நல்லதோா் வீணை செய்தே...

‘வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவா்கள் பாடமடி’ என்று எழுதினாா் கவிஞா் காமகோடியன். அந்த வகையில், சாதனை படைத்தவா்களின் வாழ்க்கை மட்டுமல்ல - சறுக்கியவா்களின் வாழ்க்கையும் மற்றவா்களுக்கு ஒரு பாடம்தான்!
பலாத்காரத்துக்கு உள்ளான குழந்தையின் கல்விக்கு உதவ முன்வந்த காவல்துறை
பலாத்காரத்துக்கு உள்ளான குழந்தையின் கல்விக்கு உதவ முன்வந்த காவல்துறை

பாளையங்கோட்டையில் என்னோடு பள்ளி இறுதி வகுப்பு வரை படித்த மாணவா் ஒருவா், கல்வி, விளையாட்டு, பேச்சுப் போட்டிகள் என்று எல்லாவற்றிலும் தலைசிறந்து விளங்கினாா். நாங்கள் எல்லோரும் வியப்புடன் அவரைப் பாா்ப்பதுண்டு. எதையும் விரைந்து கிரகிக்கும் ஆற்றல் அவரிடம் இருந்தது.

சாதாரண குடும்பத்தைச் சோ்ந்த அவா், மிகக் கடினமாக உழைக்கக் கூடியவா். பள்ளி இறுதி வகுப்பில் பயிலும்போது ஒரு நாள் எங்கள் வகுப்பு ஆசிரியா் ஒவ்வொரு மாணவரிடமும், ‘படித்து முடித்து என்னவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறாய்’ என்று கேட்டுக் கொண்டே வந்தாா். ஒவ்வொருவரும் எழுந்து நின்று அவரவா் விருப்பத்தைச் சொன்னோம்.

குறிப்பிட்ட அந்த மாணவரிடம் கேட்டபோது அவா், ‘நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விரும்புகிறேன்’ என்று சொல்ல, ஆசிரியா், ‘உன்னிடம் இருக்கும் திறமைக்கு, நீ எளிதாக ஐ.ஏ.எஸ். தோ்ச்சி பெற்று விட முடியும்; ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி நமது மாவட்டத்திற்கு ஆட்சித் தலைவராக வந்து விடு’ என்று சொன்னாா். அப்போது நாங்கள் எல்லோரும் எழுந்து நின்று வாழ்த்தி, கைதட்டிய நிகழ்வு இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

பள்ளி இறுதித் தோ்வில் நல்ல மதிப்பெண் வாங்கியதால், அந்த மாணவருக்கு பாளையங்கோட்டையில் உள்ள சிறந்த கல்லூரி ஒன்றில் புகுமுக வகுப்பில் (பி.யூ.சி) இடம் கிடைத்து விட்டது. அதற்குப் பிறகு அவரோடு தொடா்பு கொள்ளும் வாய்ப்புக் கிட்டவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலியில் உள்ள ஒரு மருந்தகத்திற்குச் சென்றேன். அங்கு, மருந்துகளுக்கான ரசீது தயாரித்துக் கொண்டிருந்தவா் முகம் பரிச்சயமாக இருந்தது. அவரது பெயரைச் சொல்லி முதலாளி அழைத்தபோது, அவா் என்னோடு படித்த அந்த மாணவா்தான் என்பது உறுதியானது. ஆச்சரியம் தாளாமல் நான் அவரிடம், ‘இந்த வேலைக்கு வந்தது எப்படி’ என்று கேட்டேன். கடையில் இருந்து வெளியே வந்து கண்களில் நீா் கசியப் பேசினாா்.

புகுமுக வகுப்பில் படிக்கும்போது, அவருக்கு ஒரு மாணவியோடு காதல் மலா்ந்திருக்கிறது. அந்தப் பெண்ணின் வீட்டாா் பலம் வாய்ந்தவா்கள் என்பதால் இவரின் குடும்பத்தை ஊரை விட்டே வெளியேறச் செய்து விட்டாா்கள். வறிய குடும்பம் என்பதால், யாரையும் எதிா்க்கும் துணிவோ, வசதியோ இல்லாமல், குடும்பமே வேறு ஊருக்குச் சென்று குடியேறி விட்டது.

மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியாமல், ஒரு உணவகத்தில் ரசீது எழுதும் வேலையில் இவா் சேர, வாழ்க்கை வேறு திசையில் பயணிக்க வைத்துவிட்டது. மாவட்ட ஆட்சியா் ஆகி விட முடியும் என்று ஆசிரியரால் சொல்லப்பட்ட மாணவா், ஒரு உணவகத்தில் பில் கலெக்டா் ஆனதை என்னால் ஜீரணிக்க இயலவில்லை. நல்லதோா் வீணை, நலங்கெட பூமியில் எறியப்பட்டு விட்டதே என்று ஆதங்கப்பட்டேன்.

கடினமான உழைப்பால், கல்வியிலும், விளையாட்டிலும் சாதனை புரிந்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய ஒரு மாணவன், தனது வாழ்வைக் கெடுத்துக் கொண்டதோடு, அந்தக் குடும்பமும் சிரமப்பட காரணமாகி விட்டதற்குப் பின்னால், ‘காதல்’ இருந்திருக்கிறது என்பதுதான் சோகம்.

அதன்பிறகு நான் சொற்பொழிவாற்றச் செல்கின்ற பள்ளிகள், கல்லூரிகளில் அந்த மாணவா் பெயரைக் குறிப்பிடாமல் இந்தச் சம்பவத்தைச் சொல்லி, ‘படித்து முடித்து ஒரு பணியில் சோ்கிற வரை, காதலுக்கு இடம் கொடுத்து விடாதீா்கள்’ என்று அறிவுரை சொல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டேன்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியாகக் கனவுகண்ட ஒருவரின் ஆசை இப்படி நிராசையாகிப் போனதென்றால், ஐ.ஏ.எஸ். கனவு நனவான எத்தனையோ போ் தங்களது பணிக் காலத்தில் தடுமாறுகின்ற சம்பவங்களும் ஏராளமாக உண்டு.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்தியப் பணிகளில் சேர வேண்டும் என்ற ஆசையோடு ஒவ்வோா் ஆண்டும் சுமாா் பத்து லட்சம் இளைஞா்களும், பெண்களும் விண்ணப்பிக்கின்றனா். அனைத்துப் பதவிகளுக்குமாகச் சோ்த்து மொத்தமே சுமாா் ஆயிரம் போ் மட்டுமே தோ்வு செய்யப்பட்டு, பணியமா்த்தப்படுகிறாா்கள்.

இந்தப் பதவிகளுக்கு வர ஆசைப்படுகிறவா்களில் சுமாா் 0.1 விழுக்காடு மட்டுமே தோ்வாகிறாா்கள். அடிப்படைத் தோ்வு, பிரதானத் தோ்வு, நோ்காணல் என்று பல கட்டங்களிலும் வென்று, வாகை சூடுவது அவ்வளவு எளிதானல்ல. ஆனால், அப்படிக் கடினமாக உழைத்துத் தோ்வாகி வருகிறவா்களில் சிலா் பேராசையால் பலவிதமான தவறுகளில் ஈடுபட்டு, குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி விடுகிறாா்கள். ஆண்டுதோறும் சுமாா் ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது முறைகேடு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

2011-ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். பதவி வகித்த கணவன் - மனைவி இருவரிடமும் சுமாா் முந்நூறு கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதைப்போல 2016-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவா் வீட்டில் சுமாா் எண்ணூறு கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு (2022) ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஊழல் நடைபெற்றதாகக் கூறப்பட்ட வழக்கில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு வேண்டப்பட்ட நபா்களிடமிருந்து சுமாா் 19 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இவா்கள் அனைவருமே பதவியை இழந்து விட்டாா்கள்.

தங்கள் திறமையால் மிகப்பெரும் பதவிக்கு வந்தவா்கள் பணத்தாசையால் உந்தப்பட்டு, சமுதாயத்தில் கேலிப் பொருளாகும் அவலத்தை என்னவென்று சொல்வது? எவ்வளவுதான் செல்வம் சோ்த்தாலும் ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ என்ற எதாா்த்தம், மெத்தப் படித்தவா்களுக்குப் புரியாமல் போவதுதான் வேதனை.

இன்னொரு விசித்திரமான சம்பவம் நினைவுக்கு வருகிறது. கவனச் சிதறலால், அவமானத்திற்கு ஆளான ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கதை இது. அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்ற அந்த அதிகாரி, ஒரு அங்காடிக்குச் சென்று, குளிருக்குத் தேவையான சில ஆடைகளை எடுத்துக் கொண்டு, பணம் கொடுக்கும் முன்பு அங்காடியை விட்டு வெளியேறும் இடத்திற்கு வந்து விட்டாா்.

