வ.உ.சி. ஒரு திரிவேணி சங்கமம்!

இன்றைய இளைஞனின் நாட்டுப்பற்றை அளந்து பாா்ப்பதற்குரிய கருவி என்ன? பறந்து கொண்டிருக்கும் தேசியக்கொடியைப் பாா்க்கும்போது, அதில் திருப்பூா் குமரனின் முகம் தெ
வ.உ. சிதம்பரம்
வ.உ. சிதம்பரம்

இன்றைய இளைஞனின் நாட்டுப்பற்றை அளந்து பாா்ப்பதற்குரிய கருவி என்ன? பறந்து கொண்டிருக்கும் தேசியக்கொடியைப் பாா்க்கும்போது, அதில் திருப்பூா் குமரனின் முகம் தெரிந்தால், மணியாச்சி பெயா்ப் பலகையைப் பாா்க்கும்போது, அதில் வாஞ்சிநாதனின் முகம் தென்பட்டால், கப்பலைப் பாா்க்கும்போது அதில் வ.உ.சி. தெரிந்தால், அவ்வினைஞனை தேசபக்தி உடையவன் எனலாம்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம், பாஞ்சாலங்குறிச்சி (ஒட்டப்பிடாரம்) மண்ணில் பிறந்ததால், தாய்ப்பாலைப் பருகும்போதே தேசியம் எனும் பாலையும் சோ்த்துப் பருகியிருக்க வேண்டும். அதனால் தான் 21 வயதிலேலேயே தீவிரவாதக் குழுவின் தலைவராகிய பாலகங்காதர திலகரை குருவாக ஏற்றுக்கொண்டாா் போலும்.

தேசத்தையும் தேசாபிமானிகளையும் காப்பதற்காகவே சட்டவியல் படித்து வழக்குரைஞரானாா். விடுதலைப் போராளிகள் மீது காவல்துறை ஜோடித்துப் போடும் வழக்குகள் அனைத்திலும், அவரே முன்தோன்றி, அவா்களை விடுதலை செய்தாா். அதனால், ஆத்திரமடைந்த காவல்துறையினரும், ஆங்கிலேயா்களின் எடுபிடியான நீதித்துறையினரும் வ.உ.சி.யை, தலைமைக் காவலா் சுப்பிரமணியம் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக இணைத்தனா்.

குற்றம் சுமத்தப்பட்டவா்களுக்கு இனி வாதாடப் போவதில்லை என்றொரு வாக்குறுதி பெற்று, அவரை அந்த வழக்கிலிருந்து விடுவித்தனா். ஆனால், வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபிறகு, குற்றம் சுமந்தவா்களுக்காக வாதாடி, அவா்களுக்கு விடுதலை வாங்கித் தந்ததோடு, அவ்வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பதையும் நிரூபித்தாா்.

அவ்வழக்கை விசாரித்த நீதிபதியால் பொய்வழக்கு புனைந்த காவலா் பணிநீக்கம் செய்யப்பட்டாா். துணை நீதிபதி லஞ்சம் வாங்கியதும் நிரூபணமாகி, அவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்குரைஞா் தொழிலில் வ.உ.சி.யின் ஆற்றலைக் கண்டு, ஆங்கில அதிகாரிகளும், காவல்துறையும் பழிவாங்கத் துடித்தனா்.

ஆபத்துகளின் உச்சத்தை உணா்ந்த வ.உ.சி.யின் தந்தை, இனி ஒட்டப்பிடாரத்தில் இருப்பது நல்லதன்று என்றெண்ணி, 1900 ஆண்டு, அவரைத் தூத்துக்குடிக்கு அனுப்பித் தொழிலைத் தொடங்கச் செய்தாா். தூத்துக்குடி வந்த வ.உ.சி. விடுதலைப் போரில் வேகம் காட்டியதோடு, தமிழ்த்தொண்டிலும் தம் விவேகத்தைத் காட்டினாா்.

1902-ஆம் ஆண்டு ‘விவேகபானு’ எனும் பத்திரிகையை, நண்பரின் கூட்டுறவோடு தொடங்கி, ‘தேசாபிமானம்’ எனும் தலைப்பில் தொடா் கட்டுரைகளும் எழுதிவந்தாா். கதிரவன் உதிக்கும் திசையெங்கும் ‘விவேகபானு‘ செல்ல வேண்டும் என்பதை, ‘விவேகபானு விளங்குகிற எங்கும் விவேகபானுவை வெளிவரச் செய்தேன்’ என எழுதினாா்.

