கல்வியும் ஒழுக்கமும்

கல்வியும் ஒழுக்கமும்

 ஒரு நாட்டின் முன்னேற்றத்தைப் பல தரவுகளின் அடிப்படையில் கணக்கிடும்போது அதில் கல்வியே முதன்மையாக அடையாளப்படுத்தப்படுகிறது. கல்வியும், கல்வி சார்ந்த ஒழுக்க நெறியுமே மனிதனைப் பண்புள்ள மனிதனாகச் செதுக்குகிறது. இத்தகைய வாழ்வியல் விழுமியங்களை, உலகில் தோன்றிய மூத்த தமிழினம் கடைப்பிடித்தொழுகியதோடு உலகிற்கும் வழிகாட்டியது.
 மனித வாழ்வியல் சிறக்க இலக்கணம் வகுத்தளித்த திருவள்ளுவர், "ஒழுக்கநெறியைப் பின்பற்றி சமூகத்தோடு பொருந்தி வாழாதோர் எவ்வளவு கற்றிருப்பினும் அவர்கள் அறிவில்லாதவர்களே' என்று கூறுகிறார்.
 தமிழர் தங்கள் உயிரினும் மேலானதாகக் கருதிப் போற்றி வரும் இவ்வொழுக்கநெறி இன்றைய மாணவச் சமுதாயத்திடம் குன்றிவருவதின் விளைவாக, மாணவ-மாணவியர் சிலர் சமீப நாட்களாக அவ்வப்போது அரங்கேற்றி வரும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நம்மைக் கவலையில் ஆழ்த்தியுள்ளன.
 மகாகவி பாரதியார் கூறிய "நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்' அமைந்த புதுமைப் பெண்களா இவர்கள் என்று நம்மைப் பெருந்துயரத்தில் ஆழ்த்தும்படி, மாணவியர் சிலர் அச்சம் ஏதுமின்றி மாணவர்கள் சிலரோடு சேர்ந்து மது அருந்தி மயக்கத்தில் கூத்தாடுகின்றனர்.
 மாணவ சமுதாயத்திடம் காணப்படும் இத்தகைய சீர்கேட்டிற்கு நாம் மாணவர்களை மட்டுமே குறை கூறுவதில் பயனில்லை. மாணவர்களின் ஒழுக்கநெறியைக் கட்டமைப்பதில் பெற்றோர், கல்வியாளர்கள், அரசு, சமூகம் ஆகிய அனைத்துத் தரப்பினருக்குமே பொறுப்பு உண்டு என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
 அண்ணல் காந்தியடிகள், மாணவர்களுக்கு போதிக்கப்படும் கல்வி எப்படிப்பட்டதாக அமைய வேண்டும் என்பதைப் பற்றிக் கூறும்போது, "மனிதன் என்றால், வெறும் அறிவு மாத்திரமல்ல, ஸ்தூல உடலுமல்ல, உணர்ச்சி மட்டுமா என்றால் அதுவும் அல்ல. அறிவு, உடல், உணர்ச்சி ஆகிய மூன்றும் உரிய முறையிலே ஒன்று கூடினால்தான் ஒருவன் மனிதன் ஆகிறான். இவை மூன்றையும் வளர்ப்பதே உண்மையான கல்வி முறையாகும்' என்று கூறினார்.
 மேலும், அவர், "மாணவர்கள் படிக்கிறபோதே ஒழுக்கத்தை அபிவிருத்தி செய்துகொண்டு, எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மனத்திண்மையைப் பெறாவிட்டால் கல்வி கற்பதாலும், ஷேக்ஸ்பியர், வேட்ஸ்வொர்த் போன்ற கவிகளைத் திறமையாகக் கற்பதாலும் எவ்விதப் பயனும் இல்லை' என்னும் கருத்தை அழுத்தமாகக் கூறி ஒழுக்கநெறியின் அவசியத்தை மாணவ சமுதாயத்திற்கு உணர்த்தினார்.
