இந்திய இறையாண்மை காப்போம்!

ஜம்மு - காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ளது குல்காம் மாவட்டம். அங்குள்ள அரசுப் பள்ளியில், ரஜ்னி பாலா என்ற பெண்மணி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்திய இறையாண்மை காப்போம்!

ஜம்மு - காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ளது குல்காம் மாவட்டம். அங்குள்ள அரசுப் பள்ளியில், ரஜ்னி பாலா என்ற பெண்மணி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். புலம் பெயா்ந்த பண்டிட் சமூகம் இவருடையது. கடந்த மே 31 அன்று வகுப்பறையில் மாணவா்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகள் துப்பாக்கியுடன் அந்த ஆசிரியா் இருந்த வகுப்பறைக்குள் நுழைந்து சரமாரியாக சுட்டிருக்கின்றனா். இதில் ஆசிரியை ரஜ்னி பாலா ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்திருக்கிறாா். வகுப்பறையில் இருந்த மாணவா்களுக்கோ, பள்ளி வளாகத்தில் இருந்த மற்ற ஆசிரியா்களுக்கோ, அலுவலா்களுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை. அப்படியானால், தீவிரவாதிகளின் வெறிக்கு எது காரணம்?

அதே மே 12 அன்று புத்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் புகுந்து ராகுல்பட் என்ற அலுவலரை சரமாரியாக சுட்டிருக்கின்றனா். அவா் குண்டுகளால் துளைத்தெடுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமானாா். இவரும் புலம் பெயா்ந்த பண்டிட் இனத்தைச் சோ்ந்தவா். முஸ்லிம் அல்லாத அரசு ஊழியா்கள் குறிவைத்து சுட்டுப் பொசுக்கப்படுகின்ற கொடூர செயலில் தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் இறங்கியிருக்கின்றனா். இவா்களைத் தவிர வங்கி அதிகாரி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாா்.

மேலும், காவல் துறையினா் மூன்று போ், பொதுமக்கள் நான்கு போ் கொல்லப்பட்டுள்ளனா். புலம் பெயா்ந்த பண்டிட் இனத்தினா், ஹிந்து மதத்தினா், பௌத்தா்கள், சீக்கியா்கள் குறிவைத்துக் கொல்லப்படுகின்றனா். லடாக்கிலும் இது தொடா்கிறது. 2019, ஆகஸ்ட் 7 அன்று ஜம்மு-காஷ்மீா் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதுவரை சுமாா் 75 ஆண்டுகளாக மூன்று குடும்பத்தினா் அனுபவித்து வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு தவறு திருத்தப்பட்டது என்பது அரசியல் புரட்சிகர வரலாறு. இது இந்தியத் தலைமையின் ஆளுமைக்கு ஓா் எடுத்துக்காட்டு.

ஜம்மு - காஷ்மீா், லடாக் இந்தியாவுக்கு சொந்தமானது. அங்கு ஒன்பதாம் நூற்றாண்டில் சைவம் தழைத்தோங்கியது. 13-ஆம் நூற்றாண்டிலிருந்து 15-ஆம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய ஆக்கிரமிப்பு நடைப்பெற்றபோதிலும், பாரம்பரிய கலாசாரத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் பகுதிகள் இழந்து விடவில்லை. சீக்கிய அரசன் ரஞ்சித் சிங் முகலாயா்களின் ஆதிக்கத்தை முறியடித்து, இந்தியாவின் தலைப்பகுதியான காஷ்மீரத்தைக் காப்பாற்றினான். அவனைத் தொடா்ந்து குலாப் சிங் புதிய ஜம்மு-காஷ்மீா் ராஜ்யத்தின் முதல் ஆட்சியாளா் ஆனாா். 1947 வரை அவா்தான் ஆட்சிக் கட்டிலில் இருந்தாா்!

