மரபணு மாற்ற பயிர்கள் ஜனநாயகத்தை என்ன செய்யும்?
ஜெப்ரி ஸ்மித் நிறைய கள ஆய்வுகளுக்குப் பிறகு 2004-இல் எழுதிய "சீட்ஸ் ஆப் டெசெப்சன்' என்ற மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தின் அறியப்படாத, மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிய நூல் அமெரிக்கர்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த நூலுக்கு "தி நெக்ஸ்ட் டயர் பார் ஸ்மால் பிளானெட்' என்ற உணவு அரசியல் குறித்து ஆழமான நூலை எழுதிய பிரான்செஸ் மூரே லேப்பி என்ற அணிந்துரை எழுதியிருந்தார்.
மரபணு மாற்று விதைகள் ஜனநாயகத்தை என்ன செய்திட முடியும்? இப்படியொரு கேள்வியோடு தனது அணிந்துரையைத் தொடங்கியிருந்தார். கொஞ்சம்கூடப் பொருத்தமாக இல்லாத கேள்வியைப் போல இது நமக்குத் தோன்றும். இதற்கு அவர் கூறிய பதில், மரபணு மாற்று விதைகள் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பது; அந்த நூலின் பெரும் பகுதி, மரபணு மாற்று உயிரினங்களுக்காக நடந்தவை, நடப்பவை, எந்த அளவுக்கு மரபணு மாற்று விதைகளுக்காக நம் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு இருப்பதை ஆதாரங்களுடன் தெரிவித்தது.
55 ஆண்டுகளுக்கு முன்பு தானியங்களை தீவனமாக்கி, இறைச்சிக்காக கால்நடைகள் வளர்க்கும் முறை வந்த போது, அது ஒரு ஆபத்தின் அடையாளம் என்று எழுதினேன். இறைச்சிக்காக கால்நடைகளை வளர்ப்பதில் என்ன ஆபத்து இருக்க முடியும்? இறைச்சிக்காகவே மாடு வளர்ப்பது பற்றி அறியும்போதுதான் அந்த ஆபத்து புரியும்.
அந்த காலக்கட்டத்தில்தான் இறைச்சிக்காக கால்நடைகள் வளர்ப்பும், மாட்டிறைச்சி உற்பத்தியும் பெருந்தொழில் வணிகமானது. மாடுகளுக்குத் தேவைப்படும் தீவன மக்காச்சோளத்தை விளைவிப்பது தொடங்கி, உணவாக மக்களின் இல்லங்களுக்குச் செல்லும் வரை பல்வேறு படி
நிலைகள் உள்ளன. அவற்றை அரசு அமைப்புகள் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகள், ஒழுங்காற்று அமைப்பு முறைகள், கட்டுப்பாடுகளை வடிவமைத்ததில் அந்தப் பெருந்தொழில் நிறுவனங்கள் பெரும்பங்காற்றின. இதைத்தான் ஆபத்தின் அடையாளம் என்கிறார் அவர்.
மேலும், அவை வணிகத்தை அதிகப் படுத்துவதற்காக மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்தன. காடுகளை அழித்து தீவனத்தை வளர்த்தது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தது. மாடு வேகமாக அதிக சதைப் பிடிப்புடன் வளர ஹார்மோன்கள் தந்தது, ஆன்டிபயாட்டிக்களுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது. மக்களுக்கு இதய நோயை அதிகமாக்கியது, இன்னும் பல பாதிப்புகளை எல்லாம் உருவாக்கியது என்கிறார் அவர்.
இவற்றையெல்லாம் யாரும் கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காக, எந்த வகைகளிலும் கேள்விக் குரல் வெளிவர முடியாதளவுக்கு அடக்குவது. அதற்காக அதிகாரத்தின் எல்லா முனைகளையும் தனக்காக வேலைசெய்ய வைப்பது போன்றவைதான் அவர் குறிப்பிடும் ஆபத்து. அந்த ஆபத்தின் அடையாளமாகவே மாட்டிறிச்சிக்காக மக்காசோளத்தை விளைவிப்பதைக் குறிப்பிடுகிறார் அவர்.
