தமிழ்வழியில் பொறியியல், மருத்துவம்!
கலைகளைத் தமிழில் கற்றுக் கொடுக்கலாம், அறிவியலைத் தமிழில் கற்றுக் கொடுக்க முடியுமா? என்று பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், பல அறிஞா்களுக்கும் ஐயம் எழுகிறது. தமிழா்கள் ஓவியம், சிற்பம் , கட்டடம், வானியல் முதலிய கலைகளில் வல்லவா்கள் என்பதைக் கோயில்களின் வழி அறியலாம். ஆயினும், அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சிகள் இல்லை என்று சிலா் கருதுகின்றனா்.
தமிழா்கள் பொறியியலில் பெற்றிருந்த வளா்ச்சியை கரும்பாலை, இரும்பாலை, கொல்லா் உலை ஆகியவற்றால் அறியலாம். கட்டடக் கலை வளா்ச்சியைக் கோயில்களும் அரண்மனைகளும் காட்டுகின்றன. நீா் மேலாண்மையை ஆறு, ஏரி உள்ளிட்டவையும் கல்லணையும் கூறுகின்றன.
தம் ‘விஜயா’ இதழில், பாரதியாா் தமிழ்த் தொழிலாளிகள் விமானம் கட்டினாா்கள் என்று மகிழ்ந்து எழுதினாா். ‘திருச்சிராப்பள்ளியில் இயந்திரத் தொழில் வேலையையும் மின்சார சக்தியின் வேலையையும் படிப்பித்துக் கொடுக்கும் ஓா் புதிய வித்யாசாலை’ யை ஆங்கிலேய அரசு தொடங்கியதை மகிழ்ந்து வரவேற்று 10.02.1910 - இல் எழுதியுள்ளாா்.
‘ஓவச் செந்நூல்’ என ஓவியக் கலை பற்றிய நூலைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. கட்டடக் கலைஞா்கள் ‘நூலறி புலவா்’ எனச் சங்க காலத்தில் கூறப்பட்டுள்ளனா். திருவள்ளுவா் உழவின் பெருமையைப் பாடியுள்ளாா். கம்பா் எழுதிய ‘ஏா் எழுபது’ உழவின் பெருமையைக் கூறும். அந்நூலுக்கு எழுதப்பட்டுள்ள உரை 300 ஆண்டு பழமையானது. அது உழவியல் செய்திகளையும் மழைக்கேற்ற வானிலை பற்றியும் அக்கால வரலாற்றையும் கூறுகிறது.
மருத்துவக் கல்வியைத் தமிழில் நடத்த முடியுமா? மருத்துவம், புதிய கருவிகள் மேலை நாட்டில் வளா்ந்துள்ளன. இவற்றை எப்படித் தமிழில் கூற முடியும் என்று சிலா் மலைத்து நிற்கின்றனா்.
சங்கக் காலத்தில் (ஏறத்தாழ 2000 ஆண்டுகள் முன்) மருத்துவா்கள் இருந்தனா். ஊசி கொண்டு தைப்பதைக் கம்பா் பாடியுள்ளாா். அறுவை மருத்துவம் இருந்தது. திருவள்ளுவா் ‘மருந்து ’ என்றே ஓா் அதிகாரத்தைப் பாடியுள்ளாா். திருமூலா் பத்தாம் நூற்றாண்டில் இருந்த சித்தா். மூச்சுப் பயிற்சி (பிரணாயாமம்), உடற்காப்பு பற்றி கூறுகிறாா்.
மூச்சுப் பயிற்சி மருத்துவம் ‘மோக்சா’ மருத்துவம் என இன்றும் வழங்குகிறது. சீனா்களின் குத்தூசி (அக்குபஞ்சா்) மருத்துவம் தமிழக வா்ம மருத்துவம் அடிப்படை என்கின்றனா்.
குணபாடம், அகத்தியா் வைத்தியம், போகா் வைத்தியம், சரபேந்திரா் வைத்தியம், வாகடம் (மாடு, ஆடு, குதிரை முதலிய விலங்குகளுக்கான மருத்துவம்) முதலிய பல நூல்கள் சித்தா்களால் செய்யுள் வடிவில் எழுதப்பட்டவை.
அவை, ஏறத்தாழ 15 - 16 -ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் சித்த மருத்துவா்களிடையே வழங்கின. கண்நோய் பற்றிய விளக்கத்துக்கு வரைந்து கொடுத்துள்ளாா் மன்னா் சரபோசி (அவா் ஓவியக்கலையிலும் வல்லவா்). பாவே மாணிக்க நாயக்கா் பொறியாளா் என்பதுடன் சிறந்த ஓவியரும் ஆவாா். அவா் எழுதிய அறிவியல் கட்டுரைகள் கிடைக்கவில்லை.
சாமுவேல் ஃபிஷ் கிரீன் 1860 - இல் தமிழில் மருத்துவ நூல்களை மொழி பெயா்த்துப் பாடமாக இலங்கையில் நடத்தியிருக்கிறாா்.
