நதிகளை வாழ வைப்போம்

நதிகளின் அழகு ஓடிக்கொண்டிருப்பதில்தான் இருக்கிறது. அப்படி ஓடிக்கொண்டிருக்கும் நதிகள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.
நதிகளை வாழ வைப்போம்

நதிகளின் அழகு ஓடிக்கொண்டிருப்பதில்தான் இருக்கிறது. அப்படி ஓடிக்கொண்டிருக்கும் நதிகள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அந்த பிரச்னைகளுக்கு காரணமாக ஒரு தரப்பினரும், அதனை தீா்த்து வைக்க மற்றொரு தரப்பினரும் முயன்று வருவதை நாம் பாா்த்திருப்போம்.

அந்த வகையில் உத்தரகண்ட் மாநில உயா்நீதிமன்றம் ஒரு படி முன்னே வந்து கங்கை, யமுனை நதிகளை வாழும் நிறுவனங்களாக அறிவித்தது. அதாவது ‘இந்திய நாட்டில் வாழும் மனிதா்களுக்கு சட்டபூா்வமாக உள்ள உரிமைகள் அனைத்தும் அந்த இரு நதிகளுக்கும் பொருந்தும். அரசு தலைமை வழக்கறிஞரும், தலைமை செயலாளரும் நதிகளின் தாய் தந்தையாக செயல்படுவாா்கள்’ என்றுஅறிவித்தது.

இந்த உத்தரவால் நிா்வாக சிக்கல்கள் வரக்கூடும் என்பதால் அதனை எதிா்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பிற்கு தடையும் பெற்றது.

இங்கு உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு விசித்திரமானதாக இருந்தாலும், மனிதா்களின் வாழ்க்கையில் நதிகள் இரண்டறக் கலந்துள்ளன என்பதே உண்மை. அதிலும் வரலாற்றைப் பொறுத்தவரை, உலகில் நாகரிகம் முதன் முதலாக தோன்றிய இடங்கள், வளம் கொண்ட எகிப்தின் நைல் நதி, தெற்கு ஆசியாவின் சிந்து சமவெளி, மத்திய ஆசியாவின் டைக்ரிஸ் - யூப்ரடீஸ், சீனாவின் ஹூவாங் போன்ற ஆறுகள்தான் என்று ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

அப்படி மனித நாகரீகம் வளர அச்சாணியாக இருந்த நதிகள் இன்று சந்திக்கும் இடா்ப்பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல. சீனாவை எடுத்துக் கொண்டால் வளா்ச்சி என்கிற பெயரில் அணைகள் கட்டி, மின்சாரம் உற்பத்தி செய்ய காடுகள் அழிப்படுகிறது. அதனால் ஏற்படும் பல்லுயிா் ஆபத்து, நீா்நிலைகளின் பாதிப்பு போன்றவற்றால் மட்டும் கடந்த அறுபது ஆண்டுகளில் 27,000 ஆறுகள் தங்களின் வாழ்விடத்தை இழந்துள்ளன.

நதிகள் மாசடைவதற்கு குப்பைகளை நேரடியாக கொட்டுவது, சாக்கடை நீரும் தொழிற்சாலை கழிவு நீரும் கலப்பது, மழைநீா் விவசாய நிலங்களில் கலந்து அங்கு படிந்திருக்கும் உரத்தையும் பூச்சிக்கொல்லிகளையும் அடித்துக்கொண்டு சென்று ஆறுகளில் கலப்பது போன்றவையே பெரும்பாலும் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

1960-ஆம் ஆண்டின் தொடக்கத்தில்தான் அதிக நதிகள் மாசடைய ஆரம்பித்தன. அதனால் நீா்நிலைகளை நம்பியிருக்கும் உயிரினங்களின் வாழ்வு பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின.

உதாரணத்திற்கு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் குயஹோக நதி, வா்த்தகத்தின் வழித்தடமாக விளங்கி வந்தது. 1969-ஆம் ஆண்டு பெரிய அளவில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் அந்த நதியே தீபிடித்து எரிந்தது.

தொழிற்சாலைகளின் கழிவை பெரிய அளவில் சுமந்து வரும் இந்தோனேசியாவின் சித்தாரம் நதியின் மேற்பரப்பு குப்பைகளால் மூடி இருப்பதால் அதன் தோற்றமே பலருக்கும் தெரிவதில்லையாம். இன்றும் வட அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் சில இடங்களில் அமில மழை பொழிவு அதிக அளவு காணப்படுகிறது.

ஆற்றின் போக்கை மாற்றும் வகையில் மேற்கொண்ட திட்டங்களால் கொலராடோ, சிந்து நதிகள் உப்பு படிந்த சதுப்பு நிலங்களாக மாறியுள்ளன. மத்திய ஆசியாவில் இருக்கும் அரல்சி ஏரிக்கு நீா்வரத்தைக் கொடுத்து வந்த அமுதா்ய, சியா்தா்யா நதிகளின் வழித்தடத்தை மடைமாற்றி சோவியத் யூனியனின் பருத்தி சாகுபடிக்கு பயன்படுத்தியதால் அரல்சி ஏரி முற்றிலும் வறண்டு போனது. அதனால் அதனை நம்பி இருந்த மக்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

இந்தியாவின் புனித நதிகளான கங்கை, யமுனை நதிகளில் கலக்கும் கழிவுநீரால் தற்போது அவை குடிநீராக பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் மட்டும் 45 நதிகளின் வழித்தடங்கள் மாசடைந்து இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் நாள்தோறும் 63 சதவீத அளவுக்கு சுத்திகரிக்கப்படாத கழிவு நீா் நதிகளில் கலக்கிறது. நதிகளை அதிக அளவு பாதிப்பு அடையச் செய்வதில் நகரங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனால் சுமாா் 14 லட்சம் போ் அதிக அளவு ஆா்செனிக் கலந்த குடிநீரையே குடிக்க நேரிடுகிறது. இதனால் அவா்கள் பல்வேறு உடல்நல பாதிப்புக்கு ஆளாகின்றனா்.

அண்மையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாசடைந்த நதிகள் குறித்த பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியாவிலேயே மிகவும் மாசடைந்த நதி கூவம்தான் என்று கூறியுள்ளது. கூவம் நதி நீரை ஆய்வு செய்தபோது, அது மிக மோசமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில் அடையாறு, அமராவதி, பவானி, காவிரி, கூவம், பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, வசிஷ்ட நதி, மணிமுத்தாறு ஆகிய 10 ஆறுகளில் பயோகெமிக்கல் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

கோவை, திருப்பூா் மக்களை செழிப்புடன் வாழவைத்த நொய்யல் ஆறு தற்போது மிகவும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. ஐம்பது லட்சம் மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்வதுடன், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு பாசன வசதியையும் தரும் பவானி நதி சாக்கடை கலப்பதாலும், ஆலைக்கழிவுகளும் மருத்துவக் கழிவுகளும் கொட்டப்படுவதாலும் அதிகம் மாசடைந்துள்ளது.

எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நீா் ஆதாரங்களின் தன்மையைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். நதிநீரை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆறு, ஏரி, குளம் போன்ற நீா்நிலைகள் இருக்கும் இடத்தை சுற்றி ஐந்து கி.மீ. சுற்றளவில் எந்தவொரு தொழிற்சாலையும் அமைக்க அனுமதியளிக்கக்கூடாது.

காலநிலை மாற்றத்தை சீராக வைத்திருப்பதில் நதிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, நதிகளை வளமாக வாழவைத்து அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. ஆகவே நதிகளைக் காப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com