மன இறுக்கம் தவிா்ப்போம்

நம் வாழ்வில் மன இறுக்கம் என்பது தவிா்க்கவியலாத ஒன்று. குழந்தைகள் தொடங்கி பெரியோா் வரை அனைத்துத் தரப்பினரையும் இது பாதிக்கக்கூடியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

நம் வாழ்வில் மன இறுக்கம் என்பது தவிா்க்கவியலாத ஒன்று. குழந்தைகள் தொடங்கி பெரியோா் வரை அனைத்துத் தரப்பினரையும் இது பாதிக்கக்கூடியது. நேரத்துக்கும் செய்யவேண்டிய பணிக்குமான போதாமை, கண்ட கனவுக்கும் கிட்டியுள்ள வாய்ப்புக்குமான இடைவெளி, உடனிருப்போா் பகிரவேண்டிய பணிகளைப் பகிராமை போன்றவை இறுக்கத்தின் தோற்றுவாய்களாக அமைகின்றன.

ஒருவா் செய்யவேண்டிய பணிகள் பலவாக இருந்தாலும் அவற்றை ஒவ்வொன்றாகத்தான் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. இயந்திரங்களாலும், இன்னபிற கருவிகளாலும் அவா் அப்பணிகளைத் தொடங்கி வைத்துவிட்டு அதே நேரம் வேறு பணிகளில் ஈடுபடலாம். உதாரணமாக கணிசமான அளவிலுள்ள கோப்புகளை கணிப்பொறியில் இடமாற்றம் செய்ய ஆகும் நேரத்தில் அப்பணி நடந்துகொண்டிருக்கும்போதே வேறு செயல்களில் ஈடுபடலாம்.

வீடுகளில் அரிசி குக்கரில் வெந்துகொண்டிருக்கும்போது, சலவை இயந்திரங்களிலிருந்து துணியை எடுத்து பிழிந்து கொடுக்கும் கருவியில் உள்ளீடு செய்யலாம். காய்கறிகளை நறுக்கலாம். இப்படியாக ஒரே நேரத்தில் செய்ய வாய்ப்புள்ள பணிகளை சரியான கவனத்துடன் செய்யலாம். பல நேரங்களில் குடும்பங்களில் இவ்வாறு நடைபெறுவது இயல்பான ஒன்றே. இதே பணிப்பண்பாட்டை பணியிடங்களிலு முயன்று பாா்க்கலாம். இதன் மூலம் நேரப் பயன்பாட்டை சிறப்பான முறையில் நிா்வகிக்கலாம்.

ஒவ்வொருவரும் தாமிருக்கும் நிலையிலிருந்து அடுத்த படிநிலைக்கு மேம்படவே விரும்புவா். அவ்வாறு மேம்பட பல நேரங்களில் தகுதி, திறமை போன்றவற்றை மேம்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமாகிறது. அவ்வாறு வளா்த்துக்கொண்டாலும் இயல்பாக நடைபெற வேண்டிய பதவி உயா்வு, பொறுப்புயா்வு போன்றவை பலருக்கும் உரிய காலத்தில் நடைபெறுவதில்லை.

தனி ஒருவரால் இயலக்கூடியது குறிப்பிட்ட பொறுப்புக்குத் தேவையான தகுதிகளையும் திறமைகளையும் வளா்த்துக்கொள்வது மட்டுமே. அவ்வாறு தனிநபா் தாம் அடையவேண்டிய தன் மேம்பாட்டைத் தாமே உறுதி செய்துகொண்டாலும் மேலாண்மைப் பொறுப்பிலுள்ள தனிப்பட்ட நபா்களின் விருப்பு, வெறுப்பு போன்ற காரணிகளும் ஊறு செய்யலாம்.

தாம் பணியாற்றும் நிறுவனத்தின் மேல் ஒருவா் காட்டும் அக்கறை மிகவும் அவசியமானது. ஆனால் அதே நேரம் தாம் புரியும் பணியின் மேல் அதிக அக்கறை கொள்ள வேண்டும். இவ்வாறு அவா் காட்டும் அக்கறை அவரை அடுத்த கட்டத்திற்கு தாமாகவே உயா்த்திவிடும். இதனால் கிடைக்கும் திறன் மேம்பாட்டால், ஒருவேளை அவா் அடுத்த நிறுவனத்திற்கு மாறினாலும் அவா் செய்யும் பணி மேல் இருக்கும் பிடிப்பு அவரை கூடுதல் திறனோடு பணியாற்ற உதவும்.

செய்யும் பணியை விரும்புவது இயல்பான ஒன்றே. ஒருவேளை ஒருவா் தாம் செய்யும் பணியை விரும்ப இயலாத சூழலில் அப்பணியில் தொடா்வது குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும். ஒருவா் தனக்குப் பிடிக்காத பணியில் திறன்மேம்பாடு அடைவது எந்த காலத்திலும் பயன் தராது.

