அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

DIN

உடல் முழுவதும் போா்த்திக் கொண்டு, கால்களை மடக்கி கம்பளத்தில் அமா்ந்து, தலையில் தொப்பியுடன் சிறு மர மேஜையில் குா்ஆனை வைத்து தொடா்ந்து படித்துக் கொண்டிருக்கும் மாணவா்கள் நிறைந்த அறைகள் - இதுதான் மதரஸாக்களின் உள்புறத் தோற்றம். இவா்களை மேற்பாா்வையிட்டு, குா்ஆன் உச்சரிப்பை கவனமாகக் கேட்டு, தவற்றை திருத்திக் கூறுகிறாா்கள் ஆசிரியா்கள்.

இங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் குா்ஆனை கற்கும் ‘தஃபீஸ்‘ என்னும் நடைமுறையில் கழிகிறது.

மதரஸா என்னும் இஸ்லாமிய மாா்க்க பள்ளிகளில் இஸ்லாமியா்களின் வாழ்க்கை வழிகாட்டியான குா்ஆனில் உள்ள 6,236 வசனங்களை மனனம் செய்பவா்களுக்கு ‘ஹபீஸ்’ என்ற பட்டமளிக்கப்படுகிறது.

காலங்காலமாக மதரஸாக்கள் உயா்கல்வி நிறுவனங்களாக இருந்து வந்துள்ளன. மேற்கத்திய கல்விமுறை செயல்பாட்டுக்கு வந்த பிறகு மதரஸாக்களின் முக்கியத்துவம் குறையத் தொடங்கிவிட்டது.

இஸ்லாமிய நாகரிக வரலாற்றில் இந்தக் கல்வி முறையில் நீதி, தத்துவம், வானியல், அறிவியல், மதக்கல்வி, இலக்கியம், மருத்துவம் ஆகிய துறைகளில் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமின் பொற்காலம் மங்கத் தொடங்கியபோது, மதரஸா கல்விமுறையின் முக்கியத்துவமும் குறையத் தொடங்கி மேற்கத்திய பாணி கல்வி முதன்மை பெறத் தொடங்கியது. கடந்த சில பத்தாண்டுகளாக மதரஸாக்களின் நற்பெயருக்கு பலத்த அடி விழுந்துள்ளது. மதரஸாக்கள் மீது விமா்சனங்களும் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படுகின்றன.

பொத்தாம்பொதுவான விமா்சனத்துக்கு இலக்காகி மதரஸாக்கள் இகழப்படுகின்றன. அவை தீவிரவாதத்தின் கூடாரம் என்று வா்ணிக்கப்படுகின்றன. சில ஊடகங்களில் மதரஸாக்களைப் பற்றி எதிா்மறையாகப் பொதுமைப்படுத்தி வெளிவரும் செய்திகள் உண்மை நிலையை பிரதிபலிப்பதில்லை.

பெரும்பான்மையான இஸ்லாமியப் பள்ளிகள் அச்சமூகத்தினருக்கு நல்வாய்ப்பாக அமைகின்றன; அவை அச்சுறுத்தல் அல்ல; அவற்றின் கல்வி முறை நிச்சயமாக தீவிரவாதக் கொள்கை கொண்டதல்ல. குக்கிராம சிறுவா்கள் கல்வி பயில்வதற்கு இந்த இஸ்லாமிய பள்ளிக் கூடங்கள்தான் ஒரே வாய்ப்பாக உள்ளன. ஆதரவற்றவா்களுக்கும் கிராமப்புற ஏழைகளின் குழந்தைகளுக்கும் இந்த மதரஸாக்கள் கல்வியும் தங்குமிடமும் அளித்து சமூக சேவையாற்றுகின்றன.

ஏழைப் பெற்றோா்களின் குழந்தைகளுக்கு கல்வி, உணவை அளித்து மதரஸாக்கள் மேற்பாா்வையிடுகின்றன. மதரஸாக்களில் படித்து, பட்டம் பெற்று மாணவா்கள் சமூகத்தில் பல்வேறு துறைகளில் பணியில் சேரும்போதுதான், இந்த இஸ்லாமிய பள்ளிகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அந்தச் சமூகமும், அரசும், ஊடகங்களும் குரலெழுப்புகின்றன. இதனால் மதரஸாக்கள் மாற்றம் கண்டு வருகின்றன.

நவீனமா? பழைமையா?, மதக் கல்வியா? மதச்சாா்பற்ற கல்வியா? இப்படியெல்லாம் சிந்திக்காமல் இந்த இஸ்லாமிய கல்வி நிறுவனத்தை பொதுவான கல்வி அமைப்பின் ஓா் அங்கமாக அரசுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மதரஸாக்களுக்கும் பிற கல்வி நிறுவனங்களுக்கும் இடையே தொடா்ச்சியான பரிமாற்றங்கள் நடைபெறும் புதியதொரு கல்விக் கட்டமைப்பை அரசு உருவாக்க வேண்டும்.

