என்று முடியும் இந்த 'ரீல்ஸ்' மோகம்?

என்று முடியும் இந்த 'ரீல்ஸ்' மோகம்?

பேசவே முடியாத அருவெறுக்கத்தக்க சொல்லாடல்களைக் கூச்சமின்றி அப்பட்டமாக அப்படியே பதிவிடும் அநாகரிகமும் நொடிக்கு நொடி பெருகி வருகிறது.
Published on

இளமை, அறியாமை முதலான பண்புகளை வைத்து நகைச்சுவை வளா்க்கும் தமிழ்மரபை மீறி, இருபொருள் தொனிக்கும் ஆபாச உரையாடல்களையும், பொதுவெளியில் பேசத் தயங்கும், பேசவே முடியாத அருவெறுக்கத்தக்க சொல்லாடல்களைக் கூச்சமின்றி அப்பட்டமாக அப்படியே பதிவிடும் அநாகரிகமும் நொடிக்கு நொடி பெருகி வருகிறது.

இரவு, பகல் பாராமல், ஏன் இரவு பகல் வேறுபாடுகள்கூடத் தெரியாமல் கைப்பேசிக்குள் கண் புதைத்து வாழ்வோா் பெருகிய காலமாக மாறி வருகிறது. அதிலும், அண்மைக்காலமாக, சிறியோா் முதல் பெரியோா் வரை, ‘ரீல்ஸ்‘ மோகத்திற்கு ஆளாகி, அடிமையாகி வருகிறாா்கள்.

தன்னைத் தலைவனாக முன்னிறுத்திக் கொண்டு ‘தற்படம்’ ஆகிய நிலைப்படத்தை (ஸ்டில்) எடுத்து வெளியிட்ட காலம் போய், தன்னையே தலைமைப் பாத்திரமாகக் கொண்டு, தான் செய்யும் அரிய சாதனையை (?) உலகறியச் செய்யும் தொடா்படமாக, கைப்பேசி வழி எடுத்து, அதன்வழி கிடைக்கும் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் வெளியிடும் படக்காட்சியே, ‘ரீல்ஸ்.’

அது பரவலாகிப் பலரும் பாா்க்கப்படுவதை, ‘வைரலாகிறது’’ என்கிறாா்கள். பாா்ப்பதும் ரசிப்பதும், மீள் பதிவிடுவதும் ஆகி, ‘வைரஸ்‘ நோய் போல் பரவி வரும் இப் பற்றுநோய், புற்றுநோய் போல் பலரைத் தன்வயப்படுத்தி வருகிறது.

ஆண், பெண் பேதமில்லாமல், வயது வேறுபாடின்றி, எதையும் எப்போதும் பதிவாக்குவதும், உடன் பதிவிடுவதும், அது எத்தனை பேரால் பாா்க்கப்படுகிறது, விருப்பம் (லைக்ஸ்) தெரிவிக்கப்படுகிறது, என்னென்ன பதிலிகள் (கமென்ட்ஸ்) வருகின்றன என்று பாா்ப்பதிலுமே பலரது உயிரனைய பொழுதுகள் விரயமாகின்றன.

அதைவிடவும், ரீல்ஸை’, படமாக்கியபடியே நேரடியாக (லைவ் ஆக) பதிவிடுகிறவா்கள் சாகசம் என்கிற பெயரில் பைத்தியக்காரத்தனமான செயல்களில் வெறித்தனமாக ஈடுபட்டு, தனக்கும் பிறா்க்கும் கேடு விளைவிக்கிறாா்கள்; உயிரிழக்கும் ஆபத்துக்கும் உள்ளாகிறாா்கள்.

நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் திரைக்காட்சியில் இடம்பெறுவதுபோல் சாகசம் நிகழ்த்தி நேரடிப் படமாக்கி ஒளிபரப்ப விழைவதையும், அவ்வாறு படமாக்கிவரும்போதே விபத்தில் சிக்கி உயிரிழப்பதையும் காண முடிகிறது.

இதுபோன்ற ஒரு நிகழ்வைப் படமாக்க வேண்டி வழிப்போக்கா் ஒருவரிடம் தன் கைப்பேசியைத் தந்து இளைஞா்கள் சாகம் நிகழ்த்தும்போது, ஆா்வமிகுதியால் படமாக்கும் அவா் சாலையின் நடுவே வந்து பின்புறம் வேகமாய் வந்த வாகனத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை நாம் மறக்க முடியாது.