 அண்ணல் காந்தியடிகள் தீர்க்கதரிசனமாகக் கூறிய, அறிவையும் ஆன்மாவையும் உயர்ந்த நிலைக்கு வளர்த்தெடுக்கக் கூடிய கல்விமுறையின் கருத்தாக்கத்தை இன்றைய கல்வியாளர்களும் அரசும் மனதில் கொண்டு கல்விக்கொள்கையை வகுத்து மாணவ சமுதாயத்தை ஒழுக்க நெறியில் கொண்டு செலுத்த முயல்வது காலத்தின் கட்டாயம்.
 இன்றைய காலகட்டத்தில், பல கல்வி நிறுவனங்கள், தேர்ச்சி சதவீதக் கணக்கில் தங்கள் பள்ளி முதன்மை இடத்தைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆட்படுகின்றனர். இதன் விளைவாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உறவில் இடைவெளி அதிகரித்து, மாணவர்கள் ஆசிரியர் மீது வெறுப்பு கொள்கின்றனர்.
 மாணவர்களுக்கு கல்வி போதிப்பது ஆசிரியரின் கடமையென்றாலும், கற்பித்தல் முறையில் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆட்படா வகையில் அவர்களின் மனதைக் கவரும் வண்ணம் எளிய வடிவிலான கற்பித்தல் முறையைக் கையாள முயல வேண்டும்.
 மேலும் கடந்த காலத்தைப் போல, ஒழுக்கநெறி செழிக்க, பள்ளிகளில் வாரம் ஒரு முறை நீதி போதனை வகுப்பைத் தொடங்க வேண்டும். கல்வி சுற்றுலா ஒன்றை ஏற்படுத்தி, மாணவர்களை வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கோயில்கள், கோட்டைகள் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று நமது கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை மாணவர்களின் மனதில் பதிய வைத்து அவர்களின் மனதைச் செம்மைப்படுத்தும் பணியினை கல்விக் கூடங்கள் மேற்கொள்ள வேண்டும்.
 பள்ளிப் பருவத்தில் மாணவர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் பகுத்தாய்ந்து பார்க்கும் மனநிலை இருக்காது என்பதால், திரைப்படத்தில் தோன்றும் கதாநாயகர்களைப் போல தங்களை பாவித்துக் கொண்டு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவர். போதைப் பழக்கம், குற்றச் செயல்களில் ஈடுபடுதல் போன்ற ஒழுக்க நெறிக்கு ஒவ்வாத நடவடிக்கைகளுக்கும் ஆட்பட்டு விடுவர்.
 இத்தகைய அவல நிலையிலிருந்து மாணவர்களை மீட்டு அவர்களைப் பாதுகாத்து நல்வழிப்படுத்திட பள்ளிகளில் உளவியல் வல்லுநர்களை அவ்வப்போது வரவழைத்து மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இன்றைய வாழ்வில் கூட்டுக்குடும்ப முறையை நாம் தொலைத்துவிட்ட காரணத்தால் தாத்தா, பாட்டி, நெருங்கிய உறவினர் ஆகியோரின் வழிகாட்டுதலும் அரவணைப்பும் இன்றைய குழந்தைகளுக்கு இல்லாமல் போய்விட்டது. மேலும், இன்று பெரும்பாலான குடும்பங்களில் கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துவதற்கோ அவர்களை நெறிப்படுத்துவதற்கோ இயலாமல் போகிறது.
 இவ்வாறான பெற்றோரின் செயல்பாடுகளால் குழந்தைகள் கைப்பேசியில் மூழ்கி, ஒழுக்க நெறிக்கு மாறான பல விஷயங்களை அறிந்துகொண்டு, வாழ்வில் திசை மாறிச் செல்லும் அவலநிலை உருவாகி விடுகிறது. எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் நேரம் செலவிடுவதைக் கடமையாகக் கருதுவதோடு, அவர்களை நெறிப்படுத்தும் பணியை ஒரு தவமாக மேற்கொள்ளுதல் வேண்டும்.
 எப்படியும் வாழலாம் என்பதைத் தவிர்த்து இப்படித்தான் வாழவேண்டும் என்னும் ஒழுக்க நெறியினை இன்றைய வளர் இளம் பருவத்தினருக்குக் கற்பிக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. இதனை உணர்ந்து அதற்கான முனைப்புகளில் இப்போதே ஈடுபடுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com