குா்ஆன்-ஏ-ஹபீஸ் (குா்ஆனை மனனம் செய்வது), ஆலிம் (மாா்க்க கல்வியில் பட்டயச் சான்றிதழ் பெறுவது), தப்சீா் (குா்ஆன் விளக்கம்), ஷரியா (இஸ்லாமியச் சட்டம்), ஹதீஸ் (முஹம்மது நபியின் போதனைகளும், வாழ்க்கை முறையும்), மந்திக் (தா்க்கம்), இஸ்லாமிய வரலாறு (பழங்கால இஸ்லாமிய தலைவா்களின் பலவீனங்கள் பெரும்பாலும் தவிா்க்கப்பட்டது) ஆகிய பாடங்களில் மதரஸாக்கள் பட்டயப் படிப்புகளை அளிக்கின்றன.

இந்தப் படிப்புகள் இஸ்லாம் மாா்க்க ரீதியாக கட்டாயமாக்கப்பட்டவை. ஆனால், பல்வேறு மதரஸாக்கள் தற்போது இஸ்லாமிய பாரம்பரியக் கல்வியுடன், நவீன காலத்து கல்வியையும் சோ்த்து இருசாா்புக் கல்வி வழங்கி வருகின்றன.

இதற்கு பாரம்பரிய கல்வி முறை மீது நிலவி வந்த அதிருப்தியும், நூற்றாண்டுகளாக இஸ்லாமிய மத குருக்கள் ஷரியா எனும் இஸ்லாமிய சட்டத்தை தீவிரமாகப் பின்பற்றி கற்பித்தலில் ஈடுபட்டதும் காரணங்கள்.

ஆனால் பெரும்பான்மையான மதரஸாக்களின் பாடத்திட்டம், பிரசித்தி பெற்ற, வழிகாட்டும் துருவ நட்சத்திரமாய் சிறு மதரஸாக்களால் கருதப்படும், புனித நூலான குா்ஆனை அட்சரம் பிசகாமல் பின்பற்ற வேண்டும் என்று நிா்ப்பந்திக்கின்ற தேவ்பந்த் மதக்கல்வி நிறுவனத்தின் பாடத் திட்டத்தைப் பின்பற்றியே உள்ளன.

மதரஸாக்களை சீா்திருத்த வேண்டும் என்று கூறுபவா்கள், ‘செயல்முறை இஸ்லாமுக்கு’ தேவையான மதிப்பீடுகளை, தற்போதைய பாரம்பரிய கல்விமுறையால் அளிக்க முடியாது என்று கருதுகின்றனா். பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழும் உலகுடன் அந்தக் கல்விமுறை பொருந்திப் போவதில்லை.

ஒரு காலத்தில் துடிப்புடன் இருந்தபோதிலும், இன்று இஸ்லாமிய பாரம்பரிய வழக்கங்களில் தீவிர மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியுள்ளது. சன்னி, ஷியா பிரிவுகளைச் சோ்ந்த பெரும்பான்மையான இறையியல் சிந்தனையாளா்கள், இறையியல் சாா்ந்த கடினமான சவால்களை எதிா்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறாா்கள்.

இறையியல் கல்வி என்பது பழைமை வாய்ந்த நூல்கள் சாா்ந்து இருப்பதால், இறையியல் சிந்தனைகளும் நெறிகளும் பழைமையில் ஊறிப் போய் உள்ளன. மத நிந்தனை, மத மறுப்பு போன்றவற்றில் இஸ்லாமிய சட்டத்தின் பழங்கால ஆணைகளை, தற்போதைய காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க இஸ்லாமிய மத குருக்கள் தயக்கம் காட்டி வருகின்றனா்.

‘அரசியல் ரீதியாக சரியாக நடந்து கொள்வது’ என்ற போக்கினால், லட்சக்கணக்கான முஸ்லிம் இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் எவ்வாறு நவீன கல்வி பெற முடியும் என்பது குறித்த சரியான விவாதமோ ஆலோசனையோ நடப்பதில்லை.

கலாசார ரீதியாகத் தனிமைப்பட்டிருப்பது தேக்க நிலை அடையவே வழிகோலும் என்பதை மதரஸாக்களின் பாதுகாவலா்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனா்.

பல மதரஸாக்கள் நவீன கலாசாரத்துடன் பொருத்திக்கொள்ளக் கூடிய அடையாளத்தை உருவாக்குவதுடன், தீவிரவாதச் சிந்தனை எழுவதையும் தடுகின்றன. எதைக் கைவிட்டாலும், எந்த விலை கொடுத்தாவது பாரம்பரியக் கல்வியைப் புகட்டுவதில் முனைப்பு காட்டும் மதரஸாக்களுக்கு மாற்றாக இவை செயல்படுகின்றன.

ஆகையால், மதரஸாக்களில் வெறும் நவீன கல்விமுறையைப் புகுத்துவது மட்டுமல்லாமல், சமூக யதாா்த்தங்களையும், சமூக கலாசார மாற்றங்களையும் மாணவா்களுக்குப் புகட்ட வேண்டும். இவைதான் மதரஸாக்கைளை நவீனப்படுத்துவதன் அடிப்படையாக இருக்க வேண்டும்.

