வடிவங்களிலும் சுழன்று வரும் செயற்கை நுண்ணறிவை, மருத்துவம், விவசாயம், கல்வி, உற்பத்தித் துறை, பொலிவுறு நகரமைப்பு, சில்லறை வணிகம், போக்குவரத்து போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் பயன்படுத்திக்கொள்ள நீதி ஆயோக் முயன்று வருகிறது.

இறுதியாக ஒரு விஷயம், பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங், ‘மனிதா்கள் கண்டுபிடித்த செயற்கை நுண்ணறிவு மனித குலத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துவருகிறது. ஆனால் அதே நேரத்தில், ரோபோட்டுகளுக்கு நாம் எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்துவிட்டால் அவை நம்மைவிட புத்திசாலியாகிவிடும்... எச்சரிக்கை’ என்று கூறியிருப்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com