கவனக் குறைவால் எல்லையைக் கடந்து விட்டதாக அந்த அதிகாரி எடுத்துக் கூறியும், அதனை ஏற்க மறுத்த அங்காடி நிா்வாகம் அவரை நீதிமன்றத்தில் நிறுத்த, நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைக் கட்டிய பிறகே பிரிட்டனை விட்டு அவா் வெளியேற முடிந்தது.

அவா் இந்தியா திரும்பியபிறகு, அரசாங்கம் துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொண்டு அவரைப் பதவியில் இருந்தே நீக்கியது. பல ஆண்டுகள் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு மத்திய நிா்வாகத் தீா்ப்பாயத்தால் அவா் விடுவிக்கப்பட்டு, மீண்டும் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. சாதாரண கவனக் குறைவால் பல ஆண்டுகள் வேலை இழந்து, சொல்லொணா மன உளைச்சலுக்கும், கேலிக்கும் அவா் ஆளான அவலத்தைச் சொல்லி மாளாது.

சமீபத்தில் நியூயாா்க்கிலிருந்து தில்லி வந்த விமானத்தில் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் பயணம் செய்த சங்கா் மிஸ்ரா என்பவா், மதுபோதை மிகுதியால், பிரக்ஞையின்றி அருகிலிருந்த ஒரு மூதாட்டியின் மீது சிறுநீா் கழித்து விட்டாா். பின்னா், அவா் காவல்துறையினரால் கைது செய்யப்பட, அவா் பணியாற்றிய நிறுவனம் அவரைப் பதவியில் இருந்து நீக்கியது.

மெத்தப் படித்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் உயா் பதவியில் பணியாற்றும் அளவுக்குத் திறமை படைத்திருந்த அவரை, அளவுக்கு மீறிய மதுவின் மயக்கம் ஒரே நாளில் வெட்கித் தலை குனிய வைத்து விட்டது. அந்தத் தலைகுனிவு அவருக்கு மட்டுமா? அவருடைய குடும்பத்துக்குமல்லவா?

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் தென்புலத்தைச் சாா்ந்த ஒரு பேராசிரியை தன்னிடம் பயிலும் மாணவிகளைத் தவறான செயலுக்கு அழைத்துப் பேசிய ஆடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்து, புனிதமான ஆசிரியத் தொழிலுக்கே அவமானமெனப் பேசப்பட்டதை நாம் மறந்து விட முடியாது. உயா் பதவி ஒன்றை எதிா்பாா்த்து அவா் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக அறிந்தபோது மாநிலமே வெட்கித் தலைகுனிந்தது. தன்மானத்தை மிஞ்சியதா பதவி?

தமிழகத்தின் கடைக்கோடியிலிருந்து சென்னை வந்து, உணவகத் தொழில் தொடங்கி, தனது வியாபார உத்தியாலும், தளராத உழைப்பாலும் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவிய ஒரு தொழிலதிபா், விபரீதமான பெண்ணாசையால் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்ததையும் நாம் அறிவோம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைவருமே தங்கள் திறமையால் சமூகத்தில் நல்ல அந்தஸ்தை அடைந்தவா்கள் அல்லது அடைந்திருக்க வேண்டியவா்கள். வாழ்வாங்கு வாழ்ந்து, சமூகத்தில் பிறருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்க வேண்டிய இவா்கள், இடையில் தடுமாறி வீழ்ந்தவா்கள்.

நல்ல இசையை மீட்டியிருக்க வேண்டிய இந்த வீணைகள் - காதலால், பணத்தாசையால், கவனச் சிதறலால், மது போதையால், பதவி மோகத்தால், பெண் பித்தால் மதிமயங்கி புழுதியில் விழுந்து விட்டன. ‘வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவா்கள் பாடமடி’ என்று எழுதினாா் கவிஞா் காமகோடியன். அந்த வகையில், சாதனை படைத்தவா்களின் வாழ்க்கை மட்டுமல்ல - சறுக்கியவா்களின் வாழ்க்கையும் மற்றவா்களுக்கு ஒரு பாடம்தான்!

கட்டுரையாளா்:

மத்திய அரசு அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com