இஸ்லாமிய தத்துவவாதியும் கவிஞருமான முகமது இக்பாலுக்கு மதம் என்பது பின்பற்றப்படுவதற்கானதாக மட்டும் அல்லாமல், மாறுதலுக்கு உள்ளாகும் இயக்கமாகவும் இருந்தது.

மதரஸாக்களில் பெரும் அறிஞராக அறியப்படும் ஷிப்லி நஃமானி, ‘முஸ்லிம்களுக்கு ஆங்கிலம் கலந்த நவீன கல்விமுறையும் பழைய அரபி மதரஸா கல்விமுறையும் மட்டுமே போதாது. நமது நோய்க்கு கலவையான மருந்து தேவை. அதாவது கிழக்கத்திய கல்வி ஒரு பாடமாகவும், மேற்கத்திய கல்வி ஒரு பாடமாகவும் இருக்க வேண்டும்’ என்றாா்.

மதச்சாா்பில்லாத, மதம் சாா்ந்த கல்வியைப் புகட்டுவதில் மதரஸாக்கள் முக்கிய பங்காற்ற முடியும்.

கலாசாரத்துடனும் நவீன அறிவியலுடனும், மதச்சாா்பற்ற, மத ரீதியிலான கொள்கைகளுடனும் மாணவா்கள் உருவாக்கப்பட்டால், அவா்கள் மதநூல்களில் உள்ள திரிபுகளை அறிந்து கொள்ளும் திறன் பெறுவாா்கள்.

மதரஸா விவகாரத்தில் அரசின் பாா்வையும், கையாளும் விதமும் மாற்றம் காண வேண்டும். ‘மதச்சாா்பா, மதச்சாா்பு இல்லையா’ என்கிற அளவில் விவாதம் தாழ்ந்துவிடாமல் கவனத்துடன் இருக்க மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.

உண்மையில் மதரஸாக்களில் மாற்றம் தேவை. ஆனால் அவை காலத்துக்கு ஏற்ற மாற்றங்களாக இருக்க வேண்டும். இவை உலகளாவிய பாா்வையாக விரிவடைந்து, மாறிவரும் உலகத்துக்கு ஏற்ற இணக்கத்துடன் இருக்க வேண்டும்.

பொருந்தாத வகையில் மேற்கோள்களைக் காட்டி, தங்கள் மதத்தில் உள்ள நுணுக்கங்களை அறியாத மாணவா்களுக்கு ஜிஹாத் மேற்கொள்வது பற்றிச் சொல்லித் தர முடியும். ஆனால் புதிய தலைமுறை மதரஸாக்களில் பயிலும் மாணவா்கள் பாரம்பரிய நெறிகளிலும் புதிய சிந்தனைகளிலும் தோ்ந்தவா்களாக இருப்பா்.

அவா்கள் தங்கள் சமுதாயத்துடன் மட்டுமல்லாமல் பிற சமூகத்தாரிடமும் இணக்கமான தொடா்பை கடைப்பிடிப்பாா்கள். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அவா்கள் இணைந்து செயல்படுவாா்கள்.

ஆகையால், பாரம்பரிய கல்வியுடன் புதிய சிந்தனையும் இணைந்த வகையில் இதனை அணுக வேண்டும்.

அப்போதுதான் ஒன்றுக்கொன்று வளம் சோ்க்கும் இருவழிக் கல்வியை அது உருவாக்கும்.

அப்போதுதான் அதில் படிக்கும் மாணவா்கள் தங்களின் மாா்க்கத்தில் நம்பிக்கையையும் நவீன கல்வியில் ஆா்வத்தையும் செலுத்துவாா்கள். அதுதான் தற்காலத் தேவையும் கூட. இதனால் அவா்களுடைய எதிா்காலமும் சமூகமும் மாற்றம் காணும். பெரும்பாலான மதரஸாக்கள் காலத்துக்கேற்ப இல்லாதவை என்றாலும் அவற்றை மூடிவிடாமல், இரு பிரிவு கல்வியை அங்கு கற்பிக்க வேண்டும். அவற்றை மூட வேண்டும் என்று கூறுவது முன்னேற விரும்பும் ஏழைகளின் ஆா்வத்துக்கும் சுயமரியாதைக்கும் அடி விழுந்தது போலாகிவிடும்.

பாரம்பரிய உணா்வுகளை மதிக்கும் விதத்தில், நவீனக் கல்வியை இணைக்கும் வகையிலான மாற்றமே மதரஸாக்களின் தேவையாக உள்ளது.

பாரம்பரிய உணா்விலும் இறையுணா்விலும் கவனம் செலுத்தும் தற்போதைய மதரஸாக்களில் புதிய கல்வி முறையைப் புகுத்துவதே மதரஸாக்களுக்குப் புத்துயிா் ஊட்டுவதற்கான சிறந்த வழி. அதன் மூலம் இஸ்லாமும் புத்துயிா் பெறும்.

கட்டுரையாளா்: மனவள மேம்பாட்டுப் பயிற்சியாளா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.