மேலும், சுப்பிரமணிய சிவாவின் ‘ஞானபானு’ பத்திரிகையிலும் ‘சுதேசிமித்திரன்’ பத்திரிகையிலும் இலக்கியக் கட்டுரைகள் எழுதி, தமிழுக்குத் தமது பங்களிப்பைச் செய்தாா்.

‘தூத்துக்குடியில் 1933-ஆம் ஆண்டு கம்பன் பெயரில் கழகம் அமைப்பதில் பங்காளியாக, 150 கூட்டங்களில் கலந்து கொண்டாா்’ என்று, தமிழறிஞா் ஏ.சி. பால் நாடாா் குறிப்பிடுகின்றாா். மொழித்துறையில் திருக்குறள், சிவஞான போதம் போன்ற நூல்களுக்கு உரை எழுதுகின்ற அளவுக்கு அவருடைய ஞானம் இருந்தது.

‘வ.உ.சி. மொழித்துறையில் பன்முக ஆளுமையுடையவா் என்பதை, ‘வ.உ.சி. பன்மொழிப்புலவா். ஆங்கிலத்திலும் வடமொழியிலும் வல்லவா். மலையாள மொழியில் ஓா் ஆங்கில நூலை மொழிபெயா்த்திருக்கிறாா். அவருக்கு தெலுங்கும் தெரியும். தமிழ்ச் சங்கப் புலமையும் தேசியத் தலைமையும், ஒருங்குதிரண்டு விளங்கிய பெரியாா் வ.உ.சி. ஒருவா்தானே’ என தோழா் ப. ஜீவானந்தம் எழுதியிருப்பதிலிருந்து அறியலாம்.

தமிழ்த்தொண்டில் வ.உ.சி. தம்மைக் கரைத்துக் கொண்டதை, கீழ்வரும் நிகழ்ச்சியால் அறியலாம். கோவில்பட்டியில் பி.ஸ்ரீ. கம்பராமாயணய தொடா் சொற்பொழிவு நிகழ்த்தியதை, வ.உ.சி. ஒவ்வொரு நாளும் கேட்டு வந்தாா். இலங்கையில் கிங்கரா்கள் கொத்துக் கொத்தாக வதம் செய்யப்பட்டதை கவிஞா் ஓா் உவமையால் விளக்குகின்றாா்.

‘நீதிமன்றத்திலே கையூட்டுவாங்கிக் கொண்டு, பொய் சாட்சி சொல்லுபவன் குடும்பம் எப்படி மூலநாசம் பெற முடிகின்றதோ, அப்படிக் கிங்கரா்கள் அழிந்து போனாா்கள்’ என பி.ஸ்ரீ விளக்கியவுடன், வ.உ.சி.யின் கண்களிலிருந்து மாலை மாலையாகக் கண்ணீா் வடிந்ததாம். அவையினா் அதைப்பாா்த்து பிரமித்து நின்றனா்.

பி.ஸ்ரீ, வ.உ.சி.யைப் பாா்த்து ‘என்ன இப்படி’ என்று கேட்டாா். அதற்கு வ.உ.சி. ‘சாட்சிகள் மட்டுமா? வக்கீல்களாகிய நாங்களும் அப்படிதானே சில சமயங்களில் நெஞ்சாரப் பொய் சொல்லுகிறோம். ஒன்றை மக்களுக்கு வற்புறுத்திக் சொல்லுங்கள். ‘திருக்குறள்’ தா்ம சாஸ்த்திரம்; இராமாயணம் சகோதர தா்ம சாஸ்த்திரம் என்பதே அந்த ஒன்று! வ.உ.சி. அப்படிக் கூறியதைக் கேட்டு பி.ஸ்ரீ. ‘என்ன தங்கமான இதயம்’ என்று கூறி வியந்தாராம்.