அவர் எழுதுகிறார்; இப்போது மரபணு மாற்று விதைகள் வந்துள்ளன. நாம் யாரும் எங்களுக்கு மரபணு மாற்று விதைகள் தேவை என்று கேட்கவில்லை; நாம் நமக்காகவோ, நம் குடும்பத்துக்காகவோ, நம் சமூகத்துக்காகவோ இந்தத் தொழில்நுட்பம் வேண்டும் என்று கேட்கவில்லை. பாதிப்புகள் பலவற்றை உருவாக்கும் இந்த மரபணு மாற்று உயிரினங்களைப் பற்றி நம் கருத்து என்ன என்று எவரும் நம்மிடம் கேட்கவேயில்லை.
ஆனாலும், இந்தப் பாதிப்புகள் பற்றி எதுவும் அறியாமல் அவற்றை உண்டு கொண்டிருக்கிறோம். நம் வாழ்வின், நம் குழந்தைகளின் வாழ்வின் ஆதாரமாக இருக்கும் நமது வேளாண் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறியாத வகையில் நம்மை கும்மிருட்டில் வைத்து வைத்திருக்கிறார்கள் அவர்கள். ஜனநாயகத்தின் மீது எப்படி இந்தத் தாக்குதல் நேர்ந்தது? இந்த பெரு வணிக நிறுவனங்கள் அரசின் மீது கொண்டிருக்கும் அதிகாரத்தைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிருப்தியில் இருப்பதாக பல கணக்கெடுப்புகள் சொல்கின்றன. ஆனாலும், அந்த அதிருப்தி இலக்கற்றதாகவும், புரிதலற்றதாகவும் உள்ளது.
மான்சான்டோ (பேயர் நிறுவனம் வாங்கிவிட்டதால் இப்போது இது பேயர் - மான்சான்டோ) தலைமையில் இயங்கும் அந்தப் பெரு வணிக விதை நிறுவனங்கள் தங்களின் அபரிமிதமான செல்வத்தைக் கொண்டு, மிரட்டுவதையும் ஏமாற்றுவதையும் செய்து, அமெரிக்க மக்களை சோதனை எலிகளாக்கியுள்ளனர்.
நாம் வாங்கும் உணவுப் பண்டங்கள் மீது மரபணு மாற்றம் செய்யப்படாதவை என்ற அடையாளமிட வேண்டும் என்ற குடிமக்களின் கோரிக்கையை அரசு நிராகரித்து, மரபணு மாற்று விதைகளைக் கொண்டு விளைவிக்கப்பட்டவற்றை, நமக்குத் தெரியாமலேயே நம் மீது நம் அரசு திணிக்கிறது. இதன்மூலம் அமெரிக்க மக்களை ஒரு பெரும் உணவுச் சோதனைக்கான சோதனை எலிகளாக்கியுள்ளனர்; எப்படி இது நடக்கிறது என்பதையும் அவர் தெரிவிக்கிறார்.
மரபணு மாற்றுப் பண்டங்கள் நம் மீது எப்படித் திணிக்கப்படுகிறது என்பதை நாம் அறிய முற்படும் போது, இந்த பெரு வணிக நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன; அரசை தனக்குச் சாதகமான முடிவுகளை எடுக்க வைக்கிறது; எப்படி விஞ்ஞானிகளையும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் தனக்காக வேலை செய்ய வைக்கிறது; ஊடகங்களை தனக்காக ஒலிக்க வைக்கிறது அல்லது மக்களின் கேள்விகளை முன்வைக்கும் ஊடகங்களை மெüனமாக்குகிறது என்பதையெல்லாம் நீங்கள் அறிந்திடுவீர்கள் என்கிறார்.
ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பற்றி கண்காணித்துவரும் சமூக அமைப்பான புராஜெக்ட் சென்சார் அமைப்பு அமெரிக்காவில் எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கப்படாத பத்து செய்திகளில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிரான செய்திகள் என்கிறது. மக்கள் எவ்வித உண்மைகளும் தெரிந்துவிடக் கூடாதென்பதற்காக ஊடகங்கள் இயங்குவதை இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
பிரான்செஸ் மேலும், "அமெரிக்கா, மற்ற நாடுகளை எப்படி அச்சுறுத்தி மரபணு மாற்று விதைகளை ஏற்க வைக்கிறது என்பதை நீங்கள் அறிவீர். மற்ற நாடுகளில் ஒலிக்கும் எதிர்க் குரல்களை, பொது விவாதங்களை மரபணு மாற்றுப் பயிர்கள் மீது வைக்கும் தேவைப்படும் கேள்விகளைக் கேட்க நேரிடும் போதுதான் (அமெரிக்கர்களாகிய) நாம் எந்த அளவுக்கு மற்ற நாடுகளில் இருந்து அந்நியப்பட்டு இருக்கிறோம் என்பது தெரிகிறது.
நம் முன்வந்திருக்கும் இந்த மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தின் மீதான மயக்கமென்பது ஜனநாயகத்தில் நாம் எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியான, நிறைய விளைந்திருந்திருந்தும் ஏன் இந்தப் பட்டினி' என்ற நியாயமான, கேள்வியை எழுப்ப விடுவதில்லை' என்கிறார்.
அவர் மேலும் தொடர்ந்து, லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் இந்த வணிகப் பெரு நிறுவனங்கள் உலகில் உணவுப் பற்றாக்குறை இருப்பதாக மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்கின்றன, தங்களது தொழில்நுட்பங்களால்தான் உலகில் பசியை நீக்க முடியும் என்று நம்ப வைக்கின்றன.
பிரான்செஸ் மூரே லேப்பி அமெரிக்க மக்கள் எழுப்ப வேண்டும் என்று கூறும் அதே கேள்வியை இங்கு இந்தியாவிலும் நாம் எழுப்ப வேண்டும். நெல் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவில், ஆண்டுதோறும் சேரும் உபரி நெல்லை எத்தனால் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்திய அரசு விற்று வரும் நிலையில், இன்னும் அதிகம் விளைவிப்பதற்காக மரபணு திருத்திய நெல் ரகங்களை எதற்காக உருவாக்கினீர்கள் என்ற கேள்வியை இந்திய அரசின் முன் நாம் வைக்க வேண்டும்.
"யார் கேட்டதற்காக இந்த ஆபத்தான நெல் ரகங்களை எந்த சோதனைகளுமின்றி அனுமதித்திருக்கிறீர்கள் என்று கேள்வியைக் கேட்க வேண்டும். அவர் தனது அணிந்துரையின் இறுதியில், "மரபணு மாற்றத் தொழில்நுட்பங்களைத் திணிக்கும் முயற்சிகள், உலகின் பிரச்னைகள் எந்தளவுக்கு நம் உணவுக்குள் ஆழமாகப் புரையோடிய புண்களாக உள்ளதை உணர்த்தும் எச்சரிக்கை மணி ஆகும்.
நம் உழவு, உணவு, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை மீது இந்தப் போக்குகள் எந்த அளவுக்கு ஆழமாக ஊடுருவியிருக்கிறது என்பதற்கான அபாய மணியாகும்' என்று கூறி, இந்த பூமியின் காயங்களை ஆற்றுப்படுத்தும் ஜனநாயகத்தை உருவாக்குவதற்குரிய கேள்விகளை நாம் எழுப்புவதற்கு, கேட்பதற்கான உலுக்கல்களை இந்த மரபணு மாற்றுத் தொழில்நுட்பங்கள் உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவிக்கிறார்.
அவர் கூறுவதைப்போல, இந்திய அரசு நம் மீது திணிக்கப்பட்ட மரபணு மாற்றுத் தொழில்நுட்பங்கள் மீது தொடர்ச்சியாக, உரக்க கேள்விகள் எழுப்புவதுதான் இந்தியாவை மட்டுமல்ல, பூமியையும் காப்பாற்றும்; ஜனநாயகத்தையும் பாதுகாக்கும்.
கட்டுரையாளர்: ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.