10% இட ஒதுக்கீடு: மாற்றத்துக்கான தொடக்கம்!


தனிநபர் அல்லது குடும்பம் என சிந்திக்காது ஒட்டுமொத்த சமூக நலன் சார்ந்தும், அதில் உதவி தேவை எவருக்கோ அவருக்கு எந்தவகையில் ஒரு தேசம் உதவிட முடியும் என்ற அளவீட்டோடும் அணுக வேண்டிய நேரத்தில், 10% இட ஒதுக்கீட்டை அரசியலாக்குவது வேதனையாக இருக்கிறது.
இது எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களின் இட ஒதுக்கீட்டை பாதிக்கும் என்று பொய்ப் பிரசாரம் செய்வது அரசியல் என்பதைத் தாண்டி துவேஷ வக்கிரத்தனம். சனாதன எதிர்ப்பு என்று குழப்ப முயற்சி நடக்கிறதே ஒழிய, அந்தக் கூற்றில் நேர்மை இல்லை.
இருக்கக் கூடிய இட ஒதுக்கீட்டு முறையில் எந்த பாதிப்பும் கிடையாது. யாருடைய இட ஒதுக்கீட்டையும் எடுத்து அல்லது குறைத்துவிட்டு இன்னொரு தரப்பிற்கு கொடுக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது அது எப்படி சமூகநீதிக்கு எதிரானதாக இருக்க முடியும்?
தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டில் பிசி 26.50%, பிசி (முஸ்லிம்) 3.50%, எம்பிசி (டிசி) 20%, எஸ்சி 15%, எஸ்சி (அருந்ததியர்) 3%, எஸ்டி 1% ஆகியவை அப்படியே தொடரும். பொது பிரிவினருக்கு இருக்க கூடிய மீதம் 31% இடத்தில் 10%, அதில் இருக்க கூடிய பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பங்களுக்கு உதவும் விதமாக உள் ஒதுக்கீடு ஏற்படுத்தப்படுள்ளது.
அதே போல் தான் தேசிய அளவில் எஸ்டி 7.5% , எஸ்சி 15% , ஓபிசி 27% இட ஒதுக்கீடு தொடரும், மீதம் உள்ள 51.5% பொதுப்பிரிவினர்க்கான இடத்தில் 10% பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.
அந்த முடிவை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அங்கீகரித்துத் தீர்ப்பும் வழங்கியிருக்கிறது.
எனக்கு உதவுங்கள் என்று சொல்லலாம்; பின்தங்கியுள்ள அந்த மக்களுக்கு உதவுங்கள் எனச் சொல்லலாம். ஆனால் அவர்களுக்கு உதவாதீர்கள் என்று சொல்வது என்ன மாதிரியான சமூகநீதி?
இட ஒதுக்கீடு என்பது சமூகநீதிக்கான கட்டமைப்பு தானே ஒழிய, அது வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல. அதனால் பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு என்பது சமூகநீதி அல்ல என்கிற அடிப்படையில் கருத்தியல் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.
"தலித்' என்ற வார்த்தைக்கு, "கல்வி மறுக்கப்பட்டவர்; உழைத்தும் உழைத்த உழைப்பிற்கு ஊதியம் தரப்படாமல் ஒடுக்கப்பட்டவர்; தீண்டாமையால் தாழ்த்தப்பட்டவர்' என பொருள் கூறப்படுகிறது. அவை ஜாதிய கட்டமைப்பு காரணமாக இந்தியாவில் இருப்பதால், அந்த வரையறையின் அடிப்படையில்தான் எஸ்சி, எஸ்டி, ஓபிசி என்று நிலை அளவில் இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது.
ஆக ஜாதியை வகைப்படுத்தி அதில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி என பிரித்து இட ஒதுக்கீடு வழங்கியது அன்று சரி. ஆனால் அதே அளவுகோலை இன்றும் வைத்து அப்படியே தொடர வேண்டும் என்பது ஏற்புடைய வாதம் அல்ல. நம்முடைய காலகட்டத்தில் என்ன மாதிரியான ஆரோக்கியமான மாற்றம் தேவை என்பதை உள் வாங்கி, நாம் பொறுப்போடு எவருக்கு உதவி தேவையோ அவருக்கு அரசு உதவும் விதமாகக் கட்டமைத்திட வேண்டும்.
பிறப்பால் தாழ்ந்தவன் என்று சொல்லி உரிமை மறுக்கப்பட்டது எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவு பிறப்பாலேயே ஒரு ஏழை மாணவனுக்கு சலுகை கிடையாது என்று சொல்வதும் நியாயமற்றது.