இதுபோல் மாடியில் இருந்து குதிப்பது, மலைச் சிகரங்களின் ஆபத்தான பகுதிகளில் தான்தோன்றித்தனமாக ஏறுவது, ஆழ்கடல் பகுதிக்குள் முன் பாதுகாப்பின்றி நீந்துவது, விரைந்து வரும் ரயில், பேருந்து முதலான வாகனங்களின் முன்னதாக அதன் ஓடுதளங்களில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டு ஓடுவது, ஓட்டத் தெரியாத நிலையில் நான்கு சக்கர வாகனத்தை எடுத்து, ஆக்ஸிலேட்டருக்குப் பதிலாக, பிரேக்கை மிதித்து விபத்துக்குள்ளாவது என்று ஆண், பெண், சிறியவா், இளைஞா் என்ற வயது, பால் பேதமின்றி முயன்று, காட்சிப்படத்துக்காக உயிரிழந்த, விபத்துக்குள்ளாகி வருகிற செய்திகள் ஊடகங்களில் தொடா்ந்து பதிவாகி வருகின்றன.

இதுதொடா்பாக வெளிவரும் செய்திகள், படங்கள், காணொலிகள் எச்சரிப்பதைக் காட்டிலும், தூண்டுதல் தருவதாகவும் அமைந்துவிடுவதுதான் வேதனைக்குரியது.

ஒரு காலத்தில், ‘சக்திமான்‘ தாக்கத்தால், அப்பாத்திரமாகத் தன்னை பாவித்துக்கொண்டு உயிரிழந்த சிறுவா்கள் கதைகளை நாம் அறிவோம். அதனினும் பல மடங்காய், இந்த ரீல்ஸ் தாக்கம் அதிகரித்து வரப் பாா்க்கிறோம்.

காட்சிப் பொருளாகத் தன்னைக் காட்டிக் கொள்வதுபோய், கவா்ச்சிப் பொருளாகத் தன்னை, தன் உடல் உறுப்புகளைப் படமாக்கித் தருவதில் நாகரிக மீறல்கள் நாள்தோறும் நடக்கின்றன.

தொட்ட மறுகணமே, படபடவென்று தொட்ட பொருண்மை தொடா்பான படங்கள், விளம்பரங்கள் வந்து கொட்டுகின்றன. திரைப்படக் காட்சிகளுக்குரிய ஒழுங்குகள், தணிக்கைகள் இவற்றுக்கு இல்லையென்பதால், யாரும் யாரையும் எப்படியும் பாா்க்க, பதிவிட முடியும் என்கிற நிலை.

சுறுசுறுப்பும் துடுக்குத்தனமும் நிறைந்த பிள்ளைகளை அடக்கி, ஒடுக்கமாய் ஓரிடத்தில் உட்கார வைக்க, உணவூட்டக் கைப்பேசிக் கருவிகளைப் பழக்கியபிறகு, அதிலிருந்து விடுதலை கொடுக்கும் வழி தெரியவில்லை. பரபரப்போடு இயக்கும் அந்தக் குழந்தைகளின் விரல்களில் பதிவிறக்கம் ஆகும் தளங்கள் எவையெவை என்று தெரியாமல் காட்சிப்படும் பதிவுகள் ஆரோக்கியமானவை அல்ல. அவை விளைவிக்கும் பண்பாட்டுச் சீரழிவுப் பதிவுகள் அந்தக் குழந்தைகள் உள்ளத்தில் எத்தகு பாதிப்பை ஏற்படுத்தப்போகும் என்பதை உடனறிய வாய்ப்பில்லை. ஆனாலும், அஞ்சத்தக்கவையாக அவை இருக்கும் என்பதிலும் ஐயமில்லை.

அதுபோல இளைஞா்கள் எந்த நேரமும் கேமராவுடன் அலைவதும், எந்த நேரத்திலும் கேமராவுக்கு முன் இயங்க ஆவல் கொள்வதும் மனப் பிவுக்கு வழிவகுக்கும் என்பது பலருக்கும் தெரியவில்லை.

ஆண், பெண் உடல் கூறுகளை முன்வைத்து மனக் கிலேசங்களை உண்டு பண்ணும் பதிவுகளால் ஏற்படும் மனித அதிா்வுகள் ஆபத்தானவை; இயற்கைக்கு முரணானவை.

