தேவை இணைய விழிப்புணர்வு!

இணையவழிக் குற்றங்களும் பல்வேறு வடிவில் அதிகரித்து வருவதால், மக்களின் பாதுகாப்பு பெரும் சவாலாகி வருவது குறித்து...
தேவை இணைய விழிப்புணர்வு!
dot com
Published on
Updated on
2 min read

வங்கிச் சேவைகள்முதல் வாங்கும் பொருள்கள் வரை பெரும்பாலான சேவைகள் தற்போது இணையவழியில் நடைபெறும் இந்தக் காலகட்டத்தில், இணையவழிக் குற்றங்களும் பல்வேறு வடிவில் அதிகரித்து வருவதால், மக்களின் பாதுகாப்பு பெரும் சவாலாகி வருகிறது.

அண்மைக்காலமாக இணையம், செயலிகள், சமூக ஊடகங்கள் போன்ற எண்ம தளங்களை வைத்து, பகுதிநேர வேலை என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளில் பொதுமக்கள் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கியமாக, "லுக்" என்ற செயலி மூலமாக, பகுதிநேர வேலைவாய்ப்பு என விளம்பரப்படுத்தி, முதலில் ரூ.20,300}ஐ முன்பணமாக செலுத்த வேண்டுமெனவும், அந்தப் பணத்தை செலுத்திய பின்னர், தினமும் சில நாவல், புத்தகங்களை வாசித்தால் ரூ.700 வரை பணம் சம்பாதிக்கலாம் எனவும் கூறப்பட்டு, முதல்கட்டமாக சிறிய தொகையை வழங்கி நம்பிக்கையை உருவாக்குகின்றனர்.

பின்னர், மற்றவர்களையும் சேர்த்தால் அதிக வருமானம் கிடைக்கும் என உணர்த்தி, வட்டியோடு பணத்தை திருப்பித் தருவதாகக் கூறி இன்னும் அதிக பணம் வசூலிக்கின்றனர். இதில் ஏராளமானோர் தங்கள் சேமிப்புகளை இழந்து மோசடிக்குள்ளாகின்றனர்.

பெரும்பாலும் வேலைதேடும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள்,

ஓய்வுபெற்றவர்கள், முதியோர் போன்றோரையே குறிவைத்து, எளிய வேலை, தினசரி ஊதியம் என்ற வாக்குறுதிகள் மூலம் அவர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

பலர் மோசடிக்குள்ளான பின்னரும்கூட, இந்தத் தகவலை வெளியிட தயங்கி புகார் செய்யாமல் விலகுகின்றனர். இதன்மூலம் மோசடியாளர்கள் புதுப்புது உத்தியைப் பயன்படுத்தும் சூழல் உருவாகிறது.

அண்மையில்கூட, மகளிர் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறோம் எனக் கூறி, முன்பணமாக ஒருவருக்கு ரூ. 750 வீதம், 5 பேருக்கு ரூ. 3,750

செலுத்தினால் தலா ரூ.ஒரு லட்சம் உடனடியாக கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனக் கூறி, பணம் செலுத்துவதற்கான கியூஆர் கோடை அனுப்பியுள்ளனர்.

பணம் செலுத்திய பின்னர், பணத்தைக் கொண்டுவரும் வழியில், காவல் துறை சோதனைச் சாவடியில் பிடித்துக் கொண்டார்கள்; கணக்கில் காட்டப்படாத பணம் என்பதால் நாங்கள் மாட்டிக் கொண்டோம் எனக் கூறி தப்பித்துள்ளனர். பின்னர், அந்த கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டால் அவர்கள் எடுப்பதே இல்லையாம்.

இதுபோன்ற விஷயங்களில் பொதுமக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தவொரு செயலியையும் தேவையான நோக்கமின்றி பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். பணம் செலுத்தும் முன்னர், அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும். அதிக லாபம், குறுகிய காலத்தில் ஊதியம் போன்ற வாக்குறுதிகளை நம்பக் கூடாது.

ஆதார் அட்டை எண், ஓடிபி எண் போன்றவற்றைத் தேவையின்றி யாரிடமும் கொடுக்கக் கூடாது. அதேபோல, வங்கி ஓடிபி எண், ஏடிஎம் அட்டை எண், அதற்கான ரகசிய எண் ஆகியவற்றை யாரிடமும் பகிரக் கூடாது.

வாட்ஸ்-ஆப்பில் வரும் லாட்டரி வெற்றி, பரிசுகள் உள்ளிட்ட சந்தேகமான தகவல்களை நம்பக் கூடாது. கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்வதற்கு முன்பாக அதன் நம்பகத்தன்மையைஉறுதிசெய்ய வேண்டும்.

சமூக ஊடகங்களின் மூலமாக வரும் லிங்குகள், செயலிகள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் தவிர்த்துவிட வேண்டும். தவறுதலாக முதலீடு செய்திருந்தால் தயங்காமல் 1930 என்ற இலவசஎண்ணுக்கு அழைக்க வேண்டும். இணையதளத்தில் புகார் அளிக்கத் தயங்கக்கூடாது. அப்போதுதான், அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க முடியும்.

இணையவழி நிதி மோசடியைத் தடுப்பதற்காக, அண்மையில் மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்த முடிவுப்படி, இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு, வங்கிகள் இணைந்து செயல்பட வேண்டும்.

சந்தேகத்துக்கு இடமான கணக்குகளை முடக்குவதில் சரியான நேரத்தில் உதவுவதற்காக இணையவழி குற்றப் பிரிவு தலைமை மையத்தில் வங்கிப் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். விசாரணைக்கு உதவுவதற்காக வங்கிகளின் தரவுகளை மேம்படுத்த வேண்டும்.

இணையவழி நிதி மோசடியைத் தடுக்க போலீஸôர், வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். போலி வங்கிக் கணக்குகளை அடையாளம் கண்டு அவற்றை முடக்க வேண்டும்.

இன்றைய இணைய உலகம், வசதிகளை அள்ளித்தரும் அதேநேரத்தில், அதிக ஆபத்துகளையும் கொண்டிருக்கிறது. கவனக்குறைவால் தங்களது சொத்துகளை இழக்காமலிருக்க, அனைவருமே விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். இதற்காக பள்ளி, கல்லூரிகளிலும் ,பொதுமக்களிடையேயும் இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காவல் துறை கூடுதலாக நடத்த வேண்டும்.

மோசடிக்குள்ளான பணம் மீட்டெடுக்கும் வாய்ப்பு குறித்து சமூக ஊடகங்கள் மூலமாக காணொலிகளை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், குறும்படங்கள் ஆகியவை மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

குறிப்பாக, வயதானோர், இல்லத்தரசிகள், தொழிலாளர்கள் போன்ற இணையப் பயன்பாட்டில் அனுபவமில்லாதவர்கள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும்.

இணையக் குற்றங்கள் எப்போதும் நம் எல்லைகளை மீறி நம்மை பாதிக்கக்கூடியவை என்பதால், ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அறிவுடனும் விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com