செயற்கை நுண்ணறிவுச் சவால்: இந்தியா வெல்லுமா?

உலகம் முழுவதிலும் செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ் - ஏஐ) குறித்த பேச்சாக இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவுச் சவால்: இந்தியா வெல்லுமா?

உலகம் முழுவதிலும் செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ் - ஏஐ) குறித்த பேச்சாக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவின் அதிவேகமான பாய்ச்சலைக் கண்டு, இதனை வரவேற்பதா, கட்டுப்படுத்துவதா என உலக நாடுகளும் மக்களும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். அமெரிக்காவின் "ஓபன் ஏஐ' ஆராய்ச்சியாளர்கள் மிகச் சரியாகக் கூறியிருப்பதுபோல, ஏஐ தொடர்பான சட்டங்களை இப்போதுதான் உருவாக்கத் தொடங்கி இருக்கிறோம்.

செயற்கை நுண்ணறிவு தொடர்பான பல விஷயங்களைப் புரிந்துகொண்டால்
தான், இதை அணுகுவதற்கான வழிமுறைகளை உருவாக்க முடியும். 2017-இல் கூகுள் பிரெய்ன் (தற்போது இது கூகுள் ரிசர்ச் ஆகி விட்டது) நிறுவனம் வெளியிட்ட கணினியியல் ஆய்வறிக்கையில் டிரான்ஸ்பார்மர்கள் குறித்துக் குறிப்பிடப்பட்டது. 

கணினியால் இயங்கும் இயந்திரங்கள் அதற்கான கட்டளைகளை தாங்களே மனிதரைப் போலவே சிந்தித்து வடிவமைத்துக் கொள்வதுதான் 'டீப் லேர்னிங் கட்டமைப்பு' என்று கூறப்படுகிறது. இதனையே  'டிரான்ஸ்பார்மர்' என்று கூகுள் பிரெய்ன் குறிப்பிட்டது. இந்தக் கண்டுபிடிப்பானது சில ஆண்டுகளில் மிகப் பிரமாண்டமாக வளர்ந்து ஒரு சாம்ராஜ்யமாக நிலைகொள்ளும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

கூகுள் பிரெய்னைத் தொடர்ந்து, ஓபன் ஏஐயும் டிரான்ஸ்பார்மர் மேம்பாட்டுப் பணிகளில் கவனம் செலுத்தியது. அந்நிறுவனம் ஜிபிடி (ஜெனரேட்டிவ் பிரீ-டிரெய்ன்டு டிரான்ஸ்பார்மர்) எனப்படும் முன்பயிற்றுவிக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர்களை வடிவமைப்பதில் தீவிரம் காட்டியது. மனிதர்களிடமிருந்து கிடைக்கும் பதில் தரவுகளின் அடிப்படையில் இயந்திரங்களே தங்கள் செயல்பாட்டைத் தீர்மானிக்கும் வலுவூட்டிய அறிதல் தொழில்நுட்பத்தின் மூலம் (ஆர்எல்ஹெச்எஃப்) இப்பணி மேற்கொள்ளப்பட்டது. 

இந்த மாபெரும் கணினி மொழியாக்கப் பணி நமது இன்றைய உலகை பெருமளவில் மாற்றியமைத்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சாட்பாட் (கணினிக்கும் மனிதருக்கும் இடையிலான உரையாடல் மென்பொருள்), வடிவ உருவாக்கம், தேடுபொறிகள் போன்றவை, நம்மை அதிவேகமான மாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றன. இதுவரை காணாத வகையில் உலகம் தொழில்நுட்பரீதியாக விரைவாக மாறி இருக்கிறது; இன்றும் மாறிக் கொண்டிருக்கிறது.

விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்பாளர்களும், செயற்கை நுண்ணறிவின் அதிவேகப் பாய்ச்சலால் மிரண்டு போயிருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடற்ற பெருக்கத்தால் விளையக்கூடிய அபாயங்களை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த விஷயத்தில் தேவையான கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம்,  சீனா, அமெரிக்கா ஆகியவை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்வதற்கான சட்டங்களை அவை வடிவமைத்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் வரைவு ஏஐ ஒழுங்குமுறை சட்டம், சீனாவின் ஏஐ ஒழுங்குமுறை வரைவு, அமெரிக்காவின் ஏஐ மசோதா ஆகியவை இத்திசையில் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் எனலாம்.

இந்த விஷயத்தில், உலக அளவிலான பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் (ஓஇசிடி) பரிந்துரைகள், அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் பெரும்பான்மைத் தலைவர் சக் சூமரின் திட்டங்கள், ஏஐ துறையில் பிரிட்டனை முன்னிலைப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனக்கின் விருப்பங்கள் போன்றவற்றையும் செயற்கை நுண்ணறிவுக் கட்டுப்பாட்டுக்கான பிற முன்மொழிவுகளாகக் கொள்ளலாம். எனினும் இதுவரை யாராலும் ஏஐ குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான உறுதியான நடைமுறைகளை வகுக்க முடியவில்லை.

இந்நாடுகளின் ஏஐ கட்டுப்பாட்டு முயற்சிகளில் மூன்று முக்கியமான பிரச்னைகள் உள்ளன. முதலாவதாக, சீனாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ, செயற்கை நுண்ணறிவால் விளையும் அபாயங்களை மட்டுமே கருத்தில்கொண்டு, அவற்றை எதிர்கொள்ளும் நிலைப்பாட்டில் வரைவுச் சட்டங்களை உருவாக்கி உள்ளன. 

ஜி7 நாடுகளின் (கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன்) தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களும், ஐரோப்பிய ஒன்றிய  வரைவு மசோதாவின் அம்சங்களை ஆதரித்துள்ளனர். சீனாவோ, இதில் கூடுதலாக தகவல் கட்டுப்பாடு மீதான அரசின் ஒழுங்குமுறையை உறுதிப்படுத்துகிறது.

வளரும் நாடுகளைப் பொருத்த வரையிலும், இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் இதுவரை அணுகாத துறைகளில் ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிட வாய்ப்புள்ளது. மக்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்கவும், உலக அளவிலான பெரும் குழுமத் தொழில் நிறுவனங்களின் ஏகபோகத்தைக் கட்டுப்படுத்தி சுரண்டலைத் தடுக்கவும்,  செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வளரும் நாடுகள் பயன்படுத்துவது கட்டாயமாகும்.

செயற்கை நுண்ணறிவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது இரண்டாவது பிரச்னையாகும். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்த அதிநவீனத் தொழில்நுட்பத்தை முறைப்படுத்த, பொதுவான கொள்கை முடிவுகளின் அடிப்படையில்  சட்ட வரைவுகளை ஒருங்கிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

அமெரிக்காவின் வாஷிங்டனும் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸýம், இருதரப்பு வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பின் மூலமாக செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தும் உலகளாவிய செயல்முறைக்கு அடிகோலியுள்ளன. இதற்கான உலக அளவிலான ஒழுங்குமுறையை உருவாக்குவதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்துகிறது.

ஆனால்,  நாடுகள் உருவாக்கும் கட்டுப்பாடுகளை விட அதிவேகமாக தொழில்நுட்பம் வளர்கிறது என்பதுதான் சிக்கல். உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏஐ கட்டுப்பாட்டு வரைவு மசோதா உருவாக்கப்பட்டபோது, ஜெனரேட்டிவ் ஏஐ (உள்ளிடப்படும் பலவிதத் தரவுகளைக் கிரஹித்து உடனடியாக புதிய உள்ளடக்கத்தை உருவாக்குவது), எல்எல்எம் (செயற்கை நரம்பு வலைப்பின்னலால் இயக்கப்படும் கணினிக் கட்டுப்பாட்டு மொழிகள்) போன்ற செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிகள் இருந்திருக்கவில்லை. எனவே, ஏற்கெனவே உருவாக்கிய ஏஐ சட்டங்களை, இந்த செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் விளைவுகளையும் உத்தேசித்து  மாற்றியமைத்தாக வேண்டியிருக்கிறது.

