நவீன பணியிடம் தொடரலாமே! 

21-ஆம் நூற்றாண்டின் சர்வதேசப் பேரிடர் என அறியப்படும் கண்ணுக்குத் தெரியாத கரோனா தீநுண்மி, சீனாவில் இருந்து பரவி வந்ததும் வந்தது உலகையே புரட்டிப்போட்டு விட்டது.



21-ஆம் நூற்றாண்டின் சர்வதேசப் பேரிடர் என அறியப்படும் கண்ணுக்குத் தெரியாத கரோனா தீநுண்மி, சீனாவில் இருந்து பரவி வந்ததும் வந்தது உலகையே புரட்டிப்போட்டு விட்டது. கரோனா காலத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் தொற்று பரவல் நடவடிக்கையாக மூடப்பட்டன. 

அரசு, தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வேலையிழந்தனர். தனிநபர் பொருளாதாரம் உள்பட நாடுகளின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றது. கரோனா தீநுண்மியால் உலக நாடுகள் மட்டுமன்றி, அனைத்து நாடுகளிலும் உள்ள அரசு, தனியார் நிறுவனங்கள், தனிநபர் என அனைத்து தரப்
பினரும் பாதிப்புக்குள்ளாகினர்.  

மருத்துவத்தில் நவீன, முன்னோடி எனக் கூறிக் கொண்ட நாடுகள் முதற்கொண்டு கரோனா தீநுண்மியைக் கட்டுப்படுத்த படாதபாடு படவேண்டியதாயிற்று. ஒரு வழியாக தடுப்பூசிகளும் கண்டறியப்பட்டு அனைத்து உலக நாடுகளிலும் போடப்பட்டு வருகின்றன. 

இந்தியாவின் கோவிஷீல்ட் உள்ளிட்ட கரோனா தடுப்பூசி மருந்துகளும்  மனிதாபிமான அடிப்படையில் ஆசியக் கண்டத்தில் உள்ள நேபாளம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உலக நாடுகளிடையே இந்தியா தவிர்க்க முடியாத ஆளுமை என உணர்த்தப்பட்டுள்ளது. 

மத்திய அரசு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், மாநில அரசுகளின் கடன் உச்ச வரம்பை அதிகரித்தது, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார மீட்புத் திட்டங்களை அறிவித்தது. இதைத்தொடர்ந்து, பொருளாதாரம் மீண்டெழும் வகையிலான சமிக்ஞைகள் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரிப்பு, பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் வசூல் அதிகரிப்பு உள்ளிட்டவை தென்படத் தொடங்கியுள்ளன. 

பொதுமுடக்கத் தளர்வுகளுக்குப் பிறகு, படிப்படியாக தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு அவை அனைத்தும் செயல்பாட்டுக்குத் திரும்புகின்றன. இந்நிலையில், இதுவரையில் பெரும்பாலும் வெளிநாடுகளில் மட்டுமே அறியப்பட்டு வந்த - வீட்டிலிருந்தே பணிபுரியும் வகையிலான நவீன பணியிடம் (வொர்க் பிரம் ஹோம்) உருவானதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.  இந்த நவீன பணியிட முறை பல்வேறு நன்மைகளைப் பணியாளர், நிறுவனத்துக்குத் தந்துள்ளது. 

இந்த நவீன பணியிட முறையில் குறிப்பிட்ட பணி நேரம் என்பது நெகிழ்வுடன் கூடிய பணி நேரம் எனக் கிடைப்பது மிகப்பெரிய நன்மை. மேலும், நாம் விரும்பும் பணிச் சூழல், சக பணியாளரின் குறுக்கீடு, குடும்பத்துடன் நீண்ட நேரம் செலவிடும் வாய்ப்பு, போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் இல்லாமை, இடைவேளை ஆகியவற்றால் பணியில் கூடுதல் நேரம் கவனம் செலுத்த நேரிடும். 

