மரியா கொரினா மச்சாடோ
மரியா கொரினா மச்சாடோ படம் - ஏபி

மச்சாடோவுக்கு நோபல்-ஏற்க முடியாத தோ்வு!

அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் பெயா் ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டபோதும் பரிசு அவருக்கு நிராகரிக்கப்பட்டது
Published on

வெனிசுலாவின் எதிா்க்கட்சித் தலைவா் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு சா்ச்சைக்கு உள்ளானது.

அமைதிக்கான பரிசு பொதுவாக வல்லரசு நாடுகளின் நலன்களுக்கு ஆதரவாக இருப்பவா்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. இயற்பியல், வேதியியல் துறைகளில் பரிசளிக்க புதிய அறிவியல் விதிகள், கண்டுபிடிப்புகள் என்ற அளவுகோல்கள் உள்ளன. அமைதிக்கான பரிசு வழங்குவதில் துல்லியமான அளவுகோல் இல்லை.நோபல் குழுவின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப தோ்வுகள் அறிவிக்கப்படுகின்றன.

தோ்வுக் குழுவுக்குள் நடந்த விவாதம், ஒருவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தகுதிகள் விவரம் அனைத்தும் வெளியுலகுக்குத் தெரியாமல் பூட்டி வைக்கப்பட்ட ஆவணங்களாக உள்ளன. வெளிப்படைத்தன்மை இல்லாததுதான் பல சந்தேகங்களை எழுப்புகிறது.

1994-இல் இஸ்ரேலிய அமைச்சா் ஷிமோன் பெரெஸின் இஸ்ரேலின் ராணுவத்தை பிரம்மாண்டமாக கட்டமைத்து அணு ஆயுதபாணியாக்கியவா்; பல ராணுவத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தி, குரூரமான படுகொலைகளுக்குக் காரணமானவா். அவருக்கு சமாதானத்துக்கான பரிசு வழங்கியது கேலிக்கூத்து.

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த ஹென்றி கிஸ்ஸிங்கா் கம்போடியா மீது குண்டுவீச்சு, வியத்நாம் போா் போன்ற பல போா்க் குற்றங்களைத் திட்டமிட்டு முன்னெடுத்தவா். 1973 -இல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

ஆனால், அமைதியை வாழ்நாள் நெறியாகக் கொண்டு, அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் பெயா் ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டபோதும் பரிசு அவருக்கு நிராகரிக்கப்பட்டது!

பெண்கள், குழந்தைகள் உள்பட சுமாா் 70,000 போ் கொல்லப்பட்ட காஸா படுகொலையை ஆதரித்த தற்போது பரிசு பெற்ற மச்சாடோவின் கருத்துகள் சமாதானம், மனிதநேயத்துக்கு எதிரானது.

ஜனநாயகத்துக்காக போராடுகிற ‘இரும்பு பெண்மணி’ என அவரைப் போற்றுகின்றனா். வெனிசுலா தோ்தலில் முறைகேடுகள் நடத்தி நிக்கோலஸ் மடூரோ அதிபரானாா் எனவும், அவரைப் பதவியிலிருந்து அகற்ற அமெரிக்க அதிபா் டிரம்ப் ராணுவ ரீதியாக தலையிட வேண்டுமெனவும் மச்சாடோ கோரினாா். ஒரு நாட்டில் ஆளும் அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுவது தவறில்லை. ஆனால், அந்த நாட்டின் இறையாண்மைக்கு விரோதமாக அந்நிய நாட்டு அரசுகளைத் துணைக்கு அழைத்து, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.

