வீணடிக்கப்படும் உணவுப்பொருள்கள்

மகாகவி பாரதியார் "தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாடினார். ஆனால், உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பட்டினியாலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் லட்சக்கணக்கான மக்கள் மாண்டு வருகின்றனர்.

தற்போதைய கரோனா பெருந்தொற்று காலத்தில் வேலை இழப்புகள், வருவாய் இழப்புகள் அதிகரித்துள்ளதால், உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

ஐ.நா.வின் உணவு - வேளாண் அமைப்பின் ஆய்வறிக்கையின்படி, உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணடிக்கப்படுவது தெரியவந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு நிமிடமும் 1,000 டன் உணவு வீணடிக்கப்படுகிறது.

அதிக அளவு உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதில் உலக அளவில் சீனா, இந்தியா, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. அனைத்து நாடுகளிலும் உணவுப் பொருள்கள் வீணடிக்கப்பட்டாலும், வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ரஷியா, ஐரோப்பா, கிழக்கு ஆசிய நாடுகளில் அதிக அளவில் உணவுப் பொருள்கள் வீணடிக்கப்படுகின்றன.
உணவுப் பொருள்கள் இழப்பு, வீணடிக்கப்படுதல் என இரண்டு வகைகளில் வீணாகின்றன. அதன்படி, இந்தியாவில் ஒவ்வொரு தனிநபரும் ஆண்டுக்கு 50 கிலோ உணவை வீணடிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, உணவகங்களிலும், சுப -துக்க நிகழ்ச்சிகளிலும், உணவு விநியோக நடைமுறைகளின்போதும் ஏராளமான உணவுப் பொருள்கள் வீணடிக்கப்படுகின்றன.

இது ஒருபுறமென்றால், மறுபுறத்தில் இயற்கை பேரிடர்களாலும், விற்பனை இடங்களுக்கு உணவுப் பொருள்களை கொண்டு செல்ல முடியாமலும், விற்பனை நிலையங்களில் மழையில் நனைந்தும் உணவுப் பொருள்கள் இழப்பு ஏற்படுகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுசெல்லும் நெல் உள்ளிட்ட தானியங்களை மழைக்காலங்களில் பாதுகாப்பாக வைப்பதற்கு போதிய கட்டமைப்புகள் இல்லாததால், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகளும், பிற தானிய மூட்டைகளும் மழைநீரில் நனைந்து விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன.
இதேபோல, ஒழுங்குமுறை விற்பனைக் கூட வியாபாரிகள் தங்களுக்குள் முன்கூட்டியே பேசி வைத்துக்கொண்டு விவசாயிகளின் விளைபொருள்களை சொற்ப விலைக்கு கேட்பதாலும், விளைபொருள்களை விற்பனை செய்வதில் தாமதம் ஏற்பட்டு, அவை வீணாகின்றன.

உணவுப் பொருள்கள் வீணடிக்கப்படுவது,  நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, சுற்றுச்சூழலிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வீணடிக்கப்படும் உணவுப் பொருள்களிலிருந்து கார்பன் - டை - ஆக்ûஸடு வாயு வெளியேறி வளிமண்டலத்திலுள்ள பசுமை இல்ல வாயுக்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உலக அளவில் வீணடிக்கப்படும் உணவுப் பொருள்களில் நான்கில் ஒரு பங்கு உணவுப் பொருள்களை சேமித்தாலே பசியால் வாடும் அனைவருக்கும் உணவளித்துவிடலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் தங்களது வேளாண் பொருள்களை உலர வைத்து பாதுகாப்பாக வைக்கத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், விவசாயிகளிடம் வியாபாரிகள் குறைந்த விலைக்கு விளைபொருள்களை கொள்முதல் செய்வதை தடுக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முறையாக செயல்படுத்தப்படுவதுபோல, தென் மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை முறையாக செயல்படுத்துவதுடன், தேவையான இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களைத் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விவசாய நிலத்தில் இருந்து சந்தைக்கு விவசாயிகள் விளைபொருள்களை எடுத்துச் செல்வதில் உள்ள சிரமத்தை தவிர்க்கும் வகையில், அதற்கான போக்குவரத்து வசதிகளை நவீனப்படுத்த திட்டம் வகுக்கப்பட வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு செல்லப்படும் நெல் மட்டுமின்றி, கேழ்வரகு, எள், மக்காச்சோளம், பயறு உள்ளிட்டவற்றுக்கும் உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியை ஆந்திரம், கர்நாடகம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதைத் தவிர்த்து, தமிழகத்திலேயே அரிசியை கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளில் வழங்குவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கலாம்.

நிகழாண்டு விவசாயத்துக்கென தமிழக அரசு தனியாக நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை நவீனப்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும் கூடுதல் கவனம் செலுத்தி திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

பொதுமக்களும் வீடுகளில் உள்ளவர்களைக் கணக்கிட்டு, தேவையான உணவுப்பொருள்களை மட்டும் கடைகளில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். ஒருவேளை, உணவுப்பொருள்கள் தேவைக்கு அதிகமாக இருப்பின், அவற்றை வீணடிக்காமல் அண்டை வீட்டாருக்குக் கொடுக்கலாம்.
வீணடிக்கப்படும் உணவுப் பொருள்களின் மதிப்பும், அவை வீணாவதால் ஏற்படும் வேதனையும் அவற்றை விளைவித்துத் தரும் விவசாயிகளுக்கே தெரியும். எனவே, இனியாவது உணவுப்பொருள்களை வீணடிக்காமல் தவிர்ப்போம்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com