இன்று மகாகவி பாரதியார் இருந்திருந்தால் இந்தச் செய்தி கேட்டு மகிழ்ந்திருப்பார். உற்சாகத்தில் துள்ளிக் குதித்திருக்கலாம். உவகை பெருக ஒன்றிரண்டு கவிதைகளோ ஒரு கட்டுரையோ எழுதிக் குதூகலித்திருக்கலாம்.
பங்கிம் சந்திரர் இயற்றிய வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதமான ஜன கண மனவிற்கு இணையான அந்தஸ்தை அளிக்கும் சட்டத் திருத்தத்தை அண்மையில் நாடாளுமன்றம் இயற்றியிருக்கிறது. பள்ளிகளில் இந்தப் பாடல் பாடப்படவும், பயிற்றுவிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இந்தச் செய்தி பாரதிக்கு மிகுந்த மகிழ்வைத் தந்திருக்கும். ஏனெனில், அவருக்கு வந்தே மாதரம் பாடலுடன் கூடிய பிணைப்பு அத்தகையது. அது ஒரே நேரத்தில் அறிவுபூர்வமானதும் உணர்வுபூர்வமானதுமான பிணைப்பு.
முதன் முதலில் பொது அரங்கில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு, (செப்டம்பர் 7, 1906) நூறாண்டுகள் தாண்டிவிட்டன. ஒரு பாடல் நூறாண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களின் உணர்வில் சிறப்பான இடம்பெற்றுத் திகழ்வது எல்லா இலக்கியப் படைப்புக்களுக்கும் கிட்டும் கௌரவம் அல்ல. விடுதலைப் போரில் எழுப்பப்பட்ட "வந்தே மாதரம்' என்ற முழக்கம் இன்றும் மன எழுச்சி தரும் மந்திரம்; அந்த முழக்கம் இலக்கியத்தின் வழியாக அரசியலுக்குக் கிடைத்த முழக்கம்.
1870-களில் இரண்டு கண்ணிகளாக எழுதிய அந்தப் பாடலை 1881-இல் ஆனந்தமடம் என்ற தனது நாவலுக்காக பங்கிம் சந்திரர், ஐந்து கண்ணிகளாக விரிவுபடுத்தினார்.
1905-இல் கர்சன் காலத்தில் வங்காளம் மதத்தின் அடிப்படையில் இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதையடுத்து நாடு முழுவதும் பெரும் கிளர்ச்சி எழுந்தது. மதங்கள் வேறு வேறானாலும் நாம் ஒரே தேசத்தவர் என்பதை முன்னிறுத்தும் "இந்திய தேசியம்' என்ற அரசியல் சித்தாந்தம் தோன்றியது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்தமடம் நாவலும் வந்தே மாதரம் பாடலும் மக்களிடையே பெரும் கவனம் பெற்றன.
எந்த அளவு இது கவனம் பெற்றது என்பதை, இந்தப் பாடலின் முதல் மொழிபெயர்ப்பை அவர் ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினியில் 1905-ஆம் ஆண்டு நவம்பர் மாத இதழில் வெளியிட்ட போது எழுதிய முன்னுரையில் பாரதியே குறிப்பிடுகிறார்: "இப்போது பெங்காள மாகாணத்திலிருக்கும் ஒவ்வொரு ஹிந்துவாலும் ஸாம கீதத்தைப்போல அத்தனை பக்தியுடன் பாடப்பட்டு வருகின்ற வந்தே மாதரம் என்ற திவ்ய கீதத்தை நான் மொழிபெயர்க்கத் துணிந்தமை கர்வம் கொண்ட செய்கை என்று பலர் கருதக் கூடும். மேற்படி கீதமெழுதிய பெங்காளி வித்வான் பங்கிம் சந்திர பாபுவின் தைவிகச் சொற்களைப் போதிய வன்மை இல்லாவிடினும் தமிழ்நாட்டாருக்கு அச் செய்யுளின் பொருளுணர்த்த வேண்டும் என்ற ஆசைப்பெருக்காலேயே இதனைத் துணிந்திருக்கிறேன்... எனது தமிழ் எத்தனை குறைவுபட்டிருந்த போதிலும் தெய்வப்புலவரான பங்கிம்பாபுவின் மதிப்பைக் கருதி தமிழுலகத்தார் இதனை நன்கு ஆதரிப்பார்களென்று நம்புகிறேன்.' (பாரதி தமிழ்- பெ.தூரன்)
இந்த முன்னுரை இரண்டு விஷயங்களைப் புலப்படுத்துகிறது. ஒன்று, வந்தே மாதரம் பாடலின் பொருளைத் தமிழருக்கு உணர்த்த வேண்டும் என்ற பாரதியின் ஆசைப் பெருக்கு. மற்றொன்று, அந்தப் பாடல் காரணமாக பங்கிம் சந்திரர் மீது ஏற்பட்ட பெரும் மதிப்பு. மேலுள்ள மேற்கோளில் அவரைத் தெய்வப் புலவர் என்றும் இன்னொரு இடத்தில் கவியரசர் என்றும் குறிப்பிடுகிறார்.