எடுத்துக்காட்டாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா இன்று நல்ல மேல்தட்டு வாழ்வோடு வசதியாக வாழ்கிறார். இப்படி இருக்கும் ஒருவரை எப்படி "தலித்' என்று சொல்ல முடியும்? முன்பு குறிப்பிட்ட "தலித்' என்ற வார்த்தைக்கான வரையறையிலேயே இவர் வரமாட்டார்.
அவரது குழந்தைகளும், குழந்தைகளின் குழந்தைகளும் அந்த சலுகைகளைத் தொடர்ந்து பெறுவார்கள் என்பது என்ன நியாயம்? ஆ ராசாவின் குழந்தைகள் அவர்களாகவே முன்வந்து அந்த வட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். அந்த அடையாளத்தை அவர்கள் ஏன் சுமக்க வேண்டும்?
அப்படி ஆ. ராசா போல் சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்துவிட்ட குடும்பத்தினர் தங்களை அந்த இட ஒதுக்கீட்டு முறையில் இருந்து விடுவித்துக் கொண்டால், அதனால் பயன்பெறப் போவது இன்னொரு பட்டியலின குடும்பம் தானே! அதுதானே சமூகநீதியாக இருக்க முடியும்.
பட்டியலின மக்களுக்கான 18% இட ஒதுக்கீட்டை குறைக்கச் சொல்லவில்லை. அதில் முன்னேறிய பின்பும் சலுகையை அனுபவிக்காமல் அந்த 18% இட ஒதுக்கீட்டால் பலன் அனுபவிக்காத இன்னொரு பட்டியலின குடும்பத்தினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
நான் பிறப்பால் தலித் என்று சொல்வதும், அதனால் இட ஒதுக்கீட்டு முறை தொடர வேண்டும் என வாதம் செய்வதும் தொடர்ந்து பயன்பெற்ற குடும்பங்களே தொடர்ந்து அந்த ஒதுக்கீட்டின் பயனை அனுபவிப்பதும் சமூகநீதியல்ல, சமூக அநீதி!
ஜாதி ஒழிந்த பின் இட ஒதுக்கீட்டை அகற்றலாம் என்பது விதண்டாவாதம். ஜாதியை வைத்து இட ஒதுக்கீடு கொடுங்கள் என்பதும், ஜாதியம் ஒழிய வேண்டும் என்று குரலெழுப்புவதும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஜாதியம் இருக்கும்வரை இட ஒதுக்கீடும் இருக்கும் என்றால், இட ஒதுக்கீடு இருக்கும்வரை ஜாதிகளும் இருக்கும். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அமைந்தால் மட்டும்தான் ஜாதியம் ஒழியும் என்பதுகூடத் தெரியாதவர்கள் பகுத்தறிவு பேசுகிறார்கள். என்ன பகுத்தறிவோ?
நீதி அரசர்கள் கூறுவதும் இதுவே. ஜாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை தொடர்ந்து ஆதரிப்பது, மாற்றமே இல்லாமல் நீடிக்க செய்வது, ஜாதிய கட்டமைப்பிற்கு நாமே உயிர் கொடுப்பது போன்றது என்கிறார்கள்.
அடுத்த வாதம் பிரதிநிதித்துவம் இழக்க நேரிடும், பறிக்கப்படலாம் என்பது. அதாவது எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்கள் பிரதிநிதித்துவம் பறிக்கப்படுமோ என்றும் கேள்வி எழுப்புகிறவர்கள் டாக்டர், ஐஏஎஸ், ஐபிஎஸ் பட்டியலில் உள்ள ஜாதியினர் பற்றியும், அவர்களின் பிரதிநிதித்துவம் பற்றியும் பேசுவதில்லை.
ஒவ்வொரு பிரிவிலும் இது உண்டு. எடுத்துக்காட்டிற்கு தமிழகத்தில் எஸ்சி பட்டியலில் சுமார் 70 ஜாதிகள் வருகின்றன. அதில் 50-க்கும் மேற்பட்ட ஜாதிகளில் ஒருவர் கூட மருத்துவர் ஆனதில்லை! முதல் முறையாக இந்த சமூகத்தில் இருந்து மருத்துவர் படிப்பிற்கு தேர்வாகியுள்ளார் என்று செய்தி வருவதில் இருந்து இந்த உண்மை தெரியவில்லையா?
எஸ்சி பட்டியலுக்கு வழங்கப்பட்ட 18% இட ஒதுக்கீட்டில் எந்தெந்தப் பிரிவினருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. எஸ்டி, ஓபிசி, எம்பிசி என அனைத்து பட்டியலிலும் சிறுபான்மை இன மக்கள் உண்டு.
அவர்களுக்கு இன்று வரை பெரிதாக இட ஒதுக்கீட்டால் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. அந்த பிரதிநிதித்துவம் சார்ந்து பேச எவரும் முன்வருவதுமில்லை!
