பல்கலைக்கழக விதிகளில் மீளாய்வு தேவை!

கல்விதான் மனிதனுக்கு நிறையழகு. ஆனால், வாழ்க்கை முழுதும் கல்விக்கு உரிய பருவமன்று. பள்ளிக்கல்வியைத் தொடர்ந்து பெறும் உயர்கல்வியானது, ஒவ்வொரு மாணவனுக்கும் திருப்புமுனையாகும்.


கல்விதான் மனிதனுக்கு நிறையழகு. ஆனால், வாழ்க்கை முழுதும் கல்விக்கு உரிய பருவமன்று. பள்ளிக்கல்வியைத் தொடர்ந்து பெறும் உயர்கல்வியானது, ஒவ்வொரு மாணவனுக்கும் திருப்புமுனையாகும். வாழ்க்கையில் செல்லவேண்டிய திசையைத் தெரிந்துகொள்ளும் பருவமாகும். தனது தகுதிக்கும் தன்னம்பிக்கைக்கும் ஏற்ப பட்டப்படிப்பைத் தேர்வு செய்பவர் வாழ்வின் இலக்கை எட்டுவர். 
உயர்கல்வி பெறவேண்டிய வயது 18 முதல் 23 ஆகும். இந்திய மக்கள்தொகையில் இந்த வயதுடையோர் ஏறத்தாழ 15 கோடி பேர். இவர்களுள் 2019-இல் 3.74 கோடி மாணவர்களும், 2020-இல் 3.85 கோடி மாணவர்களும் உயர்கல்வியில் இணைந்துள்ளனர். ஆண்டுதோறும் மாணவர்தொகை கூடிக்கொண்டே வருகிறது. 
இந்தியாவின் 28 மாநிலங்களுள் உத்திர பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை கூடுதலாகும். தன் வாழ்க்கை வளத்திற்கும், தான் சார்ந்துள்ள நாட்டின் செழுமைக்கும் உரியவர்கள் இளைஞர்கள். அவர்களுக்கான உயர்கல்வியின் தரம் பாதுகாக்கவும், உயர்த்தப்படவும் வேண்டாமா? உயர்கல்வியைக் கட்டமைத்து நெறிப்படுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் பல்கலைக்கழகங்களைச் சாரும். 
பல்கலைக்கழகங்களின் செயல்திறன், மாணவர்களுக்கான பாடத்திட்டம், ஆய்வுத்திட்டப் பணிகள் ஆகியவை குறிப்பிட்ட கால இடைவெளியில் மீளாய்வு செய்யப்பட வேண்டும். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கல்வி வளர்ச்சி, நிருவாகத்திறன் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகளும் பெறப்பட்டு, எதிர்கால செயல்திறன்களை உருவாக்குதல் தகும். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இவ்வாறான நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. 
திமுக அரசு 2000-த்தில் பொதுப்பல்கலைக்கழக சட்டவரைவு கொண்டுவர முயன்றது. வல்லுநர் குழு ஆராய்ந்து அறிக்கையும் தந்தது. அந்த அறிக்கை இன்றுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. உயர்கல்வியின் தரம் மேம்படுவதற்கு சில கட்டமைப்புகளை வளர்நோக்கில் புதுப்பித்தல் நலம் பயக்கும். 
கல்வி நிறுவனத்தின் தலைவரான துணைவேந்தரின் கொள்கைவகுப்புத் திறன் அடிப்படையில் இயங்குவதே பல்கலைக்கழகம். கல்விசார்ந்த - சாராத பணிகளுக்கான வளர்ச்சிக்குத் திட்டமிடுபவர் துணைவேந்தரே. அவர் கல்விப்புலத்திலும் ஆய்வுத்திறத்திலும் சிறந்து விளங்குவதோடு சமூக அக்கறை, தொலைநோக்குச் சிந்தனை, உலகலாவிய பார்வை, அரவணைத்துச் செல்லும் பண்பு, முடிவெடுக்கும் திறன், ஒருசார்பு கொள்ளாமை, கடமையில் கண்டிப்பு, திறனாளர்களைத் தெரிவுசெய்யும் நுட்பம் போன்ற அருங்குணங்கள் நிரம்பப் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. 