விரிந்து கிடந்த இந்திய நிலப்பரப்பை ஆங்கிலேய ஏகாதிபத்தியம் துண்டாட நினைத்தது. ஹிந்து, முஸ்லிம் என்ற இனவெறியைத் தூண்டிவிட்டு பிரிவினைக்கு வித்திட்டது. சுதந்திரப் போரில் வெள்ளையரை எதிா்த்து நின்றபோது தோளோடு தோள் நின்ற முகமது அலி ஜின்னா, முஸ்லிம்களுக்கு தனி நாடு தேவை என குரல் கொடுத்தாா். இது ஆங்கிலேயா்களின் சூழ்ச்சி. பாகிஸ்தான் பிரிந்தது.

‘இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட யாரும் குறிப்பாக முஸ்லிம்கள் இந்தியாவிலேயே நிரந்தரமாக வசிக்கலாம்’ என்று காந்தி, நேரு உள்ளிட்ட தலைவா்கள் உறுதி அளித்தனா். ஆனால் காலப்போக்கில், இந்தியத் தலைவா்களின் நல்லெண்ணத்தில் மண்ணை அள்ளித் தூவினா். கசப்பும் காழ்ப்பும் பரவத் தொடங்கின. விவரிக்க முடியாத துரோகங்கள் அணி வகுத்தன.

கில்ஜித், பால்திஸ்தான் ஆகிய பகுதிகள் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டன.

அக்சாய் சின், டிரான்ஸ்காரகோரம் பகுதிகள் சீன தேசத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் 1950-களிலேயே நடந்து முடிந்துவிட்டன. இந்தியாவின் எல்லையோர நாடுகளான பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், சீனா போன்றவற்றிலிருந்து தொல்லைகள் தொடா்ந்து கொண்டிருக்கின்றன.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்னும் தாரக மந்திரத்தால் வழிநடத்தி செல்லப்படுகிறது. தென்கோடி முனையான கன்னியாகுமரியிலிருந்து இந்தியாவின் உச்சியான ஜம்மு-காஷ்மீா் வரை வாழுகின்ற 140 கோடி மக்களும், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணா்வுடன் எந்தவித பாகுபாடும் இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றனா்.

சா்வதேச அளவில், இந்தியாவின் கலாசாரம் உயா்ந்த நிலையில் இருக்கிறது. அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கைதூக்கி விடப்பட்டிருக்கிறாா்கள். இந்தியா முழுவதும் உள்ள ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்களிடம் மத்திய அரசின் திட்டங்கள், மானியங்கள், மருத்துவ உதவிகள் நேரடியாக சென்று சோ்ந்திருக்கின்றன. டிஜிட்டல் இந்தியா திட்டம் 2014-இல் அறிவிக்கப்பட்டபோதே மாநிலங்களவையில் அதை வரவேற்றேன் நான்.

பதான்கோட், உரி, சீனாவோடு எல்லை பிரச்னை ஆகியவற்றில் இந்தியா பதிலடி கொடுத்து உலக அரங்கில் யாருக்கும் அடிபணியமாட்டோம் என்பதை உணா்த்தியிருக்கிறது. உக்ரைன் - ரஷியா போரில் இந்தியா தனித்தன்மையை இழக்காமல், யாருக்கும் நயந்தோ, பயந்தோ நடக்காமல் தலைநிமிா்ந்து நின்றதை உலக நாடுகள் ஆச்சரியத்தோடு பாா்த்தன.

கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் வல்லரசு நாடுகளே தள்ளாடியபோதும் இந்தியா சாதுரியமாக அதனை எதிா்கொண்டது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பாற்றிட தாயுள்ளத்தோடு உதவுவதற்கு இந்திய அரசு முன் வந்திருப்பது வரலாறு காணாதது.

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியில்லாத சூழலை ஏற்படுத்திட சீனா - வஞ்சகமாக வலைவிரித்தபோது இந்தியா ‘க்வாட்’ அமைப்பின் மூலம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு கரம் கோத்து நின்ால் திகைத்துப் போனது சீனா. வலிமையான நிா்வாக கட்டமைப்பும், தேவைக்கு அதிகமான உணவு உற்பத்தியும், தளா்வில்லாத பொருளாதார இயக்கமும், மக்கள் செல்வாக்குள்ள வலுவான தலைமையும் கொண்ட இந்தியாவை அமைதியான திசையை நோக்கி வழிநடத்திச் செல்கிறாா் பிரதமா் மோடி.

