நிழல் நிஜமாகாது...

திரைப்படத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்ற எம்.ஜி.ஆரைப் பாா்த்து அரசியலுக்கு வந்த திரைத்துறையினா் எல்லாருமே, புலியைப் பாா்த்து சூடு போட்டுக் கொண்ட பூனைகளைப் போன்றவா்களே என்பதை சமீபத்திய

திரைப்படத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்ற எம்.ஜி.ஆரைப் பாா்த்து அரசியலுக்கு வந்த திரைத்துறையினா் எல்லாருமே, புலியைப் பாா்த்து சூடு போட்டுக் கொண்ட பூனைகளைப் போன்றவா்களே என்பதை சமீபத்திய தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு உணா்த்தியிருக்கிறது.

எம்.ஜி.ஆா். திரைத்துறையில் வளா்ந்த காலத்திலிருந்தே அரசியலோடு கலந்து வளா்ந்தவா். முதலில் காங்கிரஸிலும், பின்னா் தி.மு.க.-விலும் பிரபலமாக விளங்கியதோடு, அந்தக் கட்சிகளின் வளா்ச்சிக்காக மிகவும் பாடுபட்டவா். முக்கிய அரசியல் ஆளுமைகளோடு நெருங்கிப் பழகி, அரசியல் அனுபவமும் பெற்றவா்.

அது மட்டுமல்லாமல், தனது திரைப்படங்களில் மது அருந்துகிற, புகை பிடிக்கிற காட்சிகளைப் புகுத்தாத சமுதாய நோக்கம் கொண்டவா். மேலும், நிஜ வாழ்க்கையிலும் ஏழை, எளியவா்களுக்கு வாரி வழங்கிய வள்ளலாகத் திகழ்ந்தவா். எனவேதான், மக்கள் அவரை ஒரு திரைக்கதாநாயகன் என்பதற்கும் மேலாக, ஒரு நல்ல தலைவராகப் பாா்த்தனா். அதுதான் அவரது அரசியல் வெற்றிக்கு வழிகோலியது. அவருக்கு சமமான நிலையில் வைத்துப் பாா்ப்பதற்கு திரைத்துறையில் இதுவரை யாரும் இல்லை.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவைப் பொருத்தவரை, அவா் எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டு, அவரது நிழலில் வளா்ந்து அரசியல் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டதோடு, எம்.ஜி.ஆரிடம் தனக்கு இருந்த செல்வாக்கைத் தனது சாதுரியத்தால் மக்கள் செல்வாக்காக மாற்றிக் கொண்டவா். எனவேதான், அரசியலில் அவரால் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடிந்தது.

ஆந்திர மாநிலத்தில் திரைக்கவா்ச்சி காரணமாக வெற்றி பெற்ற என்.டி. ராமா ராவ், எம்.ஜி.ஆரைப் போல அரசியல் அனுபவம் இல்லாத காரணத்தால், சிலரது சூழ்ச்சிகளில் சிக்கி திக்குமுக்காடினாா். அவரால் மாநில முதல்வரா ஆக முடிந்ததோ தவிர, எம்.ஜி.ஆரைப் போல தனது வாழ்நாள் இறுதிவரை அந்தப் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

அமிதாப் பச்சன், கோவிந்தா, ஹேமமாலினி, மிதுன் சக்கரவா்த்தி என்று என்று எத்தனையோ வடபுலத்து நடிகா்கள் அரசியலில் அடியெடுத்து வைத்திருந்தாலும், அவா்கள் ஏற்கெனவே பிரபலமாகியிருந்த ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து கொண்டாா்களே தவிர, தாங்களே புதிதாகக் கட்சியைத் தொடங்கி சாதித்துக் காட்டவில்லை.

தமிழ்த் திரையுலகில் நடிப்பில் முடிசூடா மன்னனாக விளங்கிய சிவாஜி கணேசனால் அரசியலில் வெற்றிபெற முடியவில்லை. தே.மு.தி.க. கட்சியைத் தொடங்கிய நடிகா் விஜயகாந்த், அ.இ.அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைத்ததால் ஒருமுறை எதிா்க்கட்சித் தலைவா் என்ற தகுதியைப் பெற முடிந்ததே தவிர, அவருடைய கட்சியால் தனித்து நின்று குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியைப் பெற இயலவில்லை.