பல்கலையின் வளர்ச்சி துணைவேந்தரின் ஆளுமைத்திறனைச் சார்ந்து அமையப்பெறும். அறிஞர் மால்கம் ஆதிஷேசய்யா சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியபோது, பல்கலைக்கழகத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் சென்றவர். அறிஞர் பொற்கோ துணைவேந்தர் ஆனவுடன் 15 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பினார். பல்கலைக்கழகத்திற்கு ஐந்து நட்சத்திர மதிப்பீடு பெற்றுத்தந்தார். 
பின்னாளில் அறிவியல் ஆய்வறிஞர் எஸ்.பி. தியாகராஜன் அறிவியல் துறைகளை வளர்த்தெடுத்து வழிகாட்டினார். கர்னல் திருவாசகம், பல்கலைக்கழகப் பதிப்புத்துறைக்குப் புத்துயிர் தந்தவர். அறிஞர் அ. சிதம்பரநாதன் செட்டியாரின் உலகத்தரம் வாய்ந்த ஆங்கில அகராதியை மறுபதிப்பு செய்தவர்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வடிவமைத்தவர் அறிஞர் வ.அய். சுப்பிரமணியம். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான அறிஞர் மு. ஆனந்தகிருஷ்ணன் பொறியியல் படிப்புக்கான தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக்கத்திற்கு வித்திட்டவர். 
அழகப்பா பல்கலைக்கழகத்தை வடிவமைத்தவர் ராதா தியாகராஜன்; புதுவைப் பல்கலைக்கழகம் உருவாகும்போது பெரும் பங்களிப்பு செய்தவர் முனைவர் வேங்கடசுப்பிரமணியம். பின்னாளில் வளர்பணிகளை மேற்கொண்டவர் அறிஞர் ஞானம். இதுபோன்று தமது சிந்தனைத் திறத்தாலும், உழைப்பாலும் நிறுவனங்களை வளர்த்தெடுத்த பெருமைக்குரியோர் பலர் உளர். அவ்வாறான அறிஞர்களைக் கண்டறிந்து துணைவேந்தர்களாக நியமித்தால் கல்விப்பணி சிறக்கும்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆசிரியர்களிடையே குழுமனப்பான்மை துளிர்விட்டு வளர்ந்துவிட்டது. சாதி அரசியல் வெளிப்படையாக நிகழ்கின்றது. அது கொடுநோய்க்கு ஒப்பானது. நிருவாகத்தின் நாடிநரம்புகளில் தொற்றிக்கொண்டு வளர்ச்சிப் பணிகளைப் பாதிக்கிறது. 
அந்நோய் மாணவர்களிடமும் விதைக்கப்படுவது வேதனைக்குரியது. ஒற்றுமை, ஒருமைப்பாடு, நாட்டுப்பற்று, மொழிப்பற்று போன்ற வாழ்வியல் விழுமியங்களைக் கற்றுத்தரவேண்டிய ஆசிரியர்கள் மாணவர்களின் போராட்டத்திற்கும் வன்முறைக்கும் துணைபோகும் நிலை மனத்தை நெருடலாக்குகிறது. 
எதிர்காலத்தில் தாய்நாட்டைப் பாதுகாத்து வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டுசெலுத்தும் திறன்கொள் மாணவர்களை உருவாக்கும் பணியை மேற்கொள்ள முழுத்தகுதியுடையோர் ஆசிரியர் அல்லவா? அவர்கள் அந்தக் கடமையிலிருந்து நழுவுதல் தகுமா? 
சிலர் வாரத்திற்கு பதினாறு மணிநேரம் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது மட்டுமே தம் கடமையென்று கருதுகின்றனர். சமுதாயத்திற்கும் மொழிக்கும் பயன்படும் வகையிலான ஆய்வுகளை மாணவர்களைக் கொண்டு உருவாக்கும் திறன் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். கற்பித்தல் பணியோடு ஆய்வுத்திட்டப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் விழைவு ஆசிரியர்களிடம் மேலோங்க வேண்டும். 
