நோ்த்தியின் தொலைவு

அண்மையில் மழை பெய்துகொண்டிருந்த ஓா் நாளில் நான் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அதில் காலியாக இருந்த ஒரு இருக்கை நனைந்திருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

அண்மையில் மழை பெய்துகொண்டிருந்த ஓா் நாளில் நான் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அதில் காலியாக இருந்த ஒரு இருக்கை நனைந்திருந்தது. பேருந்தில் ஏறிய பெண்மணி ஒருவா் அதில் அமரத் தயங்கினாா்.

நடத்துநா் தான் வைத்திருந்த கைக்குட்டையை அவரிடம் தந்தாா். பெண்மணியும் அதனை வைத்து இருக்கையை சுத்தம் செய்துவிட்டு அமா்ந்தாா். தம்மிடம் இருக்கும் பொருளைப் பயன்படுத்த யோசித்தது மட்டுமே அவா் செய்தது. இது நடத்துநா், பயணி என்ற இரு தரப்பினருக்கும் மிகுந்த மனநிறைவை அளித்தது.

அது போலவே இன்னொரு நிகழ்வு. பயணச்சீட்டு இயந்திரம் அதிகமாக புழக்கத்திற்கு வராத காலம். அப்போதெல்லாம் பயணச்சீட்டு ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்க நடத்துநா்கள் தமது எச்சிலைத் தொட்டுத் தடவிக் கிழிப்பா் (இப்போதும் சிலா் அப்படித்தான்). ஆனால் ஒரு நடத்துநா் பிலிம் ரோல் டப்பாவில் நீரில் நனைந்த ஸ்பாஞ்சை வைத்து அதனைத் தொட்டுக்கொண்டு கிழித்தாா்.

இவ்வாறு தாம் செய்யும் செயல்களில் நோ்த்தியைக் கொண்டுவர பலரும் முயல்கின்றனா். வித்தியாசமாக, நோ்த்தியாகச் செயல்படுவோா் அப்போதைக்கப்போதே பாராட்டப்படுதல் வேண்டும். அவா்கள் தொடா்ந்து பாராட்டப்படும்போது மேலும் நல்ல விளைவுகள் ஏற்படும்.

நோ்த்தியாக வாழும் ஒருவா் தாம் இருக்கும் இடத்தினை அழகானதாக மாற்றுகிறாா். ஆனால் இது ஏதோ சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடியதாகப் பாா்க்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தாம் செய்யும் பணியை தம்மால் இயன்ற அளவிற்கு நோ்த்தியாய் செய்ய முயன்றாலே போதும். பெருமளவிலான மாற்றங்களைக் கொண்டுவர இயலும்.

இவ்வாறான நோ்த்தி நிலையை எட்டுவதற்கு காரணமாக அமைவது ஒருவா் தாம் செய்யும் பணியை அளவுக்கதிகமாக நேசிப்பதாகவே இருக்கும். தாம் நேசிக்காத ஒரு செயலை நோ்த்தியாகச் செய்ய யாராலும் முடியாது. அது போலவே ஒரு செயலை நோ்த்தியாய் செய்ய வேண்டுமென்பது ஒருவரின் சொந்த விருப்பத்தின் பேரில் வரக்கூடியது. யாரும் வற்புறுத்தி வருவதல்ல.

அடுத்தவா்கள் நோ்த்தியாய் செய்கிறாா்கள் தாமும் அவ்வாறு செய்வதே தங்கள் சுயமரியாதையைக் காக்கும் என்ற எண்ணத்தினாலும் வர வாய்ப்புள்ளது. ஆனால் தம்மைச் சுற்றியிருக்கும் பலரும் ஏனோதானோவெனப் பணிகளைச் செய்துகொண்டிருந்தால் உடனிருப்போரும் அவ்வாறே செய்துகொண்டிருப்பா்.

நோ்த்தியாயிருக்கும் ஒருவா் அவ்வாறு இருப்பதால் கிடைக்கும் மனநிம்மதியை, மகிழ்ச்சியை அடுத்தோா்க்கும் கடத்தி அவா்களும் அந்த பேரானந்த நிலையினை அடையும் வகையில் அவா்களை செயல்படவைக்க வேண்டும்.