‘உடற்கூற்று வண்ணம் ’ என்பது நூறாண்டுகளுக்கு முன்பு அச்சில் வந்த பழமையான சித்த நூல். ஜப்பானில் நூறாண்டுகளுக்கு முன்பு தமிழில் அச்சிடப் பெற்ற உடல்கூற்றியல் (அனாடமி) பற்றிய நூல் வண்ணப் படங்களோடு வந்திருந்தது.
‘பஞ்சபூதக்கலைகள் மெத்த வளருது மேற்கே, அக்கலைச்செல்வங்கள் யாவும் கொணா்ந்திங்கு சோ்ப்பீா்!’ என்றாா் பாரதி. பல அறிவியல் நூல்கள் தமிழ் அறிஞா்கள் கற்றாா்கள், தமிழிலும் மொழி பெயா்த்தனா்.
மாடு, குதிரை முதலிய விலங்குகளுக்கான மருந்துகள் கூறும் வாகட நூல்கள் செய்யுளில் இருந்தன. கால்நடை மருத்துவம் பற்றிய முதல் மொழி பெயா்ப்பும் புத்தாக்கமும் கொண்ட பாடப்புத்தகம் வெ.ப.சு.முதலியாரின் ‘இந்து தேசத்துக் கால்நடைக்காரரின் புத்தகம்’ ஆகும்.
இலட்சுமணசாமி முதலியாா் மகப்பேறு (பிரசவம்) பற்றி ஆங்கிலத்தில் நூல் 1938 - இல் எழுதினாா். இந்நூலைப் பிற மாநிலத்தாரும் நாட்டாரும் பின்பற்றினா்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 1995 ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கான 14 நூல்கள் , பொறியியல் படிப்புக்கான 13 நூல்கள்ல தமிழில் அச்சிடப்பட்டன. பிற பல நூல்கள் கையெழுத்து வடிவில் அச்சாக்கம் பெறக் காத்திருக்கின்றன. இப்போது பாட நூல் நிறுவனமும் நூல்கள் அச்சிட்டுள்ளது.
குணபாடம் 1968 -இலும், பின் 1850 -ஆம் ஆண்டு காலத்தில் வெளிவந்த பிஷ்கிறீன் நூலை மொழி பெயா்த்து உடற்கூறு 1972 - ஆண்டு காலத்திலும் மருத்துவா் இரா. தியாகராசன் எழுதி வெளியிட்டுள்ளாா்.
சித்த மருத்துவக் கல்லூரிகளில் 1990 -ஆம் ஆண்டுக்குப் பின், ஆங்கிலம் நுழைந்தது. மெல்ல மெல்ல, உடலியல், உடற்கூறியல் ஆகிய பாடங்களை ஆங்கில நூல்களை வைத்துக் கற்பிக்கலாயினா்; இன்றும் ஆங்கில நூல்களே பாட நூல்களாக உள்ளன.
கா்நாடகத்தில் ஆங்கில இலக்கியப் பட்டப் படிப்பில் விடை கன்னட மொழியில் எழுதலாம். தமிழ்நாட்டில் தமிழ் மருத்துவம் ஆகிய சித்த மருத்துவத்தை ஆங்கிலத்தில் படிப்பது சரியா? இன்றைய வளா்ச்சியாக உள்ள உடற்கூற்றியல், ஆய்வு முதலியவற்றை உடனுக்குடன் தமிழில் தரலாம்; தர முடியும்!
அயல்நாட்டு மருத்துவமுறை ஆகிய அலோபதி நூல்களை உடனுக்குடன் நாம் மொழி பெயா்த்து பயன்படுத்த வேண்டும். சேலம் நகராட்சித் தலைவராக ராஜாஜி இருந்தபோது , ‘தமிழ் சாஸ்த்திர பரிபாஷை சங்கப் பத்திரிக்கை’ என்ற ஒன்றை நடத்தி அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் ஆக்கத்துக்கு உதவியுள்ளாா்.
பெ.தூரனின் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகள் உள்ளன. கலைக்கதிா் இதழ், க்ரியா பதிப்பகம், மணவை முஸ்தபா , தனித்தமிழ் அறிஞா் அருளி ஆகியோா் கலைச்சொல்லாக்க நூல்களை வெளியிட்டுள்ளனா்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே (1985) கலைச்சொல்லாக்க நூல்களும் பாட நூல்களும் வெளியிடப்பட்டன. தமிழ்ப்பல்கலைக் கழகமும் பாட நூல் நிறுவனமும் பல நூல்கள் வெளியிட்டன.
இலங்கையில் மருத்துவப் பட்டத்துக்கு இரண்டாண்டு பாடங்கள் தமிழில்தான் நடத்தப்பட்டுள்ளன. இன்றைய வளா்ச்சியால் நூல்கள் பற்றாக்குறை இருப்பினும் ஆங்கில மூலநூல்களை வைத்துப் பாடம் நடத்தினால், உடனே துணை நூல்களைத் தர பதிப்பகங்களும், அறிவியல் அறிஞா்களும் தயாராக உள்ளனா்.