உலகமயமாக்கல் வலுப்பெற்று கணினி வழியும், இணைய வழியும் கற்றல் - கற்பித்தல் முறைகளில் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. அதற்கேற்ப மாணவர்களிடம் அத்திறன்களை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கானது என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும். உலகப் பல்கலைக்கழகங்களோடு மாணவர் பரிமாற்றம், ஆசிரியர் பரிமாற்றம், ஆய்வுப் பணிகளைப் பகிர்ந்துகொள்ளுதல் போன்ற பல புதிய முயற்சிகள் வேர்விட்டுத் தழைக்கத் தொடங்கியுள்ளன. ஆசிரியர்கள் அதனைத் தக்கவைத்துக்கொள்வது நயமாகும். 
பல்கலைக்கழக நிருவாகச் சிக்கல்களைக் களைந்து தீர்வு காணவேண்டியதும், நிதிநெருக்கடியைச் சரிசெய்து நிருவகிக்க வேண்டியதும் துணைவேந்தர்களே. கல்விசார் பணிகளை அவ்வப்போது ஆய்வுசெய்து அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு கல்விப்பணிகள் சிறக்க சிந்திக்க வேண்டியவர்களும் அவர்களே. 
இவ்வாறான பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்து இணைப்புக் கல்லூரிகளையும் வழிநடத்திச் செல்லவேண்டிய மிகப்பெரும் கடமையும் உண்டு. 
எனவே, இப்பணிகளைச் செய்து முடிப்பதற்குத் துணைவேந்தருக்கு மூன்றாண்டு பணிக்காலம் என்பது மிகக்குறைவு. தான் திட்டமிட்ட பணிகளைச் செய்துமுடிப்பதற்குக் குறைந்தது ஐந்து ஆண்டுகள் தேவை. எனவே, பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளாக உயர்த்துவது பொருத்தமாகும். 
நடுவண் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவி ஐந்தாண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு மூன்றாண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு உயர்த்தும்போது, அடிக்கடி துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படுவதைத் தவிர்க்கலாம். 
ஒரு துணைவேந்தர் பணி ஓய்வு பெறும் அன்றே புதிய துணைவேந்தர் பதவியேற்க வேண்டும் என்னும் விதி உருவாக்கப்பட வேண்டும். ஒரு துணைவேந்தர் விடுப்பில் இருக்கும்போதோ அயல்நாடு செல்லும்போதோ நிருவகிப்பதற்குக் குழு அமைக்கும் முறையைக் கைவிட வேண்டும். இம்முறை தேவையற்ற குழப்பங்களையே விளைவிக்கும். 
துணைவேந்தர் இல்லாதபோது அவரது பணிகளை மேற்கொள்வதற்கு அதே பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ஒருவரை ஆட்சிக்குழுவின் ஒப்புதலோடு நிகழ்நிலை துணைவேந்தராக (ஆக்டிங் வைஸ் சான்ஸலர்) நியமிக்கலாம் (அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எட்டுமுறை நிகழ்நிலை துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார்). 
ஆசிரியர்களின் பணிநிறைவு வயதை 65 ஆகவும், துணைவேந்தர்களின் பணிநிறைவு வயதை 70 ஆகவும் கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழக அரசு துணைவேந்தர்களுக்கான வயதுவரம்பை மட்டும் கருத்தில் எடுத்துக்கொண்டு சட்டம் இயற்றியுள்ளது. 
தமிழகத்தில் கல்லூரி ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் ஓய்வு வயது 58-இல் இருந்து 60-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, பல்கலைக்கழக ஆசிரியர்களின் வயது வரம்பும் உயர்த்தப்படுவதுதான் அறம். நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக ஆசிரியர்களின் பணிநிறைவு வயதினை 62 அல்லது 65-ஆக உயர்த்துவது வரவேற்கத்தக்கது.  
இந்தியாவில் ஆந்திரம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், மிசோரம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஓய்வுவயது 62-ஆக உள்ளது. பஞ்சாப், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், மணிப்பூர், சிக்கிம், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஓய்வு வயது 65 என நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு உட்பட பிற பதினான்கு மாநிலங்களில் மட்டுமே பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஓய்வுவயது 60-ஆக உள்ளது. 
இவற்றுள்ளும் ராஜஸ்தான், கர்நாடகம், ஜம்மு - காஷ்மீர், குஜராத், அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் ஓய்வு வயதை 65-ஆக உயர்த்த வேண்டும் என்னும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com