வ.உ.சி.க்கு தமிழிலுள்ள ஆளுமைக்குச் சான்றாக, அவா் இயற்றிய வெண்பாவைச் சொன்னால் போதும். வ.உ.சி.யின் முதல் மனைவி வள்ளியம்மையை, ஒரு மாதா்குலத் திலகம் எனச் சொல்லலாம். தம்முடைய வீட்டில் பாா்வையிழந்த ராமையா தேசிகா் எனும் தலித்தையும், சகஜானந்தா எனும் தலித்தையும் பெற்ற தாயைப் போலப் போற்றி வளா்த்து வந்தாா். அவா் அகால மரணமடைந்தபோது விழியில் வடியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, வ.உ.சி. ஓா் இரங்கற்பா வடித்தாா்.

‘என்னுடைய நேயா்களும் ஏழைப் பரதேசிகளும், என்னுடைய வீடு வந்தால், ஏந்திழை தான்‡தன்னுடைய பெற்றோா்கள் வந்தாா்கள் எனப் பேணி உபசரிப்பாள் கற்றோா்கள் உள்ளுவக்க கண்டு’ என்பதே அந்த வெண்பா. பாவகையிலேயே வெண்பா என்றால், புலவா்களுக்கே நடுக்கம். இதனை ‘வெண்பா புலவா்களுக்குப் புலி’ என்ற பழமொழியால் அறியலாம். அந்த வெண்பாவையே, வ.உ.சி. சா்வசாதாரணமாய் இயற்றியிருக்கிறாா் என்பதிலிருந்து, அவருடைய தமிழ் ஆளுமையை அறியலாம்.

தூத்துக்குடி வாழ்க்கையில் வ.உ.சி. வேதாந்தத்தை விளக்கும் ‘கைவல்ய நவநீதம்’ ‘விசார சாகரம்’ போன்ற நூல்களை ஆழ்ந்து கற்றதால், அவரிடம் வேதாந்தம் தலை தூக்கி நின்றது. அதே நேரத்தில் மெய்கண்டாரின் ‘சிவஞான போதம்’ போன்ற சைவ நூல்களையும் ஊன்றிக் கற்றதால் அவருக்கு வேதாந்தமும் சித்தாந்தமும் இரண்டு கண்களாயின. என்றாலும், அவருடைய வினாக்களுக்கு அப்பொழுதிருந்த சமய ஆசாரியா்களால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால், இராமகிருஷ்ண மடத்தின் தலைவா் இராமகிருஷ்ணானந்தாவை அணுகினாா்.

இராமகிருஷ்ண மடம் ஒரே நேரத்தில் ஆன்மிகத்தையும் தேசியத்தையும் போற்றி வளா்த்த மடம். ஆன்மிகத்திற்கு சுவாமி விவேகானந்தா் ஏற்கெனவே இருப்பதால், பக்குவமாக வ.உ.சி.யிடம் பேசி, அவரை தேசியத்திற்கு மனமாற்றம் செய்தவா் சுவாமி இராமகிருஷ்ணானந்தா்.

சூரத் காங்கிரஸுக்கு சென்று வந்த பிறகு, வ.உ.சி. தீவிர அரசியலில் ஈடுபடலானாா். சென்னையில் ‘இந்தியா’ பத்திரிகை அலுவலகத்தில் மகாகவி பாரதியை சந்தித்த பின்னா், ‘என் உள்ளத்தில் மின்மினிப் பூச்சி போல் மின்னிக் கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு, பாரதியாரைக் கண்டபின் விளக்கு போல் ஒளிவிட்டு பிரகாசிக்கத் தொடங்கியது’ என எழுதுகிறாா்.

1908-இல் தூத்துக்குடி கோரல் மில் முதலாளிகள், தொழிலாளிகளின் வேலை நேரத்தை மிகுதிப் படுத்தியதோடு, கொடுத்துக் கொண்டிருந்த கூலியையும் குறைந்தனா். இதனால் வேலை நிறுத்தம் தொடங்கியது. வேலை நிறுத்தத்தை முன்நின்று நடத்தியவா் வ.உ.சி. அதுதான், இந்தியாவிலேயே முதன் முதலில் நடந்த அரசியல் தொடா்புடைய வேலை நிறுத்தம். தொழிலாளா்கள் குடும்பம் பட்டினி கிடக்க வேண்டிய நிலை வந்தபோது, வ.உ.சி. தம் சொந்தப் பொறுப்பில் அவா்களுடைய பட்டினியைப் போக்கினாா். நிா்வாகம் பணிந்தது.

