
அறிவும், ஆற்றலும், திறமையும் அனைவருக்கும் சமம். எந்த நாடு பெண்மையைப் போற்றுகிறதோ, அதுவே அந்த நாடு முன்னேறுவதற்கான முதல்படி. சமூகம் என்பது பெண்களையும் உள்ளடக்கியதே. அவர்கள்தான், இந்த சமூகத்தையும், உயரிய பண்பாட்டையும், நெறிமுறைகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும் பேணிக் காப்பவர்கள்.
உலகின் இரு கண்களாக ஆண், பெண் உள்ளனர். உள்ளூர் தொடங்கி, உலகம் வரைக்கும், அறிவியல் தொடங்கி, அரசியல் வரைக்கும், மண் முதல் விண் வரை அனைத்துத் துறைகளிலும், ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதனை படைத்து, அப்பழுக்கற்ற திறமைகளுக்கு சொந்தக்காரர்களாக இந்தக் கால பெண்கள் விளங்குகிறார்கள்.
நிலம், ஆறு, மொழி முதலியவற்றை தாயாகச் சிறப்பித்துக் கூறுவது நம் நாட்டின் பண்பாகும். "தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்' என்று பெண்களைப் போற்றுகிறார் வள்ளலார். "பெண்களைப் பேணிக் காக்காத இல்லம், இறைவன் இல்லா ஆலயம்' என்றனர் நம் முன்னோர்.
"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான், புவி பேணி வளர்த்திடும் ஈசன், மண்ணுக்குள்ளே சில மூடர், நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்' என்றார் மகாகவி பாரதியார். அதாவது, பெண்களுக்கு அறிவும், ஞானமும் பிறப்பிலேயே உள்ளது. பெண்களின் அறிவுக்கு பிற்போக்குக் கட்டுப்பாடுகளால் தடை போட்டு, அவர்கள் கல்வி பெறக் கூடாது; வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது; சுதந்திரமாக இருக்கக் கூடாது என பெண் முன்னேற்றத்துக்கு எதிராக சொல்லி வைத்தவர்களை மூடர்கள் எனச் சாடுகிறார் மகாகவி பாரதியார்.
ஒரு பெண்ணுக்கு கல்வி அளித்தால், அந்தக் குடும்பத்திற்கே கல்வி அளித்தது போலாகும். எனினும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், வன்ம எண்ணங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. தன்னை விரும்ப மறுக்கும் பெண்ணைத் தாக்குவது, கத்தியால் கீறுவது, குத்திக் கொல்வது, அமிலத்தை வீசி முகத்தைச் சிதைப்பது, ரயில், வாகனங்களில் பயணிக்கும் போது கீழே தள்ளுவது, வரதட்சிணை காரணமாகத் தற்கொலை செய்யத் தூண்டுவது போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
இன்றைக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பொது வாழ்வில் பங்கேற்பு எனப் பெண்களின் வளர்ச்சி பெருமையுடன் அடையாளப்படுத்தப்பட்டாலும், இன்னமும் அவர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
நாடு பொருளாதார வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் எவ்வளவுதான் முன்னேறினாலும், இன்னும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தீர்ந்தபாடில்லை. இதற்குக் காரணம், ஆண்களிடையே காணப்படும் ஆதிக்க மனநிலைதான்.
பெண்களுக்கு எதிரான இத்தகைய ஆண் ஆதிக்க மனநிலையும், பாலின பாகுபாடுகளுக்கும் காரணம் அவர்களின் பெற்றோர்தான். அதாவது, ஆண் மகவுதான் தன்னை எதிர்காலத்தில் காப்பான் என்பதற்காக, ஆண் குழந்தைகளை அதிக முக்கியத்துவமும், சுதந்திரமும் கொடுத்து வளர்ப்பதும், பெண் குழந்தைகளைத் தாழ்த்தி, மனம் நோகும்படி எடுத்ததற்கெல்லாம் குறை சொல்லி வளர்ப்பதும் அவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் தன்னம்பிக்கையைச் சீர்குலைக்கிறது.
பசியும், தாகமும், உறக்கமும், உடல் வலியும், மன வலியும் இருவருக்கும் ஒரே மாதிரி
தான் என்பதை பெற்றோர் உணர வேண்டும். அவர்களின் அனைத்துச் செயல்பாடுகளிலும், இருவரையும் ஒரே மாதிரி பாராட்டி, ஊக்கப்படுத்த வேண்டும். பெற்றோரே, ஆண், பெண் குழந்தைகளைப் பாகுபாடு காட்டி வளர்த்தால், நாட்டில் கருணையற்ற ஆண்களும், தன்னம்பிக்கையற்ற பெண்களும்தான் உருவாவர். இதற்கு அரசுகளைக் குறை சொல்லிப் பயனில்லை.
இப்போது உலகம் முழுவதும் சமூகவலைதளங்களில் "இன்செல்' எனப்படும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் குழுக்கள் இயங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதை
1997-ஆம் ஆண்டில் கனடா நாட்டைச் சேர்ந்த அலனா என்ற மாணவி "அலனாவின் விருப்பமில்லாத பிரம்மச்சரிய திட்டம்' என்ற தனது தனிப்பட்ட இணையதளம் மூலம் உருவாக்கினார். பிறகு, 2010}களில் இந்த வார்த்தை மிகவும் பிரபலமானது.