வேதத்தைப் போல பக்தியுடன் ஒவ்வொருவராலும் பாடப்பட்ட தெய்விகச் சொற்கள் பாரதியின் உள்ளத்தில் நிரம்பி அவரது படைப்பாற்றலைத் தூண்டிக் கொண்டிருந்தது. அதை மொழிபெயர்க்கும் உந்துதல் இருந்த போதும் சரியான வார்த்தைகள் சிக்கவில்லை.
அது உருவான தருணம் பற்றித் தூரன் ஒரு சுவையான சம்பவத்தையும் அவரது நூலில் நமக்குத் தெரிவிக்கிறார்.
மஹேச குமார சர்மா ஆனந்த மடம் நூலைத் தமிழிலே பெயர்த்து அழகாக எழுதியிருக்கிறார். அதிலே வெளியிடுவதற்காக வந்தே மாதர கீதத்தை மொழிபெயர்த்துத் தரும்படி பாரதியாரைக் கேட்டுக் கொண்டாராம். இரண்டு மூன்று மாதங்கள் அவரது வேண்டுகோள் நிறைவேறவில்லை. பிறகு ஒருநாள் இரவு சுமார் பத்து மணிக்கு பாரதியார் மஹேச குமார் சர்மாவின் வீட்டுக் கதவைத் தட்டினார்.
அப்போது, அவர் சென்னை ஜார்ஜ் டவுனில் வசித்து வந்தார். பாரதியார் திருவல்லிக்கேணியில் இருந்தார். அந்த நேரத்தில் பாரதியார் வந்தது சர்மாவுக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. "சர்மா பாட்டு வந்துவிட்டது எழுதிக் கொள். கடற்கரையிலே உட்கார்ந்திருந்தேன். நீ கேட்ட பாட்டு திடீரென்று உதயமாயிற்று. கடற்கரையோரமாகவே நேராக இங்கு வந்துவிட்டேன்' என்று பாரதியார் கூறினாராம்.
பாரதி பங்கிம் சந்திரரின் "ஜகத் பிரசித்தி கொண்ட' (பாரதியின் சொற்கள் இவை) வந்தே மாதரத்தை இரண்டு முறை மொழி பெயர்த்தார். மூன்று இதழ்களில் வெளியிட்டார். இரண்டு நூல்களில் பதிப்பித்தார். முதல் மொழிபெயர்ப்பு 1905-ஆம் ஆண்டு நவம்பர் சக்ரவர்த்தினி இதழில் வெளியிடப்பட்டது.
முதல் மொழிபெயர்ப்பு "பாடுவதற்கு நயப்படாதாகையால் பல சந்தங்கள் தழுவி' இரண்டாம் முறை மொழிபெயர்த்தார்.அது 1909-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி இந்தியா இதழில் வெளியாயிற்று. பின் மறுபடியும் 1910 பிப்ரவரி கர்மயோகி இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாம் மொழிபெயர்ப்பு தென்னாப்ரிக்காவில் அச்சிடப்பட்ட பாரதியின் கவிதை நூலான மாதா மணிவாசகத்திலும் (1914) பின் நாட்டுப்பாட்டு என்ற அவரது மற்றொரு தொகுதியிலும் (1919) இடம் பெற்றது. இந்த இரு தொகுப்புகளும் அவரது வாழ்நாளிலேயே வெளியானவை.
பாரதி அரசியல் கவிதைகள் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து (1904-1905) தனது வாழ்நாளின் இறுதிக்காலம் வரை (1919) வந்தேமாதரம் பாடலை மீண்டும் மீண்டும் பிரசுரித்து வந்திருக்கிறார். என்ன காரணம்? அந்தப் பாடலின் "தெய்விகச் சொற்களை', பொருளை தமிழ்நாட்டார் அறிந்து கொள்ள வேண்டும் என்ற "ஆசைப் பெருக்கு'தான் காரணமாக இருக்க முடியும். தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என பாரதி விரும்பிய அந்தப் பாடல் என்னதான் சொல்கிறது?
