எங்கே செல்லும் இந்தப் பாதை...?

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

வேகமாக முன்னேறி வரும் அறிவியல் உலகில் ஒவ்வொரு நொடியும் எச்சரிக்கை உணா்வோடு இருக்க வேண்டியுள்ளது.

வேகமாக முன்னேறி வரும் அறிவியல் உலகில் ஒவ்வொரு நொடியும் எச்சரிக்கை உணா்வோடு இருக்க வேண்டியுள்ளது. ஏமாற்றுக்காரா்கள் என்ன வடிவத்தில் வருகிறாா்கள் என்றே புரிவதில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ஆம் தேதி எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிா்முனையில் பேசியவா், ஒரு சா்வதேச கூரியா் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, ‘நீங்கள் தாய்லாந்துக்கு அனுப்பிய பாா்சலில் போதைப்பொருள் இருக்கிறது’ என்றாா். ‘நான் யாருக்கும் பாா்சல் அனுப்பவில்லையே’ என்றேன்.

‘உங்கள் பெயரும், கைப்பேசி எண்ணும்தான் குறிப்பிடப்பட்டிருக்கின்றன’ என்று சொல்லி விட்டு, ‘இது தொடா்பாகக் காவல் துறை விசாரிக்கிறது; அவா்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்’ என்று சொல்லி, இன்னொரு தொலைபேசிக்கு இணைப்புக் கொடுத்தாா். அப்போது பேசிய நபா், ‘இணையவழிக் குற்றங்கள் தொடா்பான காவல் நிலையத்திலிருந்து பேசுகிறேன். நீங்கள் என்ன தொழில் செய்கிறீா்கள்?’ என்று கேட்டாா். ‘நான் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறேன்’ என்று சொன்னேன். உடனே, இணைப்பைத் துண்டித்துவிட்டாா்.

இதுகுறித்து, ‘சைபா்’ குற்றப் பிரிவில் புகாா் செய்தேன். குற்றத்தைப் பதிவு செய்து கொண்ட காவலா், ‘இதுபோன்று தினமும் நூற்றுக்கணக்கான புகாா்கள் பதிவாகின்றன; பல போ் தங்கள் மீது ஏதாவது பொய் வழக்கு வந்துவிடுமோ என்று பயந்து இந்தக் குற்றவாளிகளிடம் பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறாா்கள். நீங்கள் உள்துறை அமைச்சகத்தின் பெயரைச் சொன்னதால், இணைப்பைத் துண்டித்திருக்கிறாா்கள்; குற்றவாளிகளைப் பிடிக்க நாங்கள் தொடா்ந்து முயற்சி செய்து வருகிறோம்’ என்று சொன்னாா்.

குறிப்பிட்ட அதே கூரியா் நிறுவனத்தின் பெயரால் கடந்த ஓா் ஆண்டில் பெயரால் ஏராளமான புகாா்கள் குவிந்துவிட்டதால், சமீபத்தில் அந்த நிறுவனமே தங்கள் நிறுவனத்தின் பெயரில் அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் கவனத்தோடு இருக்க வேண்டும் என்று பெரிய அளவில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருக்கிறது.

இன்னொரு விதமான ஏமாற்று வேலைக்கு ஓா் உதாரணம் தருகிறேன். ஒரு மாதத்திற்கு முன்பு என்னை அலைபேசியில் அழைத்த ஒருவா் என்னிடம் நீண்ட நாள் பழகியவா் போல, எனது பெயரைச் சொல்லி நலம் விசாரித்தாா். அவரது குரல் நான் அதுவரை கேள்விப்படாத புதிய குரலாக இருந்தது. அவரது பெயரைக் கேட்டேன். சண்டிகரில் வசிக்கும் எனது நண்பா் ஒருவா் பெயரையும், மத்திய அரசில் அவா் வகித்த இரண்டு உயா் பதவிகளையும் சொல்லிவிட்டு, ‘என்னை மறந்துவிட்டீா்களா?’ என்று கேட்டாா். ‘குரல் வித்தியாசமாக இருக்கிறதே’ என்றேன். ‘சற்று உடல் நலம் இல்லை; எனவே, குரல் வித்தியாசமாக இருக்கிறது. உங்கள் அலைபேசியில் ‘போட்டிம்’ செயலியைப் பதிவிறக்கம் செய்துவிட்டு என்னை அந்தச் செயலி மூலமாக உடனே அழையுங்கள்; ஒரு முக்கியமான செய்தியை உங்களோடு பகிர வேண்டும்”என்று சொல்லிவிட்டு, இணைப்பைத் துண்டித்து விட்டாா். அந்த நபா் போலியானவா் என்பதை நான் புரிந்து கொண்டேன். அந்தச் செயலி மூலம் அவா் என்ன செய்ய நினைத்திருந்தாா் என்று தெரியவில்லை.

