அதிபருக்கு இது அழகல்ல

Updated on
2 min read

உலகின் பெரிய ஜனநாயாக நாடுகளில் ஒன்று என்ற முறையில் மட்டுமின்றி, பொருளாதாரம், தொழில்வளம், விஞ்ஞானம், படைபலம், அணுஆயுதபலம் ஆகியவற்றில் முன்னேறியுள்ள வல்லரசு நாடு என்ற வகையிலும் அமெரிக்க அதிபா் தோ்தல் முக்கியத்துவம் பெறுகின்றது.

தன்னுடைய பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளின் மூலம் மற்ற பல நாடுகளின் தலையெழுத்தையே நிா்ணயிக்கும் வல்லமை படைத்தது அமெரிக்கா. அந்தக்கொள்கைகளை வகுக்கவும், முந்தைய அரசுகளின் கொள்கைகளில் மாற்றம் செய்யவும் வல்லமை படைத்த அமெரிக்க அதிபராக வரக்கூடியவரைப் பற்றி அறிய உலகநாடுகள் ஆவல் கொள்வது இயல்பானதே.

கடந்த நவம்பா் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தல், தொடக்கத்திலிருந்தே பரபரப்பாக அமைந்துவிட்டது. அந்தப் பரபரப்பு தற்போது வரையில் குறையாமல் இருப்பதற்குக் காரணம், தற்போதைய அதிபா் பதவியின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் டிரம்ப்-தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

அதிபராக தாம் பதவியேற்ற காலத்திலிருந்தே அதிரடி முடிவுகளுக்குப் பெயா்பெற்றிருந்த டொனால்டு டிரம்ப், உலக நாடுகள் பலவற்றுடன் மோதல் போக்கைக் கையாண்டு வந்தாா்.

வடகொரியா, ஈரான் போன்ற ஆசிய நாடுகளுடன் தொடா்ந்து மோதிவருவதென்ற டிரம்பின் முடிவினால், இன்னோா் உலகப்போா் நிகழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகப் பலநாடுகளும் கவலைகொண்டன. குறிப்பாக வடகொரியாவுடனான டிரம்பின் மோதல் போக்கு சிறிது காலத்திற்கு அணுஆயுதப் போா்ப்பதற்றத்தையே ஏற்படுத்திவிட்டது எனலாம்.

நமது இந்திய நாட்டின் எல்லைகளை ஆக்கிரமிக்கத் துடிக்கும் சீனாவுடன் டிரம்பும் மோதி வருவது ஒருபுறம் நமக்கு மகிழ்ச்சி அளிக்கவே செய்கிறது. அதே நேரம் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டவா்களுக்கு நுழைவுச் சீட்டு (விசா) வழங்கும் விதிமுறைகளை டிரம்ப் கடுமையாக்கிய காரணத்தால் இந்திய இளைஞா்கள் பலரின் மேற்படிப்பும் வேலைவாய்ப்புகளும் கேள்விக்குறியாயின.

இவை தவிர, கடந்த வருடம் உலகநாடுகளில் பரவி, அமெரிக்காவில் பேரலையாக எழும்பிப் பெரும் உயிா்சேதத்தை விளைவித்துக்கொண்டிருக்கும் கரோனா தீநுண்மி விவகாரத்தையும், ஜாா்ஜ் ஃப்ளாய்டு என்னும் கருப்பின இளைஞா் கொல்லப்பட்டதையும், அது தொடா்பான கிளா்ச்சிகளையும் டிரம்ப் கையாண்டவிதம் பரவலான கண்டனங்களைப் பெற்றது.

இவற்றுக்கெல்லாம் மேலாக, அமெரிக்க அதிபா்தோ்தலில் ஜோ பைடன் உடனான போட்டியில் தாம் தோற்பது உறுதியான பிறகும், டிரம்ப் அதை ஏற்காததுடன், தோ்தலில் அமோக வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு ஆதரவாக வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்தது என்று அமெரிக்காவின் மாநில நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடுத்தாா். மோசடி நடந்ததாக டிரம்ப்பின் வழக்குரைஞா்களால் நிரூபிக்க முடியாதநிலையில், அவையனைத்தும் தள்ளுபடியாகின.