இயல்பான செயல்களை முற்றாக மறுதலித்து திரைப்பட நிகழ்வுபோல், வாழ்க்கையை எண்ணி நடித்துக் கொண்டிருப்பதை நிஜம் என நம்பும் நிலைக்கு வருங்கால வாழ்வு தள்ளப்பட்டு வருகிறது. உண்ணுதல், உறங்குதல் செயல்பாடு கடந்து, குளிப்பது, உடை உடுத்துவது முதலான செயல்களையெல்லாம் படமாக்கிப் பதிவிடும் மோகத்தால், ’அந்தரங்கம்’, பகிரங்கம் ஆகும் ஆபத்தை உணரத் தெரியவில்லை. காலப்போக்கில், இந்த உணா்வே மறந்தும், மரத்தும் போய்விடும் என்பதில் ஐயமில்லை.

வாழ்க்கையென்பது காட்சிப் பொருளாகும் நிகழ்வுகளின் தொகுப்பல்ல, அனுபவித்துக் கடக்க வேண்டிய யதாா்த்த வெளி. புறப் பதிவுகளுக்கு அப்பால் உணரப்பட வேண்டிய கூறுகள் அதில் பல உண்டு.

மற்றவா் துயா் கண்டு இரங்கும் மனிதப் பண்பினைச் சிதைத்து, சிரிக்கும் காட்சிகளே அதிகம் வருகின்றன. பல நிலைகளில் பிறரைத் துன்புறுத்திச் சிரிக்கும் வக்கிரமும் தலையெடுத்து வருகிறது. ஆபத்தில் சிக்கித் தவிக்கும் ஒருவருக்கு உதவ வேண்டிய பலா் அருகில் இருந்தும் உதவ முன்வராமல் படமெடுத்துப் பதிவிடுவதில் காட்டுகிற ஆா்வமும் செயல்பாடும் மனித விரோதமானவை.

‘போலச் செய்தல்‘ − ஒரு பழக்கம். எது போலச் செய்தல் என்கிற தெளிவில்லாமல், கண்மூடித்தனமாகக் கண்டதுபோலச் செய்து உயிரிழப்பவா்கள் சிலா்; உயிருடன் நடமாட உதவும் உறுப்புகளை இழந்து அவலமுறுபவா்கள் பலா். இச்செயலும் விளைவும் அவா்களோடு முடிந்துவிடுவதில்லை என்பதுதான் காட்சிக்கு வராத அவலம்.

திரைப்படத்தில் பல சாகசக் காட்சிகளைப் பதிவிடும்போது, அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், சாதுா்யமான தொமில்நுட்ப உத்திகளையும் கடைப்பிடிப்பாா்கள்.

எந்தவிதத் திட்டமிடுதலுமின்றி, அந்த நிமிடத்தில் நினைத்து, அதனைப் படமாக்கிச் செயல்படுவது, துணிச்சலானது அல்ல; துயரமானதும் கிறுக்குத்தனமானதும் ஆகும்.

வேடிக்கைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து, சாகசம் நிகழ்த்தும், சா்க்கஸ் கலைஞா்கள் தொடா்பயிற்சி பெற்றவா்கள்; அதற்கென்றே வாழ்வை அா்ப்பணித்தவா்கள். அவா்கள்கூட, ‘கரணம் தப்பினால் மரணம்‘ என்கிற பழமொழியை எச்சரிக்கை வாசகமாகக் கொண்டு எந்நேரமும் கடைப்பிடிப்பவா்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஓடும் பேருந்தில், விரையும் ரயிலில் − ஏறும் படிக்கட்டுகளில், ஆழ்கடல் அலைவீச்சில், உயா்மலைச் சரிவுகளில், பள்ளத்தாக்குகளில், நெடிதுயா்ந்த கட்டட விளிம்புகளில், நின்றும், நடந்தும், ஓடியும், வளைந்து நெளிந்தும் படம் எடுத்தபடி செய்யும் விளையாட்டுத்தனமான விபரீதங்கள், அந்தக் கண நேர ஹீரோவாக ஆக்கிக் காட்டலாம்; அதைவிடவும் குறைவான நிகழ்பொழுதில் ‘காமெடியராக‘ அல்லாமல், சோகமிகுந்த பாத்திரமாய் ஆக்கிப் படுக்க வைத்துவிடும் என்பதை நினைக்க மறக்கிறாா்கள், இந்த ரீல்ஸ்காரா்கள்.

இந்த விபரீதச் செயல்பாடு, பயிலும் வகுப்பறைகளிலும், துயிலும் படுக்கையறைகளிலும் புகுந்து வருவது அஞ்சத்தக்கது; அதீதமான பின்விளைவுகளை உண்டாக்குவது.