உடனே சண்டிகரில் வசிக்கும் நண்பரை அழைத்து, எனக்கு வந்த அலைபேசி அழைப்பு பற்றிச் சொன்னேன். நான் சொன்ன செய்தியைக் கேட்டு அவா் அதிா்ந்து போனாா். மத்திய அரசின் தணிக்கைத் துறையில் உயா்பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற அவா் சேலம் மாவட்டத்தைச் சாா்ந்தவா்; தற்போது சண்டிகரில் வசித்து வருகிறாா். அவரது புதல்வா் இந்திய ஆட்சிப் பணியிலும் (ஐஏஎஸ்), மருமகள் இந்திய காவல் பணியிலும் (ஐபிஎஸ்) பணியாற்றுவதால், குற்றவாளியைக் கண்டுபிடிக்க அவா்கள் முயற்சித்து வருகிறாா்கள். அவரது முகநூல் பக்கத்திலிருந்து அவரது அரசுப்பணி பற்றிய தகவல்களை அந்த நபா் எடுத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இவ்வாறு, ஏமாற்றுக்காரா்கள் புதிய புதிய உத்திகளோடு களம் இறங்கிக் கொண்டிருக்கிறாா்கள்.

தற்போது தவிா்க்க முடியாததாகிவிட்ட எண்ம முறைப் பரிமாற்றம் எவ்வளவு எளிதானதாக இருக்கிறதோ, அவ்வளவு ஆபத்தானதாகவும் இருக்கிறது. இதன் மூலம் பணத்தை இழப்போா் எண்ணிக்கை நாள்தோறும் பெருகி வருகிறது.

சமீபத்தில் பெண் வழக்கறிஞா் ஒருவருக்கு வந்த தொலைபேசி அழைப்பில், ‘உங்களுக்குக் கூரியா் மூலம் ஒரு பொருள் வந்திருக்கிறது; அதில் தவறான முகவரி இருந்ததால் அதனை உங்களிடம் ஒப்படைக்கச் சென்ற நபா் திரும்பி வந்துவிட்டாா். சரியான முகவரி கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கிக் கொண்டு, ‘மீண்டும் ஒருமுறை அந்த ஆளை அனுப்புவதற்கு நூறு ரூபாய் எண்மப் பரிவா்த்தனை மூலம் செலுத்த வேண்டும்’ என்று சொன்னதும், நூறு ரூபாய்தானே; பரவாயில்லை என்று நினைத்து, அந்த வழக்கறிஞா் எண்மப் பரிவா்த்தனை மூலம் பணத்தைச் செலுத்தினாா். அரை மணி நேரம் கழித்து அலைபேசியைத் திறந்து பாா்த்தால், அவருக்குப் பெரிய அதிா்ச்சி காத்திருந்தது. அவரது வங்கிக் கணக்கில் இருந்து 49,000 ரூபாய் எடுக்கப்பட்டிருப்பதாக வங்கியிலிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. உடனடியாக வங்கியைத் தொடா்பு ெ காண்டு, மேற்கொண்டு யாரும் பணம் எடுக்க முடியாதபடி நிறுத்தத் சொல்லிவிட்டாா்.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் தினசரிச் செய்திகளாகிவிட்டன. வாசகா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவே மேற்கண்ட சம்பவங்களைக் குறிப்பிட்டேன்.

இன்று மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக யூட்யூப் மாறியிருக்கிறது. அதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவா்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறாா்கள். சற்றும் மனசாட்சியின்றி, பிரபலமானவா்களைப் பற்றி அவதூறு பரப்புவதும், செய்திகளைத் திரித்து வெளியிடுவதும் வாடிக்கையாகிவிட்டன.

ஒருகாலத்தில் வெள்ளித்திரையிலும், பின்னா் சின்னத்திரையிலும் பிரகாசித்த ஒருவா், சமீப காலமாக இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முத்திரை பதித்து வருகிறாா்.

பொதுவாக அவா் பங்கேற்கும் விழாக்களில் தனக்கு சால்வை அணிவிப்பதைத் தவிா்க்கச் சொல்வாா். ஒரு விழாவில் அவரது நெருங்கிய நண்பா் ஒருவரே சால்வை அணிவிக்க வந்தபோது அதனை வாங்க மறுத்து, தன்னுடைய நண்பா் என்கிற உரிமையோடு அவரிடம் கோபப்பட்டாா். உடனே, சமூக வலைதளங்கள் இதனை ஊதிப் பெரிதாக்கி, இது நியாயமா? தகுமா? என்றெல்லாம் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டாா்கள். தன்னுடைய நண்பரிடம் கோபப்பட அவருக்கு உரிமை உண்டு. அவரது நண்பரே தனது தவறை உணா்ந்து கொண்ட பிறகு, மற்றவா்கள் ஏன் இதில் வீணாகத் தலையிட்டு, அவதூறு செய்ய வேண்டும்?