பாடல் நம் நாட்டின் இயற்கை எழிலைப் பேசுகிறது. இயற்கை வளங்களைச் சொல்கிறது. மொழிகளின் இனிமையைப் பேசுகிறது. நம் தேசத்தவரின் ஆற்றலைப் போற்றுகிறது. நீயே அறிவு, நீயே தர்மம், நீயே உள்ளம், நீயே அந்த உள்ளத்தில் மறைந்திருக்கும் ரகசியம், உடலில் வாழும் உயிர் நீ, தோளின் வலிமை நீ, நெஞ்சில் பெருகும் அன்பு நீ என்று தேசத்தை நேச வார்த்தைகள் சொல்லிக் கொஞ்சுகிறது.
ஆனால், வந்தே மாதரம் பாடலில் எந்த மதத்துக்கும் விரோதமான சொற்கள் கிடையாது. எவருடைய தெய்வத்தையும் இழித்துப் பேசும் சொற்கள் கிடையாது. மாறாக எம் மதத்தினரும் தம் இறைவனிடம் காணும் அம்சங்களான "திரு நிறைந்தனை, திரு சொல்லுக்குச் செல்வம் என்று மட்டுமல்ல மேன்மை (டிவைன்) என்றும் ஒரு பொருள் உண்டு. அதனால்தான் திருமணம், திருவிழா, திருமாங்கல்யம் ஏன் பெயருக்கு முன்னால் கூட (திரு) தன்னிகர் ஒன்றிலை, தீது தீர்ந்தனை, மருவு செயல்களின் நற்பயன் நல்குவை, பெருகும் இன்பம் உடையை' ஆகியவற்றை நாட்டின் மீது ஏற்றிப் பாடுகிறது வந்தே மாதரம். இறை நம்பிக்கை கொண்ட எந்த மதத்தினரேனும் தங்கள் இறைவனுக்கு இந்தப் பண்புகள் இல்லை என்று சொல்லுவரா?
ஹிந்து தெய்வங்கள் குறிப்பிடப்படுகிறதா என்றால் ஆம், ஒரே ஒரு சரணத்தில் பார்வதி, லட்சுமி, வாணி ஆகியோரைக் குறிப்பிடுகிறது. கோயிலில் உள்ள தெய்வச் சிலைகள் எல்லாம் நீ என்று சொல்கிறது. ஆனால், அவர்களை வழிபடச் சொல்லவில்லை. முதல் மொழிபெயர்ப்பு "எம்மைக் காப்பாய் தாயே போற்றி' என்று முடிகிறது, இரண்டாம் மொழிபெயர்ப்பு "பதங்கள் இறைஞ்சுவாம்' என்று முடிகிறது. இறைஞ்சுதல் என்ற சொல்லுக்குப் பணிதல், வேண்டுதல் என்று பொருளுண்டு. அது வொர்ஷிப் அல்ல; இம்ப்ளோரிங், பெக்கிங்.
"வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்', "வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனோ' என்றெல்லாம் பாரதி தனது கவிதைகளில் எழுதியிருக்கிறார். ஆனால், வந்தே மாதரம் மொழிபெயர்ப்பில் வணங்குதல் இல்லை. போற்றியும் இறைஞ்சுதலும்தான்.வந்தே மாதரம் பாடலின் வரிகளுடன் முரண்படுபவர்கள் அதைப் பாட வேண்டியதில்லை. இப்போதெல்லாம் பலர் தமிழ்த்தாய் வாழ்த்தையோ, ஜன கண மன-வையோ கூட வாய்திறந்து பாடுவதில்லை. சபை நாகரிகம் கருதி முணுமுணுப்பதோ, உதடசைப்பதோ கூட இல்லை. மரியாதைக்காக எழுந்து நிற்பது மட்டுமே நடக்கிறது.
வந்தே மாதரம் பாடலை எல்லோரும் கட்டாயம் வாய்திறந்து பாட வேண்டும், பாடாவிட்டால் தண்டனை எனச் சட்டம் சொல்லவில்லை. ஆனால், அதற்கு மரியாதை அளிக்க வேண்டும், பாடுவதைத் தடை செய்யக் கூடாது, பாடும் இடத்தில் இடையூறு விளைவிக்கக் கூடாது என்றுதான் சொல்கிறது.
நாம் சில கருத்துகளை சில நம்பிக்கைகளை ஏற்காமல் இருக்கலாம். ஆனால், மற்றவர்களின் அந்த நம்பிக்கைகளுக்கு மரியாதை அளிப்பது, இடையூறு செய்யாதிருப்பது நயத்தக்க சமூக நாகரிகமல்லவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முடியாத விவாதங்கள்

தமிழ் மக்களுக்கு அவமதிப்பு! வந்தே மாதரம் மசோதாவை கடுமையாக எதிர்த்த கனிமொழி!
‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மாநிலங்களவையில் மசோதா இன்று தாக்கல்!

தேசிய பாடலை அவமதிப்பதே காங்கிரஸின் வரலாறு: பாஜக
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