அப்படி செய்தால் இந்தியா முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட ஜாதிகள், அதில் 25,000 துணை ஜாதிகள் வரும். இவைகளின் ஒவ்வொரு ஜாதிப் பிரிவுக்கும் பிரதிநிதித்துவம் சார்ந்து ஆய்வு செய்தால் என்னவாகும்? பிரதிநிதித்துவம் பேசத் தொடங்கினால், அது இந்த சமூகத்தை ஒன்றுபடவிடாது பிரிக்கும் வேலையே தவிர வேறு என்ன?
நாம் நம் காலத்தில் இட ஒதுக்கீடு கொள்கையில் மாற்றம் கொண்டு வந்து எவருக்கு உதவி தேவையோ அவரை தாங்கிப் பிடிக்கும் அரசாங்க கட்டமைப்பை உருவாக்குவதில் தான் ஆரோக்கியமாக ஒன்றுமையான உணர்வு உருவாகும். சமூக, பொருளாதார அடிப்படைகள் இரண்டையும் வைத்து ஆரோக்கியமான மாற்றத்தைத் தொடங்கி வைப்பது அவசியம்.
அந்த மாற்றத்தை எவர் இட ஒதுக்கீட்டையும் குறைக்காமல் பறிக்காமல் பொது பிரிவில் இருந்து தொடங்குவது வரவேற்கத்தக்கது.
60 ஆண்டுகளில் பல முறை கூட்டுறவுக் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது அரசு. அத்தனை முறையும் 99% பயனடைந்தது நாட்டாமை வர்க்கம் தானே ஒழிய, பாட்டாளி வர்க்கம் அல்ல! நிலத்தில் உழைத்த வர்க்கம் அதனால் எவ்வளவு பயன்பெற்றது என கேள்வி கேட்க வேண்டிய இடதுசாரிகள் மெளனம் காக்கிறார்கள். பொருளியல்வாதம் பேச வேண்டியவர்கள், ஜாதிய வாதம் பேசும் கட்சிகளுக்கு வெண்சாமரம் வீசுகிறார்கள்.
பொருளாதாரம் சாராத இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கான குரல் அல்ல. இது உணர்வைத் தூண்டி என்றும் வாக்குவங்கியாக மக்களை வைத்து கொள்வதற்காக நடத்தப்படும் வெறுப்பு அரசியல். பயன்பெற்றவர்களே தொடர்ந்து பயனடைவதையும், மற்றவர்கள் வாக்கு வங்கிகளாக இலவசத்துக்குக் கையேந்தும் அடித்தட்டு மக்களாகத் தொடர்வதையும் உறுதிப்படுத்தும் அரசியல் மோசடி.
இந்த நாட்டில் அரசு வேலை வாய்ப்பு என்பது இன்று 1% கூட கிடையாது. 99% தனியார் வேலைவாய்ப்பு தான். இப்படி சூழலில் தொழில் முனைவோர்களாக ஏன் பட்டியலின மக்கள் வர முடிவதில்லை , ஏன் அரசு டெண்டர் முதல் அனைத்தும் ஆதிக்கவாதிகள் கையிலேயே உள்ளது என பல கேள்விகளுக்கு இவர்களிடம் பதில் கிடையாது. ஏன் என்றால் இந்த திராவிட அரசியலே ஒரு நாட்டமை அரசியல் தான். அதில் துவேஷம் இருக்குமே தவிர நேர்மை எப்போதுமே இருந்ததில்லை.
ஒரு வகுப்பறையில் மாணவர்களை இவர் எஸ்சி, எஸ்டி என வகைப்படுத்திக் கேட்கும் இடத்திலேயே நாம் பல மாணவர்களை உளவியல் ரீதியாகக் காயப்படுத்துகிறோம். காரணமே இல்லாமல் மனதளவில் சோர்வையும் காயத்தையும் உருவாக்குகிறோம். பெரிய வாய்ப்புகளையும், வசதிகளையும் குழந்தைகளுக்கு உருவாக்குவதை விட்டுவிட்டு, அவர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறோம்.
இதில் நிச்சயம் மாற்றம் தேவை. எல்லா குழந்தையும் நம் குழந்தைகள்; அவை தான் தேசத்தின் எதிர்காலம்; அவர்களுக்காகத் தான் உழைக்கிறோம் என்கிற பரந்த மனபான்மை, பல நல்ல மாற்றங்களுக்கான தொடக்கமாக இருக்கும்.
பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட முற்பட்ட சமுதாயத்தினருக்கு 10% இடஒதுக்கீடு தீர்ப்பு என்பது நியாயமானது. அது எவர் இடத்தையும் எடுத்து எவருக்கும் கொடுக்கவில்லை. மாறாக, ஒரு நல்ல மாற்றத்திற்கான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...