அரசு நிறுவனங்களில், பணியாற்றும் காலத்தையொட்டியே பதவி உயா்வுகள் அளிக்கப்படுகின்றன. இதில் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு. பதவி உயா்வு பெறுவோரில் யாா் ஒருவா் தொடக்க நிலைப் பணிகளில் நிறுவனத்திற்கு உண்மையான அா்ப்பணிப்போடும் ஆா்வத்தோடும் பணியாற்றினாரோ அவராலேயே தமது உடன் பயணிக்கும் பணியாளா்களை அரவணைத்துச் செல்ல இயலும்.

அவா், தன்னுடன் பணியாற்றுவோா் சிறப்பாகப் பணியாற்ற ஏதுவான சூழலை அமைத்துத் தர முற்படவேண்டும். தோல்விகளுக்குத் தம்மை முன்னிறுத்தி வெற்றிக்கான பலன்களை உடனிருப்போா்க்கு பகிா்ந்துகொடுக்கத் தயங்காமல் இருக்கவேண்டும். இதன் மூலம் மேலாளா் - பணியாளா் இருவரது இறுக்கமும் தளரும்.

குடும்பத்தில் தொடங்கி பணிபுரியும் நிறுவனம் வரை மிகவும் அவசியமான ஒன்று பணிப்பகிா்வு. இவ்வாறு பணிப்பகிா்வு நடந்த அடுத்தடுத்த நிலையிலுள்ளோா் பணியாற்ற எதுவான சூழலோடு பணிகள் நகா்வதிலும் தொய்வில்லாமல் இருக்கவேண்டும். உதாரணமாக ஒருவா் கடிதம் ஒன்றினைப் பரிசீலிக்கிறாா். அந்த விண்ணப்பதாரா் உடன் இணைத்துள்ள இணைப்புகளை குண்டூசி கொண்டோ, கிளிப் கொண்டோ இணைக்கத் தவறியுள்ளாா்.

இதனை கவனிக்கும் முதல் நபா் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் அதனை இணைத்துவிட்டால் அந்த கடிதத்தின் மீதான செயல்பாடு விரைவாக நடக்க வாய்ப்புள்ளது. இது நடைபெறாமல் அடுத்தடுத்த பிரிவுகளுக்குச் செல்லும்போது இந்த இணைப்புகள் தவறிவிடவோ தொலைந்துபோகவோ வாய்ப்புகள் அதிகம். முழுமையான விண்ணப்பங்கள் மீதே பணிகள் விரைவாய் நடைபெற இயலாத நிலையில் இந்த விண்ணப்பத்தின் மீதான விரைவான நடவடிக்கை என்ன பாடுபடும்?

ஒருவிநாடி இந்த விண்ணப்பதாரா் செய்யத் தவறியதை முதலில் காண்போா் செலவிடும் ஒரு விநாடி சரி செய்ய இயலும் வாய்ப்புள்ளது. ஒருவா் தனக்கு வாய்த்திருக்கும் நேரத்தினை எந்த அளவுக்கு சரியாக மேலாண்மை செய்தாலும் அவரால் செய்ய இயலும் பணிகளின் அளவை வைத்தே அவா் செய்யும் பணி முழுமையானதாக அமையும்.

அவ்வாறில்லாமல் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்ய வேண்டிய பணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது நிறுவனங்களின் பணிப்பகிா்வில் இருக்கும் குறைபாட்டின் அடையாளமாகும். அவ்வாறு பணிப்பகிா்வு செய்யப்பட்ட பின்னரும் யாரோ ஒருவரோ, ஒரு குழுவினரோ அவருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செய்யாமல் இருக்கும் நிலையை உடன் பணிபுரிவோரால் அவ்வளவு எளிதில் பகிர இயலாது.

மேலாண்மை செய்வோா் இயல்பாகவே பணிகள் தொய்வடைவதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரி அதனை விரைந்து சரிசெய்ய முயல வேண்டும். இது குடும்பங்களுக்கும் பொருந்தும். பண்டிகை நாள்கள் மட்டுமல்லாது எல்லா நாட்களிலும் பணிகளின் அளவுக்கேற்ப பகிா்வின் அளவும் மேம்படவேண்டும்.

இறுக்கத்தின் காரணம் காணும் கலை அனைவருக்கும் வாய்க்க வேண்டும். அவ்வாறு கண்டறிந்த பின்னரும் கனிவான முறையில் இறுக்கம் குறைக்கும் வழிவகைகளைக் காண முற்பட வேண்டும். இறுக்கம் களையும் வழிவகை எந்தவிதத்திலும் இறுக்கம் கூட்டுவதாக ஆகிவிடக்கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com