உயர் கல்வியில் முந்தும் இந்தியா!

உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது. பல்வேறு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்து வருகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
3 min read

உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது. பல்வேறு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. இதனால், அந்த நாடுகளுக்கு உயர் கல்வி பயிலச் சென்றவர்களும், வாழ்வாதாரங்களுக்காக சென்றவர்களும் உயிருக்கு உத்தரவாதமின்றி, தங்கள் உடைமைகளை இழந்து பெரும் பயத்துடனும், கவலைகளுடனும் தங்களின் தாய் நாடு திரும்பி வருகின்றனர்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உயர் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. தன் திறமைகளை உணர்ந்து, அதை மெருகேற்றி, குடத்தில் இருக்கிற விளக்கை, குன்றின் மேலிட்ட விளக்காய், தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஒருவருக்கு உயர் கல்வி அவசியமாகிறது. தான் சார்ந்த துறையில் யாரும் தொடாத உயரத்தைத் தொட்டு முன்மாதிரியாக விளங்கும் வழிகாட்டும் வாழ்க்கை அமைய சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வியைத் தொடர்கின்றனர்.

உக்ரைன் - ரஷியா இடையே 2022-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தொடங்கிய போரின் போது அங்கு உயர் கல்வி பயின்று வந்த மாணவர்கள் சுமார் 14,000-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பெரும் முயற்சிக்குப் பிறகு இந்தியா அழைத்துவரப்பட்டனர். இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஹமாஸ் அமைப்பு போர் காரணமாக இஸ்ரேலில் 1,200-லிருந்து 1500 மருத்துவ மாணவர்களும், இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக 1,500-லிருந்து 2,000 மருத்துவ மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.

ஒவ்வோர் ஆண்டும், சுமார் 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். காரணம், அங்கு மருத்துவப் படிப்புகளுக்கு எளிதாக இடம் கிடைப்பதுடன், இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கு ஆகும் செலவைவிட குறைவான செலவேயாகும். இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும், சுமார் 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். இது பாரீஸ் நகரத்தில் வாழும் மக்களைவிட மிகவும் அதிகம்.

சுமார் 90,000 மருத்துவ இடங்களுக்கு சுமார் 12 லட்சம் பேர் தகுதி பெறுகின்றனர். இதில் தனியார் கல்லூரிகளில் சுமார் 20,000 மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) ஒதுக்கீடு ஆகியனவும் அடங்கும். இதனால், லட்சக்கணக்கானோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பண வசதியின்றி எங்கும் சேர முடியாத காரணத்தால், அவர்கள் உக்ரைன், இஸ்ரேல், ஈரான், சீனா ஆகிய நாடுகளுக்குச் சென்று மருத்துவப் படிப்பைப் படிக்கின்றனர்.

எனினும், வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பைக் கைவிட்ட மாணவர்கள், இந்திய கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் தங்கள் படிப்பைத் தொடர விதிகளில் இடமில்லை. மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1956 மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019-இன் விதிமுறைகளில் எந்தவொரு வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்களிலிருந்தும் மருத்துவ மாணவர்களை இந்தியாவிலுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்றுவதற்கான விதிகள் எதுவுமில்லை.

வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2023-24-ஆம் கல்வியாண்டில் மட்டும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் பல்வேறு நாடுகளுக்கு உயர் கல்விக்காக சென்றனர். இதனால், சுமார் 2,800 கோடி டாலர் வெளிநாடுகளுக்கு செல்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், ஜெர்மனி, ரஷியா, வங்கதேசம் அயர்லாந்து, உஸ்பெகிஸ்தான், பிரான்ஸ், நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று கல்விக்கற்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட நிகழாண்டு அதிகரித்துள்ளது.

இந்தியா மனித இனத்தைத் தாங்கும் தொட்டிலாகத் திகழ்கிறது. இந்தியா மனித மொழியின் பிறப்பிடம். உலக வரலாற்றின் தாய். மிகவும் அரிய ஆக்கபூர்வமான மனித வரலாற்றுச் சாதனைகளின் கருவூலமாக இருப்பது இந்தியா மட்டும்தான் என்கிறார் உலகப் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் மார்க் டுவைன். பண்டைக் காலத்தில் மருத்துவத் துறையிலும், கணிதம், அறிவியல் துறைகளிலும் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக இந்தியா விளங்கியது. அந்தக் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் உலகப் புகழ்பெற்று விளங்கி, உயர் கல்வி பெற விரும்புவோருக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது.

உயர் கல்வியின் வெற்றி, அந்தக் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளிக்கும் கல்வியின் தரத்தையும், மாணவர்களின் திறனையும் பொருத்தே அமைகிறது. உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உண்மைத்தன்மையும், படைப்பாற்றலும் உள்ளடக்கிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டிய பெரும் பொறுப்பு இன்றைய வளரும் கல்வி நிறுவனங்களிடம்தான் உள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சியை உலகம் கண்டு வருவதால், இந்திய மாணவர்களுக்கு புதுமையைவிட படைப்புச் சிந்தனையே அதிகம் தேவைப்படுகிறது.

