உறவுகளை மேம்படுத்துவோம்!
துறவிகளுக்கு குடும்பம் என்பது உலகம் தழுவிய வகையில் அமைந்திருப்பது. அதை வடமொழியில் "வசுதைவ குடும்பகம்' என்று கூறுவர். தமிழில் கிடைத்திருக்கும் இலக்கியங்களில் முதல் இலக்கியமாகத் திகழும் நக்கீரரின்


துறவிகளுக்கு குடும்பம் என்பது உலகம் தழுவிய வகையில் அமைந்திருப்பது. அதை வடமொழியில் "வசுதைவ குடும்பகம்' என்று கூறுவர். தமிழில் கிடைத்திருக்கும் இலக்கியங்களில் முதல் இலக்கியமாகத் திகழும் நக்கீரரின் திருமுருகாற்றுப்படை "உலகம் உவப்ப' என்று தொடங்குகிறது. தெய்வச் சேக்கிழார் அருளிய பெரிய புராணம் "உலகெலாம்' என்றும், கம்பர் அருளிய கம்பராமாயணம் "உலகம் யாவையும் தாமுள வாக்கலும்' என்று அமைந்திருப்பதைக் கொண்டும் உலகத்தைப் பற்றிய சிந்தனையை நம் முன்னோர்கள் கொண்டிருந்ததை அறியமுடிகிறது.
நம் முன்னோர்கள் இல்லறத்தில் இருந்தாலும் கூட உலகம் முழுவதையும் தமது குடும்பமாகக் காண்பதையே சிந்தையாகக் கொண்டு செயலாற்றியவர்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கின்ற அடிப்படையில் அவர்தம் சிந்தனை விரிவுபட்டிருந்தது.
விடுதலை பெறும்போது நமது நாட்டில் 540}க்கும் மேற்பட்ட அரசுகள் இருந்தன. அதற்கு முன்னதாக பல்வேறு பாளையப்பட்டுகள், குறுநில மன்னர்கள் என ஒவ்வொரு ஒன்றியம் கூட ஒவ்வொரு நாடாக இருந்ததை வரலாற்றின் மூலம் அறியமுடிகிறது. இவ்வாறு சிறு சிறு நாடுகள் இணைந்து சிற்றரசாக மாறி அவையும் இணைந்து இப்போது இந்தியா என்ற பெருநாடாக மாறி உள்ளது. இது ஒருவித வளர்ச்சி.
இந்தியா மற்றும் அண்டைநாடுகள் இணைந்து ஐக்கியநாடுகள் என்ற அமைப்பில் ஒன்றிணைந்துள்ளது மற்றொரு வகை வளர்ச்சி.
நமது நாடு என்கின்ற எண்ணம் பரந்து செல்வதை உணரமுடிகிறது. குழந்தையாக இருக்கும்போது நாம் என்று கருதும் நாம், சிறிது வளர்ந்து நமது குடும்பம் என்று கருதுகிறோம். இன்னும் சிறிது வளர்ந்து நமது சுற்றத்தைச் சார்ந்தவர்கள் என்று கருதுகிறோம். இன்னும் சிறிது வளர்ந்து நமது குலத்தைச் சார்ந்தவர்கள் என்று கருதுகிறோம்.
அடுத்தாற்போல, நமது மண்டலத்தைச் சார்ந்தவர்கள் என்று கருதினோம். பின்னர் வளர வளர நமது மொழி பேசக் கூடியவர்கள், இனத்தைச் சார்ந்தவர்கள், மாவட்டத்தைச் சார்ந்தவர்கள், மாநிலத்தைச் சார்ந்தவர்கள், நாட்டைச் சார்ந்தவர்கள் என்று வளர்ந்து வளர்ந்து முன்னோர்கள் கூறியதைப் போல உலகம் நம்முடையது என்ற எண்ணம் வலுப்பெற்றதை அறியமுடிகிறது.