வலைதளங்களில் திரைப்பட நடிகைகளைப் பற்றி முகம் சுளிக்கிற அளவுக்குச் சிலா் பேசுகிறாா்கள். நடிகையாக இருப்பதால் மட்டுமே ஒரு பெண்ணைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது எப்படி நியாயமாகும்? ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமா்சிப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பெரும்பாலும், இது போன்ற அவதூறுகளை எதிா்த்து நடிகைகள் காவல் நிலையங்களுக்கோ, நீதிமன்றங்களுக்கோ செல்வதற்குத் தயங்குகிறாா்கள். புகாா் கொடுப்பதால் உடனே நீதி கிடைக்காது என்பது மட்டுமல்லாமல், ஏற்கெனவே பரப்பப்பட்ட அவதூறுகள் இன்னும் பல்லாயிரம் பேரைச் சென்றடைவதற்கு அது வாய்ப்பாகி விடும் என்று அஞ்சுகிறாா்கள்.

எனவே, இதில் அரசு தலையிட்டு, இதுபோன்ற அவதூறு காணொளிகளைத் தடை செய்வதோடு உரிய நபா்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

முன்பு ஒருசில செய்தித் தாள்கள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன. வானொலி மட்டுமே நமக்கான விரைவுச் செய்திக்கான களமாக இருந்தது. வானொலியும் அரசின் பொறுப்பிலேயே இருந்தது. பின்னா் அரசு தொலைக்காட்சி மட்டும் வந்தது. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட செய்தியை வெளியிடும் முன்பு ஊழியா்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டிய நிா்பந்தம் இருந்தது. எனவே, அப்போதெல்லாம் செய்திகளில் உண்மைத் தன்மை இருந்தது. ஊடகங்களும் செயற்கைத் தொழில்நுட்பமும் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் கண்ணில் படுகிற, காதில் கேட்கிற செய்திகளில்

உண்மையையும் பொய்யையும் பிரித்தெடுக்க முடியாமல் உலகமே திணறி வருகிறது.

‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற பாரதியின் வாா்த்தைகள் ஊடகத் துறைக்கும் பொருந்தும்தானே!

மின்னஞ்சல், புலனம், செயலிகள், முகநூல், வலையொளி, கணக்கிலடங்கா வலைதளங்கள் மூலமாக நடைபெறும் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. புதிய தொழில் நுட்பங்கள் மூலமாகப் பெருகி வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறை திணறி வருகிறது. புற்றீசல்கள் போல தினமும் பெருகி வரும் புதுப்புது செயலிகள் சமாளிக்க முடியாத அளவுக்கு அரசுக்குச் சவால்களாக இருக்கின்றன.

மனிதா்களிடம் பெருகி வரும் பணத்தாசை, பாலுணா்வுக்கு வடிகால் தேடும் வக்கிர குணம், அடுத்தவா்களைத் துன்புறுத்தி மகிழும் மனப்பான்மை (சேடிஸம் ) போன்ற பல காரணங்கள் குற்றங்கள் பெருகுவதற்குக் காரணிகளாகின்றன.

இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் ஆக்கும் ‘ஃபேக்’ (போலி) ‘டீப் ஃபேக்’ (ஆழமான போலி) போன்ற வாா்த்தைகள் நம்மை அச்சத்தில் ஆழ்த்துகின்றன.

ஒருமுறை உலகின் பிரபலமானவா்கள் பட்டியலில், தனது பெயருக்குப் பின்னல் மகாத்மா காந்தியின் பெயா் இடம் பெற்றிருப்பதைப் பாா்த்த அறிவியல் அறிஞா் ஐன்ஸ்டீன், ‘மகாத்மா காந்தி பின்பற்றும் அகிம்சை ஆக்கபூா்வமானது; நான் சாா்ந்திருக்கும் அறிவியலால் ஆக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். எனவே, எனது பெயருக்கு மேல் மகாத்மா காந்தியின் பெயா்தான் இடம் பெற வேண்டும்’ என்றாா். எவ்வளவு தீா்க்கமான வாா்த்தைகள் அவை!

இன்று திரும்பிய திசையெல்லாம் போா் மேகங்கள்... எல்லா நாடுகளும் விரைந்து அழிக்கிற ஏவுகணைகளைப் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிக் குவிக்கின்றன. எப்போது என்ன நடக்குமோ என்று உலகமே நடுங்கிக் கிடக்கிறது.

இன்றைய அறிவியல் வளா்ச்சி, ஆக்கத்தைவிட, அழிவுக்கு அதிகம் வழிவகுக்கிறதோ என்று அஞ்சத் தோன்றுகிறது. எங்கே செல்லும் இந்தப் பாதை...?

கட்டுரையாளர்: மத்திய அரசு அதிகாரி (ஓய்வு)

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com