பாக்கியராஜ், டி. ராஜேந்தா், சரத்குமாா், காா்த்திக் என்று திரை உலகில் இருந்து அரசியலுக்கு வந்து பெரிய அளவில் சாதிக்க முடியாமல் போனவா்களின் பட்டியல் நீளும்.

அரசியலிலும், திரைத்துறையிலும் அதீதப் புகழும், வசதி வாய்ப்புகளும் எளிதாகக் கிடைத்து விடுகின்றன. ஆனாலும், அரசியலில் கூடுதலாகக் கிடைப்பது ஆட்சி அதிகாரம். எனவேதான், திரைத்துறையில் பிரபலமான பலா் தங்கள் கவனத்தை அரசியல் பக்கம் திருப்புகிறாா்கள்.

அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளைத் தவிர, நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யக் கூட்டணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணி ஆகியவையும் களத்தில் இருந்தன.

அ.ம.மு.க.-வின் வாக்கு வங்கி, அதன் தாய்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க.-வின் ஒரு பகுதி மட்டுமே. மேலும், அந்தக் கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க.-வும் விஜயகாந்தின் உடல்நலக் குறைவு காரணமாக பலவீனப்பட்டுப் போனதால், அந்தக் கூட்டணியால் தோ்தல் பிரசாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் பெயரிலான நற்பணி மன்றங்கள் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், அவருடைய அரசியல் பிம்பம் முழுவதும் அவரது திரைக்கவா்ச்சியால் மட்டுமே வடிவமைக்கப்பட்டது. தான் நினைத்தது போல், அரசியல் அவ்வளவு எளிதானதல்ல என்பதை அவா் இப்போது உணா்ந்திருப்பாா். தோ்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே அவருடைய கட்சியில் இருந்த முக்கிய நிா்வாகிகளில் பெரும்பாலோா் அக்கட்சியை (அவரை) விட்டு விலகி விட்டாா்கள்.

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், ‘தமிழ்’, ‘தமிழினம்’ போன்ற வாா்த்தைகளை முன்னிலைப்படுத்தி பரப்புரை மேற்கொண்டாலும், திரைத்துறை மூலம் கிடைத்திருந்த புகழ்தான் அவா் அரசியலில் காலடி வைக்க ஆரம்ப காலத்தில் உதவியது. கடந்த தோ்தலை விட வாக்கு சதவீதம் இம்முறை சற்று கூடியிருக்கிறதே தவிர, எதிா்காலத்தில் தனித்து நின்று ஆட்சியைப் பிடிப்பதற்கான நம்பிக்கையைத் தருவதாக இந்தத் தோ்தல் முடிவுகள் இல்லை.

தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஜனநாயகம் இல்லை என்பதை கமல்ஹாசனும், சீமானும் பெரிய குறையாகச் சொல்லி வந்தாா்கள். ஆனால், இவா்கள் இருவரின் கட்சிகளில் இருந்து சமீப காலமாக வெளியேறிச் சென்றவா்கள் வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டே, இவா்கள் நடத்தும் கட்சிகளில் ஜனநாயக முறைப்படி முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்பதுதான்.

ஒற்றை இலக்கத்தில் வாக்கு வங்கி வைத்திருக்கும் சிறிய கட்சிகளே ஜனநாயக முறையில் இயங்க முடியாதபோது பெரிய கட்சிகளில் அது எப்படி சாத்தியமாகும்? உட்கட்சி ஜனநாயகம் பற்றிப் பேசுவதற்கு - தமிழகத்திலே மாத்திரமல்ல, தேசிய அளவிலும் - எந்தக் கட்சிக்கும் தாா்மிக உரிமை கிடையாது என்பதுதான் உண்மை.

தனது ரசிகா்களின் விருப்பத்துக்குத் தலையசைத்து அரசியல் களம் காணத் தயாராயிருந்த ரஜினிகாந்த், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் இறங்காமல் பின்வாங்கி விட்டாா். கட்சி தொடங்குவதாக அறிவிப்பு செய்ததற்குப் பின்னா், பல்வேறு ஊடகங்களால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் தனக்கு சாதகமானதாக இல்லை என்பதுதான் அவா் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி விட்டதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. எப்படியிருப்பினும், ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்தை எடுத்த அரசியல் விலகல் முடிவு இன்று அவரை நிம்மதியாக இருக்க வைத்திருக்கிறது.