நம்முடைய முன்னோர்கள் இதை ஓருலக ஆட்சி என்று சொல்கிறார்கள். இதற்கு வித்திட்டது சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனார் காலம். உலகத்தை பூமிபந்து (குளோபல்) என்று சொன்னார்கள். பின்னர் அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சியின் காரணமாக உலகச்சிற்றூர் (குளோபல் வில்லேஜ்) என்று சொன்னார்கள். இதை அடுத்தகட்டமாக உலகம் என்பது ஒரு குடும்பம் (குளோபல்
ஃபேமிலி) என்று அனைவரும் சொல்லக்கூடிய வகையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் எவ்வாறு ஒருவருக்கொருவர் வளர்ச்சி அடைய துணைநிற்கிறோமோ அதைப்போல அனைத்து நாட்டைச் சார்ந்தவர்களும் நம் குடும்ப உறுப்பினர்கள் என எண்ணி இச்சிந்தனையை வளப்படுத்திக் கொள்ளவேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை மே மாதம் 15}ஆம் நாளை சர்வதேசக் குடும்ப நாள் (இன்டர்நேஷனல் ஃபேமிலி டே) என அறிவித்து இருக்கின்றது. அதன் அடிப்படையில் இவ்வாண்டு அனைவரும் குடும்ப நாளில் இயற்கையாகவே வீட்டை விட்டு யாரும் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இந்தச் சூழலிலே உடல் பாதிப்பை விட பலரும் உள்ளப் பாதிப்போடு இருக்கின்றோம்.
நம்முடைய பாரத நாட்டிலே குறிப்பாகத் தமிழகத்திலே கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்பது மிகச் சிறப்பாக இருந்து வந்தது. ஒரே குடும்பத்தில் தாத்தா, பாட்டி, பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் என்கின்ற அடிப்படையிலே ஐந்தாறு தலைமுறையினர் இருந்ததைப் பார்க்க முடியும். அதனால் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் ஐந்திலிருந்து பத்துக் குழந்தைகள் வரைக்கும் இருந்தனர். ஒரு சிற்றூர் போலவே ஒரு கூட்டுக்குடும்பம் இருந்து வந்தது.
அது காலப்போக்கில் மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக குடும்பக் கட்டுப்பாடு நெறி வந்தபோது மிகவேகமாகக் குடும்பத்தில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து முற்காலத்தில் வேலைவாய்ப்புகள் தொழில்கள் எல்லாம் நம்முடைய ஊரைச் சார்ந்ததாகவே இருந்தன. கல்வி வளர்ச்சி காரணமாக வேலைவாய்ப்புகளும் தொழில்களும் படிப்படியாக நகரங்களுக்கு சென்றன.
நகரங்களில் இருந்து மாநிலங்களுக்கு இடையே மலர்ந்தது. அடுத்து இப்போது நாடுகளுக்கு இடையே எல்லா நாடுகளிலேயும் எல்லா நாட்டவரும் இருக்கிறார்கள் என்ற அளவுக்கு நாம் விரிந்து இருப்பதனால் இந்தக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்பது ஒருபுறம் குறைந்து கொண்டே வருகிறது.
முதலிலே நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கொள்கை இருந்தது. அதிலிருந்து நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற கொள்கை வந்தது. அதன் காரணமாக அந்த ஒரு குழந்தையும் அயல் மண்ணிலே இருக்கக்கூடிய சூழலில் இரண்டு பேர் மட்டும் உள்ள குடும்பமாக நம்முடைய குடும்பங்கள் வந்தன. இன்னும் பல்வேறு வகையான மேலை நாட்டுத் தாக்கங்கள், ஊடகங்களினுடைய தாக்கங்கள் இவற்றினால் இருவர் உள்ள குடும்பங்களும் தனிமனிதக் குடும்பங்களாக மாறிவிட்டன. நான் தனிமனிதனாக இருக்கின்றேன் என்று சொல்வதும் வளர்ந்து வருகின்றது.
பெரும்பாலும் நாமெல்லாம் நம் குடும்பத்தோடு இருக்கின்றோம். ஒரு சில இடங்களிலே தாத்தா பாட்டியோடு அப்பா அம்மாவோடு குழந்தைகளோடு ஒரே குடும்பமாக இருக்கின்றோம். பெரியவர்கள் தங்கள் குடும்பத்தினுடைய வரலாற்றைப் பதிவு செய்யலாம். தங்களின் முன்னோர்கள் பெயர்கள், தொழில்கள், சிறப்புகள், உறவினர்கள் முதலியவற்றை இளையோருக்கு எடுத்துச் சொல்லலாம்.