பாதகமான விஷயம் என்றால், பணி தொடர்பான அறிவுறுத்தல்களைக் கூற ஆள் இல்லாதது, சரியான பாதையில் தான் பயணிக்கின்றோமா என அறியாதிருத்தல், குழுவிலிருந்து தனித்திருத்தல், சலிப்பு, பணிக்கான வழக்கமான நடைமுறை தவறுதல், தகவல் பாதுகாப்பு, உள் கட்டமைப்பு, பணித் திறன் குறைதல், அடிக்கடி வரும் ஆன்லைன் விளம்பரங்கள் ஆகியவற்றால் பணித் திறன் குறையும் அபாயமும் உள்ளது.  

நிறுவனங்களின் பார்வையில், வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்பளிப்பது என்பது நிர்வாகச் செலவுகளைக் குறைக்க உதவுவதோடு, பணியாளர்களுக்கு நிதி சாராத ஊக்குவிப்பு அளிக்கும் வாய்ப்பைத் தருகின்றது. இதனால் திறன் மிகு பணியாளர்கள் நிறுவனத்துடன் கூடுதல் இணக்கம் பெறும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகின்றது. 

வார வேலைநாள்கள் முழுவதும் வீட்டிலிருந்தே பணிபுரியும் பணியாளர்கள், வார இறுதி நாட்களில் ஒட்டுமொத்த வேலை அறிக்கை (ரிப்போர்ட்) தர அறிவுறுத்தலாம். நிர்வாகவியல் கல்வியில் பணியாளர்கள் இரண்டு தரப்பினராகப் பிரிக்கப்படுகின்றனர். ஒரு தரப்பினர் மேற்பார்வையாளர் இருக்கும்போது மட்டுமே பணியை மேற்கொள்வார். 

மறுதரப்பினர், பணிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து பணியைச்செய்து இலக்கை அடைவார். வீட்டிலிருந்தே பணிபுரியும் வசதிப் பணியாளருக்குத் தருவது என்பது அந்தந்த நிறுவனங்களின் முடிவுக்கு ஏற்ப மேற்கொள்ளலாம். 

உலகம் ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டே இருக்கின்றது. மாற்றத்துக்கு தயாரானவர்கள் தகுதிபெறுகிறார்கள். கரோனா பரவிய காலக்கட்டத்தில் மக்கட்தொகை அதிகம் உள்ள இந்தியாவில் பலி எண்ணிக்கை கோடிகளைத் தாண்டும் என்ற அச்சம் பரவியிருந்தது. ஆனால் சரியான நேரத்தில் அறிவித்த பொது முடக்கத்தால் பலி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. 

அதேபோன்று பெருநகரங்களில், முன்பெல்லாம் நடைபெற்றுவந்த பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு அந்தந்த மண்டலம், மாவட்டங்கள் வாரியாக நடைபெற்றுவருகின்றன. இதனால், போக்குவரத்து செலவு, அலைச்சல் உள்ளிட்டவை தவிர்க்கப்பட்டுள்ளன. 

கரோனாவுக்குப் பிந்தைய தற்போதைய நவீன பணியிடம் எனும் வீட்டிலிருந்தே பணிபுரியும் வசதியும் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு நிறுவனங்களால் கொடுக்கப்படுமாயின், சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல், இடப்பற்றாக்குறை, செலவு குறைப்பு, பெற்றோர் நலன் உடனிருந்து பேணுதல் ஆகியவற்றால் பயன்பெறலாம். 

மேலும், மாநகரங்களுக்கு பட்டதாரிகள் இடம் பெயர்தல் வெகுவாகக் குறையும். பெருநகரங்கள் விரிவாக்கம் இயன்றவரை மட்டுப்படும். உலகின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலையில் இருக்கும் உறவினர்களிடம் அளவளாவுகிறோம் எனும்போது, சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணியிடத்தை நிறுவனங்கள் பணியாளர் நலன் கருதியும், நிர்வாகச் செலவு கருதியும் மாற்ற முயற்சிக்கலாமல்லவா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com