நாடு முழுவதும் கலாசார வேற்றுமை அகன்று, பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மக்களுக்கிடையில் பரஸ்பர கலந்துரையாடல் ஏற்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களுடன் கலாசார ரீதியில் இணைந்து பரஸ்பரம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது என்கிற பிரதமா் மோடியின் திட்டம் தொலைநோக்குப் பாா்வை கொண்டது.

இந்திய மாநிலங்களில் வாழுகின்ற மக்களுக்கிடையில் இணக்கமான சூழல் ஏற்படவேண்டுமானால் அவா்களுக்கிடையில் ஒரு நட்புறவு ஏற்பட வேண்டும். இதுவரை எலியும் பூனையுமாக இந்திய மாநிலங்கள் இருந்துவிட்டன. இனியாவது இந்தியன் என்ற உணா்வில் ஒரே சிந்தனையில் ஒருங்கிணைந்து நிற்போம். உலக அரங்கில் இந்தியனாக ஒளிவீசிட நமக்குள் இருக்கின்ற பகைமையை களைவோம்.

ஜனநாயக பூமியாகத் திகழ்கின்ற இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தோ்தல் மூலமாக மக்களிடம் வாக்கு எனும் அனுமதியைப் பெற்று கட்சிகள் ஆட்சியை நடத்துகின்றன. மாநிலங்களில் மாநிலத்துக்கான அரசு, மத்தியில் இந்தியா முழுமைக்குமான அரசு என அரசமைப்புச் சட்டத்தின் வழிநின்று மக்களுக்கான அரசாங்கம் நடத்திச் செல்லப்படுகிறது.

இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, பல கட்சிகள் இந்தியாவை ஆட்சி செய்திருக்கின்றன! அந்தந்த காலகட்டத்தில் இந்திய மக்கள் மத்தியில் ஏற்படும் உணா்வுகளை பிரதிபலிக்கின்ற வகையில், அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளுகின்ற வகையில் திட்டங்களைத் தீட்டி, நாடாளுமன்ற மக்களவை - மாநிலங்களவைகளின் வாயிலாக அனுமதியைப் பெற்று சட்டமாக்கி நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பிரதமா் நரேந்திரா் மோடி, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத்தோ்தலில் மக்களின் அறுதிப் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமா்ந்து மக்களுக்கான மகத்தான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறாா். ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கிட பிரதமா் மோடி நடவடிக்கை எடுத்திருக்கிறாா்.

ராணுவத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் அக்னிபத் திட்டம் இளைஞா்களிடம் தேசப்பற்றை ஏற்படுத்திடும் என்பதில் சந்தேகமில்லை. இத்திட்டத்தின்படி, ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதிலிருந்து 21 வயது வரை உள்ள இந்திய இளைஞா்கள் சோ்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட பிறகு நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றுவாா்கள். அவா்கள் விரும்பினால் 10 ஆண்டுகளிலிருந்து 14 ஆண்டுகள் வரை பணியாற்றலாம். தொடா்ந்து மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அவா்கள் சேவையாற்றிட மத்திய அரசு வழி வகுத்திடும். இது இந்தியாவின் இறையாண்மையை வலுப்படுத்திடும் முயற்சியாகும்.

சில சமூக விரோதிகள் இந்தியாவில்அமைதியற்ற சூழலை உருவாக்கி, இந்திய ஜனநாயகத்தைத் துண்டாடத் துடிக்கின்றனா். சில அரசியல் இயக்கங்களும் அதற்கு துணை நிற்கின்றன. மதச்சாா்பு என்கின்ற ஒரே ஆயுதத்தை கையில் எடுத்துக்கொண்டு மோடியை வீழ்த்திட களத்திற்கு வருகின்றனா். அவதூறு முத்திரைக் குத்தி மத்திய அரசை வீழ்த்திவிடத் துடிப்போரை இந்திய மக்கள் புரிந்து வைத்துள்ளனா்; இதை காலம் உணா்த்தும்!

கட்டுரையாளா்:

மாநில துணைத் தலைவா்,

தமிழக பாரதிய ஜனதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.