அடுத்த தலைமுறையினர் தமது குடும்பத்தை எவ்வாறு வளப்படுத்தலாம், அன்பு, அரவணைப்பு, சுகாதாரம் ஆகியவற்றை எப்படி மேம்படுத்தலாம் என்பதைப் பற்றி தம்முடைய மூத்த தலைமுறையினரிடம் கற்றுக் கொள்ளலாம். குடும்பத்தில் இணக்கம், அமைதி, நட்பு ஆகிய பண்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
அதற்கு அடுத்த நிலையில் 20 முதல் 40 வயது வரை இருப்பவர்கள் தங்கள் குடும்ப இணைப்பினை மேம்படுத்தும் வகையில் பெரியவர்களுக்குக் கதை சொல்லும் போட்டி முதலான சிறு சிறு போட்டிகள் நடத்தலாம். மூத்தோரிடையே பொதிந்து கிடக்கும் நாட்டுப்புறத் தாலாட்டு, ஒப்பாரி, நடவு, சடங்குப் பாடல்கள் முதலிய கலைகளை வெளிப்படுத்தலாம். ஒத்த வயது கொண்ட உறவுகளிடையே சிறிய அளவில் ஓவியம், கவிதை போன்ற போட்டிகளை நடத்தலாம். 20 வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய விளையாட்டுகளைக் கற்றுக் கொடுக்கலாம்.
சுகாதாரம் சார்ந்த விளையாட்டுக்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதன் வாயிலாக குடும்பத்தில் மன மகிழ்ச்சியும் நிம்மதியும் மேம்பட வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த வகையில் நீங்கள் அவ்வப்போது கூட்டாக இணைந்து இதுபோன்ற பணிகளை செய்ய வேண்டும். இந்தப் பணிகளைச் செய்யும் போது கூடவே இறைவனையும் மறக்கக் கூடாது. இறைவனையே நாம் பார்க்கும்போது குடும்பமாகத்தான் வழிபடுகிறோம்.
சிவபெருமான், அவர் மனைவி உமையம்மை, அவர்தம் மகன்கள் விநாயகர், முருகன், அவர் மைத்துனர் திருமால், திருமால் மனைவி திருமகள், இவர்கள் மகன் நான்முகன், அவர் மனைவி கலைமகள் என்ற பிணைப்போடு நம்மைப் படைத்து, காத்து, அழிக்கும் தெய்வங்களும் ஒரு குடும்ப உறவிலேயே நமக்கு வழிகாட்டுகின்றன. இத்தகைய குடும்ப உறவுகளை மேம்படுத்தும் வகையில் அமைந்த, "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்', "செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கி' போன்ற தேவாரப் பாடல்களை நாள்தோறும் காலையில் விளக்கினை ஏற்றி ஓதி நலம் பெறலாம். அதேபோல நம் தமிழகத்தின் பண்பாடுகளில் சிறந்த உறவு முறைகளைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யலாம்.
ஆங்கிலத்திலே சித்தப்பா, பெரியப்பா, மாமா என அனைவருக்குமே "அங்கிள்' என்ற சொல்தான். சித்தி, பெரியம்மா, அத்தை என அனைவருக்குமே "ஆன்ட்டி' என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. அவற்றைப் பயன்படுத்தாமல் தமிழிலே இருக்கும் வழிவழியான உறவுகளை அறிமுகம் செய்து இன்புறலாம். தூரத்து உறவினர்களுக்கு காணொலி அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு தத்தம் இல்லங்களில் பொங்கும் இன்பத்தினைப் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறாக இன்பத்தினைப் பகிர்ந்து கொள்ளவே விழாக்களை வைத்தார்கள்.
காதணி விழாக்கள் முதலியவை, தம் குழந்தை இந்தப் பருவத்தைக் கடந்துவிட்டாள் என்பதை காட்டவே நடத்தப் பெறுகின்றன. திருமணங்களும் அதுபோலவே அடுத்தடுத்து நடக்க இருக்கும் திருமணங்களைக் காட்டவும், உறவினர்களை காட்டவுமே. இத்தகைய பண்டிகைகளும், விழாக்களும் அருகி வரும் காலத்தில் உறவுகளை மேம்படுத்த வேண்டியது ஒவ்வொரு குடும்பத்தினரின் கடமையாகும்.
தீநுண்மிக் காலத்தில் வெளியில் போக முடியாமல் பொது முடக்கம் குடும்பத்தினர் அனைவரையும் வீட்டிற்குள் இருந்தாக வேண்டிய சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் குழந்தைகளுக்குக் குடும்ப உணர்வை ஏற்படுத்துவதும், உறவுகளை உணர வைப்பதும் நமது கடமை.
கட்டுரையாளர்: குருமகாசன்னிதானம், பேரூராதீனம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...