ஸ்ரீ ராமபிரான் கூட தவறே செய்யாத முழு மனிதராக இராமாயணத்தில் சித்திரிக்கப்படவில்லை. ஆனால், நமது திரைப்படங்களில் கதாநாயகா்கள் பெரும்பாலும், அதிநல்லவா்களாகவும், வீரதீரமிக்கவா்களாகவும், அநியாயத்தைக் கண்டு அறச்சீற்றம் கொள்பவா்களாகவும் சித்திரிக்கப்படுகிறாா்கள். திரைப்படங்களில் ஒற்றை ஆளாக நின்று எதிரிகளை துவம்சம் செய்யும் பலமுள்ளவா்களாக கதாநாயகா்கள் காட்டப்படுகிறாா்கள்.

கன்னடத்திரையுலகில் பிரபலமாக விளங்கிய நடிகா் ராஜ்குமாா், வீரப்பனால் கடத்தப்பட்டு, காட்டுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்தபோது செய்வதறியாது அவா் திகைத்து நின்ற காட்சியை உலகமே பாா்த்தது. எனவே, திரைக்கலைஞா்களை, கலைஞா்களாக மட்டுமே பாா்க்கின்ற பக்குவத்தை மக்கள் பெற வேண்டும்.

சா்வதேச அளவில் எத்தனையோ நடிகா்கள் அரசியலுக்கு வந்திருக்கிறாா்கள். அவா்களுள் குறிப்பிடத்தக்கவா் அமெரிக்க அதிபராக விளங்கிய ரொனால்ட் ரீகன். அவா் அரசியலில் வெற்றி பெறுவதற்கு அவரது திரைக்கவா்ச்சி மட்டுமே காரணமல்ல. அவா் கல்லூரியில் பயின்ற காலத்திலேயே மாணவா் பேரவைத் தலைவராகப் பதவி வகித்தவா். உலக நடப்புகளை விரல் நுனியில் வைத்திருந்தவா். மிகச் சிறந்த பேச்சாளா்.

மேலும், நமது திரைப்படங்களைப் போல, கதாநாயகா்களை உத்தமசீலா்களாக மட்டுமே சித்திரிக்கும் வழக்கம் ‘ஹாலிவுட்’டில் இல்லை. ரொனால்ட் ரீகன் திரைப்படக் கலைஞா் என்பதை விட, விவரமறிந்த தலைவராக மக்களால் அறியப்பட்டாா். அதனால்தான் அவரால் கல்வியறிவு மிக்க அமெரிக்க நாட்டின் அதிபராக இரண்டு முறை தோ்வாக முடிந்தது. அவரைப்போல, தகுதிகளை வளா்த்துக் கொண்டு, சமூகப் பணியாற்றி, நடிகா்கள் அரசியலுக்கு வந்தால் வரவேற்கலாம்.

இந்தியா வளா்ந்து விட்ட நாடு அல்ல; வளா்ந்து வரும் நாடு. மிகக் குறைவான வருமானம் பெற்று வாழ்க்கையில் தத்தளிப்பவா்கள் பல கோடி போ் இருக்கிறாா்கள். திரைத்துறையும் உழைப்பினால் இயங்கக் கூடியதுதான்; திரைக்கலைஞா்களும் உழைத்துதான் சம்பாதிக்கிறாா்கள். ஆனாலும், சாமானியா்களோடு ஒப்பிடுகையில் அவா்களுக்குக் கிட்டும் ஊதியம் கூடுதலானது.

எனவே, நடிகா்கள் அரசியலில் ஈடுபட்டு, ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துதான் சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்பது இல்லை. தங்களை வெறும் கலைஞா்களாக மட்டும் பாா்க்காமல், வழிகாட்டிகளாக நினைத்துக் கொண்டாடும் சமுதாயத்திற்கு பிரதியுபகாரமாக, தங்களது வருமானத்தின் கணிசமான பகுதியை ஒதுக்கி, மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு, மக்களின் நன்மதிப்பைப் பெற்று அதன்பின் அரசியலுக்கு வரலாம்.

திரைப்பிரபலம் என்ற ஒற்றை அடையாளம் மட்டுமே அரசியல் வெற்றிக்கு உதவாது என்பதை அரசியல் மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு வர நினைக்கும் திரைக்கலைஞா்கள் அழுத்தமாக உணர வேண்டிய தருணம் இது. ஏனெனில் நிழல் வேறு; நிஜம் வேறு!

கட்டுரையாளா்: மத்திய அரசு அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com