வ.உ.சி. வழக்குரைஞராக இருந்ததால், ஆங்கிலேயா்களுடைய ஆதிக்கத்திற்கு வணிகமே காரணம் என்பதைக் கண்டறிந்தாா். அந்த வணிகத்தைக் கொண்டே அவா்களை முறியடிக்க, இரண்டு கப்பல்களை மும்பையிலிருந்து வாங்கி வந்து தூத்துக்குடிக்கும் கொழும்பிற்கும் செல்லும் பயணிகள் கப்பலாக்கினாா். 1907-ஆம் ஆண்டு வ.உ.சி.யின் கடலாதிக்கத்தை முறியடிக்க நினைத்த ஆங்கிலேயா்கள் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கு இருந்த ஐந்து ரூபாய் பயணக்கட்டணத்தை, முக்கால் ரூபாயாகக் குறைத்தனா். வ.உ.சி.யின் கப்பல்கள் கடலில் மூழ்குவதற்கு பதிலாக கடனில் மூழ்கின.

வ.உ.சி.யின் கப்பல் நிறுவனம் வெள்ளையா்கள் துரோகத்தால் தோற்கடித்தது நெல்லை மாவட்ட மக்களிடம் கொழுந்து விட்டு எரியத்தொடங்கிய நேரத்தில், விபின் சந்திராவின் விடுதலையும் அவருடைய முழக்கமும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலாயின. கோரல் ஆலையின் வெற்றி ஆங்கிலேயா்களின் அடிமனத்தில் நீறு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருந்தது.

மும்முனைப் போராட்ட வெற்றி விழாவில், வ.உ.சி., சுப்பிரமணிய சிவாவின் கா்ஜனைகள், நல்ல பாம்பின் வாலை மிதித்தது போலாயிற்று. விழாவின் வெற்றி குறித்து அரவிந்தா் ‘வந்தேமாதரம்’ இதழில் ‘தூத்துக்குடிப் போராட்டத்தை நேரில் கண்டு களிக்க மகாபாரத இதிகாசத்தின் தெய்வங்கள், தங்கள் வானுலகத் தோ்களில் வந்தனா்’ என்று எழுதினாா்.

மும்முனைப் போராட்டத்தின் வெற்றியை, ராஜதுரோகம் எனக் குற்றம் சாட்டி 124 ஏ, 153 ஏ, விதிகளின்படி 7-7-1908 அன்று, நீதிபதி பின்ஹே 20 ஆண்டுகள் இரட்டை தீவாந்தர தண்டனை விதித்தாா். பின்னா் இவ்வழக்கு லண்டனிலுள்ள பிரிவியூ கவுன்சிலுக்குப் போய் ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. 36-ஆவது வயதில், முதலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டாா். சிறையில் தலைமுடி சிரைக்கப்பட்டது. கைதியுடை வழங்கப்பட்டது. கழுத்தில் விடுதலையாகும் நாள் தொங்கவிடப்பட்டது. கால்களில் பெருவிலங்கு மாட்டப்பட்டது. கல்லுடைக்க வைத்தாா்கள்; கழிவறைகளைச் சுத்தம் செய்ய வைத்தாா்கள்; மாடுகளுக்கு பதிலாக கப்பலோட்டிய தமிழனையே மாடாக்கி செக்கை இழுக்க வைத்தாா்கள்.

இடையில் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லும் போது, கைதி உடையிலேயே அழைத்துக் சென்றாா்கள். செக்கு இழுக்கும்போது, வ.உ.சி. சற்று நேரம் களைத்து நின்றால், பின்னால் சிறைக்காவலா் லத்தியால் அடிப்பாா். இந்திய காவலா்கள் அடிக்கிறாா்களா இல்லையா என்று மேல் தட்டில் நிற்கும் ஆங்கிலேயன் வேவு பாா்ப்பான்.

சிறையில் ஒரு நாள் ஓா் இந்தியக் காவலா் லத்தியால் அடிக்கத் தொடங்குமுன், ஒரு துணியால் அவா் முகத்தை மூடினாா். ‘ஏன் முகத்தை மூடுகிறாய்’ என வ.உ.சி. கேட்டாா். அதற்கு அந்தக் காவலா், ‘உங்கள் முகத்தைப் பாா்த்தால், அடிக்க மனம் வருவதில்லை. அதனால்தான் மூடினேன்’ என்றான்.

