யாருக்கான எதிர்காலத்தை கட்டமைக்கிறோம்?

போதைப் பொருள்கள் பறிமுதல்
போதைப் பொருள்கள் பறிமுதல்கோப்புப் படம்
Published on
Updated on
3 min read

மு. சிபிகுமரன்

இன்றைய சமுதாயத்தில் மிகுதியான குற்றச் செயல்களுக்கு அடிப்படைக் காரணிகளாக பெரிதும் விளங்குபவை சமூக ஊடகங்களும் போதைப் பொருள்களின் அளவுகடந்த பயன்பாடும் என்றால் அது மிகை இல்லை. அதிலும், முக்கியமாக இந்த இரண்டு காரணிகளும் மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தை இருண்டு போகச் செய்யும் சாத்தான்களாக உருமாறி வேகமெடுத்துள்ளன.

சமூக ஊடகங்களில் நிகழ்கின்ற குற்றங்கள் தொழில்நுட்ப ரீதியாக நிகழ்த்தப்படுகின்றன. கண்காணிப்பதில் கூடுதல் சிரத்தை தேவைப்படுகிறது. ஆனால், போதைப் பொருள்களின் நடமாட்டம் என்பது கண்காணிக்கவும் தடுக்கவும் இயலக்கூடிய ஒன்றாகும். சான்றாக, வான் நுண்ணறிவு சுங்கத் துறை அதிகாரிகள் அண்மையில் திருச்சி விமான நிலையத்தில் 11.8 கிலோ அளவுள்ள ஹைட்ரோ கஞ்சா எனப்படும் தீங்குதரும் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

இதன் சந்தை மதிப்பு ரூ.12 கோடி ஆகும். இந்திய அரசின் பத்திரிகைத் தகவல் பிரிவு அறிக்கையின்படி, 2024- ஆம் ஆண்டு இந்திய அளவில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.25,330 கோடியாகும்.

போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் தடுப்பு தொடர்பான ஐ.நா. அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, உலக அளவில் ஏறத்தாழ 30 கோடிக்கும் அதிகமான மக்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி உடல்ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதனால், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் என்பது சர்வதேச அளவில் சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு சவாலாகவும், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் ஆரோக்கியத்துக்கு சீர்கேடாகவும், ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் சீர்குலைவை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.

பட்டிதொட்டி எங்கும் தங்குதடை இன்றி சமூக விரோதிகளால் புழக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள போதைப் பொருள்களின் பயன்பாடு சிறியோர், பெரியோர் என்ற பாகுபாடின்றி மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், கூலித் தொழிலாளர்கள் மட்டுமல்ல, நாளைய இந்தியாவின் நம்பிக்கையாக விளங்குகிற மாணவர்களிடமும் அதிகரித்துவரும் ஆபத்தான சூழ்நிலையை நாம் எதிர்கொண்டு வருகிறோம் என்பது மிகவும் கவலை தருகின்ற ஒன்றாகும்.

முக்கியமாக, உயிருக்குப் பெரிதும் ஆபத்தாக விளங்குகிற வேதிப்பொருள்களால் உருவாக்கப்படுகிற செயற்கை போதைப் பொருள்களின் நுகர்வு அண்மைக்காலங்களில் அதிகரித்து இதன் விளைவாக இறப்புகளும் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, போதைப் பொருள்களின் பயன்பாடு என்பது, இளைய தலைமுறையினரை அதிலும் மாணவர்களை விரும்பத்தகாத பல்வேறு குற்றச்செயல்களுக்கு இட்டுச் செல்கின்றன.

அண்மையில் ஈரோடு அருகே குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு படித்த மாணவர் ஒருவர் அவரோடு படித்த இரண்டு மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவமும், சிவகாசி அருகே திருத்தங்கல் சி.ரா. அரசு மேல்நிலைப் பள்ளியில் தாமதமாக வந்த 12-ஆம் வகுப்பு மாணவர்களிடம் மதுவாசனை வந்ததால் அவர்களிடம் இதுபற்றி வகுப்பு ஆசிரியர் கேட்க அந்த மாணவர்கள் தங்களிடமிருந்த மதுப்புட்டிகளை வைத்து ஆசிரியரைத் தாக்கிய சம்பவமும் மாணவர்களிடம் போதைப் பொருள்களின் பயன்பாட்டால் பெருகிவரும் குற்றச் செயல்களுக்கு உதாரணங்கள் ஆகும்.

இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகிறது அல்லது எப்போதாவது நடைபெறுகிறது என்று நாம் எளிதாகக் கடந்துவிட முடியாது.

பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் பாதுகாப்பாக வீடுதிரும்புவார்கள் என்ற நம்பிக்கையில்தான் பெற்றோர்கள் காத்திருக்கிறார்கள். ஆகவே, சமுதாயத்தில் எங்கோ ஒரு மூலையில் நடைபெறுகின்ற வன்முறைச் சம்பவங்கள் வேறு; கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் வேறு.

ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் போதைப் பொருள்களை பதுக்கியும் கடத்தியும் விற்பனை செய்துவருவதையும், காவல் துறையினர் தீவிர சோதனைகளின் மூலம் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதையும் நாம் அன்றாடச் செய்திகளாகப் பார்த்து கடந்துசெல்கிறோம். அதனால் பாதிக்கப்படுவது நமது உறவுகளில் இருக்கின்ற ஒருவராகவோ அல்லது ஒரு குழந்தையாகவோ இருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை கல்லூரி மற்றும் பள்ளிகளில் இடைநிற்றலைக் குறைத்தல், உயர் கல்விக்கான ஊக்கம், பசுமையான சுகாதாரமான சுற்றுச்சூழல், ஊட்டச்சத்து உணவு என மாணவர்களுக்கான ஆக்கபூர்வமான முன்னேற்றத் திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பள்ளிக்கல்வித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் "திறன்" என்னும் திட்டம், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட "டிஎன் ஸ்பார்க்" எனும் கணினிசார் அடிப்படை அறிவியல் கல்வி, செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி என்னும் திட்டம், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலை பயிற்சி போன்ற முயற்சிகள் பாராட்டுதலுக்குரியவை.

மேலும் பள்ளிகளில் இருந்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்புக்காக அண்மையில் பள்ளிக் கல்வித் துறை ஒரு வழிகாட்டுதல் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாணவிகளின் புகார்கள் குறித்து அவர்களின் தனிநலனைப் பாதுகாக்கும் வகையில் ரகசியம் காக்க வேண்டும் என்றும், அவர்தம் பெற்றோர் எளிதாக புகார் செய்யக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், தாமதம் இன்றி விசாரணை நடைபெற வேண்டும் மற்றும் புகார்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், உடை மாற்றுவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் பாதுகாப்பான அறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், தேவையான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் வரவேற்கத்தகுந்த அறிவுறுத்தல்கள் அமைந்திருக்கின்றன.

இந்தச் சூழலில், சிபிஎஸ்இ பள்ளிகளின் நிர்வாக நடைமுறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்ட சுற்றறிக்கை ஒன்றை அதன் செயலர் அண்மையில் வெளியிட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தச் சுற்றறிக்கையின்படி மாணவர்களின் பாதுகாப்பு என்பது இரண்டு அம்சங்களைக் கொண்டது எனவும், ஒன்று சமூக விரோத கும்பலிடம் இருந்து பாதுகாப்பது, மற்றொன்று கேலி -கிண்டல் என மாணவர்களை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களின் பாதுகாப்பு என்பது அவர்கள் வீடுகளில் இருந்து பள்ளிக்குப் புறப்பட்டு வருவதில் தொடங்கி மீண்டும் பாதுகாப்பாக வீடுசெல்வது வரை வன்முறை, துன்புறுத்தல் , இயற்கை மற்றும் செயற்கையான பேரிடர், தீ விபத்து, போக்குவரத்து விபத்து என அனைத்துவிதமான அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாப்பது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையும் தமிழ்நாடு அரசும், பள்ளிக் கல்வித் துறையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏனெனில், சில தினங்களுக்கு முன்னால் தமிழ்நாடு காவல் துறையின் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையைத் தடுக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் சென்னையில் போதைப் பொருள்களை கடத்தி விற்கும் ஒரு கும்பலைக் கைது செய்தனர். இவர்களிடம் "கஞ்சா சாக்லேட்' என்னும் போதைப்பொருள் அதிக அளவு கைப்பற்றப்பட்டுள்ளது; இதை அவர்கள் பள்ளி மாணவர்களைக் குறிவைத்தே விற்பனை செய்வதாகத் தெரிவித்தனர்.

வறுமையில் வாடும் பெற்றோர் தங்களது உதிரத்தை வியர்வையாகச் சிந்தி தம் பிள்ளைகளை பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்புகின்றார்கள். நல்லவற்றைக் கற்று நாடுபோற்றும் மனிதனாக தம்பிள்ளை வரவேண்டும் என்ற ஒற்றைக் கனவைத் தவிர அவர்களுக்கு வேறெதுவுமில்லை. இத்தகைய குழந்தைகளை போதையின் பாதைக்கு இழுத்துச் செல்லும் கொடுஞ்செயலைச் செய்கிறவர்கள் பாதகர்கள். துணைபோகிறவர்கள் படுபாதகர்கள்.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பெற்றோருக்கு மட்டுமல்ல, காவல் துறையினருக்கும், பள்ளி கல்லூரிகளின் நிர்வாகத்தினருக்கும் குழந்தைகள்தான் என்ற எண்ணம் ஊட்டப்பட வேண்டும். வருங்கால இந்தியாவை வழிநடத்தும் மாணவர்களை போதைக்குப் பறிகொடுத்துவிட்டு யாருக்கான எதிர்காலத்தை நாம் கட்டமைக்கப் போகிறோம் என்ற கேள்வி நம் ஒவ்வொருவரின் மனதிலும் எழுகிறது.

ஆகவே, சமூக ஊடகங்களும் போதைப் பொருள்களின் அளவுகடந்த பயன்பாடும் மாணவர்களின் எதிர்கால நன்மைக்கு எதிரான சாத்தான்களாக உருவெடுத்துள்ள இந்தச் சூழலில் மாணவர்களுக்கான தொலைநோக்குத் திட்டம் மட்டும் போதாது. அவர்களின் நன்னெறிக்கும் நலவாழ்வுக்கும் நற்பண்புக்கும் குந்தகம் விளைவிக்கும் போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கல்வி நிறுவனங்களுக்குள் காலூன்றவிடாது உயர்கல்வித் துறையும், பள்ளிக் கல்வித் துறையும் தமிழ்நாடு அரசும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

கட்டுரையாளர்:

கல்வியாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com