பொருளாதாரத்தை பாதிக்கும் போர்!

பாலஸ்தீனத்தின் காஸாமுனை பகுதியிலிருந்து செயல்படும் ஹமாஸ் ஆயுதக் குழுக்கள் கடந்த 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது பலமுனைத் தாக்குதலைத் தொடங்கின.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாலஸ்தீனத்தின் காஸாமுனை பகுதியிலிருந்து செயல்படும் ஹமாஸ் ஆயுதக் குழுக்கள் கடந்த 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது பலமுனைத் தாக்குதலைத் தொடங்கின. பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இரு தரப்பிலும் இதுவரை நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ராணுவ உதவி அளித்து வரும் நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் அந்த நாட்டுக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்துள்ளன. இஸ்லாமிய நாடுகள் தங்களுக்கு உதவ வேண்டுமென ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அண்டை நாடுகளான லெபனான், ஜோர்டான், ஈரான், இராக் உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் போராளிக் குழுவினர், ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர்.

இந்தப் போர் தொடர்ந்தால், கச்சா எண்ணெய் விலை கடுமையான உயரக்கூடும் என்றும், அதனால் உலக அளவில் உணவு தானியத் தட்டுப்பாடும், பொருளாதார மந்தநிலையும் ஏற்படலாம் என்று பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்ததாக 2-ஆவது இடத்தில் உள்ளது. அதிகபட்சமாக இராக்கிலிருந்து சுமார் 25 பில்லியன் டாலர் அளவுக்கும், எகிப்திலிருந்து சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவுக்கும் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.

மத்திய பெட்ரோலியம் - இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, 'இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கச்சா எண்ணெய் கொள்முதலில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளின் எண்ணிக்கை 27-லிருந்து 39-ஆக அதிகரித்துள்ளது. நாம் அமெரிக்காவிலிருந்து 2,000 கோடி டாலருக்கு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.  

இந்தியா - இஸ்ரேல் இடையே 1992-ஆம் ஆண்டு முதல் ராஜாங்க, பொருளாதார, வர்த்தக ரீதியிலான உறவுகள் தொடர்ந்து வருகின்றன. 2022- 23-இல் இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு 7.89 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அந்நாட்டிலிருந்து 2.13 பில்லியன் டாலர் மதிப்புக்கு பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் இஸ்ரேல் 4-ஆவது இடத்தில் உள்ளது. மேலும், ரசாயனம், கனிமப் பொருள்கள், இயந்திரங்கள், மின் உபகரணங்கள், நெகிழிகள், ஜவுளி, அடிப்படை உலோகங்கள், விவசாயப் பொருள்கள் உள்ளிட்டவை அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதேபோல, முத்து, வைரம், செமி கண்டக்டர், ரசாயனம், கனிம உர பொருள், போக்குவரத்து உபகரணம் உள்ளிட்டவற்றை இஸ்ரேலில் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. ஏற்கெனவே ரஷியா - உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை மிக உயர்ந்து, கடந்த சில மாதங்களாக சிறிது சரிவைச் சந்தித்தது. 

தற்போது ஹமாஸ் - இஸ்ரேல் போரால் மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைத்து வருகிறது. பாலஸ்தீனம் - இந்தியா இடையிலான வர்த்தகம் இஸ்ரேலின் வழியாக நடைபெறுவதால், அது குறித்த விரிவான தகவல்கள் இல்லை.

சர்வதேச அளவில் இயங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது கிளைகளை இஸ்ரேல் நாட்டில் அமைத்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கான இணையப் பாதுகாப்பு மையமாக இஸ்ரேல் விளங்குகிறது. எனவே, அங்கு செயல்படும் கிளைகளில் பணியாற்றுவோர் தரவுகளை கையாள்வதில் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டுமென தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. 

போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள தங்கள் ஊழியர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு பணியிடம் மாற்றும் நடவடிக்கைகளையும் அந்த நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

'ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் கீழ், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள், மாணவர்கள் உள்பட 18,000 பேர் மீட்கப்பட்டு வருகின்றனர். இஸ்ரேலில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்கள், தற்போதைய போரால் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே போல, அங்கு பயின்று வந்த மாணவர்கள், தங்கள் கல்வியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருவதுடன், அந்த நாட்டின் கடல் பகுதியில் தனது போர்க் கப்பல்களையும் நிறுத்தியுள்ளது. இதனால், அமெரிக்கா, நேட்டோ நாடுகளின் கவனம் ரஷிய - உக்ரைன் போரிலிருந்து விலகியுள்ளது.  இதை ரஷியா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது.

ரஷிய - உக்ரைன் போரில் நடுநிலை வகித்த இந்தியா, அப்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், அதைக் கையாளும் விதமாக, ரஷியாவிடமிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை வாங்கி, சுத்திகரிப்பு செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. 

தற்போதைய பாலஸ்தீனம் - ஹமாஸ் இடையிலான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா நிற்கும் என்று அறிவித்திருப்பதன் மூலம், கடந்த கால கொள்கைகளிலிருந்து இந்தியா மாறுபட்டிருக்கிறது. இது, மத்திய கிழக்கு ஆசிய, இஸ்லாமிய நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பவை பெட்ரோல், டீசல் விலைகள். கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டிருந்தால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்கமுடியாததாகிவிடும். பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வரும் நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தலால், கடந்த பல மாதங்களாக அவற்றின் விலைகள் உயர்த்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்துகொண்டிருக்கும் ரஷிய - உக்ரைன் போரும், தொடங்கியிருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போரும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com