மேலும், முடிவுகளை எடுப்பதில் அரசாங்கங்களின் வியூக அறைகளிலும் ராஜதந்திரப் பேச்சுகளிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டுப் பங்களிப்பு அதிகரித்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவால் செயல்படும் மாயத்தோற்றத் தொழில்நுட்பங்கள் ஒருவரைப் போலவே போலியை உருவாக்குவதில் மிகவும் ஆபத்தாக உள்ளன. இது தகவல் பரிமாற்றத்தில் தீவிர ஆபத்தான ஆயுதமாக மாறி வருகிறது. இது சமுதாயத்தின் பிம்பத்தையே எதிர்மறையாக மாற்றிவிடக் கூடிய ஆபத்தாகும்.
இவ்வாறாக செயற்கை நுண்ணறிவு சாம்ராஜ்ய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்நேரத்தில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக கணினி விஞ்ஞானி ராய் அமாராவின் விதியைத்தான் நினைவுபடுத்த வேண்டும்.

"தொழில்நுட்பத்தின் குறுகிய கால அளவிலான தாக்கத்தை நாம் மிகவும் அதீதமாக மதிப்பிடுகிறோம். அதேசமயம், தொழில்நுட்பத்தின் நீன்டகாலத் தாக்கத்தை மிகவும் குறைவாகவே மதிப்பிடுகிறோம்'' என்று அவர் சொன்னதுதான் அடிப்படை உண்மையாகும். இந்த அடிப்படையில் இந்தியா செயற்கை நுண்ணறிவு தொடர்பான சட்டங்களை உருவாக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவை மனிதநேயத்துக்கு எதிரான ஓர் அசுரனாக உருவகப்படுத்தும் குறுகியகால அதீத மதிப்பீட்டுத் தாக்கத்திலிருந்து விடுபட்டு, இதனை வளர்ச்சிக்கான கண்டுபிடிப்புகளுக்கும் மக்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கும் நாற்றங்காலாக  மாற்றுவது எப்படி என்று இந்தியா ஆராய வேண்டும்.

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் செயல்முறைகளின் மூலமாக மக்களுக்கு வரக்கூடிய நோய்களை முன்கூட்டியே கண்டறிவதும், குறைந்த கட்டணத்தில் சிகிச்சை முறைகளை மேற்கொள்வதும் சாத்தியமே. விவசாயத்திலும் எந்தெந்த விளைபொருள்களை எக்காலத்தில் சாகுபடி செய்வது, விவசாய விளைபொருள்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது, விளைநிலங்களை மேலாண்மை செய்வது எப்படி என்று செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் தீர்மானிக்க முடியும்.

அதுமட்டுமல்ல, பல்வேறு மொழிகளில் பேச்சு உதவிக் கருவிகளையும், உச்சரிப்பு உணர் கருவிகளையும் உருவாக்க முடியும்;  நிதி மேலாண்மையில் சிக்கனமான தீர்வுகளை உருவாக்க முடியும்;  செயற்கை  நுண்ணறிவுத் தரவுகளின் அடிப்படையில் மக்களின் பாதுகாப்பையும் தனியுரிமைகளையும்  உறுதிப்படுத்தியவாறே, அவர்களது சந்தைப் பங்களிப்பை அதிகரிக்கக்கூடிய புதிய வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்.

செயற்கை நுண்ணறிவின் ஆபத்தான விளைவுகளிலிருந்து பாதுகாக்கத் தேவையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும் அதேநேரத்தில்,  நமது மேம்பாட்டுக்கு உதவும் வகையில் அதன் தடையற்ற வளர்ச்சியையும் நமது சட்டங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com