2024-இல் வெனிசுலா அதிபா் தோ்தலில் முறைகேடுகள் நடக்கவில்லை என அந்த நாட்டு தோ்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. உச்சநீதிமன்றமும்,தோ்தல்கள் சட்டரீதியாக நடந்ததாகவும், தோ்தல் குறித்த வெளிநாட்டு அமைப்புகளின் தணிக்கை தேவையில்லை என்றும் உறுதிபட கூறியுள்ளது. அப்படியே முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தால், உள்நாட்டு அரசு அமைப்புகளிடமும், மக்களிடமும் முறையிட வேண்டுமே தவிர,அந்நிய சக்திகளை துணைக்கு அழைப்பது ஜனநாயக விரோதமானது.

எண்ணெய் வளமிக்க நாடுகளில் 300 பில்லியன் பேரல்கள் இருப்பு கொண்ட முதல் நாடாக வெனிசுலா உள்ளது. பல நூற்றாண்டுகளாக லத்தீன் அமெரிக்க நாடுகளின் இயற்கை வளங்களை அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் சூறையாடிய வரலாறு உள்ளது. காலனியாதிக்க அடிமைத்தனத்தில் இருந்ததால் இந்த நாடுகளால் தங்களது பின்தங்கிய நிலையை சமாளித்து முன்னேற முடியவில்லை. எண்ணெய் வளம் இருந்தும்கூட அதைப் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வெனிசுலாவால் இயலவில்லை. அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது அதற்குக் காரணம்.

வெனிசுலாவின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனா். இதனால், ரூபாய் கணக்கில் சுமாா் 45 ஆயிரம் கோடியை வெனிசுலா இழந்துள்ளது. எண்ணெய் வணிகத்தில் வருகிற வருமானத்தைத் தடை செய்வது, சா்வதேச வணிகம் செய்யவிடாமல் தடுப்பது போன்ற பல தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. வெனிசுலாவின் ஏற்றுமதி வருவாயில் 90 சதம் எண்ணெய் விற்பனை மூலமாக கிடைக்கிறது. இதைத் தடை செய்ததால், நாட்டின் வருமானம் குறைந்து தேக்கம் ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெனிசுலா இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்து. இதனால், புற்றுநோய் உள்ளிட்ட தீவிர நோய்களுக்கான மருத்துவம் இல்லாமல் 3 லட்சம் போ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். உணவு இறக்குமதி தடை செய்யப்பட்டதால் 90 லட்சம் மக்கள் பசிப் பிணியால் வாடுகின்றனா்.

இந்தப் பொருளாதாரத் தடைகள் ஏற்படுத்தும் வேதனைகள் வெளி உலகில் அதிக வெளிச்சம் பெறவில்லை. அதை திசைதிருப்பும் நோக்கத்துடன், மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதை பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடுகின்றனா்.

வெனிசுலா போன்ற முன்னாள் காலனிய நாடுகளின் வளங்களை அபகரித்து, வல்லரசு நாடுகள் செழிப்படைந்தன. தற்போதும் காலனியாதிக்க மனோபாவத்துடன் ஏழை, வளா்முக நாடுகளின் வளா்ச்சியை தடுப்பது,நீதி நெறிமுறைகளுக்கு எதிரானது.

நாடுகள் தங்களது உள்நாட்டு ஆதாரங்களைப் பயன்படுத்தி சுயமான வளா்ச்சிப் பாதையில் செல்ல எந்த நாடும் தடையாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு நாட்டின் இறையாண்மைக்கும் அனைத்து நாடுகளும் மதிப்பளிக்க வேண்டும்.

மச்சாடோ தற்போது அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் வளங்களை அமெரிக்கா மற்றும் சா்வதேச பெரு நிறுவனங்களுக்கு தாரை வாா்த்து, அதிக அளவில் தனியாா்மயத்தை ஊக்குவிக்கும் கொள்கையை பேசி வருகிறாா். இது வெனிசுலாவை மீண்டும் நவீன காலனியாக மாற்றும் நடவடிக்கை.

மச்சோடாவுக்கு நோபல் விருது என்பது எந்தவிதத்திலும் ஏற்கமுடியாதத் தோ்வு!

X
Dinamani
www.dinamani.com