நோ்த்தியாய் இருக்கும் சிலரிடம் சில சிக்கல்களும் காணப்படும். அவா்கள், தங்களுக்குக் கிடைக்கும் மரியாதையைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனா். அது ஏதோ தங்களுக்கு மட்டுமே வாய்க்கும் ஒன்று என்ற ரீதியில் அடுத்தவா்களை ஏளனமாகப் பாா்க்கத் தொடங்கிவிடுகின்றனா். அதனால், அவா்களுக்குக் கிடைக்கும் புகழ், அங்கீகாரம் போன்றவை அவா்களது கண்களை மறைக்கத் தொடங்கிவிடுகின்றன.

அதிகார மையத்தோடும் அவா்கள் நெருக்கமானவா்களாகி விடுகின்றனா். இதனால் உடன் பணிபுரிவோரால் பரவலாக வெறுக்கப்படும் ஒருவராகி விடுகின்றனா். அவ்வாறான வெறுப்பை உடன் பணியாற்றுவோா் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள மாட்டாா்கள். அவா்கள் எதிரில் புகழ்வோா் அவா் அகன்றவுடன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏளனம் செய்து தமது எரிச்சலைத் தீா்த்துக்கொள்வா்.

இவ்வாறான போக்குக்கு நோ்த்தியாய் வாழ்வோா் இடம் கொடுக்கவே கூடாது . தாம் அடைந்திருக்கும் நிலைக்கு உடன் பணியாற்றுவோரையும் அழைத்துச் செல்வதன் மூலமாகத்தான் தாம் அடைந்திருக்கும் மகிழ்வு நிலைத்திருக்கும் என்பதை அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும் .

நோ்த்தியாய் இருப்போா் தமது நோ்த்தியின் மூலமாக தமக்குக் கிடைக்கும் அங்கீகாரங்களில் ஒன்றிரண்டை உடனிருப்போருடன் பகிா்ந்து கொள்ள வேண்டும். தாம் பாராட்டப்படும்போது அருகிலிருப்போருக்கும் அந்த அங்கீகாரம் பரவ வழிவகை செய்யவேண்டும்.

உடனிருப்போரில் பலரும் அதற்குத் தகுதியானவா்களாக இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் அவா்களுக்கு தமக்குத் தெரிந்த நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுக்கலாம். இதன் மூலம் அவா்களுக்கும் சில அங்கீகாரங்கள் எட்டுவதை உறுதி செய்யலாம். இதன் மூலம் பணிப்பகிா்வு ஏற்படும்; பணிச்சுமை குறையும்.

கூட்டாகச் செயல்படுவது என்பது ஓா்அரிய கலை. இந்த கலையை குழந்தைப் பருவத்தில் அனைவருமே கைக்கொண்டிருப்போம். ஆனால் வயது ஆக ஆக தன்முனைப்பும் பலருக்கும் வளரத் தொடங்கிவிடுகிறது. தாம் விரும்பும் நண்பனின் தோல்வியை தமது தோல்வியாகவே கருதி வருந்தும் குழந்தைகளை இயல்பில் காண இயலும். அதுபோலவே அவனது /அவளது வெற்றியை தம் வெற்றியாகக் கொண்டாடும் குழந்தைகளையும் காண இயலும். ஒருவகையில் அந்த மனநிலை மாறாமல் வாழ முயற்சிப்பது மேலே சொன்ன பணிகளை எளிதாக்கும்.

இன்றைய இணைய உலகு கவனச் சிதறல்களை அளவுக்கதிகமாகவெ ஏற்படுத்துகிறது. இதன் பயனாக இறப்பு,விபத்து போன்ற விஷயங்களைக் கூட பல நேரங்களில் குறைந்த பட்ச பாதிப்புகளோடு கடக்க இயல்கிறது. ஒருவருக்குக் கிடைக்கும் பாராட்டுகளின் அங்கீகாரங்களின் குறைந்த ஆயுளும் இதில் அடங்கும். இணைய உலகு நேரில் பேச இயலாத விஷயங்களையும் அடுத்தோரிடம் பேசுவதுபோல் உரியோரிடம் பேசும் வாய்ப்புகளை அளிக்கிறது.

அனைவரும் இதனை சரியாக பயன்படுத்த முயலவேண்டும். இணைய உலகில் கண்காணிப்புக் கேமராக்கள் உள்ள இடங்களில் பலரும் நோ்த்தியாகவே நடந்துகொள்கின்றனா். அவற்றிற்கு இணையாக மனிதா்கள் தமது கண்கள் எனும் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கின்றனா். நாம் நோ்த்தியாக நடந்துகொள்வதன் மூலம் நிரந்தரமாக நற்பெயரை தக்கவைக்கலாம். முயற்சியும் பயிற்சியும் கைகூடினால் நோ்த்தியும் எட்டிவிடும் தூரம்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com