பொதுவாக, "இன்செல்' என்றால், "தன்னிச்சையற்ற பிரம்மச்சாரி' என்று பொருள். அதாவது, "இன்வாலன்டரி செலிபேட்' என்பதன் சுருக்கம். இத்தகையோர், பெண்களை வெறுக்கும் எண்ணங்களையும், அவர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பார்கள். அதோடு இவர்கள், ஜனநாயகத்துக்கு எதிராக, வன்முறை மற்றும் தீவிரவாதத்தையும் ஆதரிப்பவர்களாகவும், இனவெறி சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
பெண் வெறுப்பு கருத்துகள் அல்லது நடத்தைகளைக் கொண்ட ஒருவரை விவரிக்க "இன்செல்' என்ற வார்த்தையை இழிவுபடுத்தும் வார்த்தையாகவும் பயன்படுத்தலாம். பெண்கள் மீது வெறுப்பு அல்லது கோபத்தை வெளிப்படுத்தும் ஆண்களைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
இதன் பொருள், தாமாக விரும்பி பிரம்மச்சாரியாக இருப்பவர்கள் அல்லது தாங்கள் விரும்பாத நிலையிலும் பிரம்மச்சாரியாக இருப்பவர்கள் என்று பொருள். சில நேரங்களில், இந்த வார்த்தை பாலின வெறுப்பு, வன்முறை, தீவிரவாதம் போன்ற கருத்துகளுடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது.
"இத்தகைய, இன்செல் கலாசாரத்துடன் தொடர்புடையவர்கள், பெண்களை வெறுக்கும் மனநிலையைக் கொண்டவர்களாக இருப்பார்கள். குரூர மனம் கொண்டு, போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களாகவும் இருப்பார்கள். எனவே, இவர்களிடம் எப்போதும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், இவர்கள் தங்களின் மனமகிழ்ச்சிக்காக, சுயநலத்துக்காக பெற்ற தாயையும், மனைவியையும், உடன்பிறந்த சகோதரியையும்கூட கொல்லத் துணிவார்கள்' என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
இப்போது உலகம் முழுவதும் பெரும் பிரச்னையாகப் பார்க்கப்படுவது, இளம் சிறார்கள் மற்றும் ஆண் பதின்ம பருவத்தினரிடையே வளரும் பெண் வெறுப்பு, தீவிர பெண்ணிய எதிர்ப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற "இன்செல்' கலாசாரத்தின் மூலம் நடைபெறும் சீரழிவுகளை சமூகமும், அரசுகளும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பதுதான்.
பிரான்ஸில் "இன்செல்' கலாசாரத்தால் பாதிக்கப்பட்ட 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்ட பிறகு, இந்த பிரச்னை உலகம் முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த இளைஞரைக் கைது செய்து, தீவிரமாக விசாரித்து, அவரிடமிருந்த பையைச் சோதனையிட்டதில், பெண்களைத் திட்டமிட்டுக் கொல்ல இரண்டு கத்திகளை அதில் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. பிரான்ஸ் ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதால், இந்த வழக்கை பயங்கரவாத எதிர்ப்பு வழக்குரைஞர்கள் கையாளப் போகிறார்கள்.
பல நாடுகளில் "பாலின அடிப்படையிலான வன்முறை' பயங்கரவாதமாகக் கருதப்படுகிறது. பாலின அடிப்படையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படுவதால், இத்தகைய இழிவான செயல்களில் ஈடுபடுபவர்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள்.
"இன்செல்' கலாசாரம் எனப்படும் பெண்கள் மீதான வெறுப்புணர்வு கடந்த பல ஆண்டுகளாக சமூகவலைதளங்களில் செழித்தோங்கி வந்துள்ளது. மற்ற வன்முறைகளைப் போல அல்லாமல், இந்த பெண் வெறுப்பு வன்முறைக் கலாசாரத்தை உலகம் தாமதமாக இப்போதுதான் உணர்ந்துள்ளது. சிறுவர்கள், பல பதின்மவயது இளைஞர்கள் சமூகவலைதளங்கள் மூலம் தங்களை இந்தக் குழுக்களில் இணைத்துக் கொண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உலகம் முழுவதும் பெண்களின் உரிமைகள் கடுமையான பல பேராட்டங்களுக்குப் பிறகுதான் வென்றெடுக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களின் பேராட்டங்கள் இன்னும் முடிவடையவில்லை. இந்தியாவிலுள்ள ஆணாதிக்க சமூகங்களில், இத்தகைய "இன்செல்' குழுக்கள் வளர்ந்து வருவது, பெண்களின் முன்னேற்றத்துக்கும், பாலின சமத்துவத்துக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தடைக்கற்களாகவே அமையும்.
திரைப்படங்களும், தொலைக்காட்சி நெடுந்தொடர்களும், காட்சி ஊடகங்களும் பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சிகளையும், உருவகச் சொல்லாடல்களையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இதை கண்ணுறும் இளந்தலைமுறையினர், தங்களையும் கதாநாயகனாக நினைத்துக் கொண்டு சமூகத்தைச் சீரழிக்கின்றனர்.
எனவே, பெண்கள் மீது வெறுப்புணர்வை வளர்த்து, வன்முறையைத் தூண்டி, பிரச்னைகளை ஏற்படுத்தி, சமூகவலைதளங்களில் வலம்வரும் இத்தகைய குழுக்களைக் கண்டறிந்து அவர்களைக் கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிப்பது அரசுகளின் கடமை. அதே நேரத்தில், இத்தகைய இழி செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்காணிப்பது மிகவும் அவசியம்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.