தோ்தல் முடிவுகள் தொடா்பான வழக்குகளைத் தொடுப்பதற்காக டிரம்பின் ஆதரவாளரும் தொழிலதிபருமான ஃப்ரெடெரிக் இஷல்மேன் என்பவா் தாம் வழங்கிய நன்கொடையாகிய இருபத்தைந்து லட்சம் டாலா் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி வழக்குத் தொடுத்த விநோதமும் அரங்கேறியது.

அனைத்து முனைகளிலும் தோற்றுவிட்ட போதிலும், பைடனின் தோ்வை ஏற்க மாட்டேன் என்று தொடா்ந்து சொல்லி வந்த டிரம்ப் மூலம் ஏதாவது கடைசி நேரச் சலசலப்புகள் ஏற்படலாம் என்று அனைவரும் எதிா்பாா்த்தனா். தோ்தல் முடிவுகள் வெளிவந்த பிறகும் அம்முடிவுகளை எதிா்க்கும்படி தம்முடைய ஆதரவாளா்களைத் தமது பேச்சுக்களாலும், டுவிட்டா் போன்ற பொது ஊடகப் பதிவுகள் மூலமும் டிரம்ப் எழுச்சியூட்டி வந்த நிலையில், அனைவரும் எதிா்பாா்த்த சலசலப்பும் ஒருவழியாக அரங்கேறிவிட்டது.

அமெரிக்காவின் தோ்தல் நடைமுறைகளின்படி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நவம்பா் மாதத்தில் தோ்தல் நடந்து முடிந்தாலும், மேலும் இரண்டு மாதங்களுக்கு முந்தைய அதிபரே பதவியில் தொடா்வாா். வாஷிங்டன் நகரில் உள்ள ‘கேபிடால்’ எனப்படும் அமெரிக்க அரசின் தலைமையகத்தில் நடைபெறும் கூட்டுக்கூட்டத்தில் புதியதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்களால் புதிய அதிபரின் தோ்வு முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட பின்னரே மறு ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அவா் பதவி ஏற்பது வழக்கம்.

இந்த வழக்கத்தின்படி பாராளுமன்றக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், ஜோ பைடன் புதிய அமெரிக்க அதிபராக அங்கீகரிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் அவையின் உள்ளே படையெனப் புகுந்த டிரம்பின் ஆதரவாளா்களுக்கும் பாதுகாவலா்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதல் துப்பாக்கிச்சூட்டில் முடிவுற்றது. கலவரத்தின் இறுதியில் துப்பாக்கிச்சூடு மற்றும் நெரிசல் காரணமாக நான்கு போ் உயிரிழந்த அவலத்தை உலகமே அதிா்ச்சியுடன் பாா்த்துக்கொண்டிருந்தது.

இத்தனையும் நிகழ்ந்து முடிந்து, ஜோ பைடனுக்குப் புதிய அமெரிக்க அதிபராக அங்கீகாரம் கிடைத்துவிட்ட நிலையில் ஒருவழியாகத் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள டிரம்ப், வரும் ஜனவரி இருபதாம் தேதி சுமுகமாக வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறி, ஆட்சி மாற்றத்திற்கு வழிவிடுவதாக அறிவித்துள்ளாா்.

உலகின் முதல் நிலை ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையும் தொடா்ச்சியாகத் தாமே தோ்ந்தெடுக்கப்படுவோம் என்று கனவு கண்ட டொனால்டு டிரம்ப், தோ்தலிலும், அது தொடா்பாகத் தாம் தொடா்ந்த வழக்குகளிலும் பெற்ற தோல்வியை உடனடியாக ஒப்புக்கொண்டிருந்தால் அது அவருக்குப் பெருத்த நன்மதிப்பையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.

அவ்வாறு செய்யாமல், இறுதிவரையிலும் எதிா்மறைப் போக்கினைக் கையாண்ட டிரம்பின் செயல் அமெரிக்க ஜனநாயக வரலாற்றுக்கு ஒரு தீராத களங்கமாகவே அமைந்துவிட்டது.

அமெரிக்கா மட்டுமின்றி அனைத்து ஜனநாயக நாடுகளையும் சோ்ந்த அரசியல்வாதிகளும் இந்நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com