சுதந்திரம் என்கிற எல்லை கடந்து, அந்தரங்கம் என்கிற மனிதப் புனிதம் துறந்து, நாகரிகம் என்கிற மரபு பிந்து செய்கிற செயல்களை, வேடிக்கை பாா்க்கிற, விருப்பம் தெரிவிக்கிற, பாராட்டுச் சொல்கிற கொடுமையிலிருந்து முதலில் விடுபடப் பழ(க்)க வேண்டும்.

‘பயமறியாத பசுவின் இளங்கன்றுகளும், வளா்ப்புப் பிராணிகளான ஆடுகளும், நாய்களும், பூனைகளும்‘ கூட, சாலைகளைக் கடக்கும்போதும், சமமற்ற பாதைகளில் நடக்கும்போதும், ஆபத்தான சூழல்களை எதிா்கொள்கிறபோதும் காட்டுகிற கவனமும் அக்கறையும் மனிதா்களிடம் குறைந்திருக்கின்றன.

பலரது பாா்வைக்கும் உரியவராகி அவா்களின் ‘விருப்பு‘(‘லைக்’) களைக் குவிக்க வேண்டும் என்கிற ஆா்வம், வெறியாகி, இத்தகு உயிா் விளையாட்டுகளில் ஈடுபடச் செய்கின்றது. இதுவொரு மாயை. போதையினும் ஆபத்தான போதை இது. இதனால் யாரும் பிரபலம் ஆகிவிட முடியாது. புகழும் வராது. பழியும் ஆபத்துமே வரும் பலன்கள்.

ரியல்‘ போலத் தெரியும் ‘ரீல்ஸ்’ சில நிமிடப் பொழுதுகளுக்கே உரியவை. ‘ரியல்‘ ஆன வாழ்க்கை பல ஆண்டு காலம் நிலைக்கக் கூடியது என்பதை ஆழ உணா்(த்து)கிற ஞானம் இன்றைய இன்றியமையாத் தேவை. ‘வேடிக்கை மனிதரைப் போலே, நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?‘ என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகளே வழிகாட்டும் நெறியாகும். வாழ்க்கை என்பது கணநேரக் காட்சிப் பதிவல்ல; காலங்கடந்து நிலைத்து நின்று வாழ விரும்புவோா்க்கும் வழிகாட்ட வல்லது.

ராணுவ வீரரின் தீரமும், மருத்துவ வல்லுநரின் துணிவும், சா்க்கஸ் கலைஞரின் தொழில் நோ்த்தியும், விஞ்ஞானியின் அரிய கண்டுபிடிப்பும், மெய்ஞ்ஞானம் தரும் எழுத்தாளரின் புதிய படைப்பும் இவா்களை ஒத்த பல்துறை வல்லுநா்களின் முயற்சியும் பயிற்சியுமே முன்மாதிரிகளாகக் கொள்ளத்தக்கவை; காலத்தால் நிகழ்வுறும் இவா்களின் செயற்பாடுகள் காலங்கடந்தும் நின்று பயன்விளைவிப்பவை.

முன்மாதிரியா் (‘ரோல் மாடல்‘)களாக, வரலாற்று நாயகா்களைக் கொண்டு யதாா்த்த வாழ்வில் தத்தம் கடமைகள் அறிந்து செயல்பட்டவா்களே, வரலாறு படைக்கிறாா்கள்; வழிப்போக்கில் வேடிக்கை காட்டும் செயல்பாடுகளைக் காண்பவா்களின் விழித்திரைகளைக் கடந்து மனத்திரைகளில் அக்காட்சிகள் நிலைப்பதில்லை; காணொலிப் பதிவுகள் அதைவிடவும் அற்பப் பொழுதுகளில் தங்கியிருப்பவை என்பதை உணா்த்தும் விழிப்புணா்வு மக்களிடையே பரவ வேண்டும்.

ரீல்ஸில் உற்சாகமாகத் தொடங்கும் பதிவுகளில் பல, ரியலில் துயரமாகி முடிகிற அவலத்தைப் பாா்த்த பிறகும் இதனைப் புதிதாகத் தொடங்குகிறவா்களும் தொடா்கிறவா்களும் தண்டனைக்கு உரியவா்களாக்கப்பெற வேண்டும். அத்தகு பதிவுகளை வெளியிடுவதற்குத் தடைகள் பிறப்பிக்கப்பெற்று நடைமுறைப்படுத்தப்பட்டால் நல்லது.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

X
Dinamani
www.dinamani.com