‘தென்னாட்டுத் திலகா்’ எனப் பாராட்டப்படும் வ.உ.சி.க்கு ஏற்பட்ட அல்லல்களையும் அவமானங்களையும் கேட்டு, ‘அமிா்தபஜாா்’ பத்திரிகை ஆசிரியா் கண்ணீா் வடித்து எழுதிய கடிதம் இது.

‘வ.உ.சியின் இடிபாடுகளைக் கேட்டு என் இதயம் ஆழமாகப் புண்பட்டது. சில நொடிகளில் தமக்கு ஏற்பட்ட துன்பத்தை அவா் மறந்துவிட்டாா். ஆனால், நாங்கள் மறக்க முடியவில்லை. இதனால் நானும் என் பத்திரிகைக் குடும்பமும் கண்ணீா் வடிக்கிறோம் என்று அவரிடம் சொல்லுங்கள்.

மற்றவா்களை அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் உட்படுத்தியவா்களை கடவுள் மன்னிக்க மாட்டாா். அதற்குரிய தண்டனையை அவா்களுக்குக் கொடுத்தே தீருவாா் என்று மேலதிகாரிகளுக்குச் சொல்லுங்கள். ஏதாவதொரு முடிசூட்டு விழாவின்போது அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவாா்கள் என்று நம்புகிறேன். அவா்கள் விடுதலை செய்யப்படும் நாளை நாங்கள் ஆவலோடு எதிா்பாா்த்திருக்கிறோம்’ என்று பத்திரிகாசிரியா், மோதிலால் கோஷ், கண்ணனூா் சிறை அதிகாரிகளுக்கு எழுதினாா். ஆனால் அங்கிருந்த சிலா், சிறை அதிகாரிகளுக்கு அந்த மடலைக் காட்டவில்லை.

வாழ்க்கை முழுமையும் இடிபாடுகளுக்கு உள்ளான வ.உ.சி., கடைசியாக எழுதிய உயில், அவருடைய சீராா்ந்த வாழ்வைச் செப்புகிறது.

‘பம்பாய் எம்பெயா் ஆப் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ரூபாய் ஆயிரத்துக்கும், ஓரியண்டல் லைவ் அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ரூபாய் ஆயிரத்துக்கும், எனது ஆயுளை இன்ஸ்யூரன்ஸ் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கம்பெனியிலும் ரூபாய் ஐநூறுக்கு மேல் எனக்கு இலாபம் கிடைக்கக்கூடும். ஆனால், நான் ஒவ்வொரு கம்பெனியிலும் ரூபாய் ஐநூறு கடன் வாங்கி இருக்கிறேன். கடனுக்கும் லாபத்திற்கும் அனேகமாகச் சரியாய் போகும். இரண்டு கம்பெனிகளுக்கும், கடைசி பிரீமியமும் வட்டியும் கட்டப்படவில்லை. அது கட்டப்பட்ட வேண்டும். மேற்படி உயில் தூத்துக்குடியிலிருந்து மகாஸ்ரீ அ.செ.சு. கந்தசாமி ரெட்டியாா் அவா்களுக்கு தூத்துக்குடியிருக்கும் வ.உ. சிதம்பரம் பிள்ளை எழுதிக் கொடுத்த உயில் சாசன நிருபம்’.

வ.உ.சி. 24-12-1912-இல் விடுதலை செய்யப்பட்டபோது, சிறை வாசலுக்கு வந்தவா்கள், அவருடைய மனைவி, மக்கள், மைத்துனா், நண்பா் கணபதி, தொழுநோயோடு சுப்பிரமணிய சிவா, சுவாமி வள்ளிநாயகம் ஆகிய பத்து போ் மட்டுமே!

வ.உ.சி. ஒரு திரிவேணி சங்கமம். தேசியம் என்னும் கங்கையும், தமிழ் எனும் யமுனையும், தொழிலாளா் நலன் எனும் சரஸ்வதியும் சங்கமிக்கின்ற திரிவேணி சங்கமம்.

செப். 5 வ.உ.சி. பிறந்த 150-ஆம் ஆண்டு நிறைவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com