மனிதர்களின் முழு வெற்றிக்கு, நுண்ணறிவு ஈவு, (ஐ.க்யூ), தொழில்நுட்பத் திறன், உணர்ச்சி நுண்ணறிவு (இ.கியூ) ஆகிய மூன்று பண்புகள் மிகவும் அவசியம். இக்கட்டான நேரத்தில், அமைதியாக, ஆழமாக சிந்தித்து குறுகிய காலத்தில் அற்புத முடிவுகளை எடுத்து எல்லோருக்கும் நன்மை கிடைப்பதற்கான ஒரு செயலை தேர்வு செய்யும் பண்பு உணர்ச்சி நுண்ணறிவு எனப்படுகிறது. இந்தப் பண்புகள் உயர் கல்வி கற்றோரிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். உயர் கல்வியின் முக்கிய அம்சங்களான சாத்தியம், சமநிலை, தரம் ஆகிய மூன்றும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் லண்டனைச் சேர்ந்த குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் (கியூஎஸ்) என்ற கல்வி ஆய்வு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 2026-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஆகிய இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ. டி.-க்கள்) முதல் 200 இடங்களில் இடம்பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளன. இதில், 106 நாடுகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் போட்டியிட்டன. வழக்கம்போல, முதல் ஐந்து இடங்களை அமெரிக்கா (3), பிரிட்டன் (2) நாடுகளைச் சேர்ந்த உயர் கல்வி நிறுவனங்களே கைப்பற்றியுள்ளன.

அமெரிக்காவின் மசசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவனம் (எம்ஐடி) 100 புள்ளிகளுடன் இந்தத் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. லண்டன் இம்பீரியல் கல்லூரி (99.4), ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், கலிஃபோர்னியா (98.9), ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், பிரிட்டன் (97.9) ஹார்வர்டு பல்கலைக்கழகம், மசசூசெட்ஸ் (97.7) ஆகியவை முறையே அடுத்த நான்கு இடங்களில் உள்ளன.

நிகழாண்டு புதிதாக எட்டு உயர் கல்வி நிறுவனங்களுடன் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்துள்ளது. மேலும், கியூஎஸ் தரவரிசைப் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 10 இந்திய

பல்லைக்கழகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம், உலக அளவில் சிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் அதிகம் கொண்ட பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அதாவது, அமெரிக்கா (192) உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. பிரிட்டன் (90) இரண்டாமிடத்திலும், சீனா (72) மூன்றாமிடத்திலும் உள்ளன.

தில்லி ஐஐடி, சென்னை ஐஐடி ஆகியன முந்தைய ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு தரவரிசையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் 123-ஆவது தரவரிசையுடன் தில்லி ஐஐடி முன்னிலை வகிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தரவரிசையில் தில்லி ஐஐடி 54 இடங்கள் முன்னேறியது. சென்னை ஐஐடி 227-ஆவது இடத்திலிருந்து 58.4 புள்ளிகளுடன் 180-ஆவது இடத்துக்கும், இந்தியாவில் மூன்றாவது இடத்துக்கும் முன்னேறியுள்ளது. இதன்மூலம் முதல் 200 இடங்களில் சென்னை ஐஐடி முதல்முறையாக இடம்பிடித்துள்ளது. இது, இந்தியா அடைந்துவரும் சாதனையை எடுத்துக் காட்டுவதைப் போல அமைந்துள்ளது.

இந்தியாவிலுள்ள மாணவர்கள் உயர் கல்வி பெற வெளிநாடுகளுக்குச் சென்று சீரழிவதைத் தடுக்கும் பொருட்டு, தேசிய கல்விக் கொள்கையின்படி, 2047-இல் மேம்பட்ட இந்தியா என்கிற நோக்கத்துடன், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொடங்கப்பட்டு வருகின்றன.

உலகின் முன்னேறிய நாடுகளுடன் போட்டியிட்டு இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தும் நிலைமையை உருவாக்க, வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உயர் கல்வியில் சிறந்து விளங்கும் வல்லுநர்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம்.

வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும் பெரும்பாலான சீன மாணவர்கள், படிப்பு முடிந்தவுடன், நாடு திரும்பி தாய் நாட்டுக்கு உழைக்கவே விரும்புகிறார்கள். பத்தாண்டுகளுக்கும் மேலாக, வெளிநாடுகளிலிருந்து தாமாக முன்வந்து, சீனாவுக்குத் திரும்புபவர்களின் எண்ணிக்கை நான்கில் மூன்று பங்குக்கும் அதிகமாக உள்ளது. இந்தியர்களின் பங்கு பாதிக்கும் குறைவாகவே உள்ளது. சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்யலாம். கர் வாப்சியை (வீடு திரும்புவோம்) கருத்தில் கொள்ளுமாறு நாங்கள் அவர்களை வலியுறுத்துகிறோம். எனவே, ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் திரும்ப வந்து 'பாரதத்தை வலிமையாக்குங்கள்' என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் விடுத்த அழைப்பு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும்.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com